தசமஸ்கந்தம்—நவீனபாணியில்

தசமஸ்கந்தம்—நவீனபாணியில்

By

Soundararajan Desikan

 

ஸ்ரீமத் பாகவதத்தில், தசம ஸ்கந்தம் மிக முக்கியமானது.இதை, நவீன பாணியில்,

பகவான் ஸ்ரீ க்ருஷ்ணனிடம் நேரில் பேசுவதைப்போல எழுதியிருக்கிறேன்

இவை யாவும் பல வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்டது. ஈ –மெயில் மூலமாக அவ்வப்போது யாவருக்கும் அனுப்பப்பட்டது. அச்சமயம். பற்பல வாசகர்கள் படித்து, உருகி, அவர்களும் கண்ணனுடன் பேசி இருக்கிறார்கள்.

தற்போது, ”ஸ்ரீ காஞ்சி பேரருளாளன் ” ஆன்மிக மாதப் பத்திரிகையில் வெளிவந்து கொண்டிருக்கிறது. முடியும் தருவாயில் உள்ளது.

இதனை, உங்கள் விருப்பத்துக்கு இணங்க, மறுபடியும் , அத்யாயம் அத்தியாயமாக உங்களுக்கு அனுப்புகிறேன்.

ஸர்வம் ஸ்ரீ க்ருஷ்ணார்ப்பணமஸ்து

 

தசமஸ்கந்த தொடக்கத்தில் , பரீக்ஷித் ராஜன் , ஸ்ரீ சுகப்ரஹ்மத்தைக் கேட்பதான வ்யாஜத்தில்,பகவான்ஸ்ரீகிருஷ்ணன் அவதார மஹிமையை, அனுக்ரஹிக்கச் செய்த , அந்த உத்தரையின் புத்ரனை நமஸ்கரிக்கிறேன்.
அவனாலன்றோ , ஸ்ரீ கிருஷ்ண மஹா சரிதத்தைப் படிக்கக் கூடிய / கேட்கக்கூடிய பாக்யம்கிடைத்ததுஅதற்காகஅந்த அர்ஜுன பௌத்ரனை, உத்தரை மைந்தனை —-ஸ்ரீ பரீக்ஷித் மகாராஜனைஎப்போதும்நமஸ்கரிக்கிறேன்.

ஸ்ரீ சுகப்ரஹ்ம ரிஷி —-ஸ்ரீ வ்யாஸ பகவானின் புத்ரர் ———பிக்ஷைக்காக எவர் வீட்டின் முன்பும் “பால் கறக்கும் வேளை ” தாண்டி (கோதாஹண வேளை ) நிற்க மாட்டார் . அப்படிப்பட்ட மஹரிஷி , ஏழு நாட்கள் கங்கைக் கரையில் , பரீக்ஷித் மஹாராஜன் முன்பு உட்கார்ந்து, ஸ்ரீ கிருஷ்ண சரிதத்தைச் சொன்னார். பரீக்ஷித் மகாராஜாவுக்குச் சொல்லும் வ்யாஜத்தில், இந்த க்ரந்தத்தை எல்லாருக்கும் சொன்ன ,
ஸ்ரீ சுகப்ரஹ்ம ரிஷியை மனசாலும், உடலாலும், வாக்காலும் நமஸ்கரிக்கிறேன்; பலதடவை நமஸ்கரிக்கிறேன் . அவர் அல்லவா, இந்த அம்ருதத்தை; தேவாம்ருதத்தை; திகட்டாத அம்ருதத்தை நமக்கெல்லாம் பருகக் கொடுத்தவர் ! நம்மைக் கொடுத்து வைத்தவர்களாகஆக்கியவர்!
ஆக,சுகப்ரஹ்ம ரிஷிக்குக்ருதஜ்ஞ்சதையைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தைத்யர்கள், தானவர்கள், அஹங்காரம் மற்றும் மதம் பிடித்த அரசர்களாக த்வாபரயுகத்தில் பூமியில் பிறந்து வேத வ்ருத்தமான அக்ரமங்களைச் செய்து, அட்டஹாசம் பொங்கி எழ சாதுக்களை ஹிம்சைப் படுத்தி வாழ்ந்து , பூமி பாரத்தை
அதிகரிக்கச் செய்து, பூமிப் பிராட்டிக்கு கஷ்டத்தைக் கொடுத்த சமயத்தில், பூமிப் பிராட்டியை அழைத்துக் கொண்டு, , ப்ரஹ்மா , தேவர்கள் புடைசூழ , க்ஷீராப்தியை அடைந்து, பகவானான உன்னை, புருஷ ஸூக்தம், விஷ்ணு ஸூக்தம், நாராயண அநுவாகம் —-இவற்றால் துதித்து, சாது சம்ரக்ஷணத்துக்காக ராக்ஷஸ ர்களை அழிக்க , பூவுலகில் அவதாரம் செய்ய உன்னைப் ப்ரார்த்தித்ததற்காக , உன் அனுக்ரஹத்தைப் பெற்றதற்காக ,
பூமிப் பிராட்டியையும், ப்ரஹ்மாவையும் பல தடவை நமஸ்கரிக்கிறேன்.

மதுராவில், நித்ய வாஸம் செய்யும் கிருஷ்ணனே !
மதுரா ராஜ்யத்தின் அரசனான உக்ரசேனனுடைய தம்பி, —–தேவகனுடைய புத்ரியான “தேவகியை “, சூரன் எனப்படும் யாதவ குலத் தலைவனின் பிள்ளையான வஸுதேவர், விவாஹம் செய்துகொண்டு தேவகியுடன் ரதத்தில் , தன்னுடைய நகருக்குத் திரும்பும்போது, ராஜாவான உக்ரசேனனின் பிள்ளை “கம்ஸன் ” , தன் தங்கையின் மீது ( ஒன்று விட்ட தங்கை ) வாத்ஸல்யம் மிகுதியாக , தேரின் மீது ஏறி, தானே தேரைச் செலுத்தினான்.
பாதி வழியில், —-ஆகாசத்திலிருந்து குரல்—- கம்ஸனிடம் பேசியது.
” முட்டாளே ! இவளுடைய எட்டாவது கர்பத்தில் தோன்றும் குழந்தை , உன்னைக்கொல்வான்.எந்தத்தங்கையைப்பாசத்துடன், தேரில் , குதிரைகளைப் பிடித்து அழைத்துச் செல்கிறாயோ, அந்தத் தேவகியின் எட்டாவது கர்பத்தில் பிறக்கும் சிசு , உனக்கு ம்ருத்யு ” என்று சொன்னது. உடனே, பாபியும், துஷ்டனுமான கம்ஸன் , குதிரைகளின் கடிவாளத்தை விட்டு விட்டு, மஹா கோபத்துடன், கத்தியை எடுத்து,
தேவகியைக் கொல்ல முயற்சித்தான். அப்போது, வஸுதேவர் , அவனைத் தடுத்து, இனிய வார்த்தைகளைச்சொன்னார்.
” ஒரு ஆத்மா, த்ரேகம் எடுத்ததும் , ம்ருத்யு கூடவே வருகிறது; இந்த த்ரேகத்தில், ஐந்து , ஐந்து இந்த்ரியங்கள்இருந்துத்ரேகம்அழியும்போது, அவையும் மறைகின்றன. ஆத்மா, தன் கர்ம வினைக்கு ஏற்ப , மற்றொரு த்ரேகத்தை எடுத்துக் கொள்கிறது; தூக்கத்தில் இருந்தாலும், ஸ்வப்னத்தில் இருந்தாலும், ஆத்மாவை,மாயையால் , பகவான் செயல்பட வைக்கிறான்; மாயையின் மூன்று குணங்களால் உள்ள த்ரேகத்துடன்,
மனஸ் ஸும் சேர்ந்து, மாயையினால் ஆத்மா செயல் படுகிறது; பிறகு, க்ஜானம் வரப்பெற்று, மாயையிலிருந்து விடுபடுகிறது; ஆதலால், ஒரு ஜீவன் , இன்னொரு ஜீவனுக்குத் த்ரோகசிந்தனையுடன் நடந்து கொள்ளக் கூடாது; உன்னுடைய க்ஷேமத்துக்காகபிறருக்குப்பயத்தை ஏற்படுத்தக் கூடாது; உன் தங்கை சிறியவள்; உனக்குப் புத்ரியைப் போன்றவள்; புதிதாக விவாஹம் ஆனவள்; கொல்லத்தகாதவள் ” என்று, பலப்பல புத்திமதிகளைச்சொன்னார்.
கம்ஸன் சமாதானம் அடையவில்லை. க்ரூர ஸ்வபாவத்துடன் தன்எண்ணத்தைநிறைவேற்றிக்கொள்ளமுயன்றான்.
வஸுதேவர் யோசித்தார். இப்போதைக்கு, இவளுக்கு ஏற்பட்ட ம்ருத்யுவைத் தடுக்க வேண்டும்.என்றுஆலோசித்து,
” ஹே, கம்ஸ !இவளிடமிருந்து, பயப்பட ஒன்றுமில்லை; குழந்தைகள் பிறந்தவுடன் , உன்னிடம்கொடுத்துவிடுகிறேன்;ஆகாசத்திலிருந்து, அசரீரி, இவளுடைய குழந்தையால் தானே, நீ கொல்லப்படுவாய் என்றது ? குழந்தைகளை உன்னிடம் கொடுத்து விடுகிறேன். நீ இஷ்டப்படி செய்துகொள்என்றார்.
இதைக் கேட்டதும் கம்ஸன் , சரியென்று தலையை அசைத்து, தேரை விட்டு இறங்கிச் சென்றான். வஸுதேவர் , தேவகியுடன் தன்னுடைய வீட்டுக்குச் சென்றார். சில நாட்கள் சென்றன;

தேவகி கர்ப்பமடைந்து, முதல் குழந்தையைப் பெற்றாள். இக்குழந்தையின் பெயர் ” கீர்த்தமான் “. சொன்ன சொல் தவறாத வஸுதேவர், மனஸ் சங்கடப் பட்டுக்கொண்டே , பிறந்தகுழந்தையைகம்ஸனிடம்கொடுத்தார்.
கம்சன், குழந்தையைப் பார்த்தான். சந்தோஷப்பட்டான். சிரித்துக் கொண்டே, “இந்தக் குழந்தைஉன்னிடமேஇருக்கட்டும்;எட்டாவதுகுழந்தைதானே எனக்கு ம்ருத்யு ” என்றான். வஸுதேவர் “சரி” என்று சொல்லி குழந்தையுடன் வீட்டுக்குத் திரும்பினார். இருந்தாலும், கம்ஸனிடம்அவருக்குச்சந்தேகம்தான்.

நாரதர் , கம்ஸனுடைய சபைக்கு வந்து, ப்ரஹ்மாவின் முயற்சி , பூமிப்பிராட்டியின்பாரம்தீரபகவானின்அவதாரம், என்கிறதேவரஹச்யங்களைக் கம்ஸனுக்குச் சொல்லிவிட்டுச் சென்றார். கம்சன் மிகவும் பயப்பட்டான். தேவகி, வஸுதேவரைச் சிறையிலிட்டான். பிதாவான உக்ரசேனரை, சிறையில் அடைத்து, ராஜ்யத்தைப் பறித்து, தானே அரசன் ஆனான். தேவகி, வஸுதேவர் இவர்களுக்குப் பிறந்த குழந்தைகளைப் பிறந்தவுடன் கொன்றான்.

ஹே, ப்ரபோ ! உன்னுடைய சங்கல்பத்தாலன்றோ வஸுதேவர்—-தேவகி விவாஹம் நடந்தது;உன்சங்கல்பத்தால்அல்லவா கம்ஸன் தானே முன்வந்து, வஸுதேவர்—தேவகி வந்த தேரைச் செலுத்தினான்; உன் ஆக்ஜைப்படிதானே, ஆகாசத்தில் , அசரீரி கம்ஸனிடம்பேசி அவனுக்குப் பயத்தை ஏற்படுத்தியது; நாரதர், கம்ஸனிடம் வந்து பேசியது எல்லாம், உன்னுடைய லீலை தானே; கம்ஸனுக்கு, அஹங்காரமும்,
கோபமும், பயமும் ஏற்பட்டு தகப்பனாரைச் சிறையில் அடைத்ததும் ராஜ்யத்தை அபஹரித்துக்கொண்டதும்,கர்பத்திலிருந்துபிறந்த ஒவ்வொரு குழந்தையையும் கொன்றதும் உன்னுடைய எண்ணம் தானே! அப்படிப்பட்ட சங்கல்பத்துக்கும் ,ஆஞ்ஜைக்கும், லீலைக்கும், எண்ணத்துக்கும் , அடியேனுடைய க்ருதக்ஜதை உரித்தாகுக. உனக்கு முன்பு பிறந்துஉயிரை விட்டஏழுகுழந்தைகளின்த்யாகம்அல்லவா உன்அவதாரத்துக்கு வித்திட்டது ! அவர்களால்அல்லவா,உன்திருஅவதாரம்ஏற்படப்போகிறது !
அந்தக் குழந்தைகளை, பக்தியுடனும், நன்றியுடனும் நமஸ்கரிக்கிறேன்

நீ, தேவகியைத் தாயாக அடைந்தாய். தேவகி, கம்ஸனின் ஸ்வப்னத்தில் அடிக்கடிதோன்றினாள்.கம்ஸன்மிகவும்பயந்தான்.
தன்னை அழிப்பவன், எட்டாவது கர்பமாக தேவகியின் வயிற்றில் இருக்கிறான் ; அவன் பிறந்ததும்,அந்தக்குழந்தையைக் கொன்றுவிடவேண்டும் என்று,எப்போதும்உன் நினைவாகவேஇருந்தான்.

தேவகியின் கர்பத்தில், நீ வாஸம் செய்யும்போது, உன்னை, ருத்ரன், ரிஷிகள்,தேவர்கள்,முன்னிலையில்ப்ரஹ்மா துதித்தார். அல்லவா ? அதை , அடியேனும் சொல்லிஉன்னைஸ்தோத்ரம்செய்கிறேன்

இனி 2 வது அத்யாயம்

தமஸ்கந்த பாராயணம்—–நவீன பாணியில்
—————————————————-
அத்யாயம் –2–
பகவான், தேவகியின் கர்ப்பத்தை அடைவது, ப்ராஹ்மாவின் ஸ்துதி
—————————————-

கம்ஸனுக்கு யாதவ குலத்தின் மீதே அசூயை ஏற்பட்டது.
அந்தக் குலத்தையே அழிக்க முற்பட்டான்.

இவனுடன், ப்ரலம்பகன், சாணூரன், த்ருணாவர்த்தன், முஷ்டிகன், அரிஷ்டன், த்விதன், பூதனை,
கேசி, தேனுகன், பாணன், பௌமன், மகத தேசத்து அரசனும் மாமனாருமான ஜராஸந்தன்
என்பவர்களும் சேர்ந்து கொண்டனர். அஸுரர்கள் பலம் இப்படி வளர்ந்தது. தேவகியின் கர்ப்பத்தில் ஏற்பட்ட
ஆறு குழந்தைகளையும் , கம்ஸன், ஒருவர் பின் ஒருவராகப் பிறக்கப் பிறக்கக் கொன்றான்.

ஏழாவது கர்ப்பம் —-ஸ்ரீ விஷ்ணுவின் அம்சமாக அனந்தன் என்கிற ஆதிசேஷன் ஆவிர்ப்பவித்தார்.
இப்போது, கம்ஸனுக்கு , மரண பயம் மிகவும் அதிகரித்தது.

பகவானே ! பயத்தை நீதானே உண்டாக்கினாய் !இப்போது, நீ தானே யோகமாயையை அழைத்து,
“ஹே, யோக மாயை ! வசுதேவருடைய இன்னொரு பத்னி —ரோஹிணீ—-, கோகுலத்தில்
, நந்தகோபன் பாதுகாப்பில் வசிக்கிறாள்
( வசுதேவருக்கு ஏழு மனைவிகள் . தேவகி கடைசி மனைவி )தேவகியின் வயிற்றில் , என் அம்சமாக அனந்தன் இருக்கிறான்;அந்த கர்ப்பத்தை இழுத்து, , ரோஹிணீயின் வயிற்றில் வைத்து விடு;
நான் , தேவகிக்கு எட்டாவது பிள்ளையாக அவதரிப்பேன்; நீ, நந்தகோபனுடைய மனைவி யசோதையின் கர்ப்பத்தில் அவதரிப்பாயாக; நான் பூமியில் அவதரித்ததும், வசுதேவர் என்னை , நந்தகோபன் வீட்டில் யசோதைக்குப்பக்கத்தில் வைத்துவிட்டு, யசோதை வயிற்றில் பிறக்கும் உன்னை, வசுதேவர் தன்னுடைய இருப்பிடமானகாரக்ருஹத்துக்குக் கொண்டு வந்து விடுவார்; நீ, இடம் மாறி தேவகியிடம் வந்து சேர்; உன்னை, உலக மக்கள் துர்க்கை, காளி, விஜயா,
வைஷ்ணவீ , குமுதா, சண்டிகா, கிருஷ்ணை, மாதவி, கன்யகா, மாயா, நாராயணீ, ஈசானீ ,
சாரதா, அம்பிகா, என்று பலப் பலப் பெயர்களில் பூஜை செய்வர் ” என்று ஆஜ்ஜை இட்டாய்.
உன் கட்டளைப்படிதானே,யோகமாயை என்கிற யோக நித்ரை “சரி ” என்று சொல்லி,
உன்னைப் பிரதக்ஷணம் செய்து, தேவகியின் ஏழாவது கர்ப்பத்தை, ரோஹிணிக்கு மாற்றினாள்; நீ செய்த மாயையால் தானே, தேவகியின் ஏழாவது கர்ப்பம் அழிந்து விட்டதாக நம்பி ஜனங்கள் ுக்கப்பட்டனர்

பகவானாகிய நீ, தேவகியின் கர்ப்ப வாசத்துக்காக, முதலில் வசுதேவர் மனஸ்சில் புகுந்தாய்;
அதனால், அவர், ஜகஜ்ஜோதியாகக் காக்ஷி அளித்தார் ; ஆசார்யன் , தன் கடாக்ஷத்தினால்சிஷ்யனை அனுக்ரஹிப்பதைப்போல, வசுதேவரால் , தேவகி அனுக்ரஹிக் கப்பட்டாள்.
இதுவும் உன் மாயையால், நடந்தது தானே . நீ, தேவகியைத் தாயாக அடைந்தாய்.
தேவகி, கம்ஸனின் ஸ்வப்னத்தில் அடிக்கடி தோன்றினாள் கம்ஸனின் பயம் மிக மிக
அதிகமாக ஆகிவிட்டது. தன்னை அழிப்பவன் , எட்டாவது கர்ப்பமாக, தேவகியின் வயிற்றில் இருக்கிறான்; அவன் பிறந்ததும் அந்தக் குழந்தையைக்கொன்றுவிட வேண்டும் என்று , சதா சர்வ காலமும்
உன் நினைவாகவே இருந்தானல்லவா
ஹே, ஸத்ய வ்ரதரே! நீ சொல்லும் ஒவ்வொரு சொல்லுக்கும், நீயே ப்ரமாணம்.
அதை,ஸத்யமாக ஆக்குவதும் நீயே.”” ஆகாயம் சரிந்தாலும், கடல் வற்றினாலும்,
நான் சொல்வது எப்போதும் பொய்யாகாது ,ஸத்யமே ” என்று,த்ரௌபதிக்கு வாக்களித்த கண்ணனே ! ஸத்யனே ! , நித்யனே! சநாதனனே ! சரணாகத ரக்ஷகனே ! நீ தேவகி கர்ப்பத்தில் இருந்தபோது,
ருத்ரன், ரிஷிகள், தேவர்கள் கூடியிருக்க, ப்ரஹ்மா உன்னை ஸ்தோத்ரம் செய்துசரணமடைந்ததைப் போல, பிரபன்னனாகிய அடியேனும்,அந்த ஸ்தோத்ரத்தையே சொல்லி, உன்னைச் சரணம் அடைகிறேன்.

பிரும்மாவின் ஸ்துதி
————-
ஓ… …. ஆதி வ்ருக்ஷமான பகவானே !

இந்த சம்ஸாரம் ஓர் அஸ்வத்த வ்ருக்ஷம் ஆதியும் இல்லை; அந்தமும் இல்லை; அநாதி; மேலே ஆகாயத்தை நோக்கி வேர்களும், கீழே பூமியில் கப்பும் , கிளையும் ,இலையுமாக மண்டிக் கிடக்கிறது; இதற்கு, ஸுகம் , துக்கம் என்கிற இரண்டு பழங்கள்;
மூன்று ஆணி வேர்கள்—- இறந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம்என்கிற காலமான மூன்று ஆணி வேர்கள்;
முக்குணங்கள் —-ரஜஸ், தமஸ்,ஸத்வம் என்கிற மூன்று குணங்கள்;
நான்கு விதமான புருஷார்த்தங்கள் , இந்த வ்ருக்ஷத்துக்கு, மரப்பட்டை;
ஐந்து இந்த்ரியங்கள் –கரணங்கள் ;
ஆறு அவஸ்தைகள் —அதாவது, ஆறு நிலைகள் ..பிறப்பு, ஸ்திதி, வளர்ச்சி,முதுமை, மரணம், அறிவு .
மற்றும் , பசி, தாகம், வருத்தம், மோஹம் , முதுமை, மரணம் .
ஏழு தாதுக்கள் —கபம், ரத்தம், வியர்வை( பருமன் ),மாம்சம், மஜ்ஜை, எலும்பு, ரேதஸ் என்கிற ஏழு தாதுக்கள்;
எட்டு கிளைகள்—-ஐந்து இந்த்ரியங்கள், மனஸ், புத்தி, அஹங்காரம் என்கிற எட்டு கிளைகள்;
ஒன்பது கண்கள், அதாவது த்வாரங்கள்— இரண்டு கண்களின் பொந்துகள், இரண்டு காதுகளின்
த்வாரங்கள், மூக்கின் இரண்டு த்வாரங்கள், வாய், குறி, ஆசன வாய்—என்கிற ஒன்பது த்வாரங்கள்;
பத்துப் ப்ராண ப்ரவ்ருத்திகள்— பிராணன், அபானன், வ்யானன், ஸமானன், உதானன்,நாகன், கூர்மன், க்ருகசன், தேவதத்தன், தநஞ்ஜயன்—ஆகிய பத்துப் பிராணன்கள்
இரண்டு பக்ஷிகள்—-ஜீவாத்மா, பரமாத்மா
இப்படிப்பட்ட ஆதி வ்ருக்ஷமான உன்னை, நீ, தேவகியின் கர்ப்பத்தில் இருந்தபோது,
ப்ரஹ்மா ஸ்தோத்ரம் செய்து சரணம் அடைந்ததைப் போல,பிரபன்னனாகிய அடியேனும், அவற்றைச் சொல்லி -உன்னைச் சரணம் அடைகிறேன்.

நீயே புருஷோத்தமன்; உபாதான காரணமும் நீயே; நிமித்த காரணமும் நீயே;
நீயே எல்லா உலகங்களையும் , ஜீவன்களையும் படைக்கிறாய்; காப்பாற்றுகிறாய்;
பிரளய சமயத்தில், அழித்து, நீயே லயஸ்தானமாக இருக்கிறாய்;
உன் நியமனத்தால், எல்லாப் பிரவ்ருத்திகளும் உண்டாகின்றன;
உனது மாயையால், சேதனர்கள் அக்ஜானத்தில் மூழ்கி, நீயே யாவும்,
நீதான் ஒருவன், நீயே எல்லா உலகங்களிலும் வ்யாபித்து இருக்கிறாய் என்பதை மறந்து,
புத்தி பேதலித்து, அறிவை இழந்து, உன்னை—நானா வகைப் பட்ட —பலவைப் பட்ட பொருள்களாகப் பார்க்கிறார்கள்; ஆனால், வித்வான்கள்,
அண்டசராசரம் அனைத்துக்கும் , அவற்றின் க்ஷேமத்துக்கும், நீதான் காரணம் என்று உணர்கிறார்கள்;
உன் சுத்வ ஸத்வ அவதாரங்கள், சாதுக்களுக்கு சுகத்தையும் மங்களத்தையும் அளிக்கிறது;
அதுவே, துஷ்டர்களுக்குத் தீங்கையும் நாசத்தையும் அளிக்கிறது;
உனது, அன்றலர்ந்த தாமரைக் கண்களின் கடாக்ஷத்தால், எல்லா ஸத்வங்களுக்கும் இருப்பிடமான
உன் ரூப லாவண்யத்தை, ஸுபாஸ்ரயத்தை, ஸாதுக்கள் மனத்தில் தரித்து,
சமாதி நிலையிலும் அவற்றை அனுபவிக்கிறார்கள்;

அதனால், ஸம்சாரமாகிய, இந்தப் பெரிய ஸமுத்ரத்தை, கன்றுக் குட்டியின் கால் குளம்பில்( கோவத்ஸபதம்)
தேங்கின ஜலத்தைத் தாண்டுவதைப் போலத் தாண்டி, உனது திருவடிகளையே நம்பி, அதையே தெப்பமாக (படகு ) வைத்துக் ,கடக்கிறார்கள்;
இப்படிப்பட்ட பெருமைகள் உள்ள நீ, தேவகியின் கர்ப்பத்தில் இருந்தபோது,
ருத்ரன், ரிஷிகள், தேவர்கள் முன்னிலையில்
ப்ரஹ்மா ஸ்தோத்ரம் செய்து சரணமடைந்ததைப் போல,
பிரபன்னனாகிய அடியேனும், அவற்றைச் சொல்லி, உன்னைச் சரணம் அடைகிறேன்..
உன்னை பூஜை செய்யும் பக்தர்கள், உன் திருவடிகளை நமஸ்கரித்துப்பூஜிக்கிறார்கள்;
அதனால், கஷ்டங்கள் நிறைந்த, கடக்க முடியாத “பவார்ணவத்தை”, —பயங்கரமானதும்,
சௌஹார்த்த மில்லாததுமான அடர்ந்த பெரிய இருளை, உனது பிரகாசத்தால் கடக்கிறார்கள்;
அப்படிக் கடந்து, சம்சாரக் கடலைக் கடந்து, அக்கரையான –உனது திவ்ய வாசஸ்தலமான
பரமபதத்தை அடைந்த முக்தர்கள், உலகத்தில் உள்ளவர்களுக்கு, உதாரணமாக —ஆதர்ச புருஷர்களாக
இருக்கிறார்கள்; ஆனால், ஹே, கண்ணா! ….எவ்வளவு க்ஜானம் இருந்தும் , பண்டிதனாக இருந்தும்,
உன்னிடம் பக்தி இல்லாதவர்கள் , இந்த மார்க்கத்திலிருந்து நழுவி, கஷ்டப்படுகிறார்கள்;
உன்னிடத்தில் பரமபக்தி உள்ளவர்கள், உன்னையே நம்பி, பயமே இல்லாமல், எவ்வளவு
ஆபத்து வந்தாலும், அந்த ஆபத்துகளைச் சுலபமாகத் தாண்டுகிறார்கள்;
பெரிய பண்டிதர்களாக இருந்தாலும், வித்வான்களாக இருந்தாலும், பெரிய நல்ல குடும்பங்களில்
பிறந்து, அந்த நல்ல பிறவியினால் கர்வம் கொண்டவர்கள், உன்னைத் துதிக்காமல்,
பக்தி செய்யாமல், முக்தியை அடைவதில்லை; உன்னிடம் பரம பக்தி உள்ளவர்கள்,
எல்லா வகைகளிலும் உன்னால் காப்பாற்றப் பட்டு, தேவர்களின் தலைமீது
தங்கள் பாதங்களை வைத்து, பயமில்லாமல் சஞ்சரிக்கிறார்கள்;
நீ ஸுத்த ஸத்வ ஸ்வரூபி! பக்தர்கள் ( ஜீவாத்மாக்கள் ) ஆஸ்ரம தர்மங்களை, நன்கு அனுஷ்டித்து,
அவற்றால் ஏற்படும் பலன்களைத் தள்ளி விட்டு ( உனக்கே அர்ப்பணித்து ) உன்னை ஆராதிக்கிறார்கள்;
யாகம், யஜ்ஜம், யோகம், தபஸ், தானம், புண்ய தீர்த்தாடனம், ஸமாதி இவைகளால் செய்யப்படும்
பூஜையை ஏற்றுக்கொண்டு, அவர்களை அனுக்ரஹிக்கிறாய் ;
இப்படி அனுக்ரஹிக்கும் உன்னை, நீ, தேவகியின் கர்ப்பத்தில் இருந்தபோது,ருத்ரன், ரிஷிகள், தேவர்கள் இவர்கள் முன்பாக, ப்ரஹ்மா, உன்னை ஸ்தோத்ரம் செய்துஉன்னைச் சரணம் அடைந்ததைப் போல,
அடியேனும் அவற்றைச் சொல்லி, உன்னைச் சரணம் அடைகிறேன்.
ஹே, , ஜகத் காரணா ! ….சாஸ்த்ர க்ஜானத்தாலும், அனுமானத்தினாலும்,
உனது கிருபையால் ஏற்பட்ட இந்த்ரியங்களால், ஓரளவுதான் உன்னை அறிய முடிகிறது;
உனது நாமாக்கள் , உனது ரூபங்கள், உனது சேஷ்டிதங்கள் , அனந்தம், மிக மிக அனந்தம்;
அவை அற்புதம், மிக மிக அற்புதம்; நீ எல்லாவற்றையும் ஸ்ருஷ்டித்தாலும்,, எதிலும் உனக்குப் பற்று இல்லை; ஆனால், உனது க்ருபையால், உனது கதா உபன்யாசங்களைக் கேட்டும், குண சேஷ்டிதங்களை வாயாரச்சொல்லியும்,உனது திருவடிகளை வணங்கி சரணம் அடைந்தும், இந்தப் பூமியில் ஏற்பட்ட “பந்தம் ”
அறுபடுகிறது;

மறுபடியும், பிறவித் துயர் என்பது இல்லை; இந்த பூமி , உனது திருவடி;
இந்தப் பூமியின் தாங்கொணா பாரம், உனது அவதாரத்தால் குறைகிறது;
உன்னுடைய அவதாரம் சாதுக்களுக்கு அபயம்;
நீ, இப்போது அவதரித்து, பூமியின் பாரத்தை ஒழிக்க வேண்டும்;
அடியோங்களைக்காக்க வேண்டும்; இப்படியாகப் பலதடவை,அவதாரங்களை எடுத்திருக்கிறாய்; இதற்கு, உன் சங்கல்பமே காரணம்;
ஜீவனுக்கு, உன்னைப் பற்றிய சாஸ்த்ர க்ஜானம் இல்லாததால்,பிறப்பு, இறப்பு, சுழலில் சிக்கி, சம்ஸார பந்தத்தில் உழல்கிறது;
நீ, மத்ஸ்ய, கூர்ம, ஹயக்ரீவ, ஸுகர ( பன்றி ), ந்ருஸிம்ஹ , ஹம்ஸ ,வாமன,
பரஸுராம, ராம, இப்படிப் பல அவதாரங்களை எடுத்திருக்கிறாய்;

அப்போதெல்லாம், எல்லா உலகங்களுக்கும், நீதான் அதிபதி என்று காட்டி,
பூமியின் பாரத்தைப் போக்கி இருக்கிறாய்.;இதற்கு, உன் சங்கல்பமே காரணம்;
இப்போதும் அவ்வாறே அவதாரம் செய்யப் போகிறாய்; உனக்கு ஜயம் உண்டாகட்டும்;
இப்படிப் பராக்ரமம் உள்ள, உன்னை
நீ , தேவகியின் கர்ப்பத்தில் இருந்தபோது,
ருத்ரன், ரிஷிகள், தேவர்கள் முன்னிலையில், ப்ரஹ்மா ஸ்தோத்ரம் செய்துசரணமடைந்ததைப் போல பிரபன்னனாகிய அடியேனும், அவற்றைச் சொல்லி,
உன்னைச் சரணம் அடைகிறேன்.
ஹே, பரந்தாமா….ப்ரஹ்மா, ருத்ரன், ரிஷிகள் தேவர்கள்,
எந்த ஸ்துதி வசனங்களால் உன்னுடைய நிஜ ஸ்வரூபம் காணப்படுமோ ,அவற்றால் துதித்து, அடியேனுக்கும் காட்டிக் கொடுத்து,உபகாரம் செய்தமைக்காக , அவர்களையும் நமஸ்கரிக்கிறேன்

( 2 வது அத்யாயம் முடிகிறது. )

அத்யாயம்—3
————-
பகவான் ஸ்ரீ கிருஷ்ணனாக அவதாரம்
——————————————————

பரம பவித்ரமான காலம்; ஆவணி மாசம்; ஆகாயம் நிர்மலமாக இருந்தது;

தடாகங்களில் தாமரைப் புஷ்பங்கள் நிறைந்து இருந்தன; காடுகளில் மரங்கள் புஷ்பங்களை வர்ஷித்தன;

பக்ஷிகள் குதூகலம் அடைந்தன; எங்கும் சாந்தம்; சாதுக்களின் ஹ்ருதயம் குளிர்ந்து இருந்தது;

வாயு சுத்தமான காற்றை வீசிற்று. ஆகாயத்தில் , துந்துபி, பேரிகை முதலிய வாத்தியங்கள் முழங்கின;

வித்யாதரர், அப்சரஸ்கள் , கின்னரர், கந்தர்வர், சித்தர், சாரணர் மகிழ்ச்சியுடன் ஆடிப் பாடினர்;

தேவர்கள், ஆகாயத்திலிருந்து புஷ்பமாரி பொழிந்தனர்;

த்வாபர யுகம்; ஸ்ரீ முக வருஷம்; தக்ஷிணாயனம்; ஆவணி மாசம்;

கிருஷ்ண பக்ஷம்; அஷ்டமி திதியும் ரோஹிணி நக்ஷத்ரமும் கூடிய சுப வேளையில் ,

ப்ரஹ்மா அதி தேவதையாக உள்ள ரோஹிணி நக்ஷத்ரத்தில், சந்திரன் உச்சத்தில், சந்திரனுக்குப்
பிரியமானதும், பிரஜாபதியின் நக்ஷத்ரமுமான இந்த ரோஹிணி நக்ஷத்ரத்தில்,

நள்ளிரவு 11–30 முதல் 12-00 மணிக்குள்ளாக ,
நீ, தேவகிக்கு எட்டாவது பிள்ளையாக அவதாரம் செய்தாய்.

தேவகியின் ரூபம் தேவ ரூபத்தை மிஞ்சியது.

ஹே, ப்ரபோ, உன் அவதார காலத்தில் , அடியேன் எந்தப் பிறவியில்

எங்கு இருந்தேனோ தெரியாது; ஆனால், இப்போது , உன், அவதார வேளையைச்சொல்லி,

நீ அவதரித்ததை, உடலெல்லாம் புல்லரிக்க, மனஸ் எல்லாம் மகிழ்ச்சி ததும்ப ,
தேவகி , வசுதேவர் உள்ள காராக்ருஹத்தில் , உன்னைப் பிரதக்ஷணம் வந்து, வந்து,

உன் மெல்லிய, மிக மெல்லிய , பிஞ்சுத் திருவடிகளைத் தொட்டுத் தொட்டு ,

அடியேனின் கண்களில் ஒற்றிக்கொண்டு , உன்னையே சரணம் என்று அடைகிறேன்.

நளினம் அழகு, இப்படி எல்லாம் திருமேனியில் கலந்து,

உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் அழகனே !
நீ, நீலரத்ன மணியைப் போல ஜொலிக்கிறாய்;

அலர்ந்த கேசபாசம்;

பவளத்தை மிஞ்சும் திரு உதடுகள்;

புண்டரீக நயனங்கள்; கள்ளச் சிரிப்பு ;
அதனால் கன்னத்தில் குழி;

சின்னஞ்சிறிய, மிகவும் சின்னஞ்சிறிய நான்கு திருக் கைகள்;

அவைகளில் திவ்ய ஆயுதங்கள் சக்ரம், சங்கு,
கதை, தாமரை; திருமார்பில் ஸ்ரீ வத்ஸ மரு;

திருக் கழுத்தையும் , திரு மார்பையும் அணைத்துச்

சேர்க்கும் முத்துச் சரங்கள்; கௌஸ்துபம்;
வனமாலை; இடையில் பீதாம்பரம்; வைடூர்யத்தால் இழைக்கப்பட்ட க்ரீடம்;

குண்டலங்கள்; தாமரை ஆயிரம் இதழ்களுடன் கொத்தாக இருப்பதைப் போல ,

இடையில் தங்க ஆபரணங்கள்; விரல்களில் மோதிரங்கள்;

தோள்பட்டையில் ஆபரணம்; இதுதான் சிவப்போ என்று ,
சிவந்து இருக்கும் திருவடிகள்,

சின்னஞ்சிறு, மிகச் சின்னஞ்சிறு திருவடிகள்;

அவைகளில் தண்டை, கொலுசு

ஹா, ஹா, அற்புதம் , மிக மிக அற்புதம்!

