திருப்புகழ் – எழுகடல் மணலை

 

திருப்புகழ் – எழுகடல் மணலை –

முடியாப் பிறவிக் கடலிற் புகார்

முழு துங்கெடுக்கு மிடியாற் படியில் விதனப் படார்

வெற்றி வேற்பெருமாள் அடியார்க்கு நல்ல பெருமாள் அவுணர் குலமடங்கப்
பொடியாக் கியபெரு மாள்

திரு நாமம் புகல்பவரே.

 

தாண்டமுடியாத பிறவிப்பெருங்கடலில் மூழ்கமாட்டார்கள்;

எல்லா நலன்களையும் கெடுக்கும் வறுமைப் பிணியால்
வேதனைப்படமாட்டார்கள்;

வெற்றி பொருந்திய வேலாயுதத்தைத் தாங்கியவரும், தம் திருவடிகளை வணங்குகின்ற அடியவர்களுக்கு நன்மையைத் தருகின்ற பெருமாளும்,

அவுணர் கூட்டம் அழியும்படி தூளாகச்செய்த பெருமாளுமாக விளங்கும் திருமுருகப்பெருமானின்  திருநாமத்தை ஓதுபவர்கள்.

கந்தர் அலங்காரம் 33

==================================

 

எழுகடல் மணலை அளவிடி னதிக
மெனதிடர் பிறவி …… அவதாரம்

இனியுன தபய மெனதுயி ருடலு
மினியுடல் விடுக …… முடியாது

கழுகொடு நரியு மெரிபுவி மறலி
கமலனு மிகவு …… மயர்வானார்

கடனுன தபய மடிமையு னடிமை
கடுகியு னடிகள் …… தருவாயே

விழுதிக ழழகி மரகத வடிவி
விமலிமு னருளு …… முருகோனே

விரிதல மெரிய குலகிரி நெரிய
விசைபெறு மயிலில் …… வருவோனே

எழுகடல் குமுற அவுணர்க ளுயிரை
யிரைகொளும் அயிலை …… யுடையோனே

இமையவர் முநிவர் பரவிய புலியு
ரினில்நட மருவு …… பெருமாளே.

……… சொல் விளக்கம் ………

எழுகடல் மணலை … ஏழு கடல்களின் கரையிலுள்ள
மணலையெல்லாம்

அளவிடின் அதிகம் … எண்ணிப்பார்த்தால் வரும் அளவை விட அதிகம்

எனது இடர் பிறவி அவதாரம் … என் துன்பம் நிறை பிறவிகள் என்ற
அவதாரங்கள்.

இனியுனது அபயம் எனதுயிர் உடலும் … இனி உனக்கே
அடைக்கலமாம் என் உயிரும், உடலும்.

இனி உடல் விடுக முடியாது … இனியும் பிறப்பெடுத்து உடலைவிட
என்னால் முடியாது.

கழுகொடு நரியும் எரிபுவி … கழுகும், நரியும், நெருப்பும், மண்ணும்,

மறலி கமலனும் மிகவும் அயர்வானார் … யமனும், பிரம்மாவும்,
என்னுடலை பலமுறை பிரித்தும், பிறப்பித்தும் சோர்வடைந்து விட்டார்கள்.

கடன் உனது அபயம் … என் கடமை இனி உன்னிடம் அடைக்கலம்
புகுவதே ஆகும்.

அடிமை உன் அடிமை … யான் அடிமைசெய்வது உன்னிடம் அடிமை
பூணுதற்கே ஆகும்.

கடுகியு உன் அடிகள் தருவாயே … நீ விரைவில் உன் திருவடிகளைத்
தர வேண்டும்.

விழு திகழ் அழகி மரகத வடிவி … சிறந்து திகழும் அழகியும், பச்சை
வடிவானவளும்,

விமலி முன் அருளும் … பரிசுத்தமானவளுமான பார்வதி முன்பே
ஈன்றருளிய

முருகோனே … முருகப் பெருமானே,

விரிதலம் எரிய குலகிரி நெரிய … விரிந்த பூமியானது பற்றி எரிய,
கிரெளஞ்சகிரி நெரிந்து பொடிபட,

விசை பெறு மயிலில் வருவோனே … வேகமாக வரவல்ல மயிலில்
வருபவனே,

எழுகடல் குமுற … ஏழு கடல்களும் கொந்தளிக்க

அவுணர்க ள் உயிரை இரை கொளும் … அசுரர்களின் உயிரை
உணவாகக் கொள்ளும்

அயிலை உடையோனே … வேலினை ஆயுதமாகக் கொண்டவனே,

இமையவர் முநிவர் பரவிய புலியூர் இனில் … தேவர்களும்,
முனிவர்களும்* வணங்கித் துதித்த புலியூர் என்னும் சிதம்பரத்தில்

நட மருவு பெருமாளே. … நடனம் செய்கின்ற பெருமாளே.