திருஅருட்பா பாடல்கள்

 

மிகவும் எளிய தமிழில் நெஞ்சை உருக்கும் திருஅருட்பா பாடல்கள்
==============================================

 

எல்லாம் செயல்கூடும் என் ஆணை அம்பலத்தே
எல்லாம் வல்லான் தனையே ஏத்து.
(திருவருட்பா – குறள் வெண்பா)

உரை:

தில்லையம்பலத்தில் எழுந்தருளும் எல்லாம் வல்லவனாகிய சிவபெருமானையே பரவி வழிபடுக;

வழிபட்டால் எத்தகைய அரிய செயல்களும் நிறைவுறும்; இஃது என் மேல் ஆணை

 

முன்னவனே..
யானை முகத்தவனே..
முக்திநலம் சொன்னவனே..
ஐங்கரனே..
செஞ்சடையஞ் சேகரனே
தற்பரனே.. நின்தாள் சரண்..!!

பெற்ற தாய் தனை மக(ன்/ள்) மறந்தாலும்
பிள்ளையைப் பெறும் தாய் மறந்தாலும்
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
உயிரை மேவிய உடல் மறந்தாலும்
கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்
கண்கள் நின்றிமைப்பது மறந்தாலும்
நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும்
நமச்சிவாயத்தை நான் மறவேனே

தடித்த ஓர் மகனை தந்தை ஈண்டடித்தால்
தாய் உடன் அணைப்பள்; தாய் அடித்தால்
பிடித்தொரு தந்தை அணைப்பன் இங்கெனக்கு
பேசிய தந்தையும் தாயும்
பொடித்திரு மேனி அம்பலத்தாடும்
புனித நீ ஆதலால் அணைத்திடல் வேண்டும்
அம்மை அப்பா இனி ஆற்றேன்

அருட் ஜோதி தெய்வம் எனை ஆண்டு கொண்ட தெய்வம்
அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம்
பொருள் சாரும் மறைகள் எல்லாம் போற்றுகின்ற தெய்வம்
போதாந்தத் தெய்வம் உயர் நாதாந்தத் தெய்வம்
இருட் பாடு நீக்கி ஒளி ஈந்தருளும் தெய்வம்
எண்ணிய நான் எண்ணிய வாறு எனக்கு அருளும் தெய்வம்
தெருட்பாடல் உவந்து எனையும் சிவமாக்கும் தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம் !

தாயாகித் தந்தையுமாய்த் தாங்குகின்ற தெய்வம்
தன்னைநிகர் இல்லாத தனித்தலைமைத் தெய்வம்
வாயார வாழ்த்துகின்றோர் மனத்தமர்ந்த தெய்வம்
மலரடிஎன் சென்னிமிசை வைத்தபெருந் தெய்வம்
காயாது கனியாகிக் கலந்தினிக்குந் தெய்வம்
கருணைநிதித் தெய்வம்முற்றுங் காட்டுவிக்குந் தெய்வம்
சேயாக எனைவளர்க்குந் தெய்வமகா தெய்வம்
சிற்சபையில் ஆடுகின்ற தெய்வமதே தெய்வம்.

கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பு அருளும் களிப்பே,
காணார்க்கும் கண்டவர்க்கும் கண் அளிக்கும் கண்ணே,
வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரம் அளிக்கும் வரமே,
மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதி கொடுக்கும் மதியே,
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடு நின்ற நடுவே,
நரர்களுக்கும் சுரரர்களுக்கும் நலம் கொடுக்கும் நலமே,
எல்லார்க்கும் பொதுவில் நடம் இடுகின்ற சிவமே,
என் அரசே, யான் புகலும் இசையும் அணிந்து அருளே!

ஈஎன்று நான்ஒருவர் இடம்நின்று கேளாத
இயல்பும்என் னிடம்ஒருவர்ஈ
திடுஎன்ற போதவர்க் கிலைஎன்று சொல்லாமல்
இடுகின்ற திறமும்இறையாம்
நீஎன்றும் எனைவிடா நிலையும்நான் என்றும்உள
நினைவிடா நெறியும்அயலார்
நிதிஒன்றும் நயவாத மனமும்மெய்ந் நிலைநின்று
நெகிழாத திடமும்உலகில்
சீஎன்று பேய்என்று நாய்என்று பிறர் தமைத்
தீங்குசொல் லாததெளிவும்
திரம்ஒன்று வாய்மையும் து‘ய்மையும் தந்துநின்
திருவடிக் காளாக்குவாய்
தாய்ஒன்று சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.

==============

 

பொழுது விடிந்தது என் உள்ள மென்கமலம்
பூத்தது பொன்ஒளி பொங்கியது எங்கும்
தொழுதுநிற் கின்றனன் செய்பணி எல்லாம்
சொல்லுதல் வேண்டும் என் வல்லசற் குருவே
முழுதும்ஆனான்என ஆகம வேத
முறைகள்எ லாம்மொழி கின்றமுன்னவனே
எழுதுதல் அரியசீர் அருட்பெருஞ் சோதி
என்தந்தையே பள்ளி எழுந்தருள் வாயே.