மறுபடியும் மறுபடியும் உன் பிஞ்சுத் திருவடிகளை ஸ்பர்சித்து,

உன்னையே சரணம் அடைகிறேன்.
ஹே, ப்ரபோ, நீதான் சாக்ஷாத் நாராயணன்;

நீயே விஷ்ணு; நீயே சர்வலோக சரண்யன்;

நீயே ப்ரகிருதி தத்வங்களுக்கு மேலான புருஷன்;
நீயே 26 வது தத்வம்;

நீயே , சர்வ புத்தியையும் தாங்கும் சமஷ்டி புத்தித்வம்;

முக்குணம் உள்ள ப்ரக்ருதியைப்படைத்து, செயல்படுத்தி,
ஆட்டுவிப்பது நீயே; இப்படியாக உன்னை ஸ்ரீ வசுதேவர் ,

உன் திரு அவதாரம் ஆனவுடன் , காரக்ருஹத்தில் ஸ்தோத்ரம் செய்ததைத்
திருப்பிச் சொல்லி ஸ்ரீ வசுதேவரை முன்னிட்டு , அடியேனும் ஸ்தோத்தரிக்கிறேன்.
நீயே, ஒவ்வொரு தத்வத்திலும் அநுப்ரவேஸம் செய்து,

அவைகளை வஸ்துவாக ஆக்கினாய்; அவை யாவும் உனக்குச் சரீரமே;

ஆனால், அதன் குண தோஷங்கள் உன்னைப் பாதிக்காது;

இருபத்தைந்து தத்வங்களான, மஹத், அஹங்காரம், புத்தி, மனஸ், ஐந்து பூதங்கள்,

ஐந்து தன் மாத்ரங்கள், ஐந்து கர்ம, க்ஜாநேந்த்ரியங்கள், , ப்ரகிருதி, ஜீவன், இவைகளைத்
தாமே செயல்படுவது போல,

நீ, தூர விலகி நிற்கிறாய்;

அதைப் போல, தேவகியின் வயிற்றில் கர்ப்ப வாஸம் செய்து,

பிறகு பிறந்து,

உனக்கும் ஒரு மாதா தேவை என்று, உலகத்துக்குக் காட்டினாயோ;

நீ. சிருஷ்டிக்கு முன்பு, மஹத், அஹங்கார தத்வங்கள் மாறுபாட்டை அடையாமல்,

பிறகு உன்னுடைய சங்கல்பத்தாலும், அநு ப்ரவேசத்தாலும், நியமனத்தாலும்,

பஞ்சீகரணம் செய்யப்பட்டு, பரிணமித்து, தாமே அவைகளை உண்டாக்குவது போல

ப்ரமை ஆயிற்று;

இந்த ஸ்ருஷ்டி என்பது, ஸத்கார்யவாதம்; உள்ளே இருக்கும் பொருள் ,

தானே உண்டாகும் —ஸ்ருஷ்டியாகும்;
நெல் விதைத்தால், நெல் தானே வளரும் உனக்கு எந்த மாறுதலும் இல்லை;

தேவகிக்குக் குழந்தையாக நீ பிறந்தது, ” அசந்தநீயம் ” !

( நீ, அதனுள் நுழைந்து பிறந்தாயா? அல்லது, உன் சங்கல்பத்தால் உள்நுழைந்து பிறந்தாயா ?

அவை தாமாகப் பிறந்தனவா ? எது சரி என்று தீர்மானிக்க முடியாதபடி ,

என் புத்தி கலங்குகிறது; உனக்கு, மனுஷ்யர்களைப் போல இந்த்ரியங்கள் இருந்தாலும்

அவை அப்ராக்ருதம்—–சுத்த ஸத்வத்தால் ஆனது ; சுபாஸ்ரயம்;

நீ, எல்லாப் பொருள்களுக்கும் ஆத்மா; அவை யாவும் உனக்குச் சரீரம்;

நீதான் அவைகளை உண்டாக்குகிறாய்;
இது, வித்வான்கள் அல்லாத அறிவிலிகளுக்குப் புரியாது;

உனது சக்தி , சங்கல்பம், வீர்யம், அளவிட இயலாதது;

இந்தப் பொருட்கள் உண்மையாகவே உள்ளனவா ?

பொய்த் தோற்றமா ? ஒன்றா, பலவா ? யாரால் எப்படிச் சொல்ல முடியும் ?

இவை உன்னிடமே லயித்து, உனது சங்கல்பத்தால் ஸ்ருஷ்டிக்கப்படுகிறது;

இது உனக்கு ஒரு லீலை ! இதனால் உனக்கு ஒரு தோஷமும் இல்லை;

நீதான் ஸத்யம்;

நீதான் ஈஸ்வரன், சர்வேஸ்வரன்;

நீதான் ப்ரஹ்மம்;

சத்வம், ரஜஸ் , தமஸ் இவைகளை நீதான் உண்டாக்குகிறாய்;

நீ அகில லோகாதிபதி; ஆனாலும்
உனக்கு கர்ப்ப வாஸம் ஏற்பட்டது ஆச்சர்யம் !

உலகங்களை எல்லாம் படைக்கும் நீ, எங்களுக்காக, அடங்கி, ஒடுங்கி,

வயிற்றில் பதுங்கி இருந்தது, ஆச்சர்யம் !

நானும் மனுஷ்யக் குழந்தைதான் என்கிற கபட வேஷமா இது ?

அநீதியைச் செய்யும் அசுரர்களை அழிக்க, எனது க்ருஹத்தில் பிறந்து
இருக்கிறாய்; தர்மத்தை ஸ்தாபனம் செய்ய, அவதாரம் செய்திருக்கிறாய்;

நீ பிறந்திருப்பதை அறிந்து, கம்ஸனும் அவனுடன் சேர்ந்த துஷ்டர்களும்
, உன் ப்ராதாக்களைக் கொன்றதைப் போல , உன்னையும் கொன்று விடுவார்களே,

, உன்னைக் கொல்ல ஆயுதமேந்தி வருவார்களே ”
இப்படியாக, ஸ்ரீ வசுதேவர் , உன்னை ஸ்தோத்ரம் செய்ததைத் திருப்பிச் சொல்லி,

ஸ்ரீ வசுதேவரை முன்னிட்டு, அடியேனும் அப்படியே
ஸ்தோத்தரிக்கிறேன்
உன் தாயாரான தேவகியும் , மஹா புருஷ லக்ஷணங்களைக் கொண்ட

உன்னைப் பார்த்து, கம்ஸனிடம் பயம் நீங்கியவளாக, உன்னைத் துதித்தாள்
நீயே, ப்ரஹ்மம், நீயே விஷ்ணு, நீயே அத்யாத்ம தீபம்,

அவ்யக்தமாக கண்களுக்குத் தெரியாது இருந்த நீ
இப்போது எங்களுக்குக் குழந்தையாகத் தோன்றி இருக்கிறாய்.

நீ நிர்குணன்;

நிர்விகாரன்;

ஒவ்வொரு வஸ்துவுக்கும் நீயே ஆதாரம்;

உனது வீர்யத்தால், வஸ்துக்களின் ஸ்திதி முதலான

எல்லாவற்றையும் நடத்துகிறாய்;

ஆனால், அதன் குண விசேஷங்கள் உன்னைப் பற்றுவதில்லை;

அப்படியான விஷ்ணுவான நீ, இப்போது என் குழந்தை என்று

சொல்லும்படி விளங்குகிறாய்; உன்னை அடிக்கடி நமஸ்கரிக்கிறேன்.
இப்படி உன்னை, உன் தாயான தேவகி ஸ்தோத்ரம் செய்ததை,

அடியேனும் திருப்பிச் சொல்லி, அந்த தேவகி மாதாவை முன்னிட்டு,

அடியேனும் உன்னை அடிக்கடி நமஸ்கரிக்கிறேன்.

மஹா பிரளய சமயத்தில், ( இரண்டு பரார்த்தம்—-ப்ரஹ்மாவின் ஆயுள் முடியும்போது )

எல்லாப் பொருள்களும் அழிந்து, சூக்ஷ்ம ஸ்திதியில் எல்லாப் பொருளும் ஒடுங்கி,

அவ்யக்தமாக ஆகி, நீ மட்டும் அழியாமல் இருக்கிறாய்.

நீயே கால மூர்த்தி;

என்னை ரக்ஷிப்பவனாகிய உன்னைச் சரணமடைகிறேன்.

கம்ஸனுக்குப் பயந்து வாழ்கிறோம்.

நீதான் அந்தப் பயத்தைப் போக்க வேண்டும்.

இந்த மிக அத்புதமான, அழகான, ஆச்சர்யமான ரூபத்தை மறைத்துக் கொள்.

சாதாரண மனுஷ்யக் குழந்தையாக மாறி விடு;

அந்தக் கம்ஸன் உன்னை, என்னுடைய குழந்தை என்று அறியாமல் இருக்கட்டும்.

நான்கு திருக்கரங்களுடன் கூடிய உன் திவ்ய ரூபத்தை மாற்றிக்கொள்

எல்லாருக்கும் மேலான நீ, என் வயிற்றில் வசித்து, பிறகு பிறந்தாய்.

இது, மனுஷ்ய லோகத்தில் உன்னுடைய லீலை. உன்னை நமஸ்கரிக்கிறேன் ”

இப்படியாகச் சொல்லி, உன் தாயான தேவகி உன்னை ஸ்தோத்ரம் செய்ததை,

அடியேனும் இப்போது சொல்லி, உன் தாயார் தேவகியின் முன்பாக

உன்னை அடியேனும் நமஸ்கரிக்கிறேன்.

இந்தச் சமயத்தில், நீ சொன்னதை உனக்கு நினைவு படுத்துகிறேன்.
“”ஹே, தேவகி, ஸ்வாயம்பூ மன்வந்தரத்தில் ,

உனக்கு ” ப்ருஸ்நீ ” என்று பெயர்; உன் கணவர் ” சுதபர் ” என்கிற ப்ரஜாபதி.

ப்ரஹ்மாவின் கட்டளையான சந்ததியை உண்டாக்குங்கள் என்கிற ஆணையை மீறி,

நீங்கள் இருவரும் இந்த்ரியங்களை அடக்கி, தபஸ் செய்து ,

அவ்வப்போது ஏற்பட்ட சீதோஷ்ண மாறுதல்களைப் பொறுத்துக் கொண்டு,

என்னை உபாஸித்தீர்கள் . 12000 தேவ வருஷங்கள் அவ்வாறு தபஸ் செய்தீர்கள்.

நான், அந்தத் தபஸ்ஸால் சந்தோஷமடைந்து, உங்கள் முன்பு தோன்றி

உங்களுக்கு வேண்டிய வரத்தைக் கேளுங்கள் என்றேன்.

உடனே, நீங்கள், உன்னைப் போல ஒரு புத்ரன் வேண்டும் என்று ப்ரார்த்தித்தீர்கள்.

நீங்கள் மோக்ஷத்தைக் கேட்கவில்லை.
என்னையே உங்கள் பிள்ளையாகக் கேட்டீர்கள்.

நானே உங்களுக்குப் பிள்ளையாகப் பிறக்கிறேன் என்று வரம் தந்தேன்.

நீங்கள் குடும்ப வாழ்க்கையை அனுபவித்தபோது, நான் ” ப்ருஸ்னி -கர்ப்ப ” என்கிற

பெயருடன் பிள்ளையாகப் பிறந்தேன்.

இரண்டாவது தடவையாக, நீங்கள், அதிதி—-கச்யபராக இருந்தபோது,

உபேந்த்ரனாக அவதரித்தேன். வாமனன் என்றும் பெயர்.

இப்போது உங்களின் இந்த மூன்றாவது பிறவியில்,
சதுர் புஜத்துடன் உங்களுடைய குழந்தையாகத் தோன்றி இருக்கிறேன்.

இப்போது, உங்களுக்கு என்னைப் பார்ப்பதால் ஏற்படும் அனுபவம்
ப்ரஹ்ம பாவத்தாலும், புத்ர பாவத்தாலும், மாறி மாறி ஏற்படும்.

இதே ப்ரேமையுடன் வாழ்ந்து, கடைசியில் பரமபதத்தை அடைவீர்கள்

வசுதேவ……. உடனே என்னை எடுத்துக் கொண்டு, கோகுலத்தில்

நந்தகோபன் க்ருஹத்தில் யசோதைக்கு அருகில் என்னை விட்டு விட்டு,
யசோதை அருகில் இப்போதுதான் பிறந்திருக்கும் குழந்தையை

எடுத்துக் கொண்டு, இங்கு வந்து விடு…..எல்லாம் ஸுபமாக நடக்கும் ”

ஹே … பகவன்…….தேவகி—வசுதேவர் தம்பதியரைப் போல

அடியோங்களால் தபஸ் செய்ய இயலாது.; இது ஸ்வாயம்பூ
மன்வந்தரம் அல்ல;.

கலியுகத்தில், வைவஸ்வத மன்வந்தரம்.;

. அடியோங்களுக்கு பலவீனமான புத்தி; பலவீனமான சரீரம்;

ஆனால், ஆசை மட்டும், ஏழு கடல்களுக்கும் அதிகம்;

அந்த ஆசையை , உன் திருவடியில் திருப்ப அனுக்ரஹிப்பாயாக

எட்டாவது குழந்தை தன்னுடைய சதுர் புஜத்தை மறைத்து,

சாமான்ய—-மானிடக் குழந்தையாக மாறிற்று.
வசுதேவர், தேவகி இருவரின் இரும்பு விலங்குகள் தாமாகவே

கழன்று விழுந்தன;

பகவானாகிய இக் குழந்தையின் கட்டளைப்படி, வசுதேவர்,
குழந்தையைக் கூடையில் வைத்து , தலையில் சுமந்து கொண்டார்;

கதவுகள் தானாகவே திறந்து வழி விட்டன

;காவலாளிகளுக்கு நன்கு உறக்கம்;

காரக்ருஹத்திலிருந்துவெளியே வந்தார்;

இருள் சூழ்ந்த ராத்ரி;

மழை பெய்து கொண்டிருந்தது;

மேகங்கள் மெதுவாகக் கர்ஜித்தன;
ஆதிசேஷன், கூடையில் உள்ள குழந்தையான பகவானுக்குத்

தன் முகங்களை விரித்துக் குடை போல ஆகி,

மழைத் தூறல் பகவானின் மேலே விழாத வண்ணம்செய்து ,

தொடர்ந்து வர, வசுதேவர் நடந்து, யமுனை நதியை அடைந்தார்

.யமுனையில் பெருவெள்ளம் சுழியிட்டு ஓடிக்கொண்டிருந்தது.

வசுதேவர் யமுனைக் கரைக்கு வந்ததும்,நதி, தன் வெள்ளப் பெருக்கை

நிறுத்தி, அவருக்கு வழி விட்டது.

வசுதேவர், யமுனை நதியைக் கடந்து, கோகுலத்தில் நந்தகோபன் க்ருஹத்துக்கு

வந்தார்.

இங்கு எல்லோரும் நல்ல தூக்கத்தில் இருந்தனர்.யசோதையின் அருகில் வந்தார்.

“அஜா ” என்று அழைக்கப்படும், யோகமாயை , யசோதைக்குப் பக்கத்தில்,

பெண் சிசுவாகப் பிறந்து இருந்தாள்.
பகவானை, யசோதை அருகில் படுக்கையில் விட்டு விட்டு,

யோகமாயையான பெண் குழந்தையை எடுத்துக் கொண்டு,

முன்பு போலவே யமுனை வழி விட, தன்னுடைய இடமான காராக்ருஹத்துக்கு

வந்து சேர்ந்தார்.

உள்ளே நுழைந்ததும், கதவுகள் தானாகவே மூடிக் கொண்டன.
விலங்குகள், தானாகவே, கால்களிலும், கைகளிலும் வந்து பூட்டிக் கொண்டது.

அங்கு , கோகுலத்தில், யோக மாயையினால் மூர்ச்சித்துக் கிடந்த

யசோதை கண் விழித்துப் பார்த்தபோது, தனக்கு ஒரு அழகான ஆண் குழந்தை

பிறந்து இருப்பதைப் பார்த்து, மிகவும் சந்தோஷம் அடைந்தாள்

ஹே….பிரபோ…..உன்னுடைய அகடிதகடினா சாமர்த்தியத்தால்,

ஒருத்தி மகனாய்ப்பிறந்தாய்;

ஓரிரவில் இன்னொருத்தியின் மகனாக நீயே ஆக்கிக் கொண்டாய்;

உன்னைச் சுமந்த கூடைக்கும், குடையாக வந்த ஆதிசேஷனுக்கும்,

வழிவிட்ட யமுனா நதிக்கும், யசோதையின் பெண்ணாக அவதரித்த

யோகமாயைக்கும், வசுதேவர்—தேவகி தம்பதியரை முன்னிட்டு,

அடியேனின் க்ருத்க்ஜயைத் தெரிவிக்கிறேன்.

இந்தப் பெரும் பாக்யசாலிகளாலன்றோ ,

உன்னுடைய லீலைகள் கோகுலத்தில் தொடங்கப் போகிறது

3 வது அத்யாயம் முடிவடைகிறது ஸுபம்

 

அத்யாயம் –4
—————-
யோக மாயையான பகவதி, கம்ஸனை எச்சரிப்பது
—————————————————————-
-(ஹே …பகவானே….வசுதேவர் சிறைக்குத் திரும்பியதும், வெளிக் கதவுகள், உள்கதவுகள் எல்லாம், தாழிட்டுக் கொண்டது உன் சங்கல்பத்தால் அல்லவா !
காவலர்கள் தூங்கியதும், பின்பு இப்போது கண் விழித்ததும் உன் சங்கல்பத்தால் தானே நடந்தது )

, — ஹே, பிரபோ… காராக்ருஹத்தில், , யோகமாயை வீரிட்டுக் கத்தியதும், எட்டாவது குழந்தை பிறந்ததைக் காவலர்கள் மூலம் கேள்விப்பட்ட கம்ஸன் ,
தலைவிரி கோலத்துடன் , தள்ளாடும் நடையுடன், கர்ரக்ருஹத்துக்கு வந்தான். தேவகி, அவனிடம் மன்றாடினாள்.” இந்தப் பெண் குழந்தையை,
உனக்கு மருமகள் போல இருப்பவளை, நீ கொல்லாதே. விட்டு விடு” என்று கதறினாள்.
மார்போடு குழந்தையை அனைத்துக் கொண்டிருந்த அவளைத் தள்ளி விட்டு,குழந்தையை அவள் கையிலிருந்து பிடுங்கி, யோகமாயையின் இரண்டு பிஞ்சுத் திருவடிகளையும் தன்னுடைய இரு கரங்களால் பிடித்து,ஆத்திரமும் கோபமும் இணைய , கல்லின் மீது வீசினான்.

ஆனால், ஹே பிரபோ, உன் கிருபையால் , யோகமாயை , கம்சனின் பிடியிலிருந்து விலகி,ஆகாசத்தில் கிளம்பினாள். என்ன ஆச்சர்யம் ! உன் தங்கை அல்லவா ?

( எட்டுத் திருக்கரங்களுடன் திவ்யமான வஸ்த்ரத்துடன் ,
தேவலோக மாலைகளுடன், ரத்ன ஆபரணங்கள் அணிந்து,எட்டுத் திருக்கரங்களிலும் தனுசு, சூலம், அம்பு, கேடயம், கத்தி, சங்கு, சக்ரம், கதை என்று
எட்டு ஆயுதங்கள் ஏந்தியவளாக , சித்த, சாரண, கந்தர்வ, கின்னர, அப்சரஸ்கள் சமர்ப்பித்த பூஜைகளை ஏற்று, பகவதி—துர்க்கை —என்று போற்றப்படும் உன் தங்கையை ,தேவியை, பலதடவை நமஸ்கரிக்கிறேன் )

அந்த யோகமாயை, கம்ஸனைக் கோபத்துடன் பார்த்து,
” ஹே, முட்டாளே……என்னைக் கொல்வதால் ஒரு பயனும் இல்லை; உன்னைக் கொல்வதற்கு உன் விரோதி பிறந்து விட்டான்; இனிமேலாவது, குழந்தைகளைக் கொள்வதை நிறுத்து; என்று கர்ஜித்தது .
(பூமியில் பல கோவில்களில் துர்க்கை என்றும் , பகவதி என்றும் , குடிகொண்டு இப்போதும் அநுக்ரஹம் செய்து கொண்டிருக்கும் , விஷ்ணுவாகிய உனக்குத் தங்கையாகிய , அந்தத் துர்க்கையை நமஸ்கரிக்கிறேன். )

யோகமாயையின் வார்த்தைகளைக் கேட்ட கம்ஸன் , அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தான்.
வசுதேவர், தேவகியை சிறையிலிருந்து விடுவித்தான்.
அவர்களை நோக்கி, ” என்னை மன்னியுங்கள்; குழந்தைகளைக் கொன்ற பாபி நான்;சிசுஹத்தி பாபத்தினால், எந்த நரகத்தை அடைவேனோ தெரியாது; தெய்வமே பொய் பேசுகிறது;
( எட்டாவது குழந்தையாக ஆணுக்குப்பதில் பெண் குழந்தை பிறந்து,, எட்டாவது குழந்தை ஆணாக எங்கு உள்ளதோ என்கிற சந்தேகத்தில் ) ;
குழந்தைகளை இழந்ததால் அழாதீர்கள்; பிறக்கும் யாவும் ஒரு நாள், இறக்க வேண்டியதே; இது விதியின் செயல்; தேகம்தான் நாசமடைகிறது; ஆத்மா நாசமடைவதில்லை
மரித்தபின் புதுப் புதுத் திரேகம் அதற்குக் கிடைக்கிறது; ” இப்படிப் பலவாறாகப் பேசி,அவர்களின் மன்னிப்பை வேண்டினான்.
வசுதேவர் ” நீ சொல்லியவை சத்யம்; ஜீவன்கள், அக்ஜானத்தாலே புத்தி பேதலித்து, ஒருத்தரை ஒருத்தர் கொன்றுகொண்டு அழிகிறார்கள்; ” என்றார்.
கம்ஸன் அரண்மனையை அடைந்தான்.. மறுநாள் காலை, மந்த்ரிகளை அழைத்து,யோகமாயை சொன்னதை அவர்களிடம் சொன்னான்.
அவர்கள் தேவ சத்ருக்கள். அசுரர்கள். கோபத்துடன் கம்ஸனிடம் பேசினார்கள்.
” எல்லா இடங்களிலும் பத்து நாட்களுக்குள், எந்தக் குழந்தை பிறந்திருந்தாலும்,அதைக் கொல்வோம்; விரோதிகளிடம் கருணை காட்டாதீர்கள்; ஹரியோ, சிவனோ, ப்ரும்மாவோ, நம்மை ஒன்றும் செய்ய முடியாது; ஆனாலும், விரோதிகளிடம்
அலக்ஷ்யமாக இருக்கக்கூடாது; அவர்களுக்கு விஷ்ணு தான் மூலபலம்; அவரை அழிக்க வேண்டும்; குழந்தையாக எங்காவது பிறந்திருக்க வேண்டும்;
கால தாமதம் கூடாது; எங்கே சனாதன தர்மம் தழைத்து இருக்கிறதோ,எங்கே பிராம்மணர்கள் பசுக்களுடன் தபஸ், யக்ஜம் என்று செய்துகொண்டு
இருக்கிறார்களோ , அவர்களைத் தேடித் தேடி அழிப்போம்; இவர்களை ஒழிப்பது, விஷ்ணுவை ஒழிக்கச் சிறந்த உபாயம் ” என்று கர்ஜித்தனர்.
கம்ஸன் காலபாசத்தினால் தூண்டப்பட்டு , “சரி ” என்று அனுமதி கொடுத்தான்
.
(ஹே, பிரபோ … கம்ஸனுடைய மந்த்ரிகள், உன்னைப் பற்றிய ஆழ்ந்த அறிவுடன் இருந்தும்,
அஹம்பாவம், அஹங்காரத்தால், அவர்களும் அழிந்து, அரசனையும் அழித்தார்கள்.
இது உன் லீலை; கிருஷ்ணாவதார லீலை; அந்த லீலைக்கு அடியேனின் நமஸ்காரங்கள் )

4 வது அத்யாயம் முற்றிற்று —ஸுபம்

குறிப்பு;—அடைப்புக் குறிக்குள் உள்ளவை அடியேன் சொல்பவை .
முதல் மூன்று அத்யாயங்களிலும் , அடியேன் சொல்லி இருக்கிறேன்;
ஆனால் , அடைப்புக்குறி போடவில்லை.
அடியேனின் வார்த்தைகள் மட்டில் இனி அடைப்புக் குறிக்குள் சொல்லப்படும்

தசமஸ்கந்தபாராயணம்–நவீனபாணியில்—5
——————————————————-
5வது அத்யாயம்
——————–
ஸ்ரீகிருஷ்ணஜனனகோலாஹலங்கள்–

-கோகுலம் உயர்ந்தது–

வசுதேவரும், நந்தகோபரும்மதுராவில்சந்திப்பு
————————————————————————————-
யசோதை, பிரசவ அறையில் கண்விழித்துப் பார்த்தாள்.
அருகே ஆண் குழந்தை. ஜகஜ்ஜோதியாகப் ப்ரகாசம் . நந்தகோபனுக்கு , இந்த ஸுபச்செய்தி
சொல்லப்பட்டது. மிகுந்த சந்தோஷத்துடன், குழந்தைக்கு மங்கள ஸ்நானம் செய்துவைத்து,
வேதவிற்பன்னர்கள் , பிராம்மணர்களை அழைத்து, புண் யாஹவாசனம், ஜாதகர்மா முதலிய
கர்மாக்களைச் செய்யும்படி சொல்லி, ஸ்வஸ்திவாசனம் சொல்லும்படி பிரார்த்தித்து,
பித்ருக்களையும் தேவர்களையும் பூஜை செய்தான்.
நாந்தி ஸ்ராத்தம் செய்து வைத்தான். எள்ளை மலைபோலக் குவித்து, அதில் ரத்னங்களைப் போட்டு,
அவற்றைத் தங்கத் துணியில் கட்டி, தானம் செய்தான்.

த்ரேகம், ஸ்நானம், சௌசம் முதலிய ம்ஸ்காரங்களாலும்,

தபஸ், இஜ்ஜை ஆராதனம் ,போன்றவைகளாலும் சுத்தி அடைகிறது.

ஆனால், ஆத்மா, ஆத்ம வித்யையினால் சுத்தி/ சுத்தம் அடைகிறது.

பிராம்மணர்கள், புராணக் கதைகள் சொல்லும் சூதர்கள், குலப்பெருமைகளை எடுத்துச் சொல்பவர்கள்,

இவர்களெல்லாம் கூட்டம் கூட்டமாக வந்து சம்பாவனை வாங்கிச் சென்றார்கள்.

துந்துபி வாசிப்பவர்கள், மேளம் வாசிப்பவர்கள் வந்து தக்ஷிணை பெற்றுச் சென்றார்கள்.
(ஹே, பிரபோ, கோகுலத்தில் உன் ஜனன உத்ஸவம் இப்படிக் கோலாஹலமாக நடந்தபோது,
அடியேனும் அருகில் இருந்து, அனுபவிப்பதாக எண்ணிப் ப்ரமிக்கிறேன்)
கோகுலத்தில் , பசுக்கள் வசிக்கும் தொழுவங்கள் (வ்ரஜபூமி ) மெழுகி சுத்தம் செய்யப்படுகிறது.

கோகுலம் முழுவதும் வீடுகள் எல்லாம், மெழுகிச் சுத்தம் செய்யப்படுகின்றன.

கொடிகளாலும் தோரணங்களாலும் அலங்கரிக்கப் படுகின்றன.

பசுக்கள், காளைமாடுகள், கன்றுகள், நன்கு குளிப்பாட்டப்பட்டு,மஞ்சள், குங்குமம், அணிவிக்கப்பட்டு, மாலைகளாலும், வஸ்த்ரங்களாலும்,
அலங்கரிக்கப்படுகின்றன.

கோபர்கள் தங்களை நன்கு அலங்கரித்துக் கொள்கிறார்கள்.
வெகுமதிகளைச் சுமந்துகொண்டு, நந்தகோபன் மாளிகைக்குச் செல்கிறார்கள்.
கோபிகைகளைப்பற்றிச் சொல்லவே வேண்டாம். கண்களுக்கு மை தீட்டி,
பலவித நிறம் கொண்ட சேலைகளை உடுத்தி, நகைகளை அணிந்து,
குதி போட்டுக்கொண்டு, காதில் குண்டலங்கள் ஆட,
கழுத்தில் தங்க ஹாரங்கள் கைகளில் தங்க வளைகள்,
குதிக்கும்போது ஒன்றுடன் ஒன்று உரசி ,
தங்கள் மகிழ்சசியை வெளிப்படுத்துமாப்போலஸப்திக்க,
கால்களில் சலங்கைகள் ஜதி போட, புஷ்பங்கள், சந்தனம், மங்கள அக்ஷதைகளை
எடுத்துக் கொண்டு, நந்தகோபன் மாளிகைக்குச் செல்கிறார்கள்.

வயது முதிர்ந்த கோபிகைகள், குழந்தைக்கு, ஹரித்ரா சூர்ணதைலாத்பி தெளித்து, பகவான் , இந்தக் குழந்தையைப் பலகாலம் க்ஷேமமாக
ஜீவிக்கும்படி செய்யவேண்டும் என்று பிரார்த்திக்கிறார்கள்.

கோகுலத்தில் , கிருஷ்ணன் மாத்ரமல்ல, ரோஹிணிக்குப்பிறந்த, பலராமனும் இருப்பதால்,
எங்கும் விசித்ரமான மங்கள வாத்தியங்கள் சப்திக்கின்றன.
கோபிகைகள் “கிருஷ்ண தர்சனம் ” முடித்து, பிரியமுடியாமல் அங்கிருந்து புறப்பட்டுத்
தத்தம் வீடுகளுக்கு வந்து, சந்தோஷத்தால், தயிர், வெண்ணெய், பால் இவைகளை
பரஸ்பரம் ஒருவர் மேல் ஒருவர் அப்பி, விளையாடுகிறார்கள் .

நந்தகோபன், தன் மாளிகைக்கு வந்தவர்களுக்கெல்லாம் உபசாரங்கள்செய்து
தானங்கள் கொடுக்கிறான். வெகுமதிகள் வழங்குகிறான்.
வழங்க, வழங்க, கொஞ்சமும் குறையாத செல்வச் செழிப்பு ஏற்படுகிறது.
வசுதேவரின் இன்னொரு மனைவி “ரோஹிணீ ”
—கோகுலத்தில் பலராமனைப் பெற்றவள்—நந்தகோபன் மாளிகைக்கு வருகிறாள்;
நன்கு உபசரிக்கப்பட்டு, அந்த மஹோத்சவத்தில் மகிழ்ச்சியுடன் சஞ்சரிக்கிறாள்.
எல்லா ஐஸ்வர்யங்களும் , க்ருஷ்ண க்ருஹத்துக்கு வருகின்றன
.
(ஹே, கிருஷ்ணா…..உன்னுடையதான, இந்த மஹோத்ஸவத்தில் அடியேனையும்
ஒரு கோபனாக —-இல்லை, இல்லை—-கோபிகையாக நினைத்து,இந்த மஹோத்ஸவ மகிழ்ச்சியில் திளைக்கிறேன் )

இப்படியாக, கோகுலத்தில் நடந்து வரும்போது, ஒருநாள் , நந்தகோபன் ,கம்சனுக்கு , கோகுலத்தில் வசிக்கும் கோபர்கள் சார்பாக, —-வருஷாந்திரக் கப்பம்
கட்டுவதற்கு, மதுராவுக்கு வந்தார். நந்தகோபன் வந்த செய்தி கேள்விப்பட்டு,
, வசுதேவரும், நந்தகோபன் தங்கி இருக்கும் இடத்துக்குச் சென்றார்.
ஹே,, சகோதரா…..உன்னைப் பாக்ய வசத்தால் பார்த்தேன். தகுந்த காலத்தில் உனக்கு,
யாத்ருச்சையாக, குழந்தை பிறந்துள்ளதைப்பற்றி ரொம்ப சந்தோஷம்;
நம் போன்ற பந்துக்கள், ஒரே இடத்தில் சேர்ந்து வசிக்க முடிவதில்லை;
காரணம், நமக்குள் உள்ள தொழில்களின் வித்யாசத்தாலே;
நீர், கோகுலத்தில், பந்து,மித்ரர்களுடன் பசுக்களுடன், வியாதி இல்லாதபடி வசிக்கிறீர்;
ரோஹிணியிடம் வளரும் என் பிள்ளை பலராமன் சௌக்யமா ” என்று பேசினார்.
உடனே, நந்தகோபர், “உமக்குக் கம்சனால் ஏற்பட்ட துன்பங்களும் குழந்தைகளின் இழப்பும்,
ஒரே ஒரு கன்யா ஆகாசத்தில் சென்றதும் கேள்விப்பட்டேன்;
விதி ஒவ்வொருவரையும் படாத பாடு படுத்துகிறது;

தெய்வத்தை நம்பி வாழ்பவன் பகவத் கிருபையால் அத்ருஷ்டத்தை அடைகிறான்;என்றார்.

வசுதேவர் , ” சரி… நீர் கம்சனுக்குக் கப்பம் கட்டியாகி விட்டது;
நாம் யதேச்சையாகச்சந்தித்துக்கொண்டோம்;
உத்பாதங்கள் ( கெட்ட சகுனங்கள் ) தோன்றுகின்றன;
சீக்ரமாக் கோகுலத்துக்குத்திரும்பங்கள் ” என்றார்.
வசுதேவரால், இப்படிச் சொல்லப்பட்டதும், நந்தகோபரும் உடனே புறப்பட்டார்.

(ஹே, பிரபோ…. வசுதேவரையும் , நந்தகோபரையும் சந்திக்கச் செய்து,
கெட்ட சகுனங்கள் தெரிகின்றன என்பதாக அவர்களை உடனே பிரித்து , நந்தகோபரை உடனே கோகுலத்துக்கு வரவழைத்ததன் ரஹஸ்யம் என்ன ?
அடியேனிடம் சொல்லமாட்டாயா )

5 வது அத்யாயம் முற்றிற்று.

அத்யாயம் 6.
————-
பூதனை மோக்ஷம்
————

நந்தகோபன் , கோகுலத்துக்குத்திரும்பும் வழியில்,

வசுதேவர் சொன்னதை நினைத்துக்கொண்டே வந்தான் .

எதுவாக இருந்தாலும், பகவான்தான் ரக்ஷணம் என்று மனத்தால்,

பகவானைச் சரணமடைந்தான்
வசுதேவர் சொன்னபடியே, கோகுலத்தில்

கெட்டவை நடப்பதற்கான, சூசகங்கள் தோன்ற ஆரம்பித்து விட்டன.

பூதனை என்கிற ராக்ஷஸி —-கோர ரூபமுள்ளவள்—கம்ஸனால் ஏவப்பட்டவள்—

கோகுலத்துக்குள் புகுந்து, வீடு வீடாகச் சென்றாள்.

உருவத்தை, அழகான, அதிரூபசுந்தரியாக மாற்றிக்கொண்டு, சென்றாள்.

கோபிகைகள், இவளைப் பார்த்ததும், மயங்கினார்கள்.

தேவலோகத்து சுந்தரியோ என்று அதிசயித்தார்கள்.

இந்த பூதனை,, யதேச்சையாக நந்தகோபன் மாளிகைக்குள் நுழைந்தாள்.

கிருஷ்ணன், படுக்கையில் தனியாக இருப்பதைப் பார்த்தாள்.
கிருஷ்ணன், தன் தேஜஸ்சை முற்றிலும் மறைத்துக் கொண்டு,

சாம்பலால் மூடியிருக்கும் அக்நியைப் போல இருந்தான்.

இந்தக் குழந்தையை, தன்னுடைய நிஜ ராக்ஷஸ ஸ்வரூபத்தை

முற்றிலும் மறைத்துக்கொண்டு, தேவலோகத்து சுந்தரியைப் போல

மிளிரும் பூதனை பார்த்தாள்
.
(ஹே, கிருஷ்ணா….நீ உன்நிஜமான தேஜஸ்சை மறைத்துக்கொண்டிருக்கிறாய்

ஆனால், பூதனையோ, தன் நிஜமான ராக்ஷஸ ஸ்வரூபத்தை முற்றிலும்

மறைத்துக் கொண்டிருக்கிறாள். இது என்ன, விளையாட்டு ! )
ஹே, பிரபோ…..நீ ஓரக்கண்ணால், அவளைப்பார்த்து, கண்களை மூடிக்கொண்டாய்.

தூங்கும் சர்ப்பத்தை, கயிறு என்று எண்ணி, மடியில் எடுத்துப் போட்டுக்கொள்ளும்

மனிதரைப் போல, வெளிப் பார்வைக்கு மிகவும் அன்புள்ளவளாக ,

யசோதை, ரோஹிணீ இருவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே,

அவர்கள், இவள் தளுக்கிலும் மினுக்கிலும் ப்ரமை பிடித்து ,

அவளைத் தடுக்காமல் இருக்க,

பூதனை, உன்னைத் தூக்கி மடியில் வைத்துக்கொண்டாள்.

உனக்கு, ஸ்தன்ய பானம் கொடுக்கத் தொடங்கினாள்.

நீ, ஸ்தன்யத்துப்பாலை உறிஞ்ச ஆரம்பித்ததும், அவளுக்கு வலி பொறுக்கவில்லை.

“என்னை விட்டு விடு, என்னை விட்டு விடு ” என்று கதறினாள்.

