வெண்ணை அளைந்த குணுங்கு

பெரியாழ்வார் திருமொழி 2:4

 

 

வெண்ணை அளைந்த குணுங்கும் விளையாடு புழுதியும் கொண்டு

திண்ணெனெ இவ்விரா உன்னைத் தேய்த்துக் கிடக்கநான் ஒட்டேன்

எண்ணெய்ப் புளிப்பழம் கொண்டுஇங்கு எத்தனை போதும் இருந்தேன்

நண்ண லரிய பிரானே நாரணா நீராட வாராய்

 

(கண்ணா, உன் மேல் வெண்ணை நாற்றம் அடிக்கிறது. விளையாடிய புழுதி வேறு. நேராகப் போய் இன்று இரவு படுக்கையில் விழ உன்னை அனுமதிக்கமாட்டேன்.  எண்ணையும் சீக்காயும் கையுமாக இருக்கிறேன். அடேய். ஓடாதே. நீ நீராட இங்கு வா)

 

அப்பம் கலந்த சிற்றுண்டி அக்காரம் பாலில் கலந்து

சொப்பட நான்சுட்டு வைத்தேன் தின்ன லுறிதியேல் நம்பீ

செப்பிள மென்முலை யார்கள் சிறுபுறம் பேசிச் சிரிப்பர்

சொப்பட நீராட வேண்டும் சோத்தம் பிரான்இங்கே வாராய்.

 

கண்ணா, பாலில் வெல்லம் போட்டு நல்ல அப்பம் சுட்டு வைத்திருக்கிறேனடா. உனக்கு பிடிக்கும். ஆனால் இதை நீ சாப்பிட வேண்டுமானால் முதலில் நீ குளித்தாக வேண்டும். பார் உன் நண்பர்களான ஆய்ச்சியர் பெண்கள் எல்லாம் பார்க்கிறர்கள். குளியாமல் போனால், உன்மேல் குற்றம் கண்டு பிடித்து பரிகசித்துச்சிரிப்பார்கள்.  ஆகவே இங்கே நீராடவாடா

 

எண்ணெய்க் குடத்தை யுருட்டி இளம்பிள்ளை கிள்ளி யெழுப்பி

கண்ணைப் புரட்டி விழித்துக் கழகண்டு செய்யும் பிரானே

உண்ணக் கனிகள் தருவன் ஒலிகட லோதநீர் போலே

வண்ணம் அழகிய நம்பீ மஞ்சன மாடநீ வாராய்.

 

 

 

 

டேய் நீ என்னவெல்லாம் செய்கிறாயடா? எண்னைக் கிண்னத்தை கவிழ்த்து விடுகிறாய். தூங்கும் குழந்தையை கிள்ளி அழவைத்து எழுப்பிவிடுகிறாய். கண் இமைகளை மடக்கி பயமுறுத்துவதுபோல் செய்கிறாய். டேய் செல்லம் பழம் எல்லாம் தருவேனடா. அலை கடல் தண்ணீர் போல ஸ்படிகம் போல இருக்கிற என் நம்பீ நீராட வாடா

 

 

 

கறந்தநற் பாலும் தயிரும் கடைந்துஉறி மேல்வைத்த வெண்ணெய்

பிறந்தது வேமுத லாகப் பெற்றறி யேன் எம்பிரானே

சிறந்தநற் றாய்அலர் தூற்றும் என்பத னால்பிறர் முன்னே

மறந்தும் உரையாடமாட்டேன் மஞ்சன மாடநீ வாராய்.

 

என்றைக்கு நீ பிறந்தாயோ அன்று முதல் நான் பாத்திரத்தில் பால் கண்டதில்லை.  உறியில் வெண்ணையைக் கண்டதில்லை. (எல்லாம் நீ களவாடிவிடுகிறாய்.). இதை எல்லாம் ஒரு பெரிய குற்றமாக நான் யாரிடமும் சொன்னதில்லை. சொன்னால் உன்னை பரிகசிப்பர்கள் இல்லையா? அதனால் மறந்து போய் கூட அவர்களிடம் குறை பட்டுக்கொள்ளமாட்டேன். சீக்கிரம் நீராட வா குழந்தாய்!

 

 

கன்றினை வாலோலை கட்டிக் கனிக ளுதிர எறிந்து

பின்தொடர்ந் தோடிஓர் பாம்பைப் பிடித்துக் கொண்டாட்டினாய் போலும்

நன்திறத் தேனல்லன் நம்பீ நீபிறந் ததிரு நல்நாள்

நின்றுநீ நீராட வேண்டும் நாரணா ஓடாதே வாராய்.

 

 

 அன்று கன்றுக்குட்டியின் காலில் ஒரு ஓலையைக் கட்டி அந்த ஓலையைப் பிடித்து கன்றை சுழற்றி அதை ஒரு மரத்தில் எறிந்தாய், பின் ஒரு நாள், காளீயன் என்னும் பாம்பைப் பிடித்துஆட்டினாய். உன் சக்தி எனக்குக் கிடையாது அய்யா. (உன்ன என்னால் துரத்தி பிடிக்க ஆகாது). இன்று உன் பிறந்த நாள். ஆகவே கண்டிப்பாக நீ நீராட வேண்டும். ஓடாதே. வாடா

 

(கன்று, மரம், காளிஙகன் எல்லாம் கண்ணனைத் தாக்க வந்த தீய சக்திகள்

 

 

பூணித் தொழுவினில் புக்குப் புழுதி யளைந்த பொன்மேனி

காணப் பெரிதும் உகப்பன் ஆகிலும் கண்டார் பழிப்பர்

நாணெத் தனையு மிலாதாய் நப்பின்னை காணில் சிரிக்கும்

மாணிக்க மேஎன் மணியே மஞ்சன மாடநீ வாராய்.

நீ விளையாடிவிட்டு புழுதி படிந்த தலை,உடம்போடு வருவது பார்க்க எவ்வளவு பெருமையாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது தெரியுமா? ஆனாலும்,மற்றவர்கள் உன்னை பழித்துச் சொல்வார்களடா. உன் தோழி உன்னைப் பார்த்து சிரிப்பாள்.  உனக்கு வெட்கமே இல்லையாஅ? என் மாணிக்கமே என் மரகத மணியே நீராட வாடா