மண்ணிற் கலங்கிய நீர் போல் மனிதர்கள்

மண்ணிற் கலங்கிய நீர் போல் மனிதர்கள்

எண்ணிற் கலங்கி இறைவன் இவனென்னார்

உண்ணிற் குளத்தின் முகந்தொருபால் வைத்துத்

தெண்ணிற் படுத்த சிவனவன் ஆமே

 

(திருமூலர் – திருமந்திரம்-2991)

 

 

மனிதர்கள், மண்ணிற் கலங்கிய நீர் போல் இருக்கிறார்கள்

 

எண்ணிற் கலங்கி = உலக மயமான எண்ணத்தால் கலக்கமடைந்து, இறைவன்  இன்ன தன்மையன் என்று

உணராமல் இருக்கிறார்கள்

 

உண்ணிற் குளத்தின் = உண்பதற்கு (தண்ணீர் உள்ள) உரிய குளத்தில்

 

உண்பதற்கு உரிய குளத்தில் இருந்து நீரை முகந்து எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்துத்

தெளிவாக்குகிறோமல்லவா?

 

தெண்ணிற் படுத்த =  சிந்தையைச் சிவத்தில் வைத்துத் தெளிவுபடுத்த,

 

சிவனவன் ஆமே = அவன் சிவன் ஆவான்  =  சீவன் சிவமாவான்.

 

 

 

மழைநீர் மிகவும் தூய்மையானது. அது  உப்பு மண் தரையில் விழுந்தால், உப்புக் கரிக்கும். செம்மண் தரையில்

விழுந்தால் நீரும் சிவப்பாகும். களிமண் தரையில் விழுந்தால், கறுத்துக் கலங்கி  இருக்கும். அதுபோல,

தூய்மையான நம்முடைய எண்ணங்கள், ஒவ்வொரு பக்கமாக விழுந்து, ஒவ்வொன்றின் மீதும் விழுந்து,

தம்முடைய  தன்மையையே இழந்து இருக்கின்றன.

 

அதாவது, தூய்மையான மழைநீர் எப்படி அந்தந்த நிலத்தில் சேர்ந்ததும், தன் தூய்மையை இழந்து அந்தந்த

நிலத்திற்கேற்றவாறு மாறுகின்றதோ அது  போல, நம்முடைய எண்ணங்கள் கண்களின் வழியாக, கண்டதில்

விழுந்து தூய்மையை இழந்துவிட்டன; காதுகள் வழியாகக் கண்டதில் விழுந்து கீழான  நிலையை அடைந்து

விட்டன. வாய்…கேட்கவே வேண்டாம். கண்டதைத் தின்று, கண்டதைப் பேசி… சொல்லவே வேண்டாம்.

இத்தகைய புலன்களுக்கு  கைகளும் கால்களும் துணை செய்கின்றன. மொத்தத்தில், இவை இடம்பெற்ற உடம்பு,

சுகம் சுகம் என்று அலைந்து தானும் கலங்கி நம் மனதையும்  கலக்குகிறது.

 

சரி! கலக்கம் போக வழி?

 

கலங்கிய நீரை, ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்தால், சற்று நேரத்தில் அது தெளிந்து விடுகின்றது அல்லவா?

அது போல, கலங்கிய சித்தத்தைக்  கடவுளிடம் வைத்தால், கலக்கம் போய்விடும். சீவன், சிவனாக ஆகும்

 

 

இது நமக்குப் புரியுமோ, புரியாதோ என்றுதான் நம் திருக்கோயில்களில்  தெய்வத்திற்கு அலங்காரம் செய்து

கண்களை தரிசிக்கச் செய்தார்கள். காதுகளால் இறைவன் புகழைக் கேட்கச் செய்தார்கள். வாய் கொண்டு

இறைவனைத் துதிக்கச் செய்தார்கள். அதன் மூலம் மனம் இறைவனுடன் ஒன்றி விடுகிறது. பிறகு கலக்கம் ஏது?

இந்த மனக்கலக்கம் என்பது  தேவர்களுக்கும் உண்டு. அவர்கள், அவ்வப்போது அசுரர்களால் துயரப்படும்போது

சிவபெருமானை நாடி தேடிச் சென்று வழிபட்டு தங்கள் துயரங்களைத் தீர்த்துக்கொள்கிறார்களாம்