ஆனால் அதற்குள் , எல்லா அங்கங்களும் உலர்ந்து,

ஜீவனும் வறண்டு, கண்கள் பிதுங்கி, கால் கைகளை உதறிக்கொண்டு,

உடலெல்லாம் வியர்க்க, பெரிதாக ஓலமிட்டாள்.

அந்த சப்தத்தால் பூமியும் மலைகளும் நடுங்கின,

பூதனை, தன் சுய ரூபமான ராக்ஷ்ஸியின் உருவத்துடன் ,

வாயைப் பிளந்துகொண்டு, கைகளும் கால்களும் பூமியில் நீட்டிக்கொள்ள ,
12 மைல் விஸ்தீரணத்துக்கு செடிகொடிகள் ஒடிந்து விழ, —–

-செம்பட்டைத் தலைமயிர் பறக்க——பூமியில் உயிரற்று விழுந்தாள்.

இதைப் பார்த்த, கோபர்களும், கோபியர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர்.
சுகபிரம்ம ரிஷி, ராஜா பரீக்ஷித்துக்குக் கூறுகிறார்;-

பகவானான -நீ மட்டும் அவளுடைய மார்பில் பயமே இல்லாமல்

விளையாடிக்கொண்டிருந்தாய். பயந்த நிலையல் இருந்த கோபியர்கள்

உடனே ஓடிவந்து, உன்னைத் தாவி எடுத்து, அணைத்துக் கொண்டார்களாம்.
யசோதையும் ரோஹிணியும் அதிர்ச்சியிலிருந்து விடுபட்டு, உன்னை

அவர்கள் எடுத்துக் கொண்டு, உன்னைத் தடவித் தடவிப் பார்த்து,

பசுமாட்டின் வால்மயிரால் ரக்ஷை செய்து,

அத்தால் உன்னைப் பிரதக்ஷணமாகச் சுற்றி, கண் எச்சில் படாதவாறு

இருக்கவேண்டும், ஆபத்து விலகவேண்டும் என்று வேண்டிக்கொண்டு,

அதை எறிந்தார்களாம். கர்ப்பூர ஹாரத்தி எடுத்தார்களாம்.

கோமூத்ரத்தினால் உன்னை நீராட்டினார்களாம்.

பசுவின் சாணத்தினால் , உன் அங்கங்களில் தேய்த்து,

உன்னுடைய பன்னிரண்டு நாமாக்களை——–

இந்த நாமாக்கள் உன்னைத்தான் குறிக்கின்றன, என்று அறியாது,
உன்னையும் பகவான் விஷ்ணு என்று அறியாது——

அந்த த்வாதச நாமாக்களை பீஜாக்ஷரங்களினால்,

உன்னுடைய 12 அங்கங்களில் சுத்தி செய்தார்களாம்.

மேலும், பிரார்த்தித்தார்களாம்

“அஜர்” என்பவர், உன் பாதங்களைக் காப்பாராக;

கௌஸ்துபம் அணிந்த “மணிமான் ” உன் முழங்கால்களைக் காப்பாராக;

“யஜ்ஞர் ” உன் தொடைகளை ரக்ஷிப்பாராக;

“அச்யுதர் ” உன் கடிதடப் பிரதேசத்தை ரக்ஷிப்பாராக;

” ஸ்ரீ ஹயக்ரீவர்” உன் வயிற்றை ரக்ஷிப்பாராக;

” கேசவன் ” உன் ஹ்ருதயத்தைக் காப்பாற்றட்டும் ;

” ஈஸர் ” உன் உதரத்தையும்,

“இனர் ” கழுத்தையும்,

“விஷ்ணு ” புஜங்களையும்,

“ருக்ரமர்” முகத்தையும்,

” ஈஸ்வரர் ” தலையையும் ரக்ஷிக்கட்டும்.

சக்ரதாரி , உன்னை முன்புறமாகக் காப்பாற்றட்டும்;

ஹரி, கதையுடன், உன்னைப் பின்புறமாகக் காப்பாற்றட்டும்;

மதுசூதனன், அஜனர் இருவரும் சார்ங்கத்தையும், கத்தியையும் தரித்து,

உன் இரண்டு பக்கங்களிலிருந்து , உன்னைக் காப்பாற்றட்டும்;

வாமனர்,உச்சந்தலைப்பாகத்தையும்,

கருடவாஹனர் நீ இருக்கும் பூமியையும் ,

சங்கர்ஷணர் (கலப்பையை வைத்திருப்பவர் ) எல்லாப் பக்கங்களிலிருந்தும்

உன்னைக் காப்பாற்றட்டும்;

ஹ்ரூஷீகேசன் இந்த்ரியங்களையும்,

நாராயணன் பிராணன்களையும்,

வாசுதேவர், சித்தத்தையும் ( புத்தி ),

அநிருத்தர் மனசையும், ரக்ஷிக்கட்டும்;

கோவிந்தன் , உன் விளையாட்டு லீலைகளில் உன்னைக் காக்கட்டும்;

மாதவன், நீ படுத்திருக்கும்போதும்,

வைகுந்தர், நீ நடக்கும்போதும்,

ஸ்ரீயப்பதி , நீ ஆசனத்தில் அமர்ந்திருக்கும்போதும்,

யக்ஜபுக் , நீ சாப்பிடும்போதும், உன்னைக் காக்கட்டும்.;
டாகினிகள், யாதுதான்யர்கள், கூஷ்மாண்டர்கள்,

பூத,பிரேத, பிசாசர்கள், யக்ஷ, ராக்ஷசர்கள், கோடராக்கள்,

ரேவதி, ஜ்யேஷ்டா , பூதனா, பதினாறு மாத்ரிகா தெய்வங்கள்,

அபஸ்மாரங்கள், தேகம் இந்த்ரியம், பிராணன் இவைகளைப் பீடிக்கும்

துஷ்ட தேவதைகள், கெட்ட ஸ்வப்னங்களில் காணப்படும் தேவதைகள்——-

யாவரும் அழிந்து போகட்டும்.

ஸ்ரீ மகாவிஷ்ணுவின் ஆயிரம் திருநாமங்களைச் சொல்வதால்

இவை அனைத்தும் அழிந்து போகும். என்று சொல்லி வேண்டினார்களாம்.
( ஹே, பிரபோ,,,பாசத்தின் மிகுதியால், கோபிகைகள், உனக்கு இவ்வாறு ரக்ஷை செய்தார்கள் என்று ஸ்ரீ சுகப்ரம்மம் கூறுகிறார்.அந்தக் கோபிகைகளை அடியேன் அடிக்கடி நமஸ்கரிக்கிறேன். )
யசோதை உனக்கு ஸ்தன்யபானம் கொடுத்துத் தூங்க வைத்தாள்.

நந்தகோபன் , திரும்பி வந்து நடந்ததைக் கேட்டும்,

பூதனையின் த்ரேகத்தைப்பார்த்தும் அதிர்ச்சி அடைந்தான்.

வசுதேவர் சொன்னதை நினைத்தான்.

அங்கிருந்தவர்கள், பூதனையின் உடலைக் கோடாலியால் வெட்டி,

ஓரிடத்தில் குவித்து எரியூட்டினர். அப்போது எழுந்த புகை,

சந்தனம்–அகில்கட்டைவாசனையைப் போல இருந்தது என்று

ஸ்ரீ சுக பிரம்மம் கூறுகிறார். உன்னால் அவளுடைய உயிர் மாத்ரம்

உறிஞ்சப்படவில்லை; அவளுடைய பாபங்களும் உறிஞ்சப்பட்டன;

அதனால், நற்கதி அடைந்தாள்.
இவளுக்கே இப்படி என்றால், உன்னிடம் பக்தி செய்து பூஜித்தால்,

பிரார்த்தித்தால், அந்த பக்தர்களுக்கு எல்லாவித நன்மைகளையும்

கொடுத்து ரக்ஷிப்பாயே !

உன்னிடத்தில் செய்யப்படும் புத்ர ஸ்நேஹம் யசோதை ரோஹிணீ

இருவருக்கும் பெருமை அல்லவா !சுகமஹரிஷி பரீக்ஷித்துக்குச்
சொன்னதைப்போல, நந்தகோபன் , உன்னை, கைகளில் எடுத்து,

உச்சிமுகர்ந்து மகிழ்ந்து பரவசப்பட்டான்
(ஹே….பிரபோ….இந்த பூதனையின் மோக்ஷத்தை, ச்ரத்தையுடன் சொல்பவர்கட்கும், கேட்பவர்கட்கும் உன்னிடம் பரமபக்தி ஏற்படுவது நிச்சயம்.)

6 வது அத்யாயம் முற்றிற்று.

அத்யாயம் —–7
—————————
சகடாசுரன் ,த்ருணாவர்த்தன் வதம்—-அதாவது மோக்ஷம்.மற்றும் யசோதை, கண்ணனின் திருவாயில் உலகங்கள் என்று யாவற்றையும் பார்ப்பது
————————————————————————————

ே, பிரபோ, உத்தரையின் புத்ரன் ராஜாவாகிய பரீக்ஷித்,

, சுக ப்ரஹ்மரிஷியைக் கேட்டதை இப்போது சொல்கிறேன்
ஹே, ப்ரஹ்மன், பகவானின் லீலைகளைக் கேட்கக் கேட்க,மனம் அதிலேயே லயிக்கிறது. விபரீதமான எண்ணங்கள் அழிகின்றன.
அவரிடம் பக்தி மேலும் மேலும் அதிகரிக்கிறது.
அவருடைய பால்ய லீலைகளைச் சொல்வீராக என்று
பரீக்ஷித் கேட்டவுடன், ஸ்ரீ சுகர் மேலும் சொல்ல ஆரம்பித்தார்.
அவர் சொன்னதை, அடியேனே , உனக்குச் சொல்வதுபோல் சொல்கிறேன்
நீ மூன்று மாதக் குழந்தை; உன்னுடைய மாச திருநக்ஷத்ரம்( ரோஹிணி )
மூன்றாவது தடவையாக வந்த தினம். . யசோதை, உன்னை நன்கு குளிப்பாட்டி,
வஸ்த்ரம் அணிவித்து, உன்னைத் தொட்டிலில் விட்டு,
வீட்டு வேலைகளைச் செய்யத் தொடங்கினாள். உனக்குப் பசி வந்து, பாலுக்காகக் கத்தினாய்; உன்னுடைய இந்தக் கத்தல் யசோதைக்கு கேட்கவில்லை;

நீ, பசியால், கையையும் காலையும் ஆட்டி, உதைத்துக் கொண்டு அழுதாய்; உன்னுடைய உதையால், பக்கத்திலிருந்த பால் பாத்ரம்,தயிர் பாத்ரம் எல்லாம் சப்தத்துடன் கீழே விழுந்தன;
பக்கத்தில் இருந்த ஒரு வண்டியின் சக்ரம் , நுகத்தடி, உன் திருவடிகளால் உதை பட்டு, நசுங்கின; ஒடிந்தன;விழுந்தன. அருகில் இருந்த ஆய்ச்சியர்கள்,
இதென்ன, ஆச்சர்யம் என அதிசயித்தனர். யசோதையும், நந்தகோபனும் சப்தம் கேட்டு,
ஓடிவந்து பார்த்து, குழந்தையின் காலுக்கு இவ்வளவு பலமா என்று ஆச்சர்யப் பட்டனர்.
இது கோகுலம் முழுவதும் பரவியது. சகடாசுரன் என்கிற அசுரன், வண்டி, சக்ரம் என்று ரூப மெடுத்து , உன்னை அழிக்க, உன் அருகில் ஒளிந்திருக்கும்
விஷயமானது உனக்குத் தெரிந்து, உன் சிறிய திருவடியால் உதைத்து,அதை உடைத்து, அவனையும் அழித்தாய்.
(ஹே….பிரபோ….அந்தச் சின்னஞ்சிறு திருவடிகளை , அடியேன் என் சிரஸ்ஸில் தாங்கி, உன்னை நமஸ்கரிக்கிறேன் )
யசோதை, கெட்ட பிசாசு செய்த வேலையே என்று பயந்து,உன்னைத் தூக்கி வைத்துக்கொண்டு , ஸ்தன்ய பானம் கொடுத்து,உன்னைத் தூங்க வைத்தாள்.
இப்போது, நீ, ஒரு வயது பாலகன்; இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டுகொஞ்சும் பருவம்; யசோதை, ஒருநாள், உன்னை இப்படியே இடுப்பில்
தூக்கி வைத்துக் கொஞ்சி , மடியில் அமர்த்திக்கொண்டாள்;

நீ, திடீரென்று அவளுக்குக் கனத்தாய்—-கனமாக ஆனாய்;
அவள் பயந்து , உன்னைத் தரையில் விட்டுவிட்டு ,
பகவானை வேண்டிக் கொண்டு, வீட்டு வேலைகளைச் செய்யத் தொடங்கினாள்;
இந்தச் சமயத்தில், “தைத்யன் ” என்கிற அசுரன்,
“த்ருணாவர்த்தன் ” என்கிற பெயருடன், கம்ஸனால் அனுப்பப்பட்டு ,வேகமாக வீசும் காற்று உருவத்தில் வந்தான்; எல்லாப் பொருள்களையும்,
தூசியினால் மறைத்து, உன்னையும் தூக்கிக் கொண்டான்;உஷ்ணக் காற்றாக வீசி, திக்குகளை மறைத்தான்;கோகுலத்தை மறைத்தான்; கோர சப்தத்துடன் , ஊழிக்காற்று போல வீசினான்;
யசோதை பயந்தாள்; உன்னைத் தரையில் விட்ட இடம் தெரியவில்லை;தேடினாள் ; அழுதாள் ; பகவானை ஸ்மரித்துக் கொண்டே மூர்ச்சையானாள்;
கோபியர்களும் அழுதார்கள்.

திருணாவர்த்தன் , உன்னைத் தூக்கிக் கொண்டு, ஆகாயத்தில் கிளம்ப முயற்சித்தான்.
ஆனால், உன்னுடைய பாரத்தை, அவனால் தாங்க முடியவில்லை.சுய உருவம் எடுத்துக்கொண்டான். கற்பாறையைப் போன்று , நீ, அவன் கழுத்தைப் பிடித்துக் கொண்டிருந்தாய். அதனால், அவன் தொண்டை ,
இறுக்கப்பட்டது. அவன் கண்கள் பிதுங்கின; ” ஹா ” என்கிற பெரிய சப்தத்துடன்,திருணாவர்த்தன், கீழே விழுந்து உயிரை விட்டான்.பயங்கரமான சப்தம் வந்த திசையை நோக்கி, கோபர்கள், கோபியர்கள் ஓடினார்கள்;
த்ருணாவர்த்தனின் உயிரற்ற சடலத்தில், ஒரு வயதுக் குழந்தையான நீ ,எவ்விதப் பயமும் இல்லாமல், விளையாடிக் கொண்டிருந்தாய்.
கோபிகைகள், உன்னை வாரி எடுத்து, யசோதையிடம் கொடுத்தனர்.
யசோதை, உன்னை, உச்சி முகர்ந்து, சந்தோஷப்பட்டாள்.
பெரிய காற்றின் பிடியிலிருந்து, குழந்தை காப்பாற்றப் பட்டிருக்கிறான்;
ராக்ஷசன் இறந்து கிடக்கிறான்; பெரிய ஆபத்திலிருந்து, காப்பாற்றப்பட்டது,புண்ய கர்மாவின் பலன் என்று, நந்தகோபனும், பந்துக்களும், நினைத்தார்கள்.

வேறொரு சமயம், யசோதை, உனக்கு ஸ்தன்யபானம் கொடுத்துக் கொண்டிருந்தாள்.பாலை சாப்பிட்டுக் கொண்டிருந்த நீ, தூங்குவதற்கு நினைத்தவன் போல, வாயைத் திறந்து கொட்டாவி விட்டாய்.
அப்போது, ஆகாயம், நக்ஷத்ரக் கூட்டங்கள், எல்லாத் திசைகள், சந்திரன், சூர்யன்,நெருப்பு, காற்று, சமுத்ரங்கள், ஏழு த்வீபங்கள், மலைகள், காடுகள்,
அவற்றில் ப்ரவஹிக்கும் ஆறுகள், நடமாடும் எல்லாப் பிராணிகள், —-
இப்படி விஸ்வம் முழுவதையும் , யசோதை, உன் வாயில் பார்த்தாள்.பயம் கலந்த ஆச்சர்யத்துடன், கண்களை மூடிக்கொண்டாள்.
அவளுக்கு, இது ஸ்வப்னமா, நிஜமா என்று சந்தேகம் வந்து விட்டது.
உன்னை “பரமாத்மா, இவன்; மானிடக் குழந்தை அல்ல ” என்று யசோதை எண்ணியதாக, ஸ்ரீ சுகர், பரீக்ஷித் ராஜாவிடம் சொன்னார்.
( ஹே, பிரபோ…..யசோதை என்ன பாக்யம் செய்தாளோ !
அந்தத் தாயைப் பலமுறை நமஸ்கரிக்கிறேன் )
7 வது அத்யாயம் முற்றிற்று

தசமஸ்கந்த பாராயணம்— அத்யாயம்– 8
——————————————-

—————-
பெயர் சூட்டுதல்—பால்ய லீலைகள் —மண்ணைத் தின்ற மாமாயன்
——————————————————-

ஸ்ரீ சுகப்ரம்மம் , பரீக்ஷித் ராஜனுக்குச் சொன்னார்.
மதுராவில் ஒருநாள், யதுக்கள் எனப்படும் இடையர்களுக்கு ( கோபர்கள், கோபிகைகள் )
ப்ரோஹிதரான “கர்க்கர் ” என்கிற ரிஷியை, வசுதேவன் ரஹஸ்யமாக அழைத்து,
” ஹே, முனிபுங்கவரே ! கோகுலத்துக்குச் சென்று, அடியேனுடைய குழந்தைக்குப் பெயர் சூட்டுங்கள் ”
என்று கேட்டுக்கொண்டார். கர்க்கரும் சம்மதித்து, கோகுலத்துக்கு வந்தார்.
நந்தகோபன் அவரை வரவேற்று , நமஸ்கரித்து, ஆசனம் கொடுத்து அவரிடம் பேசினான்.
“ஹே, ப்ரஹ்மந்….உங்கள் விஜயம் எங்களுக்குப் பாக்யத்தைக் கொடுக்கிறது
; நீர் ஜ்யோதிஷ சாஸ்த்ரத்துக்குப் பொக்கிஷம்; முக்காலமும் உணர்ந்தவர்;ஆத்ம வித்யைகளை அறிந்த ப்ரஹ்ம வித்து; எனக்குக் குழந்தை இருக்கிறான்;
வசுதேவருக்கு ரோஹிணி மூலம் குழந்தை இருக்கிறான்;
என்னென்ன ஸம்ஸ் காரங்கள் செய்ய வேண்டுமோ , அவற்றை, ப்ராம்மணராயும், . குருவாயும் இருந்து செய்யுமாறு பிரார்த்திக்கிறேன் ” என்றான்.
அதற்கு, கர்க்கர், ” நந்தகோபா, நான் யது குல மக்களுக்கு எல்லாம் ஆசார்யன்; அதனாலேயே, குழந்தைக்கு ஸம்ஸ் காரம் செய்துவைக்க வேண்டும்;
ஆனால், இந்தக் குழந்தை, வசுதேவர்—-தேவகியின் எட்டாவது குழந்தை;பாப எண்ணம் கொண்ட கம்ஸன், தேவகியின் எட்டாவது குழந்தை ஆண் குழந்தை என்று
உறுதியாக இருக்கிறான்; அதுவும், வசுதேவருக்கும், உனக்கும் உள்ள உறவை
நன்கு அறிவான்; ஆகவே, இந்தக் குழந்தைக்குச் செய்யும்
ஸம்ஸ் காரம் , அவனுக்குத் தெரிந்தால் உடனே இக்குழந்தையைக் கொல்லத் துணிவான்;
இதற்காகக் கலங்குகிறேன் ” என்றார்.
அதற்கு, நந்தகோபன், ” ஆசார்யரே, என் பந்துக்களுக்குக்கூடத் தெரிய வேண்டாம்;இந்தக் குழந்தைக்கு, ரஹஸ்யமாக, பசுத் தொழுவத்தில்
( மாட்டுக் கொட்டிலில் ) ஸம்ஸ் காரம் ,
ஸ்வஸ்திவாசனம், இவற்றைச் செய்யுங்கள் ” என்றான்.
ஸ்ரீ கர்க்காசார்யர், சரி என்று சம்மதித்து, “முதலில், ரோஹிணியின் பிள்ளைக்கு ஸம்ஸ்காரம் செய்கிறேன் ; இக்குழந்தை பலம் மிகுந்தவன்; உன்னையும் வசுதேவரையும் போல இரண்டு வம்சத்தைச் சேர்த்து வைப்பதால், “சங்கர்ஷணன் ” ஆகிறான்; ஆதலால்,
இவனுக்கு , ” ராம ” , “பல ” என்கிற இரண்டு வார்த்தைகளைச் சேர்த்து, “பலராமன் ”
என்கிற பெயரை , இக்குழந்தைக்குச் சூட்டுகிறேன். ” என்றார்.
பிறகு, ” நந்தகோபா …..உன்னுடைய குழந்தைக்குஸம்ஸ்காரம் செய்கிறேன்;
இந்தக் குழந்தை, இதற்கு முன்பு, மூன்று வர்ணங்களில் பிறந்திருக்கிறான்; வெள்ளை, சிகப்பு, மஞ்சள் அவை; இப்போது இவனுடைய நிறம் கறுப்பு ;
இவனுக்குப் பலப்பல ரூபங்கள், பலப்பலத் திருநாமங்கள், இவைகளை நான் அறிவேன்;
உனக்கும், உன் யது குலத்துக்கும், கோகுலத்துக்கும்புகழைத் தருபவன்; பெருமையைத் தருபவன்; சந்தோஷத்தைத் தருபவன்; எவன், இக்குழந்தையிடம் அன்புடன் இருக்கிறானோ
அவனுக்குப் பயமே இல்லை; இவன் நாராயணனுக்குச் சமம்; இவனே வாசுதேவன்,இவனே விஷ்ணு, இவனே நாராயணன் , இவனுக்குக் “க்ருஷ்ணன் ” என்று
திருநாமமிடுகிறேன் என்று சொல்லி, மேலும் சில திருநாமங்களை இட்டு,குழந்தையைக் கவனமாகப் பார்த்துக்கொள் , கவனமாக வளர்த்து வருவாயாக ” என்று சொல்லி,விடைபெற்றுக் கொண்டு மதுரா திரும்பினார்.

(ஹே, கிருஷ்ணா…. அந்த மாட்டுக் கொட்டில் என்ன பாக்யம் செய்ததோ !
வசுதேவரையும் , பலராமனையும் முன்னிட்டு, ஸ்ரீ கர்க்க மகரிஷியை பலமுறை நமஸ்கரிக்கிறேன்.
எண்ண இயலாத, திருநாமங்களை உடைய உனக்கு, சகல ஜீவராசிகளின் உள்ளங்களிலும்,முனிவர்களின் தபஸ்சிலும் ராதையின் ஹ்ருதயத்திலும், கோபிகைகளின் வாக்கிலும் மனசிலும் ,
ஆழ்வார்கள்,கோதை நாச்சியார், மஹாசார்யர்கள்,ஸ்வாமி தேசிகன் , கவிகள், வாக்கேயக்காரர்கள் வழக்கில் இருக்கும் எல்லா பாஷைகளிலும், என்று , கற்பனைக்கும் எட்டாத அளவில் உன் திருநாமமான ” கிருஷ்ண ” நாமம், “கிருஷ்ண” சங்கீதம் ,” கிருஷ்ண ” லீலாம்ருதம் பரவிப் பெருகி,அடியோங்கள் , இந்தப் பெயரைக் கேட்டதும் நெக்குருகி நிற்க , பெயர் சூட்டிய அந்த ஸ்ரீ கர்க்க ரிஷியை திரும்பத் திரும்ப நமஸ்கரிக்கிறேன். )

சிலகாலம் சென்றது. குழந்தைகள் வளர்ந்தார்கள்.பலராமன், கிருஷ்ணன் ஆகிய
நீங்கள் இருவரும் சேர்ந்தே அலைந்து, கோகுலம் முழுவதும் திருவடி சம்பந்தம் ஏற்படுத்தியதாக
ஸ்ரீ சுகர் சொல்கிறார். கோகுலம் முழுவதும் விழுந்து புரண்டு, தூசுகள், மண்துகள்கள் உடம்பு முழுவதும் பரவி இருக்க, ஓடிவரும்போது கொலுசும், சலங்கையும் சந்தோஷத்துடன் சப்திக்க, உங்கள் தாய்மார்களின் அங்கங்களில் படுத்து நீங்கள் புரளும்போது, தூசு, மண் இவைகளைப் பாராது உங்கள் தாய்மார்கள் உங்களை அணைத்துக் கொண்டு , உங்களின் இளம் புன்னகை, சின்னஞ்சிறிய பற்கள் ,நெற்றியின் சோபிதம், இவைகளைப் பார்த்துக் கொண்டே இருப்பார்களாமே !

உங்கள் இருவரின் குழந்தைப் பருவ விளையாட்டுக்கள் , பால லீலைகள், இப்படி நந்தகோபனுக்கும்,
யசோதைக்கும், ரோஹிணிக்கும், கோபர்களுக்கும், கோபியர்களுக்கும் அளவில்லாத சந்தோஷத்தைக் கொடுத்ததாமே !

இதற்குப் பிறகு, உங்களுக்கு இன்னும் கொஞ்சம் வயது ஆனவுடன்,உங்கள் வயதை ஒத்த ஆயர் சிறுவர்களுடன் சேர்ந்து, கன்றுக்குட்டிகளுடனும், பசுக்களுடனும், விளையாடியதாக , ஸ்ரீ சுக ப்ரஹ்ம ரிஷி, பரீக்ஷித் ராஜனுக்குச் சொன்னார்.

நீங்கள் எல்லோரும் , அவைகளின் வாலைப் பிடித்துக் கொண்டு, அவைகளின் பின்னாலே ஓடுவீர்களாம்;
துடுக்குத் தனம், அதிகமாகி விட்டதாம்.; மாடுகளின் கொம்புகளைப் பிடித்துக் கொண்டு விளையாடுதல் என்று இப்படி கோகுலத்தில் சஞ்சரித்துக் கொண்டு இருப்பீர்களாமே !
பிறகு, கோகுலத்தில் வீடுகளுக்குள் புகுந்து, மற்ற கோபர்களையும் சேர்த்துக் கொண்டு, அவர்கள் வீடுகளில் பாலைத் திருடி சாப்பிடுதல் போன்ற விஷமங்களைச் செயதீர்களாமே !
கோபிகைகள், யசோதையிடம் வந்து, உங்களைப்பற்றி, புகார் சொல்வார்களாமே !
யசோதைக்கு, ஒரே சமயத்தில் , அன்பும் கோபமும் வந்து ,அடிப்பதா, வைவதா என்று விழிப்பாளாமே !
கன்றுக் குட்டியை, வேண்டாத சமயத்தில் அவிழ்த்து விட்டு, தாய்ப் பசுவிடம் , பால் நிறைய சாப்பிடும்படி செய்வதால், ஆய்ச்சியர்கள் கறப்பதற்கு , பசுவிடம் பால் இருக்காதாமே !
அங்கு வீடுகளில் உள்ள, வெண்ணெய், தயிர் இவைகளைத் திருடி , மற்ற கோபர்களுடன் சேர்ந்து
சாப்பிடுவீர்களாமே ! பூனை, குரங்கு இவைகளுக்குக் கொடுத்து, காலிப் பானைகளைக் கீழே போட்டு உடைப்பீர்களாமே !
பாலோ, வெண்ணெயோ , கைக்கு எட்டாத உயரத்தில் உறியில், பாத்ரங்களில் வைத்து இருந்தால்,
ஏணி போட்டுக் கொண்டு ஏறி, மற்ற கோபர்களைக் குனியச் சொல்லி, அவர்கள் முதுகின் மேல் ஏறி ,
பால், வெண்ணெய் இவைகளைத் திருடி எல்லாரும் சாப்பிடுவீர் களாமே !
சில சமயம், பாத்ரங்களை, அடித்து , உடைத்து விடுவீர்களாமே !
இருட்டு அறைகளின் உள்ளே உள்ள, பாத்ரங்களில் இருக்கும் பால், வெண்ணெய் இவைகளை ,
நீங்கள் அணிந்திருக்கும் ரத்ன ஆபரணங்களின் பிரகாசத்தினால், இடம் அறிந்து, எடுத்து உண்பீர்களாமே !
கோபிகைகளின் ஜீவனத்துக்கு , பாலும் வெண்ணையும் இல்லாமல் செய்து விடுவீர்களாமே !
அவர்கள், கோபம் தாங்காது, யசோதையிடம் புகார் சொல்லும்போது,
ஹே, கிருஷ்ணா ……நீ ஒன்றும் தெரியாதவன் போல ,ரொம்ப அடங்கியவன் போல,ஒன்றுமே செய்யாதவன் போல , கால்களைக் கட்டிக் கொண்டு,
அப்பாவிப் பையன் போல உட்கார்ந்து இருப்பாயாமே ! அப்போது, உன்னைப் பார்க்க பரம சோபிதமாக ” இருக்கும் என்று, சுகப்ரம்மம் , பரீக்ஷித் ராஜனுக்குச் சொன்னார்.

இவ்விதமாக, விளையாடி, கோபஸ்த்ரீகளின் மனங்களை அன்பினால் திருடினாய்;
இந்த விஷமச் செய்கைகள் செய்யும் சமயத்தில், கோப ஸ்திரீகள் உன்னைப் பார்த்து விட்டால், நீ அவர்களை ஓரக் கண்ணால் பார்த்தும்,பயத்தால் அழுவதாகப் பாசாங்கு செய்தும், கண்ணீர் வழிந்து, உன் கண் மைகள்
கலைய விழிப்பதாலும், உன்னை அடிக்க இயலாமல் , பிரமையுடன் / பிரேமையுடன்
உன் முகத்தையே பார்த்துக்கொண்டு இருப்பார்களாமே !

( ஹே, கண்ணா …அந்த, பயம்கலந்த பசப்புப் பார்வையால், அடியேனை ஒரு க்ஷணம் கடாக்ஷிக்க மாட்டாயா )

ஒரு சமயம், கோபர்கள் பலராமனையும் அழைத்துக் கொண்டு, யசோதையிடம் ஓடி வந்தார்கள்.
” கிருஷ்ணன், மண்ணைத் தின்கிறான், வந்து பாருங்கள் ” என்று புகார் செய்தார்கள்.
யசோதை ஓடிப் போய், கிருஷ்ணனைப் பிடித்துக் கொண்டு, அடிப்பதற்காகக் கையை ஓங்கினாள்.
அப்போது, நீ, பயந்தமாதிரி அழுதுகொண்டு, கண்களிருந்து நீர் ,கங்கையெனப் பெருக ” நான் சாப்பிடவில்லை; இவர்கள் வீணாகப் புகார் சொல்கிறார்கள் ;பொய் சொல்கிறார்கள்; என் வாயைப் பார் ” என்று, வாயைத் திறந்து, யசோதை உன் வாயைப்
பார்க்கும்படி செய்தாயாமே !

ஸ்ரீ சுகர், பரீக்ஷித்துக்குச் சொன்னதை, கிருஷ்ணா, அப்படியே உன்னிடம் இப்போது சொல்கிறேன்.

யசோதை, கண்ணனின் வாய்க்குள் , எல்லா உலகங்களையும், ஆகாசம், மலைகள், திசைகள்,
வனங்கள், நக்ஷத்ரங்கள், சந்த்ரன் , காற்று, அக்நி, மின்னல், இந்த்ரியங்களின் அபிமான தேவதைகள்,
ஜ்யோதிஸ் சக்ரம், மனஸ், தன்மாத்ரைகள், சத்வ, ரஜஸ், தாமஸ குணங்கள் கொண்ட அஹங்காரம்,
மஹத், ப்ரகிருதி, இவற்றைஎல்லாம் பார்த்தாள்.
ஜீவன், அதன் அபிமான தேவதை, வ்ரஜ பூமியான கோகுலம், அதில் வசிக்கும் கோபாலகர்கள்
கோபியர்கள், பசுக்கள், அங்கு நந்தகோபன், யசோதையாகிய தான்
எல்லாவற்றையும் ஆச்சர்யத்துடன் பார்த்தாள்.
( பிற்பாடு ஏற்படப் போகும் கீதா உபதேசத்தில் அர்ஜுனன் உன்னை வணங்கியதைப் போல )யசோதை, தனக்குள்ளாகவேஉன்னை ஸ்தோத்தரித்தாள். அதை “கீதமாக” இசைத்தாள்
(ஹே, கிருஷ்ணா….. யசோதை செய்த பாக்யம் —-இந்த அரும் பெரும் பாக்யத்தை என்னவென்று சொல்ல ! அந்தப் பெருமை மிகுந்த உன் தாயாரைப் பலதடவை நமஸ்கரிக்கிறேன் )

யசோதை ஸ்துதி கீதத்தை, ஸ்ரீ சுகர் , பரீக்ஷுத்துக்குச் சொன்னதை , ஹே கிருஷ்ணா,
இப்போது சொல்லி உனக்கு நினைவு படுத்துகிறேன்.

” இதென்ன, ஸ்வப்னமா ? தேவ மாயையா ? என் புத்தி பேதலித்து விட்டதா ?
புத்தி, மோஹம் அடைந்து விட்டதா ? என் மடியில் விளையாடும் சிறு குழந்தை,ஆத்ம யோகம் செய்பவனா ? இவைகளை, அவன் எப்படி உற்பத்தி செய்ய முடியும் ?
இக்குழந்தை என் பிள்ளை அல்ல! சாக்ஷாத் நாராயணன் ! எந்தப் பகவானை, எல்லாக்காலங்களிலும் ,
எல்லா ஜீவன்களும் ஆச்ரயிக்கிரார்களோ, எவரால், எந்தக் காரணத்தால்,என் கண்முன்னே, வாய் புதைத்து, கைகளைக் கட்டிக் கொண்டு, மிகவும் அடக்கமான
பிள்ளையாகக் காக்ஷி தருகிறாரோ, அவரைப் பல தடவை நமஸ்கரிக்கிறேன்;நானும், என் பதியான நந்தகோபரும் அப்படியே நினைத்து, நமஸ்கரிக்கிறோம்;
இந்தப் பிள்ளை, உலகங்களின் பதி; கோகுலத்துக்கு
( வ்ரஜ பூமி ) ஈஸ்வரன்; எல்லா ஐஸ்வர்யங்களையும் உடையவர்; கோபாலகர்கள், கோபிகைகள், பசுக்கூட்டங்கள், கன்றுகள், —-இவைகளை என் அல்ப புத்தியால், எங்களுடைய சொத்து என்று நினைக்கிறேன்;
நான் யசோதை, நந்தகோபரின் மனைவி, இந்த ஐஸ்வர்யங்களுக்கு எஜமானி,இக்குழந்தை என் புத்ரன், இவையெல்லாம் எங்களுடையது என்று தவறாக நினைக்கிறோம் .
இது முட்டாள்தனம் அல்லவா ? எல்லாமே, பகவானாகிய அவனுடையது;
அவன் கொடுத்ததை, எங்களுடையது என்று நினைத்து, அவனுக்கும் கொடுக்கிறோம்;அந்தப் பிரபுவே தஞ்சம்; ”

பகவானைப் பற்றி, பரம க்ஜானிகளுக்கும் கிடைக்க அரியதான அறிவை,தாயான யசோதை அடைந்தாள்.

(ஹே, கிருஷ்ணா, உன் தாயான யசோதைப் பிராட்டி சொன்னதைத் திருப்பிக் சொல்லி,
உன்னைப் பலமுறை நமஸ்கரிக்கிறேன் ).

அடுத்த க்ஷணம், பகவான், தன்னுடைய பிரபலமான வைஷ்ணவ மாயையை ஏற்படுத்தி,
யசோதையின் நினைவுகளை ,அறிவு தீக்ஷண்யத்தை மாற்றிவிட்டான்.
” அம்மா……அம்மா …. ” என்று கூப்பிட்டு, புடவைத் தலைப்பைப் பிடித்து இழுக்க, யசோதை, பிள்ளைப் பாசம் பெருக, கண்ணனாகிய உன்னை ,
இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டாள்.
எந்தப் பிரபுவை, தேவகி, சதுர் புஜத்துடன் , மந்தஹாச வதனத்துடன், பீதாம்பரதாரியாக காராக்ருஹத்தில் சேவித்தாளோ , எந்த பிரபுவைவேதங்களும் உபநிஷத்துக்களும் சாங்க்யயோக சாஸ்திரங்களும் , பாஞ்சரார்த்ர சாத்வ தந்த்ர சாஸ்திரமும் தேடி களைத்துப் போயிற்றோ,அந்த பர ப்ரஹ்மத்தை, பாக்யசாலியான யசோதை , மீண்டும் தன் புத்ரன் என்கிற நினைவோடு பார்த்தாள்.