 

துற்குணமாயை போய்த் தொலைந்தது ஞானம்
தோன்றிடப் பொன்னொளி தோற்றிய கதிர்தான்
சிற்குண வரைமிசை உதயஞ்செய்தது மா
சித்திகள் அடிப்பணி செய்திடச் சூழ்ந்த
நற்குணச் சன்மார்க்க சங்கத்தார் எல்லாம்
நண்ணினர் தோத்திரம் பண்ணிநிற் கின்றார்
எற்குண வளித்தஎன் அருட்பெருஞ் சோதி
என்னம்மை யேபள்ளி எழுந்தருள் வாயே.

நிலந்தெளிந் ததுகண மழுங்கின சுவண
நீடொளி தோன்றிற்றுக் கோடொலிக் கின்ற
அலர்ந்தது தாமரை ஆணவ இருள்போய்
அழிந்தது கழிந்தது மாயைமால் இரவு
புலர்ந்தது தொண்டரோ டண்டரும் கூடிப்
போற்றியோ சிவசிவ போற்றிஎன் கின்றார்
இலங்குரு வளித்தஎன் அருட்பெருஞ் சோதி
என்குரு வேபள்ளி எழுந்தருளாயே.

கல்லாய மனங்களும் கரையப்பொன் ஒளிதான்
கண்டது கங்குலும் விண்டது தொண்டர்
பல்லாரும் எய்தினர் பாடிநின் றாடிப்
பரவுகின் றார்அன்பு விரவுகின் றாராய்
நல்லார்மெய்ஞ் ஞானிகள் யோகிகள் பிறரும்
நண்ணினர் சூழ்ந்தனர் புண்ணிய நிதியே
எல்லாஞ்செய் வல்லஎன் அருட்பெருஞ் சோதி
என்தெய்வ மேபள்ளி எழுந்தருள் வாயே.

புன்மாலை இரவெலாம் புலர்ந்ததுஞானப்
பொருப்பின்மேல் பொற்கதிர் பொலிந்தது புலவோர்
சொன்மாலை தொடுத்தனர் துதித்துநிற் கின்றார்
சுத்தசன் மார்க்கசங் கத்தவர் எல்லாம்
மன்மாலை மாலையா வந்துசூழ் கின்றார்
வானவர் நெருங்கினர் வாழிஎன் கின்றார்
என்மாலை அணிந்தஎன் அருட்பெருஞ் சோதி
என்பதி யேபள்ளி எழுந்தருள் வாயே.

ஒருமையின் உலகெலாம் ஓங்குக எனவே
ஊதின சின்னங்கள் ஊதின சங்கம்
பெருமைகொள் சமரச சுத்தசன் மார்க்கப்
பெரும்புகழ் பேசினர் பெரியவர் சூழ்ந்தார்
அருமையும் எளிமையும் ஆகிஅன் றாகி
அம்பலத் தேசித்தி ஆடல்செய் பதியே
இருமையும் அளித்தஎன் அருட்பெருஞ் சோதி
என்அர சேபள்ளி எழுந்தருள் வாயே.

சினைப்பள்ளித் தாமங்கள் கொணர்ந்தனர் அடியார்
சிவசிவ போற்றிஎன் றுவகைகொள் கின்றார்
நினைப்பள்ளி உண்ணத்தெள் ஆரமு தளிக்கும்
நேரம்இந் நேரம்என் றாரியர் புகன்றார்
முனைப்பள்ளி பயிற்றாதென் தனைக்கல்வி பயிற்றி
முழுதுணர் வித்துடல் பழுதெலாம் தவிர்த்தே
எனைப்பள்ளி எழுப்பிய அருட்பெருஞ் சோதி
என்னப்ப னேபள்ளி எழுந்தருள் வாயே.

மதம்பிடித் தவர்எல்லாம் வாய்ப்பிடிப் புண்டு
வந்துநிற் கின்றனர் வாய்திறப் பிப்பான்
கதம்பிடித் தவர்எல்லாம் கடும்பிணி யாலே
கலங்கினர் சூழ்ந்தனர் உலம்புறு கின்றார்
பதம்பிடித் தவர்எல்லாம் அம்பலப் பாட்டே
பாடினர் ஆடினர் பரவிநிற் கின்றார்
இதம்பிடித் தெனையாண்ட அருட்பெருஞ் சோதி
என்அய்ய னேபள்ளி எழுந்தருள் வாயே.

மருளொடு மாயைபோய்த் தொலைந்தது மதங்கள்
வாய்மூடிக் கொண்டன மலர்ந்தது கமலம்
அருள்ஒளி விளங்கிய தொருதிருச் சபையும்
அலங்கரிக் கின்றனர் துலங்கிவீற் றிருக்கத்
தெருளொடு பொருளும்மேன் மேல்எனக் களித்துச்
சித்தெலாஞ் செய்திடத் திருவருள் புரிந்தே
இருள்அறுத் தெனைஆண்ட அருட்பெருஞ் சோதி
என்வள்ள லேபள்ளி எழுந்தருள் வாயே.

அலங்கரிக் கின்றோம்ஓர் திருச்சபை அதிலே
அமர்ந்தருட் சோதிகொண்ட அடிச் சிறியோமை
வலம்பெறும் இறவாத வாழ்வில் வைத்திடவே
வாழ்த்துகின்றோம் முன்னர் வணங்கிநிற் கின்றோம்
விலங்கிய இருள் எலாம் விடிந்தது பொழுது
விரைந்து எமக்கு அருளுதல் வேண்டும்இத் தருணம்
இலங்குநல் தருணம்எம் அருட்பெருஞ் சோதி
எம்தந்தையே பள்ளி எழுந்தருள் வாயே.

 

Leave a comment