பரீக்ஷித், சுகப்ரம்ம ரிஷியைக் கேட்டான்
” ஹே, ப்ரஹ்மந் , நந்தகோபனும், யசோதையும், என்ன உத்தமமான கார்யத்தைச்செய்து, எல்லாப் பாபங்களையும் போக்கக் கூடியதான பால்ய லீலைகளைப் பார்த்துஅனுபவித்தார்கள் ? காரணமென்ன ? ”

ஸ்ரீ சுகப்ரம்மம் பதில் சொன்னார் ” ஹே ராஜன் ……கிருஷ்ணனின் இந்த மாதிரியான
பால்ய லீலைகளை உனக்குச் சொல்லும்போது, சந்தோஷத்தால்நான் , ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறேன்.
உன் கேள்விக்குப் பதில் சொல்கிறேன்.
அஷ்ட வசுக்களில் ஒருவன் த்ரோணன்; இவன் நந்தகோபனாகவும்,”தரா ” என்கிற அவனுடைய மனைவி யசோதையாகவும் பிறந்தார்கள்;
இது, அவர்களுக்கு ப்ரஹ்மாவின் கட்டளை; அப்போது, இவர்கள் இருவரும்ப்ரஹ்மாவிடம், “எங்களுக்குப் பகவானிடம் பக்தி தொடர்ந்து இருக்க வேண்டும்; ”
என்று பிரார்த்தித்து, அப்படியே அநுக்ரஹம் பெற்றவர்கள்;
அந்த அனுக்ரஹத்தாலே, நந்தகோபன்–யசோதைக்கு, பகவான் குமாரனாக—–
கிருஷ்ணனாக அவதரித்து, பலராமனுடன் பால்ய லீலைகளை,கோகுலத்தில் செய்து, சந்தோஷத்தைக் கொடுத்தார்;

( அந்த சுகப்ரம்ம ரிஷியையும், நந்தகோபன் யசோதை பாக்யசாலிகளையும் முன்னிட்டு, ஹே….கிருஷ்ணா…..உன்னையும் , பலராமனையும்
பலதடவை நமஸ்கரிக்கிறேன் )
8 வது அத்யாயம் முற்றிற்று.

 

தசமஸ்கந்தம் —-9 வது அத்யாயம்
————–
ஸ்ரீ கிருஷ்ணனின் பால்ய லீலை —–தொடருகிறது…….
———-
ஒரு சமயம், யசோதை, தயிர்ப் பானையின் எதிரே உட்கார்ந்து,
தயிரைக் கடைந்து கொண்டிருந்தாள். வெண்ணெய்க்காகக் கடைந்து கொண்டிருந்தாள்.
பகவானுடைய லீலைகளை, இந்தமாதிரி , வெண்ணெய்க்காகத் தயிர் கடையும்
சமயங்களில், ஆய்ச்சியர்கள் பாடிக்கொண்டே , தயிரைக் கடைவார்கள்.
யசோதையும் அப்படியே , பக்தி பரவசமாகப் பாடிக் கொண்டே ,
தயிரைக் கடைந்து கொண்டிருந்தாள்.

உத்தமமான பட்டு வஸ்த்ரம் அணிந்து இருந்தாள்.
இடுப்பில் ஒட்டியாணம்; கைகளில் வளை யல்கள்.மோர்த் திவலைகள் மேலே பட்டு
மேல்துணி நனைந்தது.காதுகளில் உள்ள குண்டலங்கள் ஆட,
கைவளையல்கள் யசோதையின் பக்தி ததும்பும் பாட்டுக்குக்குத்
தாளம் போடுவது போல சப்திக்க,
உடம்பு வியர்த்துக் களைத்துப் போனாள்.

அப்போது, நீ அம்மாவிடம் ஓடிவந்து, “பசிக்கிறது ” என்று சொல்லி,
யசோதை தயிர் கடைய முடியாதபடி, மடியில் உட்கார்ந்து, ஸ்தன்யபானம்செய்தாய்.
அப்போது, நீ, உன் தாயைப் பார்த்த அனுக்ரஹப் பார்வை, கருணைப் பார்வை ,
ஹே, கிருஷ்ணா, யசோதை என்ன பாக்யம் செய்தாளோ!

அந்தச் சமயம் ,
யசோதையான உன் அம்மா எழுந்திருந்தாள். உன்னை மடியிலிருந்து
இறக்கி விட்டு விட்டு , அடுப்புக்கு அருகில் ஓடினாள்.
அடுப்பில், பாத்ரத்தில் பால் பொங்கிக் கொண்டிருந்தது.
உடனே, உனக்குப் பொல்லாத கோபம் வந்து விட்டது.
கோப நடிப்பு; உன் இளஞ்சிவப்பு உதடுகள் துடிக்க, மத்தினால்,
தயிர்ப் பானையை உடைத்தாய்; உன் கண்களில் ஏமாற்றம்;
கோபம்; வீட்டின் உள்ளே, “அரங்கு ” என்று சொல்வார்களே,
அங்கே போய் , அங்கு ஒளித்து வைத்திருந்த வெண்ணெயை ,
பசிக்காக சாப்பிட்டாய்;
(ஹே, கிருஷ்ணா…….ஆழ்வார்கள், .கோதைப் பிராட்டி, சீர்தாஸ், மீராபாய்,
இவர்கள் வெண்ணெய் உண்ட வாயனான உன் அதரச் சிரிப்பில்
மனசைப் பறி கொடுத்ததைப் போல,
அடியேனும் பறி கொடுத்துவிட்டுத் தவிக்கிறேன் )

யசோதை , பால் பாத்ரத்தை அடுப்பிலிருந்து இறக்கி வைத்துவிட்டு,
தயிர் கடையும் இடத்துக்குப் பழையபடியும் வந்தாள்.
உன் விஷமத்தனம் தெரிந்தது. உன்னை அங்கு காணவில்லை.
நீ, ஒரு மரக்கட்டிலின்மேல் ஏறிக்கொண்டு, நீ சாப்பிட்ட வெண்ணையின் மீதியை,
அனுமனைப் போலுள்ள ஒரு குரங்குக்குக் கொடுத்துக் கொண்டிருந்தாய்
. உன்னை, யசோதா பார்த்து விட்டாள். கண்களுக்குப்
பூசப்பட்டிருந்த அஞ்சனம் ( கண்மை ) கலைந்து, உன் கன்னங்களில் வழிந்து இருந்தது.
கூடவே, நீ வெண்ணெய் சாப்பிட்ட அடையாளமாககன்னங்களில் வெண்ணையின்
சிதறல்கள். யசோதை, உன்னுடைய பின்புறமாக வந்து,
கைகளால் உன்னைப் பிடித்துக் கொண்டாள்.
(ஹே, கிருஷ்ணா……இது என்ன லீலை !யோகிகளின் கடுமையான தபஸ்சுக்குக் கூட
அகப்படாத, வேதங்களால் தேடப்படும் நீ, யசோதையிடம் ,
சிறைக்கைதியைப்போல அகப்பட்டு, அடங்கிப் போனாயே !இது என்ன லீலை ! )

யசோதை, ஒருகையால் உன்னைப் பிடித்து, இன்னொரு கையால் மாடுகளை மேய்க்கும்
கோலை எடுத்து, உன்னை அடிப்பது போல பாசாங்குடன் கையை ஒங்க ,
உடனே நீ, யசோதையைப் பார்த்து, கண்களைக் கசக்கிக்கொண்டு,
கைகளைக் கூப்பிக் கொண்டு, “அம்மா… இனி தவறு செய்யமாட்டேன் ”
என்று சொன்னாய்.
(ஹே, கிருஷ்ணா…. இது என்ன ஜாலம் ? )

யசோதை, உண்மையிலேயே , நீ பயப்படுவதாக நினைத்து , ஓங்கிய கையைத்
தாழ்த்தி , கோலைத்தூர எறிந்து, உன்னை வாரி அணைத்து,
உன் முகத்தில் முத்தமிட்டாள்.
தலைகேசம் அவிழ்ந்து புரளுவதைக் கூட லக்ஷ்யம்
செய்யவில்லை.
( ஹே, கிருஷ்ணா….யசோதையின் பாக்யத்தை,
ராதையும் ஆண்டாளும் கொண்டாடியதைப் போல
அடியேனும் கொண்டாடுகிறேன் )

யசோதைக்கு, நீ செய்த விஷமத்தனம் நினைவுக்கு வர,
உன்னைக் “கண்ணிநுண் சிறுத்தாம்பினால் ( கயிற்றால் ) கட்டி, “உன்னை வெளியே
ஓடாதபடி செய்கிறேன் பார் ” என்றாள்.
(கண்ணா….நீ சர்வ வியாபி; நீ இல்லாத இடமே இல்லை; எல்லாப் பிரபஞ்சங்களுக்குள்ளும் ,
எல்லா வஸ்துக்களுக்குள்ளும் இருக்கிறாய்;
கேவலம், ஒரு கயிற்றால் உன்னைக் கட்ட முடியுமா
ஆனால், தாயாரின் செய்கைக்கு உன்னைக்
கட்டுப்படுத்திக் கொண்டாய் )

உன்னைக் கயிற்றால் கட்டி, பக்கத்தில் இருந்த மரத்தால் ஆன உரலில் இணைக்க ,
யசோதை முயற்சித்தாள்.கயிற்றின் அளவு குறைந்தது;
இன்னொரு கயிற்றை எடுத்து , முடிச்சுப் போட்டு, மறுபடியும் கட்டினாள்;
மறுபடியும் இரண்டு அங்குல அளவு கயிறு குறைந்தது; கயிற்றை
எடுத்து முடிச்சுப் போட்டு, முடிச்சுப் போட்டு உன்னை கட்ட எத்தனித்தபோதெல்லாம்
கயிறு இரண்டு அங்குல அளவு குறைந்தது.
யசோதைக்கு ஆச்சர்யம் ! முகத்தில் , முத்துக்கள் போல வியர்வைத் துளிகள்;
யசோதை படுகின்ற கஷ்டத்தைப் பார்த்த நீ,
உன் லீலையைக் குறைத்துக் கொண்டு , கட்டுண்டாய்.
( கண்ணிநுண் சிறுத்தாம்பினால், கட்டுண்ணப் பண்ணிய பெருமாயனே !
என் அப்பனே ! ஸ்ரீ மதுரகவி ஆழ்வாரை, மனத்தால், பலமுறை நமஸ்கரிக்கிறேன்.
உன்னைக்கட்டிய கயிற்றுக்கு அடியேனின் நமஸ்காரம்.
அந்தக் கயிறு என்ன புண்யம் செய்ததோ !
உன் இடுப்பில், தழும்பு ஏறப் பண்ணிய , கயிறு அல்லவா !
அந்தக் கயிற்றுக்கும், இடுப்புத் தழும்புக்கும்,
நப்பின்னைப் பிராட்டிக்கும் நமஸ்காரங்களைச் செய்கிறேன் )

நீ சர்வ ஸ்வதந்த்ரன்; சர்வேஸ்வரன் ; எல்லோரும், ஈரேழு உலகங்களும்,
அவற்றில் உள்ள , சித், அசித் யாவும் உனக்குக் கட்டுப்பட்டது;
அப்படிப்பட்ட நீ, யசோதையின் தாய்ப் பாசத்துக்குக்
கயிற்றால் கட்டுண்டாய்; பிற்பாடு, சஹாதேவன் உன்னைக் கட்டப் போகிறான்;
ப்ரஹ்ம , ருத்ராதிகளுக்கு, ஏன், அகலகில்லேன் என்று உன் வக்ஷஸ்தலத்தில்
நித்ய வாஸம் செய்யும் பெரிய பிராட்டிக்குக் கூட,
இந்த பாக்யம் கிட்டவில்லை.
நீ, தாமத்தால் கட்டப்பட்டாய்; தாமோதரன் ஆனாய் ! )

யசோதை, வீட்டு வேலைகளில் ஈடுபட்டு இருக்கும்போது,
நீ, உரலையும் இழுத்துக் கொண்டு , முன்னாலே இருந்த இரண்டு மருத மரங்களை
நோக்கித் தவழ்ந்தாய். இரண்டு மருத மரங்களும் , முன் ஜன்மத்தில் ,
குபேரனுடைய பிள்ளைகள். நளகூபரன், மணிக்க்ரீவன் என்று பெயர்.
பிராம்மணரான ஸ்ரீ நாரதர் வரும்போது, காமத்தினால் இனிப்பான
கள்ளைச்சாப்பிட்டுக்கொண்டு, தேவஸ்த்ரீகளுடன் மயங்கி, நாரதர்
அந்த வழியாக வருவதைப் பார்த்தும், அவரை லக்ஷ்யம் செய்யாமல்,
நிர்வாணமாக இருந்தனர். அதனால், நாரதர் சாபமிட, மருத மரங்களாக,
இந்த வ்ரஜபூமியில் முளைத்து, வளர்ந்து, சாப விமோசனத்துக்கு,
ஸ்ரீ கிருஷ்ண ஸ்பர்சத்தை எதிர்பார்த்து இருப்பவர்கள். இந்த இரண்டு
மருத மரங்களுக்கு நடுவில் , உரலையும் இழுத்துக் கொண்டு, நீ தவழ்ந்து சென்றாய்

10 வது அத்யாயம் முற்றிற்று . ஸுபம் .
——————————————————————————–
பின் குறிப்பு :–கண்ணிநுண் சிறுத்தாம்பு, நினைத்த பயனை அளிக்கும் மந்த்ரம்.
ஸ்ரீ மதுரகவிகள் அருளியது. ஸ்ரீமன் நாதமுநிகள் , இந்தப் பிரபந்தத்தில் உள்ள
11 பாசுரங்களையும் பன்னீராயிரம் முறை ஆவ்ருத்தி செய்து,
ஸ்ரீ நம்மாழ்வாரை சாக்ஷாத்கரித்து, திவ்ய பிரபந்தங்களான
நாலாயிரத்தையும் உலகுக்குக் கொடுத்து ,
நாலாயிரமும் எங்கள் வாழ்வே என்று பெருமைப் படக் காரணமானவர்

கண்ணி = முப்பிரியாய், உறுத்துகைக்கு அழுத்தமாய்
நுண் = கட்டு அழுந்ததலுக்கு மெல்லிசாய்/ மெலியதாய்
சிறு= சரீரத்தை சுருக்கிக் கொண்டு, ( வயிற்றை எக்கி )
கயிற்றை நழுவும்படி செய்தலுக்கும், கயிற்றை நீக்கித் தளரும்படி செய்தலுக்கும்
யோக்யமில்லாத, —அருகதை இல்லாத
தாம்பினால்= கயிற்றினால்
கட்டுண்ணப் பண்ணிய = யசோதைப் பிராட்டியால் கட்டப்படுவதற்கு அனுசரணையாய்
பெருமாயன்= ஆச்சர்ய குண சேஷ்டிதன்;
உரலோடுகூடக் கட்டிவைத்தவுடன் விக்கி, விக்கி அழுதது;
அதற்கு , யசோதை “வாய், வாய் ” என்றவுடன்
அஞ்சுவதுபோல நடித்து, முகத்தில் பேதைத் தனத்தைத் தேக்கி,
அவளையே பார்த்தது; அந்தப் பார்வையில் அவளை கடாக்ஷித்து,
அவளைத் தொழுதது
பந்தத்துக்கும், மோக்ஷத்துக்கும் சர்வ சக்தி உடையவனான கண்ணன் ,
அவற்றை எல்லாம் மறைத்துக் கொண்டு, யசோதை கட்டிய
கண்ணிநுண் சிறுத்தாம்பினால் கட்டுண்டு ,
அந்தத் தழும்பு ( வடு ) இடுப்பில் ஏறியிருக்க,
கோபர்களையும், கோபியர்களையும், நப்பின்னையையும் ஆழ்வார்களையும்
ஆசார்யர்களையும் மோஹிக்கச் செய்யும் ” பெருமாயன் ”
அவனை, இந்த அத்யாய நிறைவில் நாமும் மோஹிப்போம்;
ஆழ்வாரைப்போல மோஹித்துக் கிடப்போம் . ஹே, தாமோதரா …. ஹே, பெருமாயா……..

—————————————————————————————————————

தசமஸ்கந்த பாராயணம்—- தொடர்ச்சி
————————————————
அத்யாயம் 9 —பின் குறிப்பு தொடர்கிறது
——————————————–

————————-
அடியேன், தசமஸ்கந்த விவரப்படி, நளகூபரன், மணிக்ரீவன் , இவர்களைப் பற்றிச்
சொல்லி விட்டாலும், மனஸ், ஒரே இடத்தில் சுற்றிச் சுழன்று
கொண்டிருக்கிறது. அதுதான், மாமாயன் , தாம்பால் கட்டுண்ட நிலை
இதை இன்னும் விவரிக்க , மனஸ் கட்டளை இடுகிறது;
புத்தியும் ஆமோதிக்கிறது.
ஸ்ரீ நம்மாழ்வார், இந்த மாயக் கண்ணன் , கயிற்றால் கட்டுண்டதை நினைத்து,
ஆறு மாச காலம் மோஹித்துக் கிடந்தார் என்பர்.
ஸ்ரீ குலசேகரர் , ஸ்ரீ முகுந்தமாலையில் தன்னை
“த்வத் ப்ருத்ய –ப்ருத்ய –பரிசாரிக –ப்ருத்ய–ப்ருத்ய –ப்ருத்யஸ்ய ப்ருத்ய
இதி “————– ஹே, லோகநாதா, ,அடியேனை—–அடியார்க்கு, அடியாரின்
அடியார்க்கு, அடியாரின் அடியார்க்கு, அடியாரின் அடியன் ——ஏழாவது அடியானாக ,
நினைத்துக் கொள்ளுமாறு பிரார்த்திக்கிறார்.
ஆழ்வாரே இப்படி என்றால், , இப்படி எத்தனை ஏழாவது அடியேன் என்று ,
அடியேன் சொல்லிக் கொள்வது?
ஏழேழு பிறவி எடுத்தாலும் , எந்த ஏழுக்குள்ளும் அடங்காதவன் அடியேன் !
எனினும், அந்தக் கண்ணனைத் தாம்பால் கட்டியதால்,
“ஹர்த்தும் கும்பே விநிஹித கர: ஸ்வாது ஹையங்க வீநம்
த்ருஷ்ட்வா தாம க்ரஹண சடுலாம் மாதரம் ஜாத ரோஷாம் |
பாயாதீஷத் ப்ரசலீத பதோ நாப கச்சந் ந திஷ்டந்
மித்யா கோப: ஸபதி நயநே மீலயந் விஸ்வ கோப்தா ||

ஸ்வாமி தேசிகன் ‘ஸ்ரீ கோபால விம்சதியில் ” சொல்லியதைப் போல,
” பாயா தீஷத் ப்ரசலீத பதோ நாப கச்சந் ந திஷ்டந் மித்யா கோப: ”
ஓடவும் முடியாமல், நிற்கவும் முடியாமல் , அடியேன் ஹ்ருதயத்தில் புகுந்து கட்டுண்ட ,
அந்த ஸ்ரீ கிருஷ்ணனின் சரணார விந்தங்களை, ஆயிரக் கணக்கான
முறை, தொட்டுத் தொட்டு, நமஸ்கரித்து, தாம்பால் கட்டுண்ட நிலையைச் சொல்கிறேன்.

யசோதை, இடைநோக, தயிரைக் கடைந்தாள்; வெண்ணெய் திரண்டது;
கீழே எங்கேனும் வைத்தால், கண்ணன் சாப்பிட்டு விடுவான் என்று நினைத்து,
உறியில் ஏற்றி வைத்தாள்; மறைத்து வைத்தாள்.
உறங்குவது போலப் பாசாங்கு செய்யும் கண்ணன்,
( இவன் திருப்பாற்கடலிலேயே உறங்குவதுபோல, உறங்காது இருப்பவ னாயிற்றே ).
யசோதை, அந்தண்டை போனதும், “சிவுக்” கென்று எழுந்தான்;
ஒரே இருட்டு; வெண்ணையைத் தேட வேண்டுமே ?
தன் திருமார்பில் அணிந்திருக்கும் “கௌஸ்துபம்” என்கிற ப்ரகாசமான ரத்னத்தின் ஒளியில் ,
அதைக் கண்டு பிடித்தான்; கண்ணன் கருநிறம்; இருட்டு கருநிறம்;
கௌஸ்துபம், இவனுக்கு , கருநிற இருட்டில், வெள்ளை நிற வெண்ணையைத்
தன் பிரகாசத்தால், காட்டிக் கொடுத்தது; வெண்ணையை எடுத்து, ஆசை யுடன் சாப்பிடுவான்;
யாராவது வருவதைப் போன்ற ஓசை கேட்டால், மேல் வஸ்த்ரத்தால், கௌஸ்துபத்தை
மறைத்து விடுவான்;
இப்படியே, வெண்ணெய் சாப்பிட்டு, சாப்பிட்டு, யார் கண்ணிலும் படாமல் தப்பித்து வந்தான்;

ஆனால், பிள்ளையின் சாமர்த்யம், தாயாருக்குத் தெரியாதா, என்ன !
யசோதை, ஒருநாள், இந்தத் திருட்டைக் கண்டு பிடித்து விட்டாள்.
கண்ணனை, உரலோடு சேர்த்துக் கட்டத் தொடங்கினாள்.
தாம்பை ( கயிறு ) எடுத்து, கண்ணனின் இடையையும், உரலின் இடையையும்
( நடுப்பாகம்–உடுக்கை இடைபோலச் சிறுத்து இருக்கும் ) சேர்த்து, சுற்றிக் கட்டப் பார்த்தாள்.
அவளுக்கு ஆச்சர்யம் ! கயிறு, இரண்டு அங்குலம் குறைவாக இருந்தது.
இன்னொரு கயிற்றை எடுத்து, இந்தக் கயிற்றுடன் சேர்த்து முடிச்சுப் போட்டு, இணைத்து,
மறுபடியும் கட்ட முயற்சித்தாள். மறுபடியும், கயிறு குறைந்தது.
இரண்டு அங்குலம் குறைந்தது.இவளுக்கு, நாம் ஏன் கட்டுப்பட வேண்டும் என்று வளர்ந்தானாம்.
யசோதையின் நெற்றியில் வியர்வைத் துளிகள்;
ஓய்ந்துபோன சிவந்த உள்ளங்கைகள்;

கண்ணன், கருணை கொண்டான். நம்மிடம் அன்பைப் பொழியும், யசோதையிடம் ,
நம் பலத்தைக் காட்டவேண்டாம் என்று நினைத்தான்.

இப்போது, யசோதை, கண்ணனையும் , உரலையும் , கயிற்றால் சேர்த்துக் கட்டிவிட்டாள்.
கருத்த திருமேனி; தயிரையும் , வெண்ணையையும் ( இரண்டும் வெண்மை நிறம் ) உண்ட திருமேனி;
கருத்த யானையைப் போலக் கண்ணன் இருந்தான்;
உருவத்தில் பெருத்த யானை, ஒரு சிறிய பாகனுக்கு; அவன் கையில் உள்ள குச்சிக்கு
அடங்குவது போல அடங்கிப் போனான்.
கட்டுண்ட யானை, கண்ணீர் சிந்தி அழுவதைப் போல அழுதான்.
யசோதை, கண்ணனின் கண்களுக்குத் தீட்டியிருந்த “மை “, கண்ணீரால் கரைந்தது.

உறியார்ந்த நறுவெண்ணெய் ஒளியால் சென்று
அங்குண்டானைக் கண்டாய்ச்சி உரலோடார்க்க
தறியார்ந்த கருங்களிரே போல நின்று
தடங் கண்கள் பனி மல்கும் தன்மையானை
……………………………… என்று திருமங்கை ஆழ்வார்,
திருக்கோவிலூர் ஆயனைப் பாடுகிறார்
ஹா… கரிய நிறக் கண்ணன்—-வாயில் ஒட்டிக் கொண்டிருக்கும் வெண்ணெய் சாக்ஷி சொல்ல,
உரலோடு கட்டுண்டு, கண்மை, கன்னங்களில் கரைய
நிற்கின்ற அற்புதக் காக்ஷி !அனைவரும் வசப்படும்போது, அடியேன் எம்மாத்திரம் !

பின் குறிப்பு தொடர்கிறது………..

தசமஸ்கந்த பாராயணம்—–அத்யாயம்—9
—————————————————
பின் குறிப்பு தொடர்ச்சி — 2
————————-
வெள்ளிமலை நிறத்தை ஒத்த வெண்ணையைத் திருடிச் சாப்பிட்டுவிட்டு ,
யசோதை ஆய்ச்சியின் கையால் , கண்ணிக் குருங்கயிறால்
கட்டுண்டு, பொத்த உரலிடை ஆப்புண்டு, அழுத கண்ணோடே,
அஞ்சின நோக்கோடே, தொழுத கையோடே, நிற்கிறான், கண்ணன்.
ஜீவன்களை, சம்ஸாரத்தில் கட்டி , அழுத்தி வைத்து, அழுத கண்ணோடே
அவனை ஸ்தோத்தரிக்க வைக்கும், கண்ணன்,
யசோதை முன்பு நிற்கும் காக்ஷி இது.
ஆய்ச்சி கையால் கட்டுண்ட காக்ஷி .
அவனைத் தாமத்தால் கட்ட இயலாது.
பிரேமத்தால் கட்ட இயலும்.
இங்கு, யசோதையின் பிள்ளைப் ப்ரேமம் முன் நிற்க,
கண்ணன் அதைத் தாமமாக (கயிறு ) ஏற்றுக் கட்டுண்டான்.
யானை, தன்னைக் கட்டுவதற்காக, கயிற்றைத்
தானே எடுத்துப் பாகனிடம் கொடுக்கும். கருநிறத்தான்,
யானையைப் போன்ற கருநிறத்தான்
கண்ணன், தன்னைக் கட்டுவதற்காக “பக்தி ” என்னும்
கயிற்றை எடுத்துக் கொடுப்பான்.
“பத்துடை அடியவர்க்கு , எளியவன் ” என்று ஸ்வாமி நம்மாழ்வார் கூறுகிறார்.
தாமோதரனாக, தாமோதர நாராயணனாக —–இந்தக் கண்ணன்,
திருக் கண்ணங்குடியில் , கையை , இருப்பில் வைத்துக் கொண்டு ,
கண்ணனாகவே ஸேவை சாதிக்கிறான்.

வசிஷ்ட ரிஷிக்காக, க்ருஷ்ண பக்தரான வசிஷ்ட ரிஷிக்காக,
அவன் வெண்ணெய்க் கிருஷ்ணனாக ஆனான்.
அவர் வெண்ணையாலேயே க்ருஷ்ண விக்ரஹம் செய்து,
பக்தியின் மஹிமையால்,அது உருகாமல் இருக்க,
விக்ரஹத்தை நிற்க வைத்துப் பூஜை செய்வார்.
கண்ணனுக்கு இங்கும் விளையாட்டு;
அவதார காலத்திலும் விளையாட்டு; அர்ச்சாவதாரத்திலும் விளையாட்டு.
வடக்கை, இடக்கை தெரியாத ஆய்ச்சியர் களுடனும் விளையாட்டு;
வேத வேதாங்கங்கள், அனுஷ்டானங்கள் தெரிந்த முநிபுங்கவரிடமும் விளையாட்டு.

ஒருநாள், வசிஷ்டர், வெண்ணெய்க் கிருஷ்ணனுக்கு , ஆராதனம் செய்யும்போது,
சிறுவன் உருவில் வந்து, வெண்ணெய்க் கிருஷ்ணனை எடுத்து,
வாயில் போட்டுக் கொண்டு, ஓடுகிறான்;
வசிஷ்டருக்குக் கோபம் ( இருக்காதே, பின்னே? நமக்கே கடும் கோபம் வருமே )
சிறுவனைத் துரத்துகிறார்;
சிறுவன் “கிருஷ்ணாரண்யம்”ஓடி வருகிறான்;
அங்கு, தபஸ் செய்து கொண்டிருந்த மகரிஷிகள், இச்சிறுவன் யாரென்று தெரிந்து,
“பக்தியால்” கட்டுகிறார்கள். அடியார்களுக்கு, அடங்கினான்,
இங்கு. அதாவது திருக்கண்ணங்குடியில்.
அவதார காலத்தில் அன்னைக்கு அடங்கி, கயிற்றால் உரலில் கட்டுண்டு,
அழுத கண்ணோடு, அஞ்சின நோக்கோடு, தொழுத கையேடு நின்றான்.

(ஹா…..திருக் கண்ணங்குடிக் கண்ணா….
தாமோதரா —-
தாமத்தால் உரலில் கட்டுண்டு, நீ நின்றாயே….
அந்த அழுத கண்களும், அஞ்சின நோக்கும், தொழுத கைகளும்
நினைக்கும் போதெல்லாம், அடியேனைப் பேதமை கொள்ளச் செய்கின்றன )

பின் குறிப்பு தொடர்கிறது————

krushnaஅத்யாயம்—9 பின் குறிப்பு—–3
———————– ———————–
வைகுண்டவாசி உபய வே. கே.ரங்கஸ்வாமி ஐயங்கார் ,
மிகச் சிறந்த ஆன்மீகத் தொண்டராகச் செய்திருக்கும் “பாசுரப்படி, பாகவதத்தில் ”
திருவாய்ப்பாடியைப் பற்றிச் சொல்லும்போது, இப்படி சொல்லியிருக்கிறார்.

” வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள் ,
நீங்காத செல்வம் நிறைக்க,
வெள்ளிமலை இருந்தால் ஒத்த வெண்ணையைத் தாயர் மனங்கள் தடிப்ப
, உளம் குளிர அமுது செய்து ,
விரலோடு வாய் தோய்ந்த வெண்ணெய் கண்டு ,
ஒளியா வெண்ணெய் உண்டான் என்று,
உரலோடு ஆய்ச்சி , ஒண்கயிற்றால் , விளியா ஆர்க்க
, ஆப்புண்டு, விம்மி அழுது, பொத்த உரலைக் கவிழ்ந்து,
அதன் மேலேறித் தித்தித்த பாலும்
தடாவினில் வெண்ணையும் ,
மெத்தத் திரு வயிறு ஆரவிழுங்கி,
சீரால் யசோதை அன்புற்று நோக்கி,
அடித்தும் பிடித்தும் அனைவர்க்கும் காட்ட,
ஊரார்கள் எல்லாரும் காணக்
கண்ணிநுண் சிறுத்தாம்பினால் கட்டுண்டு,
பெருமா உரலில் , பிணிப்புண்டு இருந்து,
விண் எல்லாம் கேட்க அழுது,
எழில் கொள் தாம்பு கொண்டு அடிப்பதற்கு எள்கி …………………………….. ”

ஆயர்பாடிப் பசுக்கள், வள்ளல்கள்;
கறக்கக்கறக்க, குடம் குடமாகப் பால் சொரியும் பசுக்கள்;
இதனால், ஆய்ப்பாடியில் எல்லாச் செல்வமும் நீங்காது நிறைந்து இருக்க,
(கண்ணனே செல்வம் தானே! அவனிருக்குமிடத்தில் செல்வங்கள் யாவும்
நிறைந்து நீங்காது இருக்கக் கேட்பானேன் ? )

வெள்ளியைப் போல மினுமினுத்து ,
மலையை ஒத்த வெண்ணையை,
தாயான யசோதை யின் மனம் , மற்றும் தாயை ஒத்தவர்களின் மனங்கள் கனக்க,
( தாயான யசோதையின் அகமனம், புற மனம் ஆகிய மனங்கள் கனக்க ),
கண்ணன் தன்னுடைய உள்ளம் (மனஸ் ) குளிர,
வெண்ணையை அமுது செய்து , போக்யமாகச் சாப்பிட்டு,
அந்த வெண்ணெய் எப்படி காக்ஷி அளிக்கிறது தெரியுமா,
விரலோடு வாய் தோய்ந்து —கண்ணனின் கைவிரல்களிலும் வெண்ணெய் இருக்கிறது;
கண்ணனின் வாயிலும் வெண்ணெய் இருக்கிறது—-
அல்லது , விரல்களில் இருக்கும் வெண்ணெய் ,
கண்ணன், விரல்களைத்தன் வாயில் வைத்திருப்பதால் , விரலோடு வாய் தோய்ந்த
வெண்ணெய் —தோய்வது என்பது இடையர்கள் குலத்துக்கே உரித்தான சொல்—
-பாலைத் தோய்ப்பது—-பக்குவமான சூட்டில் உள்ள பாலை, கொஞ்சமாக மோர் சேர்த்து,
அது , தயிர் ஆவதற்காகச் செய்யும் செயல்;

ஆய்ச்சியர் செய்யும் செயல். இங்கு விரலோடு வாய் தோய்ந்தது
( இதை, ரஹஸ்யார்த்தமாக, காலக்ஷேபமாகச் சொல்வதுதான் நல்லது )
யசோதை இதைக் கண்டு, ஒளித்துவைத்திருக்கும் வெண்ணையை உண்டுவிட்டானே என்று,
அங்கிருந்த உரலுடன் , பொருத்தமான கயிற்றால் கட்டிவிடுவேன் என்று சினத்துடன் பேச,
அகப்பட்டுக்கொண்ட( பொது அர்த்தம் ), கண்ணன், விம்மி விம்மி
( வயிறு எக்கி, அடிக்கடி மூச்சை உள்ளே இழுத்து, வெளியே விட்டு , பாசாங்குடன் )
அழுது, கேவிக் கேவி அழுது, உரலின் பள்ளமான பாகத்தை கீழே கவிழ்த்து,
உரலின் மேல் ஏறி நின்று , தித்திப்பாக இருக்கிற ( சுவையுடன் கூடிய ) பாலையும்,
அண்டாவில் உள்ள வெண்ணையையும் , மென்மையான “திரு வயிறு ” அனுபவிக்க
நிறைய விழுங்கினான்;
அன்பும் , பாசமும் கொண்ட யசோதை, அவனைப் பார்த்தும், அடித்தும், அவனைப் பிடித்தும் ,
அங்கு திரண்டிருந்த அனைவர்க்கும், கண்ணனின் லீலையைக் காட்ட , ஊர் கோபர்கள்,
கோபிகைகள், ( ஊரார்கள் என்பது, பசுக்கூட்டம், கன்றுகள், மரங்கள் யாவும் )
எல்லாரும் பார்க்க, மெலிதான , சிறிய கயிற்றினால் கட்டப்பட்டு,
உரலில் பிணைக்கப்பட்டு இருந்து, ஆகாயத்தில் உள்ளவர்கள் கூட கேட்கும்படி ,
“ஓ” வென அழுது, பசுக்களைக் கட்டுவதற்காகவே உள்ள கயிற்றால்,
யசோதை , அடிப்பதுபோல் பாவனை செய்து, வீட்டுக்குள்ளே போக ….
( இது பொதுவான அர்த்தம் . பதம் பதமான விளக்கமோ, வ்யாக்யானமோ அல்ல )
பாசுரப்படி பாகவதம் , இப்படிப் போகிறது.

 

(பாலையும், தயிரையும், வெண்ணையையும் கொடுத்து,
குடும்பத்துக்கு வேண்டிய பொருட்களை வாங்கி,
இல்லறம் நடத்தும் கோகுலத்து மங்கையர்
அவைகளை, யாரும் காணா வண்ணம் எடுத்துச் சாப்பிட்டு
, ( கோபர்கள், குரங்கு, பூனை இவர்களுக்கும் கொடுத்து )
கோபியர்களின் கோபத்துக்கு ஆளாகும் கண்ணன்.
வீட்டில், யசோதை, ஒளித்து வைத்த வெண்ணையைச் சாப்பிடும் கண்ணன்
அதைக்கண்டு, பாசத்துக்கும், கோபத்துக்கும் நடுவில் திண்டாடும் யசோதை;
கண்ணனின் பொல்லாத்தனம் , விம்முதல், பொய் அழுகை, விண் எலாம் கேட்க அழுகை.
கண்ணிநுண் சிறுத்தாம்பினால் ,உரலோடு கட்டுண்ட எளிமை
அசோதையை அஞ்சி நோக்கல், அழுகை, தொழுகை
ஆரணமும் தேடும் காரணா ! பூரணா ! கண்ணா ! உன் லீலைகளைக் கேட்பதே அடியோங்கள் வாழ்வு
உன் திருவடிகளே , அடியோங்களுக்குப் புகல் )

———————-பின் குறிப்பு நிறைகிறது.

இனி அடுத்த அத்யாயம் .10 வது அத்யாயம்——தொடரும்

தசமஸ்கந்தம்——-நவீன பாணியில்———-அத்யாயம்—10
——————
நளகூபரன், மணிக்ரீவன் சாப விமோசனம்,, ஸ்துதி
——————————————————————
பரீக்ஷித் , ஸ்ரீ சுக பிரம்மத்திடம், ” ஹே, ரிஷியே……நளகூபரன், , மணிக்ரீவன் செய்த
நிந்திக்க வேண்டிய கார்யம் மற்றும் தேவரிஷி நாரதர், ஏன் சாபம் கொடுத்தார் என்பதை
விவரமாகச் சொல்லுங்கள் என்று கேட்க, ஸ்ரீ சுகர் சொன்னார்.
இந்த இருவரும், ருத்ர பகவானுடைய தாஸ்யர்கள்; குபேரனின் புத்ரர்கள்;
தனத்தினால் கர்வம் அடைந்தவர்கள்; மிகப் பெரிய பதவியில் இருப்பதாக
செருக்கு உடையவர்கள்; ஒரு சமயம் மந்தாகினி நதி ஓடும் பிரதேசத்தில்,
“வாருணீ ” என்கிற கள்ளைக் குடித்து, புஷ்பங்கள் பூத்திருந்த காட்டுக்குள் நுழைந்து,
தேவ ஸ்திரீகளுடன் ஜலக்ரீடையில் இருந்தனர்.
அப்போது, தேவரிஷி நாரதர், யதேச்சையாக அந்த வழியாக வந்தார்.

அவரைக் கண்டதும், தேவ ஸ்திரீகள், வஸ்த்ரமில்லாமல் இருந்ததால்,
நாரதரின் சாபத்துக்குப் பயந்து, அவசரம் அவசரமாக வஸ்த்ரங்களை எடுத்து
அணிந்து கொண்டனர். ஆனால், குபேரனுடைய பிள்ளைகளான இந்த இரண்டு பேரும்,
கள்மயக்கத்தில், கர்வத்துடன் வெட்கமின்றி, நிர்வாணமாக இருந்தனர்.

நாரதர், அவர்களைத் திருத்த எண்ணம் கொண்டார். இவர்கள், தனச் செருக்கினாலும்,
குபேரனுடைய பிள்ளைகள் என்கிற கர்வத்தினாலும், தாங்கள் சாஸ்வதம் என்று
எண்ணுகிறார்கள்; தேவர்களாக இருந்தாலும், இறந்துவிட்டால் அந்தத் த்ரேகம்
எரிக்கப்பட்டோ , கிருமிகள், பக்ஷி, மிருகங்களால் சாப்பிடப்பட்டோ அழிகிறது;
ஒன்றுக்கும் உதவாத இந்தத் த்ரேகத்தை சாஸ்வதம் என்றும்
தங்களைக் கிழத்தனம் அண்டாது என்றும், எண்ணுகிறார்கள்;

த்ரேகம், அநித்தியம் என்று அறியாத அஸத்துக்கள்;
தனமில்லாத வறியவனுக்குக்கர்வமில்லை; அஹங்காரமில்லை;
அவன் பகவத் சிந்தனையுடன் வாழ்கிறான்; தாரித்யனுக்குப் பசி இருப்பதால்,
இளைத்துப் போய், இந்த்ரியங்கள் அவன் சொல்படி கேட்கின்றன;

இப்படியெல்லாம் நினைத்த நாரதர், இவர்களின் கர்வத்தைப் போக்க வேண்டும்
என்கிற எண்ணமுடை யவராய், இவர்களுக்குத் தண்டனையும்
கொடுத்து திருந்தவும் சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும் என்று யோசித்து,
இவர்கள், நூறு தேவ வர்ஷங்கள் பூமியில் மரமாகப் பிறந்து, வாழ்ந்து,
பகவானின் திவ்ய சரணார விந்தங்களில் பக்தி ஏற்பட்டு, அந்த பக்தியினால்,
சாப நிவ்ருத்தி ஆகி, மறுபடியும் தேவப் பிறப்பை அடையட்டும் என்று சாபமிட்டார்.

இப்படிச் சபித்தவர், தான் சாபமிட்டதற்குப் பரிகாரம் தேட,
நாராயண ஆஸ்ரமமாகிற பத்ரிகாஸ்ரமத்திற்குச் சென்றுவிட்டார்.
அந்த சாபப்படி, நளகூபரனும், மணிக்ரீவனும் வ்ரஜபூமியில்
( கோகுலத்தில் ) மரங்களாக முளைத்து , வளர்ந்து இருந்தனர்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணனாகிய நீ, இதை நினைத்துப் பார்த்து,
ரிஷியின் சாபம் சத்தியமாக இருக்கவேண்டுமென்று எண்ணி அந்த மரங்கள்
இருந்த இடத்துக்கு உடலுடன் கட்டியிருந்த உரலையும் உருட்டிக் கொண்டு,
அந்த இரண்டு மரங்களின் அடித் தண்டின் இடைவெளி நடுவே தவழ்ந்து சென்று ,
உரலை, உன் பலத்தால் இழுத்தாய்.
அந்த வேகம் தாங்காமல்,கப்பும் கிளையுமாக நன்கு கொழுத்து வளர்ந்து இருந்த
இரண்டு மரங்களும் பெரும்சப்தத்துடன் கீழே விழுந்தன.
உடனே , இரண்டு தேவ குமாரர்கள், ஜ்வலித்து, நான்கு திக்குகளிலும்
ப்ரகாசத்தை ஏற்படுத்திக்கொண்டு, கர்வம் நீங்கியவர்களாக,
கிருஷ்ணனாகிய உன்னிடம் பக்தி மேலோங்க , உன்னை நமஸ்காரம் செய்து,
உன் திருவடிகளில் சிரஸ்ஸை வைத்து, உன்னை ஸ்துதித்தார்கள்.

நளகூபர—–மணிக்ரீவ ஸ்துதி
——————————
(ஹே……கிருஷ்ணா…..அந்த இரண்டு தேவர்களும்—-குபேரனின் குமாரர்களும் ,
உன்னைத் துதித்ததை , இப்போது அடியேன் சொல்லி, உனக்கு நினைவுபடுத்துகிறேன்
இதுவும் ஒருவித படுத்தல்தான் )

ஹே,,,,கிருஷ்ண…..கிருஷ்ண ….மஹாயோகி….. நீர் பரம புருஷன்;
அவ்யக்தமான ப்ரக்ருதியிலிருந்து, சிருஷ்டித்து, வ்யக்தமாக (வெளிப்படையாக)
விஸ்வம் இதம், ஜகத் இதம் என்று ரூபம் கொண்டதாக,
நீர் பிரபஞ்சமாக இருக்கிறீர்.
நீர், பார்ப்பதற்கு, அத்வீதீய ஏகர் —சமமோ, மேல்பட்டவரோ, குணத்திலோ,
சேஷ்டிதங்களிலோ, ஐஸ்வர்ய விபவங்களிலோ—எவரும் இல்லாதவர் .

நீர்தான், எல்லாருக்கும், எல்லாவற்றுக்கும் மேலானவர்;
நீர், அனைவர்க்கும் அந்தர்யாமி; உமது விருப்பப்படி நியமிக்கிறீர்;
உடல், ஆத்மா இவைகளை செயல்படுத்தும் பகவான் நீரே ;
அந்த ஜீவாத்மாவின் , ஸ்வரூபஸ்திதி, ப்ரவ்ருத்தி, நிவ்ருத்தி —
எல்லாம் உமது அதீனம். சூக்ஷ்ம ஆத்மாவாக இருந்து,
ரஜஸ், தமோ, ஸத்வ பூதமாக இருக்கும் ப்ரக்ருதியை ,
நீர், சரீரமாகக் கொண்டுள்ளீர்.

நீரே, எல்லா ஜீவாத்மாக்களுக்கும் ஈஸ்வரன்;
பரமாத்மா; ஜீவன்களின் பாப, புண்யங்களுக்கு ஏற்ப, அவைகளுக்கு,
நாமம், ரூபம் இவைகளை உண்டாக்குபவர்; ஆனால், உம்மை,
இந்த மாம்ஸக்கண்களால் பார்க்க இயலாது;உமது மஹிமையை யாராலும்
முழுமையாக அறியமுடியாது; ஆகவே, உம்மைப் பக்தி செய்து நமஸ்கரிப்பதே சிறந்தது;

பகவதே…………வாஸுதேவாய……..நமஸ்காரங்கள் உமக்கே உரியது;
உமக்கு என்று ஒரு ரூபமில்லை; ஆனால், பலப் பல ரூபங்களில் ப்ரகாசிக்கிறீர்;
அவதாரம் ஏற்படும் போதெல்லாம், உமது ரூபம் வெளிப்படுகிறது;
நீர், சரீரங்கள் படைத்தவர்களில், அசரீரி; அவதார காலங்களில்,
அப்ராக்ருத சரீரம்; த்ரியக், ம்ருக, மனுஷ்ய அவதாரங்களில், அது அதற்குத் தக்கபடி
அதிசய வீர்யமுள்ள சரீரம்; அப்போதும், எவ்விதத் தோஷமும் உம்மிடம் இல்லை;
அப்பேர்ப்பட்ட, பற்பலப் பெருமைகளைப் பெற்ற நீர், எல்லா உலகங்களின்
க்ஷேமத்துக்காகவும், எங்களைப் போன்ற மந்த மதியர்களை உஜ்ஜீவிக்கவும்
உத்தேசித்து, அவதாரம் எடுக்கிறீர்; எங்களை ஆசீர்வதிக்க வேண்டுகிறோம்

நீர், பரம கல்யாண மூர்த்தி; உமக்குப் பல நமஸ்காரங்கள்;
நீர் வாஸூ தேவர் (வஸூ தேவரின் திருக்குமாரர் );
பரம ஸாந்தர்; யதுக்களுக்குப் பதி;உமக்கு எங்கள் நமஸ்காரங்கள்;
ரிஷியினுடைய பரம அனுக்ர ஹத்தாலே, உம்முடைய தர்ஸனம் கிடைத்தது;
எங்கள் மனஸ், உமது திருவடிகளில் , பற்றுடன் இருக்கட்டும்;
நாங்கள், சிவபிரானின் கிங்கரர்கள் ; நாங்கள் போக உத்தரவு கொடுங்கள்
என்று ஸ்தோத்ரம் செய்தார்கள்.
( ஹே, கிருஷ்ணா……அந்த தேவ குமாரர்களான நளகூபர,மணிக்ரீவர்களை
நமஸ்கரிக்கிறேன்; அவர்களால், அடியோங்களுக்கு, உன்னை ஸ்தோத்தரிக்கும்
இந்த ஸ்துதி கிடைத்தது.)

ஸ்ரீ சுகர், மேலும் சொல்கிறார். நீ, உரலில் கட்டப்பட்ட தாமோதரனாகவே
இருந்துகொண்டு, அந்தத் தேவகுமாரர்களைப் பார்த்துச் சொன்னது இதுதான்.

பரம கருணை உள்ள நாரதராலே, என்னுடைய அநுக்ரஹம் உங்களுக்குக் கிடைத்தது;
என்னிடம் திட நம்பிக்கை வைத்து, மனஸ்ஸை அர்ப்பித்து, என்னைத் தரிசித்த நீங்கள்,
திருந்திய புருஷர்களாக ஆகி, பந்தங்களில் இருந்து விடுபட்டீர்கள்;
என்னையே உபாயமாக(ஸாதனம் ) வைத்து என்னிடம் வைத்த பக்தி ,ப்ரேமையாகி,
உங்கள் அபீஷ்டங்களை அடைந்து, அனுபவித்து, மீண்டும் பிறவி இல்லாமல்,
என்னை வந்து அடைவீர்களாக !

ஹே,கிருஷ்ணா, இவ்விதம் ஆக்ஜை பெற்ற இருவரும், உன்னைப் ப்ரதக்ஷிணம் செய்து,
அடிக்கடி நமஸ்காரம் செய்து, வடதிசை நோக்கிப் புறப்பட்டு, குபேரபட்டணமாகிய
அளகாபுரிக்குப் போய்ச் சேர்ந்தனர் . இழந்த சம்பத்தை, பகவானை பஜித்து,
மீண்டும் அடைந்த அர்த்தார்த்தி களான இவர்களுக்கு அடியேனின் நமஸ்காரங்கள்

10 வது அத்யாயம் நிறைவடைந்தது. ஸுபம்

 

(அடியேன் மூன்றாவது பின்குறிப்பில் , வைகுண்டவாசி ஸ்ரீ ரங்கஸ்வாமி அய்யங்காரின்
“பாசுரப்படி பாகவதத்தில்” திருவாய்ப் பாடியைப் பற்றி ” உளம் குளிர அமுது செய்து,
விரலோடு வாய் தோய்ந்த வெண்ணெய் கண்டு , ஒளியா வெண்ணெய் உண்டான்
என்று உரலோடு , ஆய்ச்சி ஒண்கயிற்றால் , விளியா ஆர்க்க
ஆப்புண்டு, விம்மி அழுது, பொத்த உரலைக் கவிழ்ந்து, அதன்மேலேறி ….”
என்று தொகுத்துக் கொடுத்துஇருக்கிறார் என்று சொன்னேன்.
அதன் தொடர்ச்சியாக,

மருதமரம் பற்றிச் சொல்லும்போது , பாசுரப்படி பாகவதத்தில்
‘ மண மருவு தோள் ஆய்ச்சி ஆர்க்கப்போய் ,உரலோடும் ஒருங்கு ஒத்த இணைமருதம்
உன்னிய வந்தவரை,ஊரு கரத்தினோடும் உந்தி, எண்திசையோரும் வணங்க ,
இணை மருதூடு நடந்திட்டு…” என்று சொல்கிறார்.

ஸ்ரீமத் பாகவதம் சொல்வது என்னவென்றால், ஸ்ரீ கிருஷ்ணன் ,
உடலுடன் கட்டி இருந்த உரலையும் இழுத்துக் கொண்டு,
அந்த இரு மரங்களின் அடித்தண்டின் இடைவெளி
நடுவே பிரவேசித்து, உரலைத் தன் பலத்தால் இழுத்தார் .
இதன்படி, ஸ்ரீ கிருஷ்ணன் உரலையும் இழுத்துக் கொண்டு மரங்ககள் ஊடே தவழ்ந்து
சென்று தன் பலத்தால் இழுத்தார் என்று தெரிகிறது;
பாசுரப்படி பாகவதத்தில் “இணை மருதூடு நடந்திட்டு ” என்று உள்ளது.
இதற்குப் பொருள் என்ன? கேட்டால், மந்தபுத்திக்குத் தெரிந்தவரை சொல்கிறேன் )

அடுத்த அத்யாயம் தொடருகிறது

 

தசமஸ்கந்தம் நவீன பாணியில் அத்யாயம் – 11

பழக்கூடையில் ரத்னங்கள்—–கோகுலத்திலிருந்து, பிருந்தாவனம்—இங்கு வத்ஸாசுரன், பகாசுரன் வதம்

 

பெருத்த சப்தத்தைக் கேட்டு, நந்தகோபனும், மற்ற யாதவர்களும் ( கோபர்களும் ) ஓடி வந்தனர்.
பெரிய இரண்டு மரங்கள், கீழே விழுந்து கிடந்தன. எப்படி இவை இரண்டும் கீழே விழுந்தது என்று,
அவர்களுக்குத் தெரியவில்லை. அருகில் வந்து பார்த்தார்கள். உன்னைப் பார்த்தார்கள்.
கயிற்றால் கட்டப்பட்டு இருந்த உன்னை, கயிற்றை அவிழ்த்து, பயந்து கொண்டே ,
இது என்ன ஆச்சர்யம் என்று பேசினார்கள். அருகில் விளையாடிக்கொண்டிருந்த கோபர்கள்
ஆகிய கோபாலகர்கள், ( சிறுவர்கள் ) ” நாங்கள் பார்த்தோம்; இதற்குக் கிருஷ்ணன்தான் காரணம்;
இரண்டு மரங்களுக்கு நடுவே தவழ்ந்து சென்று, உரலை இழுத்தான்; மரங்கள் முறிந்து விழுந்தன;
இரண்டு புருஷர்கள் வெளியே வந்து, கிருஷ்ணனுடன் பேசினார்கள்;
நமஸ்காரம் செய்துவிட்டுச் சென்றுவிட்டார்கள் ” என்றார்கள்.
நந்தகோபர் உன் அருகே வந்து, உன்னை கயிற்றின் பிடியிலிருந்து வெளியே தூக்கினார்.

(கிருஷ்ணா….எல்லாரையும் சம்சாரக் கட்டிலிருந்து விடுவிக்கும் உன்னை,
நந்தகோபன் கயிற்றின் பிடியிலிருந்து விடுவித்தான் ….இது என்ன லீலை ! )

ஒரு சமயம், கோபிகைகள், உன்னைக் கொஞ்சி சீராட்டினார்கள்.
நீ, அவர்களுக்குக் ” குடக்கூத்து ” நடனம் ஆடிக் காண்பித்தாயாமே !
பாட்டுப் பாடினாயாமே !
அவர்கள், சந்தோஷப்பட்டு, மரப் பொம்மையுடன் விளையாடுவதைப் போல,
உன்னிடம் விளையாடினார்களாமே ! அவர்கள் இட்ட கட்டளையை
நிறைவேற்றி னாயாமே ?
அதாவது, முக்காலியைக்கொண்டுவந்து கொடுப்பது;
படியைக் கொண்டுவந்து கொடுப்பது என்று செய்தாயாமே ? இப்படிப் பல
சேஷ்டிதங்களால், கோபிகைகளுக்கு, ஆனந்தத்தை அளித்தாயாமே !
(அந்த பால சேஷ்டிதங்களுக்கு நமஸ்காரம் செய்கிறேன் )

ஒரு நாள் , நீ வாஸம் செய்யும் வீதியில், ஒரு கிழவி “பழம் வாங்கலையோ ….. பழம்….. ”
என்று கூவிக்கொண்டு வந்தபோது, நீ, அவளிடம் சென்று,
“எனக்குப் பழம் கொடு ” என்று, உன் சின்னஞ்சிறு கைகளை நீட்டி வேண்ட,
அதற்கு அந்தக் கிழவி, “அரிசியைக் கொடு ” என்று கேட்க,
நீ, வீட்டின் உள்ளே போய், இரண்டி உள்ளங்கைகளிலும் அரிசியை எடுத்துக் கொண்டு ,
அரிசி தரையில் சிந்தாமல் இருக்க, ஜாக்ரதையாக நடந்து வர ,
அப்படியும் பல அரிசிகள் கீழே சிந்த,
இது தெரியாதவனைப்போல நடித்த நீ,
கையில் உள்ள அரிசியைக் கிழவியிடம் கொடுக்க,
அந்தக் கிழவி உன்னைத் தடவிக்கொடுத்து,
உன் சின்னஞ்சிறு கைகள் நிறையப் பழங்களைக் கொடுக்க,
நீ, அவளை அனுக்ரஹித்த உடன் , பழக்கூடை முழுவதும் ரத்னங்களால் நிரம்ப,
அது கண்டு ஆச்சர்யப்பட்ட அந்தக் கிழவி,
கண்களில் நீர் வழிய, உன் திருக்கைகளைப் பிடித்து முத்தமிட்டாளாமே !

(ஹே…..கண்ணா… அந்தக் கிழவியைப்போல , உனக்கு சமர்ப்பிக்க, அடியேனிடம் ஏதுமில்லை
அடியேனுடைய அஞ்சலியை சமர்ப்பிக்கிறேன். ஸ்வாமி தேசிகன்
அருளியுள்ள அஞ்சலி வைபவத்தை , ஹ்ருதயத்தில் நிறுத்தி, உனக்கு அஞ்சலி செய்கிறேன் )

ஒருநாள், நீயும் பலராமனும் , தாய்மார்கள் பின்தொடர, யமுனா தீரத்துக்குச் சென்று,
கோபர்களுடன் விளையாடினீர்கள். நேரம் மிகவும் ஆகியது; ரோஹிணி
பலராமனை ” விளையாடியது போதும், வீட்டுக்குப் போகலாம் வா … ” என்று கூப்பிட்டாள்.
பலராமனும் வரவில்லை; நீயும் வரவில்லை. தொடர்ந்து விளையாடிக்கொன்டிருந்தீர்கள்.
யசோதை வந்து, உன்னைக் கூப்பிட்டாள். புத்திர வாத்சல்யத்துடன் கூப்பிட்டாள்.
“விடியற்காலம் சாப்பிட்டீர்கள்; வெகு நேரம் ஆகிவிட்டது; உங்களுக்குப் பசிக்கும்;
வ்ரஜபூமியின் அதிபரான நந்தகோபன், உங்களை எதிர் பார்த்துக் காத்திருப்பார்;
ஹே….கிருஷ்ணா… இன்று உன் பிறந்த நாள்; பிறந்த நக்ஷத்ரம் ரோஹிணீ ” என்று சொல்லி
உங்களைக் கூப்பிட்டாள். இருவரும் திரும்பி வர, உங்களை அழைத்துக் கொண்டு
வீட்டுக்கு வந்த யசோதை, உங்களை நன்கு ஸ்நானம் செய்துவைத்து,
புது வஸ்த்ரங்கள் அணிவித்து, நன்கு ஆகாரம் கொடுத்து, நீங்கள் க்ஷேமமாக இருக்க ,
மங்கள கார்யங்களைச் செய்தாள்.

ஒருசமயம், கோகுலத்தில் , உத்பாதங்கள் ஏற்பட்டன. விருத்தர்கள் மிகவும் பயந்து,
ஒன்று கூடி, என்ன செய்வது என்று ஆலோசித்தார்கள். அப்போது, மிகவும் வயதான
க்ஜான வ்ருத்தன் “உபநந்தன் ” பேசினான் .
” பெரிய உத்பாதங்கள் ஏற்படுகின்றன; குழந்தைகளுக்கு நாசம் ஏற்படும்படி நடக்கின்றன;
பூதனையிலி ருந்து விடுபட்டது, சகடாசுரன் அழிந்தது, தைத்யன் அழிந்தது,
மரங்கள் முறிந்து குழந்தையின் மேல் விழாமல் இருந்தது, என்று, இப்படிப்
பல கஷ்டங்கள் ஏற்பட்டு விட்டன; மேலும்,கஷ்டங்கள் ஏற்படுவதற்குள் ,
நாம் யாவரும் கோகுலத்தை விட்டு, பிருந்தாவனம் சென்று விடுவோம்;
அது, பசுமை நிறைந்த காடு; பசுக்களுக்கு நன்கு ஆகாரம் உள்ளது;
நாமும் அங்கே செல்லலாம் ; உங்களுக்குப் பிடித்திருந்தால் இதைச் செய்யுங்கள் ” என்றான்.

இதைக்கேட்ட கோபர்கள் யாவரும் , சரியான யோசனை என்று ஆமோதித்து,
கோக்களையும் கன்றுக் குட்டிகளையும் முன்பாகப் போக விட்டு, சாமான்கள்,
மூட்டை முடிச்சுகளை வண்டிகளில் ஏற்றி, வாத்தியங்களை வாசித்துக் கொண்டு
புரோஹிதர்கள் கூடவே வர, ப்ருந்தாவனம் புறப்பட்டனர்.
யசோதை, நீ, பலராமன், ரோஹிணி ஒரு வண்டியில் ஏறி அமர்ந்து, எல்லாருமாக
ப்ருந்தாவனம் வந்து சேர்ந்தீர்கள். இங்கு, வசிக்கும் இடங்களை
கோபர்கள் நன்கு ஏற்பாடு செய்தார்கள்.
அருகிலேயே யமுனை நதி; கோவர்த்தன கிரி ; பச்சைபசேல் என்று பூமி;
அடர்த்தியான காடு; உங்களுக்கு, சந்தோஷத்துக்குக் கேட்பானேன் !
இங்கு நீங்கள், மற்ற கோபர்களுடன் நன்கு வளர்ந்து, வனத்தில் பசு கன்றுகளுடன்
சுற்றித் திரிந்தீர்கள்; விளையாடினீர்கள். இந்த மாதிரியாக, நீங்கள் , யமுனா தீரத்தில்
கன்றுகளுடன் விளையாடும்போது, உங்களை அழிக்க, வத்ஸாசுரன் , கன்றுக்குட்டி
வேஷத்தில் வந்தான். அதை, பலராமன், உன்னிடம் கையைக் காட்டிச் சொல்ல,
நீ, அதன் பின்னாலே சப்தமில்லாமல் சென்று, பின்னங்கால்களைப் பிடித்து
மேலே தூக்கி சுழற்றி எறிய , அந்த அசுரன் எதிரே இருந்த விளாம்பழ மரத்தில் மோதி,
அழிந்தான். விளாம்பழங்கள் உதிர்ந்தன. அசுரனின் கோர ஸ்வரூப உடலும் கீழே விழுந்தது.
இதைப் பார்த்த கோபர்கள் ஆச்சர்யப்பட்டார்கள் .

( நீங்கள், கோக்களை ரக்ஷிக்கும் வத்ஸ பாலகர்கள்; கோபாலர்கள்; வத்ஸர்கள் )

சில காலம் கழிந்தது. ஒருநாள் நீர் நிரம்பிய தடாகத்தில், நீங்களும், கோபாலகர்களும்,
கோக்களும் தாகத்துக்கு நீர் அருந்தினீர்கள் . அச்சமயம், எதிரே ஒரு மலைச் சிகரத்தைக்
கோபாலகர்கள் கண்டனர். அந்தச் சிகரத்தில், கொக்கு உருவில் ஒரு அசுரன் , உன்னைக் கண்டான்.
உடனே, பறந்து வந்தான்; உன்னை வாயில் போட்டு விழுங்க முயற்சித்தான் ,
இதைப்பார்த்துக் கொண்டிருந்த பலராமனும் கோபாலகர்களும் என்ன செய்வது
என்று கலங்கினார்கள். அப்போது, அந்த கொக்கு வடிவில் வந்த அசுரன் உன்னை முழுங்க முடியாமல்,
அவஸ்தைப்பட்டான். நீ உலகத்துக்கு எல்லாம் காரணன்;
நீ, அவன் வாயிலிருந்து வெளியே வந்தாய்; ஆனால், அசுரன் உன்னை விடவில்லை;
உன்னைக் கொத்துவதற்காக உன்னை நெருங்கினான்;
நீ, அவன் இரண்டு அலகுகளையும் , வாயின் இரண்டு பக்கத்தையும்
இரண்டு கைகளால் பிடித்து, பிளந்து, அறுத்து எறிவதைப்போல த் தூர எறிந்தாய்.
கொக்கு உருவில் உன்னைக் கொல்ல வந்த அசுரனைக் கொன்றாய்.
இதைப் பார்த்த கோபர்கள், ஆச்சர்யமடைந்தனர்.
இப்படியாக, அந்த அசுரனை அழித்து, பலராமனும் கோபர்களும் இருந்த இடத்துக்குத்
திரும்பி வந்தாய் பிறகு, நீங்கள் எல்லாரும், கோக்களுடன் ப்ருந்தாவனம்
திரும்பினீர்கள். கோபர்களும், கோபியர்களும் இந்தச் செயல்களைக் கேட்டு,
அதிசயமும் ஆச்சரியமும் அடைந்தனர். கிருஷ்ணனுக்குப் பல எதிரிகள் இருக்கிறார்கள்;
அவர்கள், அவனைக் கொல்ல முயற்சிக்கிறார்கள்;ஆனால், அவர்களை, கிருஷ்ணன் அழிக்கிறான்;
கர்க்கர் மகரிஷி சொன்னது நடக்கிறதே என்று பரஸ்பரம் பேசிக் கொண்டார்கள்.
ஆனால், பலராமனுடன் சேர்ந்து நீ, பிருந்தாவனத்தில் திரிந்து, கோபர்களுடன் விளையாடி, எல்லாரையும் மகிழ்வித்தாய்.

(இப்படிப்பட்ட விளையாட்டுக்களை விளையாடிய, உனக்கும், பலராமனுக்கும் கோபாலகர்களுக்கும் அநேக நமஸ்காரங்கள் )

11 வது அத்யாயம் நிறைவடைந்தது

தசமஸ்கந்தம் —நவீன பாணியில்—–அத்யாயம் ——12
——————–
அகாசுரன் மோக்ஷம்
———

ஹே, கிருஷ்ணா….. இதற்குப்பின் நடந்ததை, ஸ்ரீ சுக ப்ரம்ம ரிஷி ,
பரீக்ஷித் ராஜனுக்குச் சொன்னதை , இப்போது உன்னிடம் சொல்கிறேன்.
பிறகு ஒரு நாள், நீ, மத்யான வேளையில் “வனபோஜனம் ” செய்யத் திட்டமிட்டாய்.
அதற்காகக் காலையிலேயே, கோபாலகர்கள், பசுக்கூட்டங்கள் இவற்றுடன்
யமுனா நதி தீரத்தில் உள்ள வனத்துக்குப் புறப்பட்டாய். கோபாலகர்கள்,
ஆயிரக்கணக்கான பசுக்கள், கன்றுகளுடன் , வாத்தியங்களை இசைத்துக் கொண்டு,
முன்னாலே சென்றார்கள். வனத்தை அடைந்து, உல்லாசமாக விளையாடினார்கள்.
அங்கு பூத்திருந்த புஷ்பங்களைப் பறித்து, தலையில் சூடிக் கொண்டார்கள்.
வனத்தின் வனப்பை ரசித்தபடி, கிருஷ்ணனாகிய உன்னை விட்டு,
வெகு தூரம் சென்று விட்டார்கள். அப்படிப் போகும்போது, விளையாடுதல்,
பந்து போன்ற பொருளைத் தூர எறிதல், வாத்தியங்களை முழக்குதல்,
நதியில் இறங்கி ஹம்சம் போல் நீந்துதல், தவளையைப்போலத் தத்தித்தத்தி ஓடுதல்,
குரங்குகளின் வாலைப் பிடித்து விளையாடுதல்,பட்சிகளைப் போலக் கூவுதல்,
இப்படிப் பலவிதமாக, விளைடிக் கொண்டே சென்றார்கள். முன் ஜென்மங்களின்
புண்ய பலத்தினாலே , இந்த ஜன்மத்திலே உன்னுடைய ஸ்நேஹம் —உன் அனுபவம் ,
அதன் சுகம்— இவைகள் ஏற்பட்டன. ஆனால், பார்ப்பதற்கு ,
நீ, மனுஷ்யக் குழந்தையைப் போல இருந்தாய். இந்த பாக்யம், –பெரும் பாக்யம் —
கோபாலகர்களுக்குக் கிடைத்தது.
இச்சமயத்தில், அங்கு, “அகன் ” என்கிற அசுரன் வந்தான்.
இவன் பகாசுரனின் ஒன்று விட்ட தம்பி. பூதனையின் சஹோதரன்.
இந்தக் கிருஷ்ணனை (உன்னை ) எப்படியும் கொல்ல வேண்டும் என்கிற
திட சித்தத்துடன் , தன்னுடைய உடம்பைப் பெரிதாக ஆக்கிக்கொண்டு,
மிகவும் நீளமான மலைப்பாம்பு உருவத்தை எடுத்துக்கொண்டு,
இந்தக் கோபாலகர்களும், நீயும் வரும் வழியில் , வாயை நன்கு பிளந்து கொண்டு,
மலையின் குகையைப் போலத் தோற்றம் அளிக்குமாறு செய்து ,
உங்கள் வருகையை எதிர்பார்த்து இருந்தான்.
கோபாலகர்கள் விளையாடிக்கொண்டே அங்கு வந்தனர்.
ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டே , அதைப் போலிப் பாம்பாக நினைத்து,
கிருஷ்ணனை ஹ்ருதயத்தில் நிறுத்தி, அந்த அசுரனின் வாய்க்குள் புகுந்தனர்.
பசுக்கள் கூட்டம், கன்றுகள் கூட்டம் யாவும் உள்ளே சென்றன. அந்த அசுரன்,
கிருஷ்ணனும் உள்ளே வரட்டும் என்று, உனக்காக, வாயைத் திறந்தே இருந்தான்.
நீ, அவர்களைத் தடுக்க முயற்சிப்பதற்குள் , அவர்கள் யாவரும் மலைப் பாம்பாக
உள்ள அசுரனின் வாய்க்குள் சென்று விட்டனர். நீ, அவர்கள்அனைவரையும்
காப்பாற்ற சங்கல்பித்தாய். நீயும் மலைப் பாம்பின் வாய்க்குள் நுழைந்து,
அதன் வயிற்றை அடைந்து, உன் திருமேனியைப் பெரியதாகச் செய்தாய்.
நீ, அந்தப் பாம்பின் வயிற்றுக்குள் , பெரிய ரூபமாக வளர, வளர அந்த அசுரனின்
வயிறு பிளந்தது. கண்களின் விழிகள் பிதுங்க; வாய் ரத்தத்தைக் கக்க,
எல்லா இந்த்ரியங்களும் நாசமடைய, , நீ , உன் ஸ்பர்சத்தாலும், த்ருஷ்டியாலும்
கோபர்களையும் கோக்களையும் கன்றுகளையும் காப்பாற்றி அவர்களுடன்
வெளியே வந்தாய். நீ வெளியே வந்ததும், ஒரு ஜோதி பத்து திக்குகளிலும்
பிரகாசித்துக் கொண்டு, இறந்த பாம்பின் உடலிலிருந்து வெளியே வந்து,
உன் திருமேனியில் சேர்ந்தது. பாபிக்கு மோக்ஷம்; தேவர்களுக்கு
இது அற்புதக் காக்ஷி; ப்ரஹ்மா , சத்ய லோகத்திலிருந்து வந்து இந்த அற்புதத்தைப்
பார்த்து, ஆச்சர்யமடைந்தார்.
ஹே, கிருஷ்ணா ……பரீக்ஷித்துக்கு, சுக ப்ரஹ்மம்
என்ன சொன்னார் தெரியுமா ?அந்தப் பாம்பின் தோலை உலர்த்தி,
அதை விளையாடுவதற்காக கோபர்கள் எடுத்துச் சென்றார்களாம்.
இது, உன்னுடைய ஐந்தாவது வயதில் நடந்த லீலை என்றும் சொன்னார்.
பரீக்ஷித் மகாராஜன், முநிபுங்கவரை நோக்கி, பகவான் ஹரியின்
லீலா வினோத சரிதங்களைக் கேட்கக் கேட்க, மெய்மறந்து போகிறது;
மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.மேலும் சொல்வீராக …. என்றான்

(ஹே கிருஷ்ணா…. பசுக்களும் , கன்றுகளும் செய்த பாக்யம்தான் என்னே ! )

12 வது அத்யாயம் நிறைவடைந்தது.

ஹே ….. கிருஷ்ணா……உன்னுடைய கதாம்ருதத்தைப் பருகப்பருக, ஆனந்தம் மேலிடுகிறது.
ஸ்ரீ சுகர் பரீக்ஷித்துக்குச் சொன்னதைப் போல, சாதுக்களுக்கு ,
பகவத் கதாம்ருதம் மிகவும் பிடிக்கும். முனிபுங்குவர், ராஜனுக்கு,
மிக ரஹஸ்யமான சரிதம் ஒன்றைச் சொன்னார்.
உன்னுடைய சரிதம்தான்; உன்னுடைய லீலைதான்;
அதை இப்போது உன்னிடமே சொல்கிறேன்.
நீ, கோபாலகர்களை நோக்கி, யமுனாதீர உபவனம், மிகவும் நேர்த்தியானதென்றும்,
மணற்பாங்கான திடல் உள்ளதென்றும், விளையாடுவதற்குத் தகுதியான இடம்
என்றும் சொல்லி , யமுனா தீரத்துக்கு அழைத்து வந்தாய். பசுக்களும், கன்றுகளும்
நீர் அருந்திவிட்டு, புற்களை மேயச் சென்றன. மத்யான வேளை.
கோபாலகர்கள் , தாங்கள் கொண்டுவந்த பிரசாதங்களை, முதலில் உனக்கு சமர்ப்பித்துவிட்டு ,
சாப்பிடத் தொடங்கினார்கள். சிலர், அங்குள்ள இலைகளைப் பறித்து,
அதில் சாதத்தை வைத்துச் சாப்பிட்டனர். சிலர், பழங்களைப் பறித்து,
உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டனர். ஒருவருக்கொருவர் சிரித்துக் கொண்டும்,
கேலி செய்துகொண்டும் , பகவானாகிய உன்னுடன் அமர்ந்து சாப்பிட்டனர்.

உன்னைப்பற்றிச் சொல்ல வேணும் ! நீ எப்படி சாப்பிட்டாய் தெரியுமா !
அதை சுகப் பிரம்மம் கூறுகிறார்.
புல்லாங்குழலை இடுப்பில் செருகிக் கொண்டு,
கொம்பு வாத்தியத்தைக் கக்கத்தில் இடுக்கிக் கொண்டு,
இடது திருக்கையில் ஒரு கவளம் சோற்றை வைத்து,
வலது கையில் உள்ள ஊறுகாயைக் கடித்து,
கேலிப் பேச்சு பேசிக்கொண்டே, சாப்பிட்டுக்கொண்டிருந்தாயாம்.
இந்த பரம சௌலப்யம், தேவலோகவாசிகளை ஆச்சர்யப்பட வைத்ததாம்.
இப்படி நீங்கள் எல்லோரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது,
பசுக்களும், கன்றுகளும் புற்களை மேய்ந்துகொண்டே , வெகு தூரம் சென்று விட்டன.
கோபாலகர்களுக்குக் கவலை, பசுக்களையும் கன்றுகளையும் தேடிக்கொண்டு
எங்கே போவது என்று ?
நீ, அவர்களைப் பார்த்து, “கவலை வேண்டாம்; நான் போய் பசுக்களையும் கன்றுகளையும்
திரும்பவும் விரட்டிக் கொண்டு வருகிறேன் ; இங்கேயே இருங்கள் ” என்று சொல்லி,
ஊறுகாயும், சோறுமாகக் கிளம்பினாய்.
ப்ருஹ்மாவுக்கு, உன்னுடைய லீலைகளைப் பார்க்க ஆவல். என்ன செய்தார் தெரியுமா ?
பசுக்களையும் கன்றுகளையும் ஓட்டிச் சென்று ஒரு குகையில்
ஒளித்து வைத்தார். உனக்கு, இவைகள் எங்கே போயின என்று தெரியாததால்,
அலைந்து , திரிந்து, மறுபடியும் கோபாலகர்களை விட்டுப் போன இடத்துக்கு வந்தாய்.
அதற்குள், ப்ருஹ்மா , அவர்களையும் மறைத்து வைத்து விட்டார். நீ, உடனே புரிந்து கொண்டாய்,
இது ப்ருஹ்மாவின் கார்யம் என்று. உடனே சங்கல்பித்தாய்.
அதேமாதிரி பசுக்கள், அதேமாதிரி கன்றுகள், அதேமாதிரி அச்சாக கோபாலகர்கள்,
என்று நீயே இப்படி மாறினாய். “ஸர்வம் விஷ்ணு மயம் ஜகத் ‘ என்று வேதம் சொல்கிறது.
வேதம் சொல்வது சத்ய வாக்கு அல்லவா ?

கோபாலகர்கள் அப்படி அப்படியே உருவம், உயரம், நடை உடை பாவனை , நிறம் ,
அதேமாதிரி பசுக்கள் அந்தந்த வர்ணங்கள், சுபாவங்கள் மிருதுவான கன்றுகள், , இப்படியே கோக்களாகவும் யும் கன்றுகளாகவும் கோபாலகர்களாகவும் மாறி, நீயும் அப்படியே இருக்க ,இவர்களுடன் எப்போதும் போல, விளையாடிக்கொண்டு,
பிருந்தாவனத்துக்கு வந்து, அவரவர் வீடுகளில் அவரவர்கள் ஸ்வபாவப்படி போக,
பசுக்கள், கன்றுகள் கொட்டில்களில் அடைய, நீயும் யசோதை மைந்தனாக விளங்கினாய்.
ஒவ்வொரு நாள் காலையிலும், கோபிகைகளுக்கு, தங்கள் புத்ரர்களை எழுப்பிப் பால் கொடுக்கும்போது,
அதீத வாத்ஸல்யம். பசுக்களும், கன்றுகளும் பரஸ்பரம் அதீத அன்பைச் செலுத்தின.
இப்படியே கிட்டத்தட்ட ஒரு வருஷம் ஆயிற்று. ஒரு சமயம், பலராமன்,
உன்னுடனும் கோபாலகர்களுடனும் வனத்துக்கு வந்தார்.
அப்போது, பசுக்கள் தனியாக மேய்ந்து கொண்டிருந்தன.

கோவர்த்தன மலையின் உச்சியில் உள்ள புற்களைப் பார்த்து, அங்கு போய்ச் சேர்ந்தன.
கன்றுகள், வேறு இடத்தில் தனியே மேய்ந்து கொண்டிருந்தன. மலையின் உச்சியில் இருந்த பசுக்கள்,
கன்றுகளைப் பார்த்தன. மடியில் பால் கனக்க, கோபாலகர்களின் கட்டுக் காவலையும் மீறி,
கன்றுகளை நோக்கி மலையடி வாரத்துக்குப் பாய்ந்து வந்து, அவைகளுக்குப் பால் கொடுத்தன.
இதைப் பார்த்த கோபர்கள், பசுக்களிடம் கோபப்படவில்லை. கண்களில் அன்பு கனிய இதைப் பார்த்தனர்.
இந்தக் காக்ஷிகளை, பலராமர் பார்த்தார். இந்த அற்புத, அபூர்வ பிரேமபாசம் அடிக்கடி ஏற்படுகிறதே ,
காரணம் என்ன என்று யோசித்தார். இது பகவானுடைய மாயை; இந்த மாயை,
என்னையும் மோஹித்து விடுகிறது என்று எண்ணி, எல்லாப் பசுக்களும், கன்றுகளும், கோபாலகர்களும்
சாக்ஷாத் விஷ்ணுவே என்கிற முடிவுக்கு வந்து, அருகில் இருந்த உன்னைப் பார்த்து,
” கிருஷ்ணா… நீயே இவர்கள் எல்லாருக்குள்ளும் புகுந்து எல்லாவற்றையும் செயற்படுத்துகிறாய்,
இது உன் விளையாட்டு ” என்று சந்தோஷப் பட்டார்.

ப்ருஹ்மாவுக்கு, ஒருநாள் கழிந்தது. பூலோகத்துக்கு வந்தார். தான் ஒளித்து வைத்திருந்த பசுக்கள்
கன்றுகள் கோபாலகர்கள், ஒளித்து வைத்த இடத்தில் அப்படியே இருக்க,
கிருஷ்ணன் , வழக்கம்போல இவர்களுடன் வனத்தில் விளையாடிக் கொண்டிருக்கிறானே ?
இது எப்படி சாத்யம் ? நான் ஒளித்து வைத்துள்ள பசுக்கள், கன்றுகள், கோபாலகர்கள் நிஜமா ?
அல்லது, இதோ இங்கு கிருஷ்ணனுடன் விளையாடிக்கொண்டிருக்கிறார்களே , இவர்கள் நிஜமா ?
என்று குழம்பினார்.

ஸத்யனான உன்னை ஏமாற்ற , தனது மாயையைப் பிரயோகம் செய்த ப்ருஹ்மா,
தனது மாயையில் தானே சிக்கிக் கொண்டு, தன்னையே ஏமாற்றிக் கொண்டு,
உன்னுடைய விஷ்ணு மாயையால் தாக்கப்பட்டு, ஒன்றும் புரியாமல் கவலையுடன் விழித்து,
சோகத்தின் வசப்பட்டார். தனது லோகமான ப்ரும்ம லோகத்துக்கு வந்தார்.
அங்கே, இன்னொரு ப்ருஹ்மா இருப்பதைப் பார்த்தார். தனக்கே, தான் யார் என்று தெரியாமல்,
மயங்கினார்.

மின்மினிப் பூச்சியின் பிரகாசம், சூர்ய ஒளியில் ஒன்றும் இல்லாது ஆவது போல,
உன்னுடைய விஷ்ணு மாயையில், அவரது மாயை ஒன்றும் இல்லாமல் ஆகிவிட்டது.
ப்ருஹ்மாவின் மாயா சக்தி அடங்கி ஒடுங்கியது. அதே க்ஷணத்தில், ப்ருஹ்மா கண்ட காக்ஷி
அவரைத் திகைக்க வைத்தது. எல்லா கோபாலகர்களும் அவருக்கு சாக்ஷாத் விஷ்ணுவாகவே
காக்ஷி அளித்தனர். ஒவ்வொருவரும் ச்யாமள நிறம்; அரையில் ( இடுப்பில் ) மஞ்சள் பட்டு பீதாம்பரம்;
சதுர்ப்புஜம்;
திருவாழி
திருச்சங்கு
கதை
திருக்கரத்தில் தாமரை;
சிரஸ்ஸில் ஜ்வலிக்கும் கிரீடம்;
மகர குண்டலங்கள்;
வனமாலை;
ஸ்ரீ வத்ஸ மறு;
திருக்கைகளில் தங்கக் காப்புகள்;
அங்குலீயம்( மோதிரம் )
இடுப்பில் கடிசூத்ரம்;
மார்பில் துளசி மாலை;
மிருதுவான அங்கங்கள்;
திருவடிகளில் நூபுரம்;
உதட்டில் மந்தஹாசம்; ……இப்படிப் ப்ருஹ்மாவுக்கு, ஒவ்வொரு கோபாலகர்களும் விஷ்ணுவாகவே
காக்ஷி கொடுத்தனர். குளிர்ச்சி பொருந்திய கடைக்கண் பார்வை;
எல்லா ஜகத் கார்யங்களும் அணிமா முதலிய சித்திகளும் பிரக்ருதியின் மஹத்
என்பன போன்ற 24 தத்வங்களும் அந்தந்த தேவதா ரூபம் எடுத்துக் கொண்டு,
கோபாலகர்களை , சேவிப்பதைப் பார்த்தார். சேதனாசேதன வர்க்கங்கள்,
காலத்தின் ஸ்வபாவமும் ( அபிமான தேவதை ) , காமங்கள், கர்மாக்கள், அதற்குள்ள முக்குணங்கள் ——
எல்லாம் உருவம் எடுத்து, உனக்கு ஸேவை செய்வதைப் போல,
கோபாலகர்களுக்கும் ஸேவை செய்தன. பேரானந்த மூர்த்தியான உன்னை,
கோபாலகர்கள் உருவில் உபாசிப்பதை, ப்ருஹ்மா பார்த்தார்.
இப்படிப்பட்ட அனுபவத்தை, தத்வ க்ஜாநியான ப்ருஹ்மாவுக்கு, நீ, அளித்தாய்.
அவரது, ஏகாதச இந்த்ரியங்கள் தடைப்பட்டு, கயிற்றினால் கட்டப்பட்ட பொம்மையைப்
போல உணர்ந்தார். உன்னை, உபநிஷத்துக்களின் க்ஜானத்தாலேதான், ஒருவாறு அறிய முடியும்.
ப்ருஹ்மா தன்னுடைய நிலைக்கு வரமுடியாமல் திணறினார். தடுமாறினார்.
அப்போது, நீ , அவரை மாயையிலிருந்து விடுவித்தாய்.

இப்போது, பிருந்தாவனம், கோபாலகர்கள், பசுக்கள், கன்றுகள் யாவும் சஹஜமாக
விளையாடிப் பேசுவதைக் கண்டார். ஒளித்து வைப்பதற்கு முன்பு , என்ன சேஷ்டைகள்
செய்து விளையாடினார்களோ, அப்படியே இருந்ததைக் கண்டார்.
உடனே, ப்ருஹ்மாவுக்கு, ஞானோதயம் ஏற்பட்டது.
கிருஷ்ணா ! உன்னை நமஸ்கரித்தார்;
தரையில் விழுந்து சேவித்தார். நான்கு கிரீடங்களும் உன் திருவடியில் படுமாறு சேவித்தார்.
மீண்டும் மீண்டும் சேவித்தார்.
கண்களிலிருந்து ஆனந்த பாஷ்பம் பொங்க,
தன் திருஷ்டியை உன் திருவடிகளில் வைத்து,
மறுபடியும் மறுபடியும் சேவித்தார்.
எழுந்து, தலை குனிந்து, கைகளைக் கூப்பிக்கொண்டு,
உன்னை, ஸ்தோத்ரம் செய்ய ஆரம்பித்தார்.

( ஹே ….. கிருஷ்ணா..உனது மட்டற்ற கருணையால், உனது ரூபத்தை ,
ப்ருஹ்மாவுக்குக் காட்டினாய். அந்தக் கருணைக்கு நமஸ்காரங்கள்; அந்த நான்முகனுக்கு
நமஸ்காரங்கள் )

13 வது அத்யாயம் நிறைவு பெற்றது .

சதுர் முக ப்ருஹ்மா , தலைகளைக் குனிந்து கொண்டு, கூப்பிய கைகளுடன், உன்னை ஸ்தோத்தரிக்கத் தொடங்கினார்.
( ஹே….கிருஷ்ணா……அந்த ஸ்துதியை அடியேன் இப்போது உனக்கு நினைவுபடுத்துகிறேன் . இதை அளித்த சுகப்ரம்மத்துக்கும், பரீக்ஷித் ராஜனுக்கும் நமஸ்காரங்கள் )

ஹே…. பிரபோ……உம்மைப் பல தடவைகள் துதிக்கிறேன். உமது திருமேனி, ஆகாயத்தைப்போல நீல நிறத்தோடும் மின்னும் மேகத்தைப் போலும் ஜ்வலிக்கிறது.
காதுகளில் காட்டுப் புஷ்பங்களை அணிந்துகொண்டு, மயில் இறகுகளைத் தலையில் அணிந்து, கைகளில் ஒரு கவளம் சோற்றையும், ஊறுகாயையும்
வைத்துக் கொண்டு, இடுப்பில் புல்லாங்குழலைச் செருகிக் கொண்டு, பசுக்களை மேய்க்க கம்பை வைத்துக் கொண்டு, பசுக்களை அழைக்கக் கொம்பு வாத்தியத்தையும்
வைத்துக் கொண்டு, ஒரு கோபாலகன் எந்த அடையாளத்துடன் இருப்பானோ, அப்படி உம்மைக் காண்கிறேன். உமது கோமளமான திருவடிகளைக் காண்கிறேன்.
உமது மகிமைகள் அநந்தம். இந்த, அப்ராக்ருதமான உம்முடைய சரீரம், உமது சங்கல்பத்தால், நீரே படைத்துக் கொண்டது. உமக்கு சமமானவர், மேலானவர் ஒருவருமில்லை. மனத்தால் உம்மைப் பார்ப்பதற்கு, உம்முடைய அநுக்ரஹம் இருந்தால்தான் முடியும். அதுவும், ஆத்ம சுகம் விரும்புகிறவர்கள் , யோக முறையால்தான் பார்க்க முடியும். உமது ஸ்வரூபத்தை ஹ்ருதயத்தில் தரித்து, உமது கதா விசேஷங்களைக் கேட்டு, திருநாமங்களைச் சொல்லி, அதையே
வாழ்க்கையாகக் கொண்ட மகான்கள், பாகவத ஸ்ரேஷ்டர்கள் உமக்காகவே வாழ்கிறார்கள். உமது ஆத்ம ஸ்வரூபத்தை, உமது திருவருளால்தான் அறிகிறார்கள்.
பக்தி மார்க்கத்தால் உம்மை அறிபவர்கள், க்ஜான மார்க்கத்தாலோ, நிஷ்டையாலோ எவ்வளவு ஸ்ரமப் பட்டாலும் அந்த பாக்யத்தை அடைவதில்லை. அவர்கள், உமியைக் குத்துபவர்கள்.
பல யோகிகள் , தங்கள் கர்மாவை, உமது பாத சரோஜங்களில் ஸமர்ப்பித்து, அதிலேயே பற்று வைத்து, ஸதா ஸர்வ காலமும் உமது புண்ய சரிதங்களையே கேட்டு,
உமது வாஸமான ஸ்ரீ வைகுண்டத்தை அடைகிறார்கள். உமது குணமஹிமையைச் சொல்லிச் சொல்லி, உமது திவ்ய ஸ்வரூபத்தைத் த்யானித்து, நீர் ,
பல அவதாரம் எடுத்ததை நினைத்து, வாழ்கிற பக்தர்கள், காலக்ரமத்தில் , உமது கிருபையால் உம்மை வந்து அடைகிறார்கள். உலகில் உள்ள தூசுகள் அநந்தம்;
உமது குண சேஷ்டிதங்களும், மகிமைகளும் அநந்தம். இருந்தும் கோபாலகர்கள் , உமது கிருபையால் உம்மை அடைந்துள்ளார்கள். அதைப்போல, அடியேனுக்கும் கருணை காட்ட வேண்டும். உமது க்ருபை இருந்தால், உமது திருவடிகளை அடைந்து விடலாம்.

ஹே….பிரபோ……..உமது மஹிமையை அறியாமல், முட்டாள் தனத்துடன், உம்மோடு போட்டிபோட்டு, என் மாயையைத் துஷ் பிரயோகம் செய்தேன். நீர், பரமாத்மா. உமது, மஹாமாயையின் முன்பு நான் எம்மாத்ரம் ? ஹே….அச்யுதா……என்னை ரக்ஷிக்க வேண்டும். உமது ரஜோ குணத்தால் உண்டான நான், உமது மகிமையைப்
புரியாது, நானே ஸ்வதந்திர னாக நினைத்துக் கொண்டு, மனம் கலங்கி, அக்ஜானத்தால் குருடாகி, மோஹத்துக்கு வசப்பட்டு, உம்மை சாதாரணக் குழந்தையைப் போல எண்ணி, சோதித்து விட்டேன். என்மீது, கருணை காட்டுவீராக.

என் சரீரம் எட்டு சாண்; இந்த உலகம் அண்ட வடிவம் ; நான் அண்டத்துக்கு அதிபதியாகி , உமது அனுக்ரஹத்தால், சமஷ்டி புருஷனாக இருக்கிறேன். மஹத், அஹங்காரம், புத்தி, மனஸ், ஐந்து பூதங்கள்—–ஐந்து தன் மாத்ரைகள் —ஐந்து க்ஜான, ஐந்து கர்மேந்த்ர்யங்கள் இவை சேர்ந்து, 24 வது தத்வமாகிய பிரக்ருதியின்
பரிணாமங்கள் ஆனாலும், நீர், ஒவ்வொரு தத்வத்திலும் அந்தர்யாமியாக இருந்து, எல்லாவற்றையும் செயற்படுத்தி, அந்த ப்ரக்ருதிக்கு மேலே ஜீவாத்மா, அங்கும் அந்தர்யாமியாக இருந்து, அதற்கு மேலே 26 வது தத்வமாக, பரமாத்மாவாக விளங்குகிறீர். இந்த ப்ரும்மாண்டத்தைப் போலப் பல ப்ரும்மாண்டங்கள் உள்ளன.
அவைகளில் நானும் ஒருவன். ஒவ்வொரு பிரும்மாண்டமும் காரண ஜலத்தில் மிதந்து கொண்டு, ——அணு அளவாக இருப்பதால், —-உம்முடைய நிஜ ஸ்வரூபத்தை
அற்ப சக்தியுள்ள அடியேனால் அறிய இயலாது. என்னை மன்னியும். வயிற்றில் கர்ப்ப வாஸம் செய்யும் குழந்தை கால்களால், உதைத்தால், தாயார் கோபிப்பதில்லை.;
வருத்தமடைவதில்லை. அதைப் போல என் குற்றத்தையும் பொறுத்தருள்க

உமது வயிற்றிலே நாங்கள் , பிரளய காலத்தில் காப்பற்றப்பட்டு, ஸ்ருஷ்டி காலத்திலும் கருணையால் படைக்கப்பட்டு, லய காலத்திலே உம்மை வந்து அடைவதால்,
உமது வயிற்றைத் தவிர எங்களுக்கு வேறு வாசஸ்தானம் இல்லை. உலகங்கள் யாவும், பிரளய காலத்தில் உமது வயிற்றில் ஒடுங்குகிறது. ஸ்ருஷ்டி காலத்தில்,
நான், உமது நாபீ கமலத்திலிருந்து படைக்கப்பட்டேன். நான் தான் , உமது முதல் ஸ்ருஷ்டி. நீர் எனக்கு ஈஸ்வரன். ஆதியில் நான், உம்மைக் காணவில்லை.
எவ்வளவு காலம் நான் எங்கு இருந்தேன்; எங்கிருந்து வந்தேன் என்று அறியாமல் விழித்தேன். தாமரைத் தண்டின் வழியே உள் நுழைந்து, உம்மைக் காணமுடியாமல்
தவித்தேன்.பிற்பாடு , நீரே , என் ஹ்ருதயத்தில் தோன்றினீர். அது , ஏன் இப்போது தோன்றவில்லை ? உமது சங்கல்பத்தால்தான் உம்மை அறியமுடியும் என்பதைத்
தெரிந்துகொண்டேன். இந்த கிருஷ்ணாவதாரத்தில் , பிரபஞ்சம் அனைத்தும் உமது திருவயிற்றில் இருக்கிறது என்பதை, உமது வாயைத் திறந்து , நீரே
உமது தாயாரான யசோதைக்குக் காட்டினீர். கன்றுகள், பசுக்கள், கோபாலகர்கள், நீர், …………மற்றும் நீர் அவர்களுடன் பேசிக்கொண்டு விளையாடுவது எல்லாம்,
உமது லீலை. விஷ்ணு மாயை. கோபாலகர்கள், பசுக்கள் யாவும், விஷ்ணு ரூபமாகக் காக்ஷி அளித்தது, அபிமான தேவதைகள் ,உம்மையும் அவர்களையும் துதித்ததும்,
எனக்குப் புத்தி ஏற்படும்படி …..இரண்டு ப்ருஹ்மாக்கள் தோன்றியதும் உமது விளையாட்டாகும், லீலையாகும்.

உமது ஸ்வரூபத்தை அறியாதவர்கள், தேஹத்தையே ஆத்மாவாக நினைத்துத் தாங்கள் பிரகாசிப்ப தாகச் சொல்கிறார்கள். அதாவது, உமது உதவியின்றி, பிரகாசிப்ப தாகச் சொல்கிறார்கள். ஆனால் நீரே படைத்து, காப்பாற்றுவதில் விஷ்ணுவாகவும், அழியும் நேரத்தில் த்ரிநேத்ரனாகவும் இருக்கிறீர். ஒவ்வொருவருக்கும் நீர் அந்தர்யாமி. சாதுக்களை ரக்ஷிக்கவும், துஷ்டர்களை அழிக்கவும் அவதாரம் எடுக்கிறீர். ஹே….பரமாத்மன்……இது உம்முடைய மாயையின் விளையாட்டு. எப்போது அவதரிக்கிறீர் ? எப்போது மறைகிறீர் / யாருக்குத் தெரியும் ? ஆயினும் நீர் சத்யம். உமக்கு மேலானவர் யாருமில்லை. எல்லாப் பொருள்களுக்கும் நீரே ஆத்மா. அஹங்கார புத்தியை உண்டாக்கி, மாயையினால் மயங்கச் செய்கிறீர். குருவின் உபதேசத்தாலே ஒளியான க்ஜானத்தை அடைந்தவர்கள் , அந்த க்ஜானக் கண்ணாலே மாயையைத் தாண்டி , “ஸர்ப்ப க்ஜானம் ” ஏற்பட்டு, அதாவது இது பாம்பு இல்லை; கயிறுதான் என்று தெளிந்து, உமது ஸ்வரூபத்தையும், தாங்கள், உமக்கு
சேஷபூதர்கள் என்கிற சேஷத்வ க்ஜானத்தைப் பெற்று, ஸம்சாரத்தை ஜெயித்து உம்மையே வழிபடுகிறார்கள். அக்ஜானத்தால் பவபந்தமும், க்ஜானத்தால் பவமோக்ஷமும் ஏற்படுகிறது. நான், அக்ஜானத்தால், உமது ஸ்வரூபத்தை அறியாமல், இதைச் செய்துவிட்டேன்.ஸத்யம் எது என்று தெரியாத படியாலே ஏற்பட்டது.
உம்மை விட்டுத் தனியாக பந்தமோ, மோக்ஷமோ இருக்காது. எல்லாம் உம்மால்தான் இயங்குகிறது. மனிதர்கள், தேகாத்ம அபிமானத்தால் ஸ்வதந்திர ஆத்ம ப்ரமம்
கொள்கிறார்கள். தங்கள் ஆத்மாவை வெளியே தேடுகிறார்கள். உம்மைப் பரமாத்மா என்று கருதாமல், தங்களையே பெரிதாக எண்ணி ஏமாந்து போகிறார்கள்.
சாதுக்கள், உம்மையே பஜித்து உம்மையே வந்து அடைகிறார்கள்.

ஹே….பிரபோ…..உமது “பாதாம் புஜ த்வய ” ஸேவை எவனுக்கு, லவலேசமானும் கிடைக்கிறதோ , அவன் மஹா பாக்யவான். அதனால், அவர்கள் பலகாலம் உம்மையே த்யானிக்கிறார்கள். எனக்கு அந்த பாக்யம் கிடைக்கட்டும். உமது பக்தனாக, இப்போதே, இங்கேயே, ஆவேன். இந்த பிருந்தாவன வாசிகள் ரொம்ப பாக்யம் செய்தவர்கள். பசுக்களும் கன்றுகளும் பாக்யம் செய்தவை. அந்த பசுக்களின் பால், உமது அன்பின் ப்ரஸாதம். இந்த ப்ரசாதத்துக்குச் சமமாக, யாக, யக்ஜ பலன் கூட இருக்காது. நந்தகோபன், கோபாலகர்கள் அடையும் ஆனந்தத்துக்கு இணை இல்லை. நீரே அவர்களுக்கு ஆனந்தம்.

ஹே….அச்யுதா……இந்தக் கோபாலகர்களின் பதினோரு இந்த்ரியங்களும் , அவற்றின் அபிமான தேவதைகளும் பாக்யம் படைத்தவை. நாங்கள், அபிமான தேவதைகளாக இருந்தாலும், அந்தந்த அபிமான தேவதை மூலம் அடையப்படுவதால்—-பரிமிதம்—-அளவுக்கு உட்பட்டது. ஆனால், இந்தக் கோபாலகர்களே எல்லா இந்த்ரியங்களின் ஆனந்தத்தை , உன்னைப் பார்த்துக் கொண்டும் உன்னுடன் பேசிக்கொண்டும், உன்னோடு விளையாடிக் கொண்டும், எங்களை விட மிக அதிகமாக பேரானந் தத்தை அடைகிறார்கள். அதனால், பாக்யமற்ற எங்களுக்கு, ஒரே வழி, இந்த பிருந்தாவனக் காட்டில் ஏதாவது ஒரு ஜன்மம் எடுப்பதுதான். எந்தப் பிறவியானாலும் பரவாயில்லை. புல்லானாலும், மரம், கல், புழுவானாலும் பக்ஷியானாலும் , எதுவானாலும் பரவாயில்லை . உம்முடைய பாத ரஜஸ் ஸின் ஸ்பர்சம் கிடைத்தால் போதும். நீர் ச்யாமசுந்தரன்; பிருந்தாவனக் காட்டில், கரிய திருமேனி வாட, சஞ்சாரம் செய்ததாலே, உம்முடைய திருவடி ஸ்பர்சம் பட்ட புல் பூண்டு எல்லாமே பாக்யம் அடைந்தது. எந்த திவ்ய பாத ரஜஸ் களை . ஸ்ருதிகளோ, ரிஷிகளோ, மிகவும் முயற்சி செய்து , த்யானம் செய்து, அடைவார்களோ , அந்தப் பாத தூளியை இந்த வ்ரஜபூமியில் வசிப்பவர்கள் அடைந்து, ஸகல புருஷார்த்த சாரமாகிய உம்மையே அடைந்து, பெரும் பாக்யம் செய்திருக்கிறார்கள். பூதனை போன்ற ராக்ஷஸிகள்,கபட வேஷம் தரித்த தன் இனத்தாருடன், , உன்னால் அழிக்கப்பட்டு, எந்த வைகுண்ட பதத்தை அடைந்தார்களோ, அதற்கு மாறாக, வ்ரஜபூமி வாசிகளான இவர்கள், உமக்குப் பிடித்தமான சுஹ்ருத்துகள்—-ப்ராண சஹாக்கள் —-அவர்களுக்கு எதுதான் கிடைக்காது ! விரோதி களுக்கே, உன் பாத ஸ்பர்சம் பட்டு வைகுண்ட வாஸம் கிடைக்கும்போது, இந்த சுஹ்ருத்துக்களுக்கு இகசுகம், வைகுண்ட வாஸம் இவைகளெல்லாம் கிடைப்பதற்குக் கேட்பானேன் ! உம்மையே சரணமடைந்து வாழும் ,இந்த சாது ஜனங்களின் ஆனந்தத்தை நீர் வ்ருத்தி செய்கிறீர்.

அதிகமாகப் பேசுவதால் என்ன லாபம் ?ஹே….பிரபோ…..உனது பெருமைகள் மனசுக்கும், வாக்குக்கும், தேகத்தின் அவயவங்களுக்கும் அதீதம்.—-அவை அகோசரமானவை நீர் எல்லாவற்றையும் நன்கு அறிவீர். நீரே எல்லா ஜகத்துக்கும் நாதர். எனக்கும் நாதர்.

ஹே…க்ருஷ்ணகுல புஷ்கர ஜோஷதாயிந் ——–வ்ருஷ்ணீ குல தீபமே……உம்முடையப் பெருமைகள் அதீதப் பிரகாசம் உள்ளவை. அப்படிப்பட்ட உம்மை, ப்ரும்ம தேவனாகிய நான், கல்பம் முடியும் காலம் வரை நமஸ்கரித்துக் கொண்டிருக்கிறேன். —–ஸதா ப்ரணாமம் செய்கிறேன்.
( ஹே….கிருஷ்ணா…. ப்ருஹ்மா உன்னை ஸ்தோத்ரம் செய்ததை திரும்பச் திரும்பச் சொல்லி உன்னை நமஸ்கரிக்கிறேன்.பிருந்தாவனக் காட்டில், ஒரு புல்லாகவாவது, ஒரு புழுவாகவாவது,பிறந்து, உன் திருவடித்தூள் அடியேன் மேலே பட பாக்யம் செய்தேனா என்பது தெரியாது. . ஆனால், இந்த ஸ்தோத்ரத்தைத் திரும்பத் திரும்பச் சொல்லும் பாக்யம் கிடைத்ததற்காக , உன்னைப் பல்லாயிரம் தடவை நமஸ்கரிக்கிறேன் )

ஹே, கிருஷ்ணா, சுகப்ப்ரம்மம், பரீக்ஷித்துக்கு, மேலும் சொன்னார். ப்ருஹ்மா உன்னை மூன்று தரம் ப்ரதக்ஷிணம் வந்து, உன் திருவடியில் பணிந்து , நமஸ்கரித்து,
தன்னுடைய இருப்பிடத்துக்குப் போய்ச் சேர்ந்தார். ப்ருஹ்மாவை அனுப்பிய பிறகு, நீ, பசுக்களையும் கன்றுகளையும் மீட்டுக் கொண்டு, கோபாலகர்கள் முன்னே இருந்த இடத்துக்கு வந்தாய். கோபாலகர்கள், தங்களுடைய பிராணனும், அந்தராத்மாவுமான உன்னை, ஒரு வருஷ காலத்துக்கு மேலாகப் பிரிந்து இருந்தாலும்,
உன் மாயையால், அது, ஒரு க்ஷண கால நேரமாக அவர்களுக்குத் தெரிந்ததாம். அவர்கள், உன்னை ” இங்கே வா…..இந்தக் கவளச் சோற்றை சாப்பிடு…..நீ வரும்வரை நாங்கள் உன் நினைவாகவே ஒன்றும் சாப்பிடாமல் காத்துக் கிடக்கிறோம் ….” என்று சொல்லி அழைத்தார்களாம். சிரித்துக் கொண்டே, நீ, அவர்களுடன் சேர்ந்து சாப்பிட்டு, வனத்தைவிட்டுப் புறப்பட்டு, ஊருக்கு வந்தாயாம். எப்படி வந்தாய் தெரியுமா ?
உடலில் புஷ்பங்களைத் தரித்துக் கொண்டு, தலையின் உச்சியில் மயில் இறகுகளால் அலங்கரித்துக் கொண்டு, புல்லாங்குழலை வாசித்துக் கொண்டு, கன்றுகளை அன்புடன் தடவி விரட்டிக் கொண்டு, வந்து சேர்ந்தாயாம்.

பரீக்ஷித் , மெய்மறந்து , சரிதத்தைக் கேட்டான். அவனுக்கு ஒரு சந்தேகம் வந்தது. முனிவரைக்கேட்டான். கிருஷ்ணனுடைய பெற்றோர் வசுதேவர், தேவகி ,
அப்படியிருக்க, நந்தகோபன், யசோதையிடம் இவ்வளவு பிரேமை ஏன் ஏற்பட்டது? அதைப்போல, கோபாலகர்களின் பெற்றோர்களுக்கு, தங்கள் குழந்தைகளிடம்
ஏன் ப்ரேமம் ஏற்பட்டது ? அதைவிட, கிருஷ்ணனிடம் அதீத ப்ரேமம் ஏற்பட்டது எதனால் ? என்று கேட்டான்.
ஸ்ரீ சுகர் பதில் சொன்னார். ஹே….ராஜன்…..ஒவ்வொருவருக்கும் ஆத்மா பிரியமானது குழந்தைகளும் ப்ரியமானவையே. அதைப்போல, செல்வம், வீடு இவைகளும்
மனத்துக்குப் பிடித்தமாக ஆகிறது. ஆனாலும், ஆத்மாவைப் போலப் ப்ரியமாவதில்லை. இந்தப் ப்ரியம் , தேகத்தையே ஆத்மாவாக எண்ணுபவர் களிடமும் காணப்படும்.
ஆனால், ஸ்ரீ கிருஷ்ணன் விஷயத்தில், அவனே அகில உலகங்களுக்கும் ஆத்மா——-அந்தராத்மா. மாயையினால், அதை மறைத்துக் கொண்டு, மனுஷ்யனைப் போல , இவர்களுடன் விளையாடுகிறான். அதனால், பிரேமை மிக அதிகமாகிறது. ஆனால், எவர்களுக்கு, ஸ்ரீ கிருஷ்ணனே ஜகத் காரணன், அண்டசராசரங்களுக்கும்
அவனே அந்தராத்மா என்கிற உறுதி இருக்கிறதோ, அவர்களுக்கு, எல்லாமே ஸ்ரீ கிருஷ்ணன்தான். அதனாலே, அவனை ஆச்ரயித்து, அவன் பாத பல்லவங்களைத்
தெப்பமாக வைத்து, வைகுண்ட பதத்தை அடைகிறார்கள். அவன் திருவடிகளை நம்பியவர்களுக்கு, இந்தஸம்சாரமாகிய ஸமுத்ரம், “வத்ஸ பதம் ” (மாட்டின் குளம்படியில் உள்ள தேங்கிய நீரைப் போல ). அதனால், இந்த சமுத்ரத்தை, சுலபமாகத் தாண்டி, வைகுண்டத்தை அடைகிறார்கள். ஹே….ராஜன்…….பகவான், தன்னுடைய பால்யத்தில், இளம் சகாக்களுடன் அத்புத விளையாட்டுகளைச் செய்தார். இவற்றை எவர்கள் கேட்கிறார்களோ, எவர்கள் படிக்கிறார்களோ, அவர்கள், எல்லா அபீஷ்டங்களும் நிறைவேறப் பெறுவார்கள். ப்ருஹ்மாவின் ஸ்துதியைக் கேட்பதாலும், படிப்பதாலும் , எல்லாப் பாபங்களும் விலகி, எல்லா அபீஷ்டங்களும் கைகூடும் என்று சொன்னார்.
( ஹே …..கிருஷ்ணா…..அடியேனை ஒரு கருவியாக வைத்து, .இந்த உன்னுடைய பால்ய லீலைகளைக் கேட்டும் , படித்தும், சொல்லியும், எழுதியும், அடியேனை ஆட்படுத்திய , அடியேனின் ஜென்மத்தை சாபல்யமாக்கிய, கோபாலகர்களுக்கும், பசுக்கள் கன்றுகளுக்கும், ப்ருஹ்மாவுக்கும், பலராமனுக்கும், முக்யமாக
உனக்கும் அனந்தகோடி நமஸ்காரங்கள் )

 

தேனுகாசுரன் வதம்
————
ஸ்ரீ சுகர், பரீக்ஷித் ராஜனுக்கு மேலும் விவரித்ததை, உனக்குச் சொல்கிறேன்.
உனக்கும், பலராமனுக்கும் குழந்தைப் பருவம் என்பது போய், இப்போது, பையன்களாக, யுவாவாகக் காக்ஷியளித்தீர்கள். அதாவது, பால பருவம் —–குமார தசை.நீங்களே , பசுக்களை மேய்க்கத் தொடங்கினீர்கள்.
பிருந்தாவனம் முழுவதும் உங்கள் திருவடிகளால் பாவனமாகியது. கோபர்கள் சூழ, நீ, புல்லாங்குழலை ஊதிக்கொண்டு, பசுக்களை மேய்ப்பதற்காக
ஓட்டிச் சென்றாய். அப்போது, பலராமனைப் பார்த்து, இந்தப் பழங்களால் குலுங்கும் மரங்கள்,
உன்னை வணங்குகின்றன; குயில்கள் கூவுகின்றன; புல், பூண்டுகள்உன்னுடைய பாத ஸ்பர்சத்தால் பாவனமாகியது; மரங்களும், கொடிகளும்,
நீ மரத்தில் ஏறிப் பழங்களைப் பறிக்கும்போது, உன் பாத ஸ்பர்சம் பட்டு பாபம் போய் , புனிதமாக ஆகிவிட்டன.
இப்படியெல்லாம், நீ, பலராமனிடம் பேசிக்கொண்டே பிருந்தாவனத்தில் நதி தீரத்திலும், உத்யான வனத்திலும் விளையாடினாய்.
நீ, சில சமயம் ,ஹம்ஸத்தைப் போலக் கத்துவாய்;
மேகத் த்வனியாக கர்ஜிப்பாய்;
சகோர பக்ஷியைப் போலவும்,
கிரௌஞ்ச பக்ஷியைப் போலவும்,
சக்ரவாகப் பக்ஷியைப் போலவும்
பாரத்வாஜ பக்ஷிகளைப் போலவும் கத்துவாய்;
சில சமயம் பலராமனை, ஒரு கோபன் மடியில் படுக்க வைத்து, பலராமனின் காலை வருடி விடுவாய்;
நீ, சில சமயம், கோபன் மடியில் தலையை வைத்து உறங்குவாய்;கோபச் சிறுவர்கள், ஒரு மஹாராஜாவைச் சேவகர்கள் சூழ்வதைப் போல,ஸ்நேஹத்துடன் உன்னைச் சூழ்ந்து, சைத்ய உபசாரங்களை உனக்குச் செய்வார்கள்.

இப்படி, நீயும் பலராமனும், பிருந்தாவனக் காட்டில், பசுக்களை மேய்த்து விளையாடி வரும்போது, ஒரு சமயம், ஸ்ரீ தாமன் என்கிற கோபச் சிறுவனும் ,
இன்னும் சில சிறுவர்களும் உன்னிடம் வந்து, அருகே ஒரு பெரிய காடு இருப்பதாகவும், அதில் பனைமரங்கள் நிறையப் பழுத்து, பழங்கள் கீழே விழுந்து கிடப்பதாகவும்,
ஆனால், அங்குள்ள தேனுகன் என்கிற அசுரன் கழுதை ரூபத்துடன் ,பந்துக்கள் நண்பர்கள் யாவரையும் அருகே அண்ட விடுவதில்லை என்றும் , அவனுக்குப் பயந்து, ஒருவரும் அங்கு போவதில்லை என்றும்,
பழுத்த பழங்களின் வாஸனை, வெகு தூரத்தில் தங்களுக்கு,பழங்களைச் சாப்பிடும் ஆசையை வளர்த்து உள்ளதாகவும், தங்களைஅந்த இடத்துக்கு அழைத்துச் செல்லுமாறும் கோரினார்கள்.

நீ, அவர்களின் வேண்டுகோளை ஏற்று, பலரானும், நீயும் , கோபர்களுமாகஅங்கு சென்றீர்கள்.
( ஹே, கிருஷ்ணா, இப்போது இந்த இடம், “தர்பாரே—-தால்கி ” என்று அழைக்கப்படுகிறது.)
பலராமன் முதலில் சென்று, ஒரு பெரிய மரத்தை ஆட்டி, பழங்களைக் கீழே விழச் செய்தார்
. பழங்கள் விழும் சப்தத்தைக் கேட்டு, தேனுகன் என்கிற அசுரன் கழுதை ரூபத்தில் ஓடிவந்தான்.
பலராமனை, முழுவேகத்துடன் தாக்கினான். பூமி அதிர்ந்தது. தன் கால்களால், பலராமனின் மார்பில் உதைத்தான். அங்குமிங்கும் ஓடினான்.
மறுபடியும் வந்து பின்னங்கால்களால் தாக்க,
பலராமன் கோபத்துடன் அவன் முன்னங்கால்களைப் பிடித்து, முழு வேகத்தில் சுழற்றி, பனைமரத்தின் மீது ஓங்கி அடித்தான். புல், பூண்டு அழிவதைப் போல,
பனைமரத்தின் வேர்பாகத்தில் தாக்கப்பட்டு , தேனுகன் மடிந்தான்.
பனை மரத்தின் அடிப்பாகம் பழங்களை உதிர்த்துக் கொண்டே, பக்கத்துப் பனைமரத்தின் மீது சாய, இப்படி நான்கு பனை மரங்கள் ஒன்றன் பின் ஒன்றாக
வேரோடு சாய்ந்தன. பெரிய சுழற்காற்று வீசினால், மரங்கள் எப்படி சாய்ந்து விழுமோ ,அப்படி விழுந்தன. இது, பலராமனுக்கு லீலையாக இருந்தது.
தேனுகாசுரனின் பந்துக்கள் வந்து தாக்க, அவர்களையும் நீங்கள் அழித்தீர்கள்.இந்த அதிசயத்தைப் பார்த்த , வானில் இருந்த வித்யாதரர்கள், உங்கள்மீது,
புஷ்பமாரி பொழிந்தார்கள். தேனுகாசுரன் அழிந்ததும், அந்த வனத்தில் ஜனங்கள் பயமின்றி நடமாடினார்கள். பசுக்களும் பயமின்றி சஞ்சரித்தன.
கோபர்கள் சந்தோஷத்துடன் உங்களைத் துதித்தனர்.

இப்படியாக, தேனுகாசுரனை வதம் செய்து , வீடுகளுக்குத் திரும்பும் உங்களை,
கோபிகைகள் ஆசை ததும்பப் பார்த்தனர். இதோ….கிருஷ்ணனைப்பார்…. கிருஷ்ணனைப்பார்…
. என்று ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டனர்.
ஹா…. எப்படிப்பட்ட ரூபம்……புல்லாங்குழலைத் தரித்திருக்கிறார்;
தலையில் மயில் இறகு; காட்டுப் புஷ்பங்கள்;
கேசத்தில் பல வர்ண மணிகளின் முடிச்சுகள்;
அரவிந்த வதனம்;
புன்சிரிப்பு;
உன் முகம் கோதூளியால் சிவந்து இருக்க,
உன்னுடைய அந்த அரவிந்த முக சாரத்தைப் பருக
க்ஷண காலம் கூடப் பிரிவதால் ஏற்படும் விரக தாபத்தை விரட்ட,எவருடைய அபாங்க ( கடைக்கண் ) வீக்ஷண்யத்தாலே ,மோக்ஷம் கிடைக்கிறதோ அந்த முகுந்த முக சேவைக்காக, வ்ரஜசுந்தரிகளான இடைச்சிகளான வனிதைகள், இளம் கோபிகைகள், —-ஓடி வந்தார்கள்
. இது, ஒவ்வொரு நாள் காலையிலும் மாலையிலும் தொடர்ந்தது. நீயும் பலராமனும் பசுக்களை ஓட்டிக்கொண்டு, மேய்ச்சலுக்காகவனத்துக்குப் போகும்போதும் , சாயந்திரம் திரும்பி வரும் போதும்,
இது, தொடர்ந்தது.
யசோதையும் ரோஹிணியும் இந்த முக தர்ஸனம் செய்வதில் முக்யமானவர்கள்.
புத்திர வாத்சல்யத்தாலே, உங்களைக் குளிப்பாட்டி, நல்ல வஸ்த்ரம் அணிவித்து, ஆபரணங்கள் அணிவித்து, நன்கு ஆகாரம் கொடுத்து, வனத்துக்கு அனுப்புவதும்,
திரும்பி வருவதை எதிர்பார்த்து , வீட்டுக்கு வந்தவுடன் உங்களை உச்சி முகந்து ,மறுபடியும் குளிப்பாட்டி, வஸ்த்ரம் ஆகாரம் கொடுத்து, திவ்யமான மஞ்சத்தில் படுக்க வைத்து, கண்ணை இமை காப்பதுபோலக்
காப்பாற்றினார்கள். தினந்தோறும் இப்படியாக,
நீங்கள் ப்ருந்தாவனக்காடுகளில் சஞ்சரித்தீர்கள்.

ஒரு நாள், நீ மாத்ரம், பலராமன் இல்லாமல்,
காளிந்தீ நதியாகிற யமுனை நதிக்கரைக்கு, கோபர்கள் பசுக்கள் கன்றுகளுடன் வந்தாய்.
நல்ல வெய்யில் காலம்; சூர்ய வெப்பம் தாங்க முடியவில்லை; அவர்களுக்குத் தாகம்;
நதியின் மடுவில் இறங்கி , ஜலத்தை எடுத்துப் பருகினார்கள்.அந்த யமுனா ஜலத்தில் காளியன் என்கிற சர்ப்பத்தின் விஷம் கலந்து இருந்ததால்,
மனம் கலங்கி, பிரமித்து, கீழே விழுந்து உயிர் இழந்தார்கள்.
நீ, உடனே, அவர்களைக் கடாக்ஷித்தாய்.
அம்ருத கடாக்ஷ வீக்ஷிண்யம் எல்லோரும் மூர்ச்சை தெளிந்து எழுந்தாற்போல , எழுந்து உட்கார்ந்தார்கள். இறந்தவர்கள்—விஷ ஜலத்தைப்பருகி இறந்தவர்கள்,
உயிர் பெற்று எழுந்து பேசுவது…….கிருஷ்ணா இது உன் அனுக்ரஹத்தால்தான்
( உன் அநுக்ரஹம் பெற்ற கோபர்களையும், பசுக்களையும், கன்றுகளையும் அடிக்கடி நமஸ்கரிக்கிறேன் )

15 வது அத்யாயம் நிறைவடைந்தது

காளியன் விடுபட்டான்—நாக பத்நிகளின் ஸ்துதி
——————–
ஸ்ரீ சுகர், பரீக்ஷித் ராஜாவிடம் சொன்னார். ஹே. ராஜன்………..பசுக்களும், கன்றுகளும்,
கோபர்களும் கிருஷ்ணனின் அனுக்ரஹத்தால் உயிர் பிழைத்து, எழுந்து,
ஆச்சர்யத்துடன், இது கிருஷ்ணனின் அனுக்ரஹம்தான் என்று எண்ணி சந்தோஷப்பட்டார்கள்.
அப்போது, நீ யோசித்தாய். யமுனை நதி , காளிங்கனால், விஷமாக்கப் பட்டுள்ளது;
இதைச் சுத்தமாக்கி, யாவரும் இந்த ஜலத்தை அருந்தவும், தீர்த்தாமாடவும், —–
இந்த ஜலத்தை மாற்றவேண்டும் என்று எண்ணினாய்.

கிருஷ்ணா, காளிந்தீ என்கிற பெயர்கள், யமுனை நதிக்கு உண்டு.
இந்த நதியில், காளிங்கன் என்கிற கொடிய விஷமுள்ள ஸர்ப்பம் ,
தன் விஷத்தால், ஜலம் முழுவதையும் விஷமாக்கிக் கொண்டும்,
விஷ அக்னியால் யாவரையும் தஹித்துக்கொண்டும் இதில் வசித்துக் கொண்டு இருந்தான்.
பறவைகள், மேலே பறந்து சென்றால், விஷக்காற்று மேலே பட்டு, மடிந்து விழுவது
வழக்கமாக இருந்தது. இந்த விஷக் காற்று பட்ட மரங்கள், செடிகள் யாவும் கருகி,
பட்டுப் போய் மொட்டையாகக் காக்ஷி அளித்தன.
பசுக்களும், மனிதர்களும் யமுனை நதிக்கரைக்குப் போனாலே,
விஷக் காற்று பட்டு ,மடிந்து போய்க் கொண்டிருந்தார்கள்.
இதையெல்லாம் பார்த்த நீ, அந்த யமுனை மடுவின் ஒரு ஓரத்தில் இருந்த
கதம்ப மரத்தில் ஏறி , வேஷ்டியை இறுகக் கட்டிக் கொண்டு,
தோள் பட்டைகளைத் தட்டிக் கொண்டு, பெரிய சப்தத்துடன் ,
மடுவில் குதித்தாய். விஷம் முழுவதும் உள்ள ஜலம், உயர எழும்பியது.
நான்கு திக்குகளிலும் அலைகள் எழும்பின; பெரிதாகிச் சுழன்றன;
பெரும் சப்தம் உண்டாகியது.

இந்தப் பெரிய சப்தத்தைக் கேட்ட,அதாவது காதும் கண்ணும் ஒன்றாக இருக்கும் பாம்பு,
காளிங்கன் என்கிற அந்தக் கொடிய விஷஸர்ப்பம், கோபத்துடன் கிளர்ந்து
எழுந்தது. ஜலத்துக்கு வெளியே வந்தது.
உன்னைப் பார்த்தது. ஸ்ரீ வத்ஸ மருவினால் அலங்கரிக்கப்பட்ட,
உன் சுகுமார—-கோமள—-திவ்ய மேனியைக் கோபத்துடன்
தன் விஷப் பற்களால் கடித்தது ;
உன்னுடைய தாமரைத் தண்டுபோன்ற மெல்லிய கால்களைக் கடித்தது;
உன்னைத் தன்னுடைய வாலால் நன்கு சுற்றிக் கட்டியது;
நசுக்கியது
. உன்னைப் பார்த்த கோபாலகர்கள் கதறி அழுதனர்;
உன்னுடைய ப்ரிய மித்ரர்கள் —-உன்னையே நம்பி வாழும் ப்ரிய சகாக்கள்,
நாங்களும் யமுனையில் குதித்து விடுகிறோம் என்று கத்தினர்.
பசுக்களும், கன்றுகளும் பயத்தால் கத்தி , கண்களில் ஜலம் வழிய நின்றன.
பூமி, ஆகாயம், வ்ரஜவாசிகளின் உடல்கள் இங்கெல்லாம் தாபம் ஏற்பட்டது.

பலராமன் இல்லாமல் நீ தனியாக வந்துள்ளதை அறிந்த நந்தகோபரும் யசோதையும்
மனம் துடி துடித்து , உனக்கு ஏதோ ஆபத்து வந்து விட்டது என்று பயந்து,
வேதனையுடன், பாலர்கள், வ்ருத்தர்கள், ஸ்திரீகள் தொடர்ந்து வர,
எல்லா வேலைகளையும் அப்படி அப்படியே போட்டுவிட்டு,
உன்னைப் பார்க்க வேண்டும் என்று தீனக் குரலில் கதறி,
யமுனா நதி தீரத்துக்கு ஓடி வந்தனர்.

பலராமனுக்கு, உன்னைப் பற்றி நன்கு தெரியும்.
அதனால், அவன் ஒன்றும் சொல்லவில்லை.
பிருந்தாவனத்தில் உள்ள புழுதியில் , உன்னுடைய திருவடிகளின் அடையாளங்களான
தாமரைத் தண்டுடன் புஷ்பம், அங்குசம், வஜ்ரம், கொடி, சங்கு, சக்ரம் இவற்றால்
நீ சென்ற இடத்தை தெரிந்து கொண்டு ஓடோடி வந்தனர்.
நீ, காளிங்கனால் உடல் முழுவதும் சுற்றப்பட்டு, அசைவின்றி இருப்பதை,
வெகு தூரத்தில் வரும்போதே பார்த்தார்கள்.
ஸ்திரீகளும், வ்ருத்தர்களும் வழியிலேயே மூர்ச்சை அடைந்தார்கள்.
கோபிகைகள், கோபர்கள், ஸ்திரீகள், வ்ருத்தர்கள் —-எல்லாருக்கும்
உன்னுடைய நினைவுதான்; வேறு நினைவு இல்லை.
உன்னுடைய புன்னகையுடன் கூடிய திருமுகம்;
உன் ஒவ்வொரு பேச்சு , இவற்றைஎல்லாம் நினைத்தார்கள்.
நீ இல்லாத இந்த உலகம் எங்களுக்கு சூன்யம், என்று சொல்லி
உன்னுடைய கதாம்ருதங்களை ஓயாமல் புலம்பிக் கொண்டே இருந்தார்கள்.
தாங்களும் மடுவில் குதித்து, கிருஷ்ணனுடன் உயிரை விட்டு விடுவோம் என்று துடிக்க ,
பலராமன் அவர்களைத் தடுத்து, உன் மகிமைகளை எடுத்துச் சொன்னார்.

இவைகளை, இரு முஹூர்த்த நேரம், ( சுமார் ஒரு மணி நேரம் ) பார்த்துக் கொண்டு,
காளிங்கன் கட்டுதலில் இருந்த நீ, உடனே உன்னை மிகச் சிறிய உருவாகஆக்கிக்
கொண்டாய். காளிங்கனின் பந்தத்திலிருந்து விடுபட்டாய்.
உடனே, பெரிய உருவம் எடுத்தாய்.
ஸர்ப்பம், தன் மூச்சுக் காற்றால், விஷத்தைக் கக்கியது ;.
சீறியது;
வாயால் நெருப்புப் பொறிகளைக் கக்கியது.
உன்னை, மறுபடியும் தாக்க முயற்சித்தது.
நீ, விளையாட்டாக, அந்தஸர்ப்பத்தை ஒரு தடவை வலம் வந்து,
கருடன், பாம்பு மீது எப்படிப் பாயுமோ அப்படி ஒரு க்ஷணத்தில்,
அதன் தலைமீது பாய்ந்து, ஏறினாய்.
அதன் தலை மீது நடனம் புரிய ஆசைப் பட்டாய் .
அதன் முகங்களில் ஒளி விடும் ரத்னங்களால்
உன் திவ்ய திருவடிகள் ஜொலிக்க, காளிங்கன் தலைகள் மீது நர்த்தன மாடினாய்.

ஆகாயத்தில், கந்தர்வர்கள், சித்தர்கள், தேவர்கள், அப்சரஸ்கள், எல்லோரும் கூடி,
ஆனந்தத்துடன், உன்னை சேவித்து, ம்ருதங்கங்கள், பேரிகைகள் வாசித்தார்கள்,
என்று ஸ்ரீ சுகர் கூறினார்.
உன் புகழைப் பாடினார்களாம்.
புஷ்பங்களை வாரி, உன்மேல் இறைத்தார் களாம் .
நீ, காளிங்கனின் ஒவ்வொரு தலையிலும் உன் திருவடியை வைத்து,
எந்தத் தலை நிமிர்ந்ததோ, அந்தத் தலையில் உன் திருவடியை வைத்து,
அழுத்தி, நூறு தலைகளிலும் மாறி மாறி நர்த்தனம் செய்தாய்.
எந்தத்தலை வணங்கவில்லையோ, அந்தத் தலையின் மீது ,
உன் திருவடியை வைத்து, நசுக்கினாய்.
உன் திருவடிகளைத் தூக்கியும், மடித்தும் ஆடினாய்.
அதன் தலைகள் குடைபோல் விரிந்தபோது, அவற்றின்மீது ஏறி,
தாண்டவ ந்ருத்யம் செய்தாய். அதற்கு, சக்தி குறைய ஆரம்பித்து,
அதன் ரத்தம், உன் பாத துளிகளை ஸ்பர்சித்தது.
அதன் அங்கங்கள் ஒடிந்து, நசுங்கி,
இனிப் பிழைக்க மாட்டோம் என்கிற நிலையில்
, ஸ்ரீ மன் நாராயணனை மனத்தால் சரண் அடைந்தது.

இதைக்கண்ட காளிங்கனின் பத்னிகள்——நாக பத்னிகள்,
தங்கள் பதிக்கு ஆயுளை வேண்டி, கேசபாசங்களை விரித்துக் கொண்டு,
உன்னை சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து, கைகளைக் கூப்பி,
சாதுக்கள், பதிவ்ரதைகள் எப்படி வேண்டுவார்களோ ,
அவ்விதமாக உன்னிடம் ப்ரார்த்தித்துச் சரணமடைந்தார்கள்.
உன்னைத் துதித்தார்கள்.

( ஹே….பிரபோ….நீ, காளிங்க நர்த்தனம் செய்ததை,
ஆழ்வார்களும், ஆசார்யர்களும், வாக்கேயக்காரர்களும் ,
கபீர்தாஸ், சூர்தாஸ், மீரா போன்றவர்களும் ,
இப்படிப் பல்பல பக்தர்கள், அனுபவித்து இருப்பது கொஞ்ச நஞ்சமல்ல.
அவைகளை எல்லாம் மனஸ்ஸில் நிறுத்தி,
நீ, நர்த்தனம் செய்ததை எண்ணி,ஸதாஸர்வ காலமும்
அந்தத் திருவடிகளைத் துதிக்கிறேன் )

நாக பத்நிகளின் ஸ்துதி
————————————–
ஹே….பிரபோ…..உன் அவதாரம் துஷ்டர்களைத் தண்டிக்க ஏற்பட்டது.
ஆதலால், இந்தத் தண்டனை இவருக்குத் (காளிங்கனுக்குத் ) தகும்.
இந்தத் தண்டனை, அவருக்கு அனுக்ரஹமாகும் .
பாபத்தால், இவருக்கு, இந்த ஸர்ப்ப ஜன்மம் ஏற்பட்டது.
ஆனால், உமது க்ருபா கடாக்ஷத்தைப் பெற, மிகப் பெரிய தவம் செய்திருக்க வேண்டும்.
இவர் அவமானம் அடைந்து, சாகும் நிலையில் இருக்கிறார்.
ஆனால், உமது கிருபையால், புது கௌரவம் கிடைத்து இருக்கிறது.
இவர் செய்த எந்தப் புண்யத்தால், உமது திருவடி சம்பந்தம் இவருக்கு ஏற்பட்டது
என்பது எங்களுக்குத் தெரியாது. எந்தத் திருவடிகளை ஸ்ரீ மஹாலக்ஷ்மி ,
மிக்க ஆசையுடன் பிடித்து, லாலனம் செய்வாளோ,
ப்ருஹ்மா, சிவன் போன்ற மகாத்மாக்கள் கடும் தபஸ்ஸை விட்டுவிட்டு ,
எந்தத் திருவடித் தாமரைகளையே த்ருடமாக நினைத்து, ஸேவை செய்வார்களோ,
அந்தத் திருவடி ஸ்பர்சம் , உமது கிருபையால், இவருக்குக் கிடைத்திருக்கிறது.
எங்களுக்கு, உம்முடைய பாதபத்மங்கள் கிடைத்தபிறகு,
நாக ப்ருஷ்டமோ ( சர்ப்பங்களின் உச்ச, ஆதிபத்ய நிலை )
சார்வ பௌமத்வமோ ( சகல லோகங்களையும் ஆளும் அதிகாரம் )
பாரமேஷ்டியமோ ( ப்ருஹ்ம பதவியோ, பரமேஸ்வர பதவியோ )
வேண்டவே வேண்டாம்.

நாங்கள் ப்ரபன்னர்கள்.
உமது பாத பத்ம ரஜஸ்ஸை ( திருவடித் தாமரைத் துகள்களை )
அடைந்து விட்டோம்.
வேறு எதுவும் எங்களுக்குப் பெரிது இல்லை.
எவருக்கும் கிடைக்காத, உமது பாதத்துகள்களை ,
நீரே இவருக்குக் கொடுத்து இருக்கிறீர்.
இவர் புண்ய கதி அடைந்திருப்பது, எங்கள் பாக்யமாகும்.
உம்மை, நாங்கள், பல தடவை நமஸ்கரிக்கிறோம்.
நீர், மஹா புருஷர்.
மகாத்மா.
சர்வ பூதங்களிலும் அந்தர்யாமியாக இருக்கிறீர்.
நீர், சர்வ பூதங்களுக்கும் மேலான பரமாத்மா.
உம்மை, அநேக ஆயிரம் தடவை நமஸ்கரிக்கிறோம்

க்ஜானத்துக்கும், விக்ஜானதக்கும் விஷயமாக உள்ள,
பரப்ரஹ்மம் நீர்.
அனந்த சக்தியை உடையவர் நீர்.
அனந்த கல்யாண குணங்களை உடையவர் நீர்.
உமக்கு, இயற்கையாகவே, ஸ்வரூப, ஸ்வபாவ மாறுதல்கள் இல்லை.
நீர் பிரகிருதியை ஆள்பவர்.
ஷாட்குண்ய பரிபூர்ணர்.
நீர் கால ரூபி.
காலத்தை ஆள்பவர்.
காலத்தைத் தாங்குபவர் ( நிமிஷம், மணி, சம்வத்சரம் முதலியவை ).
நீர் சகலத்தையும் நடத்துபவர்.
நீர் சர்வத்துக்கும் சாக்ஷி.
நீர் , உபாதான நிமித்த காரணமாகவும், ஜகத் ஸ்வரூபமாகவும்,
எல்லாப் பொருட்களையும் உண்டாக்குகிற ஆதி பிதா.
ப்ரபிதா பிதாமஹர் .
உமக்குப் பலபல நமஸ்காரங்கள்.

நீரே ஐந்து பூதங்கள் ;
நீரே தன் மாத்ரைகள்;
நீரே ப்ராண, மனஸ், புத்தி, இவைகளின் வ்ருத்திக்குக் காரணம்;
அவற்றின் அபிமான தேவதைகளும் நீரே;
நீரே, அவற்றில் ஊடுருவி, அந்தர்யாமியாக இருக்கிறீர்;
நீர் முக்குணங்களாகவும், அவைகளால் கூட அறிய முடியாத
அதீத, ஆத்மானுபூதியாக இருக்கிறீர்.
நீர், அனந்த நாமம் உள்ளவர்;
சூக்ஷ்மமாகவும், கூடஸ்தராகவும் எல்லாவற்றுக்கும் காரணமாகி ,
ஆனால் நீர் மாறாதபடி இருக்கிறீர்;
விஹார ரஹிதர் நீர்;
ஸத்யஸ்ய ஸத்யர் நீர்;
எல்லாவற்றையும் அறியும் த்ரிகால க்ஜாநி நீர்;
நீர், எல்லாப் பொருள்களாகவும், சப்தங்களாகவும்,
அவற்றால் அறியப்படும் ரஹஸ்யமாகவும் இருக்கிறீர்;
பலவித நாம ரூபங்களாகவும் இருக்கிறீர்;
உமது க்ருபை இருந்தால்தான், உம்மை அறிய இயலும்;
பரமான அதீதர் ( சாஸ்த்ரங்களால் மட்டுமே அறியத்தக்கவராக இருக்கிறீர் )
நீர், ப்ரவ்ருத்தி, நிவ்ருத்தி தர்மங்களுக்கும் நிகமங்களுக்கும்
ஸர்வ ஸுப ஆசரணைகளுக்கும் ஆதாரம்;
உமக்கு ஆயிரம் நமஸ்காரங்கள்.

ஹே…கிருஷ்ணரே……நீரே பலராமன்; நீரே வசுதேவரின் திருக்குமாரர்
; நீரே பிரத்யும்னர்; நீரே அநிருத்தர்; நீரே சாத்வதர்களுக்குப் பதி;
உமக்கு ஆயிரம் நமஸ்காரங்கள்;
நீர், உள்ளிருக்கும் குணங்களை வெளிப்படுத்தி, எல்லாவற்றையும் நடத்துபவர்;
நீரே, நான்கு வ்யூஹங்களான மனஸ், புத்தி, தர்க்கம், அஹங்காரம்;
நீர் குணங்களை அறியும்படி செய்கிறீர்;
குணங்களை வ்ருத்தி செய்கிறீர்;
நீரே, ஒன்றிலும் பற்று இல்லாதவர்
; நீரே, மூலப்ரக்ருதியையும் , மாறுதலையும் உண்டாக்குகிறீர்
; நீர், சர்வ வ்யாக்ருத மஹத் ஆதி தத்வத்துக்குக் காரணம்;
நீரே இந்த்ரியங்களை ஆளும் ஹ்ருஷீகேசன்;
உமக்குப் பல நமஸ்காரங்கள்;
நீர், பர, அவர தத்வங்களை அறிந்தவர்;
எல்லாவற்றையும் உள் இருந்து நடத்துபவர்;
நியமன அத்யக்ஷர்;
உமக்குப் பல நமஸ்காரங்கள்;
நீரே விஸ்வம்;
நீரே விஸ்வாதீதன்;
நீரே அவற்றை நடத்தும் திருஷ்டி; உமக்குப் பல நமஸ்காரங்கள்

உமக்கு சமமாகவும், மேலாகவும் எவரும் இல்லாதவர் நீர்;
சர்வ சர்வேஸ்வரன்; சர்வ ஸ்வதந்த்ரன் நீர்;
நீரே கால சக்தி;
நீரே காலத்தைத் தாங்குபவர்;
இருக்கிற, இல்லாத வஸ்துக்களின் ஸ்வபாவத்தைக் காண்பித்துக் கொண்டு,
ஜீவன்களின் நிலைமைகளில் விளையாடுபவர்;
எல்லா உலகங்களிலும் உள்ள, ஸத்வ, ரஜஸ், தாமஸ, குணங்களுக்கு ஏற்ப,
பலவித சிருஷ்டிகளைச் செய்பவர் நீரே ;
சாதுக்களிடம் பிரியமானவர்;
உமக்கும், உமது பக்தர்களுக்கும் அபராதம் செய்பவர், உமக்குப்
ப்ரியமில்லாதவர்; அவர்களைத் தண்டிக்க அவதாரம் செய்கிறீர்;
எல்லாருக்கும் மஹா அபராதம் செய்த காளிங்கனையும்,
எங்களையும் மன்னிக்கும்படி பிரார்த்திக்கிறோம்.
உமது, மகிமைகளை அறியாத எங்களை, க்ஷமிக்கும்படி
வேண்டுகிறோம்.

ஹே….பகவானே……எங்கள் குற்றங்களை மன்னிப்பீராக ;
இந்த ஸர்ப்பம், பிராணனைவிடும் நிலையில் இருக்கிறது;
இவர், எங்களுடைய ப்ராண நாதர்;
இவரிடம் கருணை செய்யுங்கள்;
உயிருடன் விட்டு விடுங்கள்;
நாங்கள், என்ன செய்ய வேண்டும் என்று ஆக்ஜை இடுங்கள் ;
உங்கள் கட்டளைப்படி நடப்பதால், எல்லாப் பாபங்களும் ,
எல்லா ஆபத்துக்களும் நீங்குகிறது
என்று துதித்துப் பிரார்த்தித்தார்கள்.

ஹே….கிருஷ்ணா…..ஸ்ரீ சுகர், பரீக்ஷித் ராஜனிடம், மேலும் சொன்னார்.
இப்படி மனஸ்ஸை உருக்கும் ஸ்துதிகளால்,
நாக பத்னிகள், உன்னைத் துதித்ததால்,
மூர்ச்சை அடைந்து, தலைகளைத் தொங்கவிட்டுக் கொண்டு,
உன் திருவடிகளால் மிதிக்கப்பட்ட வனான காளிங்கனை நீ,
உயிருடன் விடுவித்தாயாம்.
உன்னுடைய கடாக்ஷத்தால்,
, தன் இந்த்ரிய சுவாதீனத்தை அடைந்த காளிங்கன்,
கைகளைக் கூப்பி அஞ்சலி செய்து, உன்னிடம் ப்ரார்த்தித்தானாம்
அதை இப்போது சொல்கிறேன்.

ஹே….பகவானே….ஸ்வபாவமாகவே நாங்கள் துஷ்டர்கள்;
கோபக்குணம் உடையவர்கள்;
எங்களுடைய புத்தி , தேகத்தை ஆத்மாவாகக் காணும் ஸ்வபாவமுள்ளது;
கோபத்தையும், பொறாமையையும் இயற்கையாகக் கொண்டவர்கள்;
உமது மாயையை எங்களால் விலக்க இயலவில்லை;
அதில் மோஹப்பட்டு வீழ்ந்து நசித்து விட்டோம்;
நீர் சர்வக்ஜர்; ஜகத்துக்கு எல்லாம் ஈஸ்வரர்;
உமது அபிப்ராயத்தில் , எது அனுக்ரஹமோ அல்லது நிக்ரஹமோ ,
எதைச் செய்ய விரும்புகிறீரோ
அதைத் தெரியப் படுத்தப் பிரார்த்திக்கிறேன் என்று சொன்னானாம்.

இதற்கு, நீ சொன்ன பதில் என்ன தெரியுமா ?

ஸர்ப்பமே…..இந்த இடம் நீங்கள் வசிப்பதற்கு யோக்யதை இல்லை;
உன் பரிவாரத்துடன் புறப்பட்டு, காலதாமதம் செய்யாமல்
ஸமுத்ரத்துக்குப் போய்விடு;
மனைவி, புத்ர பந்துக்கள் சஹிதம் போய் விடு;
இந்த யமுனா நதி தீர்த்தம் பசுக்களுக்கும், மனுஷ்யர்களுக்கும்
உபயோகப்பட வேண்டும்

எவன், நான் சொன்னதை ஸ்மரிக்கிறானோ, எவன் இதை காலை, மாலை
இருவேளை யும் படித்துக் கீர்த்தனம் செய்கிறானோ,
அவனுக்கு எந்தஸர்ப்ப பயமும் இல்லை.
எவன், இந்த யமுனா நதி மடுவில் நான் ஜலக்ரீடை செய்த இடத்தில் தீர்த்தமாடி,
தேவரிஷி தர்ப்பணம், பித்ரு தர்ப்பணம் செய்கிறானோ
உபவாசம் இருந்து பூஜிக்கிறானோ, அவன் எல்லாப் பாவங்களிலிருந்தும்
விடுபடுகிறான். இது என் கட்டளை.
நீ, இங்கிருந்து, சமுத்ரத்தில் உள்ள, ரமணகம் என்கிற தீவை அடைவாயாக;
உன் ஹ்ருதயத்தில் என்னை பூஜிப்பாயாக; எந்தக் கருடனுடைய பயத்தால்,
தப்பிப்பதற்காக இந்த இடத்துக்கு வந்தாயோ,
அந்த பயம் இனி உனக்கு இல்லை;
இதன் காரணம், என் பாத ஸ்பரிசம் உன் தலைகளில் அடையாளமாக இருக்கின்றன;
ஆதலால், உனக்கு, கருடனிடமிருந்து பயமில்லை என்று அருள் புரிந்தாயாம்.

காளியன் உடனே உன்னைப் பூஜித்து, வணங்கினான்.
நாக பத்னிகள், சந்தோஷத்துடன் உன்னைப் பூஜித்தனர்.
காளியன், உனக்கு, திவ்ய வஸ்த்ரங்கள், ரத்னங்கள், உயர்ந்த தாமரை மாலை,
வாஸனை த்ரவ்யங்கள் இவைகளை சமர்ப்பித்து, உன்னைப் பல தடவை
பத்நிகளுடன் பரிக்ரமம் ( ப்ரதக்ஷிணம்) செய்து, புத்ர பந்துக்களுடன்
ரமணத் த்வீபத்துக்குச் சென்றான்.
அதே சமயத்தில் உன் கிருபையால், யமுனா ஜலத்தின் விஷம்
போக்கடிக்கப்பட்டு, அம்ருதத்துக்கு ஒப்பாக ஆயிற்று.

( ஹே….கிருஷ்ணா… இந்த சரிதத்தை, எத்தனை தடவை படித்தாலும்,
எத்தனை தடவை சொன்னாலும், எத்தனை தடவை கேட்டாலும்,
யார் படித்துக் கேட்டாலும், யார் சொல்லிக் கேட்டாலும்,
அலுப்பே ஏற்படுவதில்லை. அம்ருதத்தைப் பருகுவதைப் போல இருக்கிறது.
இதே நிலை அடியேனுக்கு நீடிக்குமாறு உன்னைப் பிரார்த்தித்து,
பல்லாயிரம் தடவை உன்னை நமஸ்கரிக்கிறேன் )

16 வது அத்யாயம் நிறைவு பெற்றது.

ஸ்ரீ கிருஷ்ணன் , ப்ருந்தாவனவாசிகளை , அக்நி விபத்திலிருந்து காத்தல்
———————————————————————————————————
பரீக்ஷித் ஸ்ரீ சுகப்ரம்மத்தைக் கேட்டார்
காளியனுக்கு, கருடனால் என்ன தீங்கு ஏற்பட்டது ?விரிவாகப் பதில் சொல்ல வேணும் ….
ஸ்ரீ சுகர் சொன்னார். கருடனுக்கும், சர்ப்பங்களுக்கும் விரோதம் ஏற்பட்டபோது, பிரும்மா தலையிட்டு அவர்களுக்குள் சமரசம் ஏற்படுத்தி, அதன்படி
ஒவ்வொரு அமாவாஸ்யை தினத்திலும், சர்ப்பங்கள் கருடனுக்கு உபசாரம் செய்து,அவன் பசியில்லாமல் இருக்க, ஆகாரம் கொடுத்து வந்தன.
இதன்படி,ஸர்ப்பங்கள், கருடனால் கொல்லாமல் காக்கப்பட்டன. இந்த உபசாரங்கள் செய்வதற்கு வேண்டியவைகளை, சர்ப்பங்கள், தங்களுடைய பக்தர்களிடமிருந்து பெற்று வந்தன.
இந்த ஏற்பாடு, பலகாலமாக நடந்து வந்தது.
கத்ருவின் பிள்ளையான காளிங்கன், திமிர் கொண்டு,
கருடனுக்கு ஆகாரம் கொடுக்கவேண்டிய சமரசத் திட்டத்தை மீறி,அதை நிறுத்தி, எல்லாவற்றையும் தானே சாப்பிட்டு வந்தான்.இதனால் கோபம் கொண்ட கருடன், காளிங்கனைத் தாக்கினான்.
கருடனால் தாக்கப்பட்ட காளிங்கன், உயிருக்குப் பயந்து,
யமுனா நதி தீரத்தில் உள்ள இந்த மடுவில் வந்து ஒளிந்து கொண்டான். ஏன் இங்கு கருடன் வர இயலாது என்றால், ஒரு சமயம், கருடன்,மீன்களைச் சாப்பிட இந்த மடுவுக்கு வந்தபோது,மீன்கள் இங்கு வசித்த சௌபரி ரிஷியைத் தஞ்சம் அடைந்தன. மீன்கள்மீது கருணைகொண்டு, கருடன் இந்த மடுவுக்கு வந்தால்
அவன் உயிர் உடனே போய்விடும் என்று சாபம் கொடுத்திருந்தார்.
இதை அறிந்து வைத்திருந்த காளிங்கன், கருடன் வர இயலாத இந்த மடுவுக்குள் வந்து மறைந்து வாழலானான். இப்போது ஸ்ரீ கிருஷ்ணனால் துரத்தப் பட்டு, குடும்ப சஹிதம்இந்த மடுவைவிட்டு வெளியே போய்விட்டான்.

(ஹே…..கிருஷ்ணா…..நீ மடுவிலிருந்து வெளியே வந்தாய். அற்புதமான மாலை; பதக்கம்; வஸ்த்ரம் இவைகளை அணிந்து இருந்தாய்.
யசோதை, ரோஹிணீ, நந்தகோபன் யாவரும்
போன உயிர் திரும்பி வந்ததைப் போல சந்தோஷம் அடைந்தனர். பசுக்களும், கன்றுகளும், கோபர்களும் கோப ஸ்திரீகளும் பரமானந்தம் அடைந்தனர். )
அன்று இரவு, யமுனைக் கரையிலேயே தங்கி, நன்கு தூங்கினர்.
அப்போது, பெரிய நெருப்பு கொழுந்து விட்டு எரிந்தது.
களைப்பால் தூங்கிக் கொண்டு இருந்தவர்களை, நெருப்பு சூழ்ந்து கொண்டது.திடுக்கிட்டு எழுந்த யாவரும், செய்வது அறியாது திகைத்து, உன்னைச் சரணம் அடைந்தார்கள்.
நீ, அந்த அக்னியை வாயால் பருகி விட்டாய்.
எல்லாரும் அக்னியின் ஆபத்திலிருந்து உன்னால் காப்பற்றப் பட்டனர்.

17 வது அத்யாயம் நிறைவடைந்தது. ஸுபம்

————————————————————
அத்யாயம் 18
—————-
ப்ரலம்பாசுரன் வதம்
——————

நீயும், பலராமனும் , கோபர்களுடன்சேர்ந்து, வ்ரஜபூமியைப் பாவனமாக்கினீர்கள் .
ஒரு சமயம் வனத்தில், பசுக்களை மேய்த்துக் கொண்டு இருக்கும்போது,ப்ரலம்பன் என்கிற அசுரன், கோபாலகர்களைப்போல வேஷம் தரித்து,
உங்கள் இருவரையும் அபஹரித்துப்போக எண்ணினான்.
அவன் யார் என்றும், அவன் கபட எண்ணத்தையும் தெரிந்துகொண்ட நீ, கோபாலகர்களிடம் நாம் யாவரும் இரண்டு கக்ஷிகளாகப்பிரிந்துவிளையாடுவோமென்றும், எந்தக் கக்ஷி ஜெயிக்கிறதோ அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களை, தோற்ற கட்சியைச் சேர்ந்தவர்கள் ,
முதுகில் ஏற்றிக்கொண்டு, மூட்டை சுமப்பதுபோலச் செய்யவேண்டுமென்றும்சொல்ல, அதன்படியே, உன் கக்ஷி , பலராமன் கக்ஷி என்று இரண்டாகப் பிரிந்து
விளையாடினீர்கள். பலராமன் கக்ஷி ஜெயித்தது.
ப்ரலம்பன் என்கிற அசுரன்—கோபனாக வேஷமிட்டு வந்தவன் —-பலராமனைத் தன் முதுகில் சுமந்து கொண்டு சென்றான். பலராமன், இவன் அசுரன்
என்பதை அறிந்து இருந்ததால், அவனுக்கு, மலையைத் தூக்குவது போன்ற கனத்தை ஏற்படுத்தினான். பாலராமனைச் சுமக்க முடியாமல்,அசுரனின்
வேகம் தடைப்பட்டது. அதனால் கோபமடைந்த அசுரன்,
சுய ரூபத்தை எடுத்துக் கொண்டான். பலராமனைத் தாக்கினான். பலராமன், தன்னுடைய முஷ்டியால் , அசுரனை ஓங்கி அடித்தான். உடனே, அசுரனின் தலை நொறுங்கியது. ரத்தத்தைக் கக்கிக்கொண்டு,
பெரிதாக ஓலமிட்டு ,பூமியில் விழுந்து அசுரன் மாண்டான்.
இதைப் பார்த்த கோபர்கள், பலராமனைப் பாராட்டிப் புகழ்ந்து , மகிழ்ந்தனர்.

18 வது அத்யாயம் நிறைவடைந்தது. ஸுபம்

தசமஸ்கந்தம்——–நவீன பாணியில்—-19 வது அத்யாயம்
—————————
மீண்டும் நெருப்பு ஆபத்து
—————–
பின்னொரு சமயம் , நீயும் கோபாலகர்களும் விளையாடிக்கொண்டிருந்தபோது, பசுக்களும், கன்றுகளும் புற்களை மேய்ந்து கொண்டே வெகு தூரம் போய்விட்டன. கோபர்கள், பசுக்களைத் தேட ஆரம்பித்தனர். அந்தச் சமயத்தில், நீ,
மேகத் த்வனியைப்போலச் சப்தம் செய்தாய். அதைக்கேட்ட பசுக்களும் கன்றுகளும் சந்தோஷத்துடன் , நீங்கள் இருக்குமிடத்துக்குத் திரும்பி வந்தன.
அப்போது, ஒரு பெரிய தீ———புகையுடன் உண்டாகி , வனத்தில் மரங்களையும் ,செடிகளையும் நாசம் செய்தது;காற்று பலமாக வீசவும், உங்களை நோக்கி
நெருப்பு வேகமாகப் பரவியது. கோபாலகர்கள் மிகவும் பயந்து விட்டனர்.
“கிருஷ்ணா—-கிருஷ்ணா——எங்களைக் காப்பாற்று” என்று கத்தினார்கள்.
உடனே, நீ, ” பயப்படாதீர்கள்——–ஒரு க்ஷணம் எல்லாரும் கண்களை மூடிக் கொள்ளுங்கள் —-”
என்று சொன்னாய். கோபாலகர்கள்,
உடனே கண்களை மூடிக்கொண்டனர்.
அந்த க்ஷணத்தில் நீ, அக்னியை வாயால் பருகி விட்டாய்.
கோபாலகர்கள் கண்களைத் திறந்து பார்த்தபோது, நெருப்பைக் காணவில்லை.
பசுக்களும் பக்கத்தில் இருந்தன.
கோபாலகர்கள், உன்னைத் தெய்வம் என்று கருதினார்கள்.அவர்கள், பசுக்களுடனும், கன்று களுடனும் , நீயும் பலராமனும் பின்தொடர,
அவரவர் வீடுகளுக்கு வந்தனர்.
நீ, புல்லாங்குழலை இசைத்துக் கொண்டு, திரும்பி வரும்போது,கோபியர்கள், உன் தர்சனத்தால் பரமானந்தம் அடைந்தார்கள்.
( அந்த கோப ஸ்திரீகளை அடிக்கடி நமஸ்கரிக்கிறேன் )

19 வது அத்யாயம் நிறைவடைந்தது. ஸுபம்

 

20 வது அத்யாயம்

மழையும், வேனிலும்

 

கோபாலகர்கள், தங்கள் பெற்றோர்களிடம், ப்ரலம்பாசுரன் வதம், நெருப்பிலிருந்து காப்பற்றப்பட்டது, என்று எல்லாவற்றையும் கூறி,
உன்னையும், பலராமனையும் புகழ்ந்தார்கள்.
கோபாலகர்களின் தாய்தந்தையர் அடைந்த சந்தோஷத்துக்கு அளவே இல்லை.
மழைக்காலம் வந்தது. கருமேகங்கள் சூழ்ந்து, மழையைப் பொழிந்தன
. நீயே சூர்யன்; நீ, எட்டு மாதங்களில் உன் தாபத்தால் ஜலத்தை உறிஞ்சி, மாரிக் காலத்தில் மழையைக் கொடுக்கிறாய்.
நீயே பர்ஜன்யன்; உன் கருணை வெள்ளமே மழை .
பசுக்கள் கொடுக்கும் பால், வழிந்து, நீ செல்லும் வழியெல்லாம், பாலாக இருந்தது பிருந்தாவனம் சுபிக்ஷமாக இருந்தது.
பிறகு, சரத் காலத்தில், குளங்களிலும், வாவிகளிலும் தாமரைப் புஷ்பங்கள் விகஸித்தன.
நாட்கள் செல்லச் செல்ல, சூர்யனின் தாபம் அதிகரித்தது.
நீர்நிலைகளில் தண்ணீர் மட்டம் குறைய ஆரம்பித்தது.
காற்று, வனத்திலிருந்து , பிருந்தாவனத்தை நோக்கி வீசி
தாபத்தை உண்டாக்கியது.
ஆனால், கோபர்களுக்கும், பசுக்களுக்கும், கன்றுகளுக்கும் எந்தத் தாபமும் தெரியவில்லை.
சதா, நீ, அவர்களுடன் கூடவே இருந்ததால்,
அவர்களுக்கு எந்தத் தாபமும் தெரியவில்லை
ஹே, கிருஷ்ணா, உன்னையும், பலராமனையும் ,
யசோதையும், நந்தகோபனும் ,ரோஹிணியும், அளவில்லாப் பாசத்துடன் கொஞ்சி மகிழ்ந்தனர்.
கோபஸ்த்ரீகள் அதீத வாத்சல்யத்துடன் இருந்தார்கள் கோபச் சிறுவர்கள்,உரிமையுடன் நட்பு பாராட்டி , உங்களுடன் எப்போதும் வனத்திலும், யமுனா நதி
தீரத்திலும் , விளையாடி மகிழ்ந்தார்கள். கோபிகைகள் ,
நீ, பசுக்களை ஓட்டிக் கொண்டு , காலையில் வனத்துக்குச் செல்லும்போதும், மாலையில் பசுக்கள், கன்றுகள், கோபாலகர்களுடன்திரும்பும் போதும், உன் ரூபசௌந்தர்யத்தைப் பார்த்துப் பரவசம் அடைய அவரவர்கள்வீட்டு வாயிலில் காத்துக் கிடந்தனர்

20 வது அத்யாயம் நிறைவு பெற்றது. ஸுபம்

பிருந்தாவனத்தை அடுத்துள்ள காடு , புஷ்பங்கள் நிறைந்து இருந்தது.
பூச் செடிகள் பூத்துக் குலுங்கின. தேனீக்கள், புஷ்பங்களிளிருந்து
தேனை உறிஞ்சி அருந்தின. பூமி முழுவதும் பச்சைக் கம்பளம் விரித்தாற்போல ,
பச்சைப்பசேல் என்று இருந்தது. மிகவும் ரம்யமான காக்ஷி.
இந்த வேளையில், நீ, பலராமனுடன் காட்டுக்குள் பிரவேசித்தாய்.
கிளிகள், மயில்கள், குயில்கள், குரங்குகள் என்று மரங்களில் கூட்டம்.
உனக்கு என்ன தோன்றிற்றோ , புல்லாங்குழலைக் கையில் எடுத்து,
கானம் இசைக்கத் தொடங்கினாய். இந்த வேணுகானம், காட்டில்
எங்கும் பரவியது; வ்ரஜபூமியில்—–பிருந்தாவனத்தில், வீடுகள்தோறும் பரவியது;
புஷ்பவதியாக இருந்த கோபிகைகளின் மனஸ்ஸை, வசப்படுத்தியது.
ஹே…..கிருஷ்ணா….நீ எப்படி அலங்கரித்துக் கொண்டிருந்தாய் என்பதை,
ஸ்ரீ சுகர், பரீக்ஷித் ராஜனுக்குச் சொல்கிறார் . கர்ணீகாரப் பூக்கள்; மயில் தோகை;
இவற்றைத் தலையிலும், காதுகளிலும் வைத்து, அலங்கரித்துக் கொண்டிருந்தாய்.
இடையில், தங்க நிறப் பட்டுப் பீதாம்பரம்; திருமார்பில் வைஜயந்தீ மாலை;
விரல்களால், புல்லாங்குழலின் த்வாரங்களை மூடியும், திறந்தும், உன் திருப்பவள உதடு—–
அம்ருதமயமான உதடு படும்படி, புல்லாங்குழலை வைத்துக் கானம் செய்தாய்.
இந்த வேணுகானம், சர்வபூத மனோஹரமாக இருந்ததாம்.

(ஹே….கிருஷ்ணா…. ஸ்ரீ சுகர், இவைகளைச் சொல்லும்போது,
பரீக்ஷித் ராஜன் பக்கத்தில் அடியேனும் உட்கார்ந்து, உன் வேணுகான
இசை வெள்ளத்தை, அவர் வருணித்தபடியே கேட்க முடியவில்லையே
என்று தாபம் மேலிடுகிறது )

இப்போது, கோபிகைகள் அடைந்த நிலையைச் சொல்கிறார்.அதை உனக்குச் சொல்கிறேன்
“நம் கண்கள், காதுகள், போன்ற இந்த்ரியங்களின் பலனை—-பாக்யத்தை——இன்று அடைந்தோம்…..
ஹே, தோழிகளே…..ஒரு தடவை, ஜகன்மோகன கிருஷ்ண ரூபத்தைப் பார்த்தாலே ,
,மறுபடியும் மறுபடியும் பார்க்கத்தூண்டும் ; புல்லாங்குழலை இசைத்துக் கொண்டு,
கள்ளப் பார்வையுடன்—கடாக்ஷ வீக்ஷண்யத்துடன் ,எங்களைப் பார்த்துக் கொண்டு,
பசுக்களை மேய்ப்பதற்காக அவைகளை ஓட்டிக்கொண்டு,
கோபாலகர்களுடன் செல்லும் அந்த சித்திரம் —
படம்போல மனஸ் ஸில் பதிந்து விட்டிருக்கிறது.
எங்கள் மனம், அவரிடம், பேதலித்திப்போய் நிற்கிறது.
ஹே….சகிகளே….கிருஷ்ணன், சில சமயம், மாமரத்தின் இலைகளைப்
பட்டுப் பீதாம்பரத்துடன் சேர்த்து இறுகக் கட்டிக் கொண்டு, தாமரை மலர்களை,
இரு கைகளிலும் பிடித்துக் கொண்டு, குமுத மலர்களைக் காதுகளின் ஓரங்களில்
வைத்துக் கொண்டு, கழுத்தில் வைஜயந்தீ மாலையை அணிந்துகொண்டு,
பசுக்களைப் பராமரிக்கும் என்பதான நாடக மேடையிலே,
இவரும், பலராமனும் இரண்டு உத்தம நடிகர்களைப் போலக்
காக்ஷியளிக்கிறார்கள்.

ஹே….சகிகளே……மேலும் கேளுங்கள்……இந்தப் புல்லாங்குழல்
என்ன பாக்யம் செய்திருக்க வேண்டும் !
கிருஷ்ணனின் அதரச் சுவையை சுவாதீனமாக அனுபவிக்கிறதே !
இந்த அதரம், அதரத்தின் அம்ருதம் கோபிகைகளின் சொத்துக்கள் அல்லவா !
புல்லாங்குழல் அனுபவித்தது போக,
மீதி ரஸத்தைதானே நமக்குக் கொடுக்கிறது.
இதைப் பார்த்துக் கொண்டிருக்கும் ,இந்த மூங்கிலின் மாதா பிதாவான
மூங்கில் புதர்கள், யமுனைநதிக்கரையில் இருந்து,
அதன் மயிர்க்கால்கள் ஆனந்தத்தால் நிற்க,
அதன் வளைந்த கிளைகளின் முனைகளில் இருக்கும் தண்ணீரில்
வளரும் தாமரைப் புஷ்பங்களைச் சுமந்துகொண்டு,
இந்த மூங்கில் மரங்கள் ஹ்ருதயம் விகசித்து,
ஆனந்த பாஷ்பங்களை உதிர்க்க,
எப்படி ஒரு சத் புத்ரன், பகவானுடைய கிருபையைப்
பெறும்போது, அந்த சத் புத்ரனின் தாய் தந்தையர் ஆனந்தத்தை அடைவார்களோ ,
அந்த ஆனந்தத்தை, இந்த மூங்கில் மரங்கள் அடைந்திருக்கின்றன.

ஹே, சகிகளே……வேணு கானத்தை கேட்டு, மயில்கள் ஆடுவதைப் பாருங்கள்!
பக்ஷிகள், கோவர்த்தன மலையில் உள்ள பிராணிகள் யாவும்,
எவ்வித சப்தமும் இன்றி, தங்களை மறந்து, இந்தக் கானத்திலே
உன்மத்தமாகிஇருப்பதைப் பாருங்கள் !
இந்தப் பெண்மான்கள், கிருஷ்ணனுடைய விசித்திர வேஷத்தைப் பார்த்தும்,
விசித்திர வேனுகானத்தைக் கேட்டும், தங்கள் பதிகளான ஆண் மான்கள்
அருகில் இருக்கும்போதே, தங்களுடைய கடைக்கண் பார்வையை—
ப்ரணய நோக்கை,கிருஷ்ணனிடம் செலுத்திப் பூஜை செய்கின்றன !

ஹே….சகிகளே……..ஈதென்ன ஆச்சர்யம் !
ஆகாயத்தைப் பாருங்கள்; அப்சரஸ்கள், கந்தர்வ ஸ்திரீகள் கூட்டம்,
கூட்டமாக இருக்கிறார்கள் !கிருஷ்ணனுடைய ரூபத்தையும்,
சீலத்தையும் பார்த்தும் , வேணுவின் கானத்தையும் கேட்டும் ,
மோஹித்துப் போய் மதன வேகத்தால், மனம் பறி கொடுத்தவர்களாக,
புஷ்பங்கள் தலையிலிருந்து நழுவி விழ, வளைகள் கழல,
தலைமயிர் கேசங்கள் அங்குமிங்கும் அலைபாய,
புடவைகள் நழுவுவது கூடத் தெரியாமல், மோஹித்து இருப்பது,
வினோத காக்ஷியாக இருக்கிறதே !

இந்தப் பசுக்களைப் பாருங்கள் ! கன்றுகளுக்குப் பால் கொடுக்க மறந்து,
வாயில் உள்ள புல்லைக்கூடத் தின்னாமல், அப்படியே வழியவிட்டு
தங்கள் காதுகளை நீட்டி, வேணுகானத்தைக் காதுகளால் பருகுகிறதே !
சித்திரங்கள்போல , அப்படியே ஆடாமல், அசையாமல் நிற்கின்றனவே !

ஹே….சகிகளே…. மரங்களில் அமர்ந்து இருக்கும் பக்ஷிகளைப் பாருங்கள் !
மரங்களின் அழகான கிளைகளையும், கொடிகளையும் பாருங்கள்!
இந்தப் பக்ஷிகள், பூர்வ ஜன்மத்தில் ரிஷிகளாக இருந்தவர்களோ!
பழங்களைத் தின்னாமல், தூங்காமல், இயற்கையான ஸ்வபாவமான,
கூவுதலையும் மறந்து, இமைகொட்டாமல் கிருஷ்ணனையே பார்த்து,
வேணுகானத்தைக் கேட்கின்றனவே !
( மரக்கிளை—-வேத சாகை. பழங்களைத் தின்னாமல், கூவாமல் இருப்பது –
பகவானிடம் ஏகாக்ர சிந்தனை )
இந்த மரங்களின் இலைகளைப் பாருங்கள் !கிருஷ்ண தர்சநம் என்கிற
காந்தத்தால் இழுக்கப்பட்டு, கிருஷ்ணனை ஆசையுடன்
பார்ப்பதுபோல் உள்ளதே !

ஹே….சகிகளே….நதிகளைப் பார்த்தீர்களா !முகுந்த கீதம்—-அதன் ராகம்—-
மதுரமான ஆவர்த்தனம் –மனோபாவம், இவைகளால் ஈர்க்கப்பட்டு,
பிரவாகத்தின் வேகம் தடைப்பட்டு, அப்படியே அமைதியாக நிற்கிறதே !
கிருஷ்ணனுடைய திருவடிகளை ஸ்பர்சித்து, தன்னுடைய பிரவாகத்தில்
பூத்த தாமரைப் புஷ்பங்களை , அவனுடைய திருவடித் தாமரைகளில்
சமர்பித்து, அவனை அணைப்பதைப்போல, அலைகளையும்
ஜலத்தின் வலைகளையும் வாரி வாரி இறைக்கிறதே !

ஹே….சகிகளே….ஆகாயத்தில் இதோ மேகங்களைப் பாருங்கள் !
புஷ்பங்களை வர்ஷித்து, குடைபிடிப்பது போல, கிருஷ்ணனுக்கு
ஸேவை செய்கின்றனவே !

ஹே….சகிகளே….இந்த மலைஜாதிப் பெண்களைப் பாருங்கள் !
இவர்களிடம், கிருஷ்ணப் பிரேமை, பரிபூரணமாகத் தெரிகிறதே !
இவர்கள் முகங்களில் உள்ள குங்குமப்பூக்கள், கிருஷ்ண பக்தியின்
தகிப்பால் இளகி, அவர்கள் ஸ்தனங்களில் இந்தப் பூச்சுக்கள்
இறங்கி இருக்கின்றனவே !
கிருஷ்ண தர்சனத்துக்கு தாபப்படுகிறார்களே !
மதன வேகத்தால் துடிக்கிறார்களே !
பிருந்தாவன மேடுகளில் பதிந்துள்ள, ஸ்ரீ கிருஷ்ணனின் திருவடிகளையும்,
அதில் உள்ள சிகப்பு வர்ணத்தையும், நினைத்து, நினைத்துப்
புளகாங்கிதம் அடைகிறார்களே ! அவர்களின் மார்புப் பூச்சுகள்;
ஸ்ரீ கிருஷ்ணனின் திருவடிப் பூச்சுகள் ; இரண்டிலும் உள்ள சிகப்பு நிறம்
ஒத்து இருக்கிறதே !
இவர்கள் ஸ்ரீ கிருஷ்ணனின் திருவடிகளை மனஸ்ஸில்
தரித்து இருக்கிறார்கள், ஆச்சர்யம் !

ஹே, சகிகளே !இந்த மலையைப் பாருங்கள் !கிருஷ்ண ப்ரேமையால்,
புதிய ஆனந்தத்தை அடைந்து, புதிய தளிர்களையும்,
புற்களையும் மேனியில் உண்டாக்கி, வாருங்கள்….வாருங்கள்….
.பசுக்கூட்டங்களுடன் வாருங்கள் ! கோபாலகர்களே, இங்கு வந்து
விளையாடுங்கள் ! நிறையப் புல்மேடுகள், நிறையப் பழங்கள்,
நிறைய தீர்த்தம் உள்ளன என்று சொல்லாமல் சொல்லி,
அழைப்பது போல் தெரிகிறதே !

ஸ்ரீ சுகர், பரீக்ஷித் ராஜனிடம் மேலும் சொல்கிறார்;
இந்த கோபஸ்த்ரீகள், கிருஷ்ணனின் வேணுகானத்தைக் கேட்டு,
மாடுகளைக் கட்ட வேண்டிய கயிற்றை மறந்து, யாத்ரீகர்கள்மாதிரி,
உன்னுடைய பால்ய சேஷ்டிதங்களைத் தங்களுக்குள் மகிழ்ச்சியுடன்
பேசிக்கொண்டு, போகும் வழியில் , புளகாங்கிதம் அடைந்து நிற்கும்
மரங்களைப் பார்த்துக் கொண்டு, புல்லாங்குழல் இசையில் ,
சதா உன்னுடைய சிந்தனையில் ஒன்றிப்போனார்கள். அவர்கள் உடல்தான்
தனிப்பட்டு இருந்தது.

(ஹே….கிருஷ்ணா…. இப்படி எல்லாரையும் உன்மத்தமாக்கிய,
கிறங்கடித்த, தன்வயம் இழக்கச் செய்த, அந்த மனோஹர வேணுகானத்தை
எப்போது கேட்பேன் ?
அந்தக் க்ருஷ்ணப்ரேமிகள், மிகவும் பாக்யசாலிகள் !
அந்தப் பசுக்கள், கோபாலகர்கள், பக்ஷிகள், நதி, மலை யாவும்
பாக்யம் செய்தவை !
அவைகளுக்கு நமஸ்காரங்கள்.
எல்லாவற்றுக்கும் முக்யமாக, க்ருஷ்ணப்ரேமிகளுக்கு,
ஆயிரம் தடவை நமஸ்காரத்தை அர்ப்பணிக்கிறேன்.
அவர்களின் கிருபையால், அடியேனுக்கு உன்னிடம் பக்தி—-கிருஷ்ண பக்தி—
அனவரதமும் வளர்ந்து, அடியேனைக்
க்ருதார்த்தனாக ஆக்கவேண்டும் )

21 வது அத்யாயம் நிறைவடைந்தது. ஸு ப ம்
——————————————————————————————————————————————–
.
தசமஸ்கந்தம்—நவீன பாணியில்—அத்யாயம் 22
———————-
கோபிகைகளின் காத்யாயினி வ்ரதம்——
ஸ்ரீ கிருஷ்ணன் அவர்கள் வஸ்த்ரங்களை அபகரித்தது—அனுக்ரஹித்தது.
——————————————————————————————————————————————

ஸ்ரீ சுகர் , பரீக்ஷித்துக்கு மேலும் சொல்கிறார்.
கிருஷ்ணா….கோபிகைகள் காத்யாயினி வ்ரதம் அனுஷ்டித்ததையும்,
யமுனையில் வஸ்த்ரமில்லாமல் குளித்ததால்,தேவதைகளுக்குச் செய்த அபசாரம் என்று,
நீ, அவர்களுக்கு உணர்த்தி, அந்தப் பாபம் போக, உன்னை வந்து வணங்கி
வஸ்த்ரங்களைப் பெற்றுக்கொள்ளச் சொன்னதையும் விவரிக்கிறார்.

ஹேமந்த ருதுவான மார்கழி மாதம் முதல்வாரத்தில்,
கோபிகைகளான கன்னிகைகள் —–உன்னைப் பதியாக அடைவதற்காக,
காத்யாயினி வ்ரதம் அநுஷ்டித்தார்கள்.
மார்கழி மாசத்தில், விடியற்காலையில் எழுந்து, யமுனையில் நீராடி,
அங்கு களிமண்ணால் காத்யாயினி உருவத்தைச் செய்து, சந்தன, குங்கும
த்ரவ்யங்களை இட்டு, ஆபரணங்களால் அலங்கரித்து,
கந்த புஷ்பங்களைச் சாற்றி, அக்ஷதை, தூப தீபங்களைச் சமர்ப்பித்து,
தேங்காய், பால் போன்றவைகளால் பிரசாதம் செய்து,
அதை -நைவேத்யம்செய்து, அர்ச்சித்து,
“ஹே….காத்யாயினி……மஹாமாயே….
ஈஸ்வரி….
நந்தகோப குமாரனான ஸ்ரீ கிருஷ்ணனை, எங்களுக்குப் பதியாக அளிப்பாய் ..
.உனக்குப் பல நமஸ்காரங்கள்…..” என்று சொல்லி,
பகல் ஒருவேளை மட்டில் ஸாத்விக ஆகாரமான
அக்னியில் சமர்ப்பிக்கப்படும் “சாரு ” போன்ற கஞ்சிப் பாயசத்தை அருந்தி,
இப்படியே பத்ரகாளியையும் பூஜித்து, தினந்தோறும் இப்படிப் பூஜை செய்து,
மாதக் கடைசியில், ——-மார்கழி நோன்பு எனச் சொல்லப்படும்
இதன் முடிவில், வ்ரதம் முடியும் நாளில், விடியற்காலையில்,
உன்னை ஸ்மரித்துக் கொண்டும், உன் கீதங்களைப் பாடிக் கொண்டும்,
தங்களுடைய வஸ்த்ரங்களை யெல்லாம் யமுனைக் கரையில் வைத்துவிட்டு,
யமுனை நதியில்இறங்கி ,கடுமையான குளிரில் தீர்த்தமாடினார்கள்.
இதை அறிந்த நீ, அவர்களுக்கு அநுக்ரஹம் செய்யத் தீர்மானித்தாய் .
அதே சமயம், வஸ்த்ரமில்லாமல் நீராடியது பாபமென்றும்,வ்ரதத்துக்குப்
பங்கமென்றும், அதைப்போக்கி அவர்களுக்கு வ்ரதபலனைக் கொடுக்கத் தீர்மானித்தாய்.
யமுனைக் கரைக்கு வந்து, அவர்களுடைய வஸ்த்ரங்களைஎல்லாம்
எடுத்துக் கொண்டு, கரையில் இருந்த கடம்ப மரத்தின் மேலேறி, அமர்ந்து,
“பெண்களே……நீங்கள் ஒருமாத காலம் வ்ரதம் அனுஷ்டித்துக் களைத்துப்
போய் இருக்கிறீர்கள்….ஒவ்வொருவராக இங்குவந்து, வஸ்த்ரங்களைப்
பெற்றுக் கொள்ளுங்கள்…..”என்றாய்.
கோபிகைகள், லஜ்ஜையினால், கழுத்தளவு ஜலத்தில் நின்றுகொண்டு ,
“ச்யாமசுந்தரா…..எங்களுக்குக் கெடுதல் செய்யாதே…
.நீ, நந்தகோபனின் ப்ரிய புத்ரன்….அவர் எங்கள் வணக்கத்துக்கு உரியவர்….
குளிரில் நடுங்கும் எங்களுக்கு வஸ்த்ரத்தைக்கொடு….
நாங்கள் உன் தாஸர்கள்…அடிமைகள்…
நீ சொல்லும் எல்லாக் கார்யங்களையும் செய்வோம் ..
.வஸ்த்ரங்களைக் கொடுத்துவிடு…..தராதுபோனால்,
நந்தகோபரிடம் சொல்வோம் ….’ என்றார்கள்.
அதற்கு, நீ, “எனக்குத் தாசர்கள்….சேவகர்கள் என்று சொல்லிவிட்டீர்கள்…
.இப்போது ஒவ்வொருவராக நதியிலிருந்து மேலே வந்து,
வஸ்த்ரங் களைப் பெற்றுக் கொள்ளுங்கள் ….” என்று சொன்னாய்.
கோபிகைகள், குளிரினால் நடுங்கிக்கொண்டு, யமுனை ஜலத்திலிருந்து
மேலே வந்து, வெட்கப் பட்டுக் கொண்டே, தலையைக் குனிந்து கொண்டு,
உன்னருகே வந்தார்கள்.
நீ, அவர்களிடம், “சுத்தமான வ்ரதம் இருந்தீர்கள்;
ஆனால், வஸ்த்ரமில்லாமல் தீர்த்தாமாடியது, தேவதைக்குச் செய்யும் அபசாரம்;
அந்தப் பாபம் போக, கைகளைக் கூப்பியபடி வந்து, வணங்கி,
வஸ்த்ரங்களைப் பெற்றுக்கொள்ளுங்கள் ; அதனால், உங்கள் பாபம் கழியும் …” என்றாய்.
இப்படி, நீ சொன்னதும், கோபிகைகள் வ்ரதத்துக்குப் பங்கம் வந்தது
என்பதை உணர்ந்து, யாருக்காக வ்ரதம் இருந்தார்களோ , அந்தக் கிருஷ்ணனாகிய நீயே
நேரில் வந்து, பாபத்துக்குப் பிராயச் சித்தம் செய்வதால்,
வ்ரதம் பூர்த்தி ஆகிறது என்று மனம் சமாதானம் அடைந்து, தலையைக் குனிந்து,
கைகளைக் கூப்பி, உன்னிடமிருந்து வஸ்த்ரங்களைப் பெற்றுக் கொண்டார்கள்.
வஸ்த்ரம் இல்லாததால் வெட்கம்; வஸ்த்ரம் கிடைத்ததால் சந்தோஷம் ;
கிருஷ்ணனே நேரில் வந்து அநுக்ரஹித்ததால் மனஸ் நிறைய கிருஷ்ணப் பிரேமை .
நீ , மேலும் கூறினாய். ” ஹே….சாத்விகளே…….உங்கள் சங்கல்பம், நிறைவேறும்….
.என்னிடம் உங்கள் மனஸ் அர்ப்பணிக்கப்பட்டதால், காமபோக ஆசைகள் விலகி,
என்னிடம் பக்தி செய்து, மீண்டும் மறுபிறவி இல்லாமல், என்னையே அடைவீர்கள் … ”
கோபிகைகள், லஜ்ஜையுடன், தங்கள் சங்கல்பம் நிறைவேறியது என்று பூரித்து,
உன்னுடைய திருவடிகளைத் த்யானம் செய்துகொண்டு,தங்கள் தங்கள் வீடுகளுக்குப்
போய்ச் சேர்ந்தார்கள்.
பிறகு, நீ, கோபர்கள் சூழ்ந்து வர, பிருந்தாவனத்திலிருந்து
பசுக்களை ஓட்டிக்கொண்டு, வெகு தூரம் சென்றாய். சூர்யனின் வெப்பம் கடுமையாக இருந்தது.
கோபர்கள் மரங்களின் நிழலில் ஒதுங்கிக் கொண்டே சென்றார்கள்.
மேலே, மரங்களின் கிளைகளும், இலைகளும் குடைகளைப் போலக் கவிந்து,
சூர்ய வெப்பம், உங்களை அதிகமாகத் தாக்காமல் தடுத்தது.

அப்போது, நீ, கோபர்களிடமும், பலராமனிடமும் பேசினாய்.
” இந்த மரங்கள் பிறருக்காக வாழ்கின்றன; காற்று,மழை, வெய்யில், பனி,
இவைகளைச் சகித்துக் கொண்டு, தங்களை அண்டியவர்களைக் காக்கின்றன ;
பசு,பக்ஷி, ராக்ஷசன், யக்ஷன், மிருகம் மனிதன் எல்லாரையும்
இந்த மரங்கள் காக்கின்றன; இலை, பழம், நிழல், அடிமரம்,
( சந்தனம், அகில் போன்றவை )வாஸனை, பால், பஸ்மம், இப்படிப் பலப்பலவாகக்
கொடுத்து, மனிதர்களின் ஆசையைப் பூர்த்தி செய்கிறது;
இதுதான் வாழ்க்கையின் ஸாரம்—-ஜன்ம சாபல்யம் —திரேகம் எடுத்தவை
பிறருக்காக வாழ்ந்து, தன்னை அழித்துக் கொண்டாவது,
பிறருக்கு உதவுவது உயர்ந்த சுப லக்ஷணம் .
தன்னுடைய ஆயுஸ், பணம், வாழ்க்கை ஜீவனம், புத்தி, வாக்கு, ப்ராணன்
இவைகள் பிறருக்கு உபயோகப்பட்டால், அதுவே ஸ்ரேயஸ்….”
இப்படிப் பேசிக்கொண்டே, நீ, பச்சைப் பசேலென்ற புல்வெளிப்
பிரதேசத்தை,அடைந்தாய். கோபர்கள் , யமுனையில்இறங்கி ஜலத்தை
அள்ளி அள்ளிக் குடித்தார்கள். அவர்களுக்குப் பசி. உன்னையும்,
பலராமனையும் அணுகி, பசிக்கிறது; ஆகாரம் வேண்டும் என்று பிரார்த்தித்தார்கள்.
22 வது அத்யாயம் நிறைவடைந்தது. ஸுபம்.

—————————————————————————————————————————

— தசமஸ்கந்தம் நவீன பாணியில் —– 23 வது அத்யாயம்
—————————
யக்ஜ பத்நிகளுக்கு அருளியது
————————————-
கோபர்களால், பசி என்றும், ஆகாரம் வேண்டும் என்றும்
பிரார்த்திக்கப் பட்டதும், நீ, ஆதுரத்துடன்அவற்றைக் கேட்டு,
கோபர்களிடம் பேசினாய்.
ஹே….மித்ரர்களே…… ப்ரஹ்மவாதிகள்…….ப்ராம்மணர்கள்…..
.ஸ்வர்க்கம் செல்லவேண்டும் என்கிற எண்ணத்துடன், “அங்கிரஸம் ”
என்கிற “ஸத்ர ” யாகத்தை, அதோ தெரியும் பர்ணசாலையில்…….யக்ஜ பூமியில்,
செய்துகொண்டு இருக்கிறார்கள். நீங்கள், அவர்களிடம்போய்,
நானும், பலராமனும் அனுப்பியதாகச் சொல்லி, “அன்னம் கொடுங்கள் ”
என்று கேளுங்கள் என்று சொன்னாய்.
கோபர்கள், அவ்விதமே செய்கிறோம் என்று உன்னிடம் சொல்லி,
யக்ஜவாடிகைக்குச் சென்று, பிராம்மணர்களை அஞ்சலி செய்து,
பூமியில் விழுந்து எழுந்திருந்து, “ஹே……பூதேவர்களே…..நாங்கள் பசுமாடுகளை
மேய்த்துக் களைத்துப்போய் இருக்கிறோம் எங்களுக்குச் சரியான பசி.
பலராமனுக்கும் ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் சரியான பசி.
அவர்களுடைய கட்டளைப்படி, உங்களுக்கு அவர்கள்மீது விசுவாசமும்
ச்ரத்தையும் இருக்கிறதென்றால், சாப்பிடுவதற்கு அன்னம் தந்து உதவுங்கள்
நீங்கள் தர்மம் அறிந்தவர்கள். யாகதீக்ஷையுடன், க்ருஹஸ்தன் ஹோமம் செய்யும்
அன்னத்தைச் சாப்பிடுபவர்களைப் போல , நீங்கள் கொடுக்கும் அன்னம்
தோஷத்தை ஏற்படுத்தாது. இது பகவத் ஆக்ஜை…. என்றார்கள்.

ஆனால்…..ஹே…கிருஷ்ணா….அந்தப் ப்ராம்மணர்கள்,
தங்களைப் பெரும் பண்டிதர்கள் என்று நினைத்து, ஸ்வர்க்கம் செல்வதிலேயே
ஆசையாக, கோபர்களுக்கு அன்னத்தைக் கொடுக்கவில்லை.
அந்தப் பண்டிதப் ப்ராம்மணர்கள்—–மூடர்கள். உன் நிஜ ஸ்வரூபத்தை அறியவில்லை.
உன்னை, சாதாரண மனுஷ்யக் குழந்தையாக நினைத்தார்கள்.
க்ருஷ்ணனான , நீயே—-பகவான் விஷ்ணு.;
நீயே யக்ஜ வபு; நீயே தேசம்; நீயே காலம்;
நீயே பூஜா த்ரவ்யம்; நீயே மந்த்ரம்; நீயே தந்த்ரம்;
நீயே ருத்விக்குகள் உச்சரிக்கும் மந்த்ரம்;
நீயே, ஹவிஸ் செய்யும் பொருள்; எந்தத் தேவதையைக்
குறித்து யாகம் செய்யப்படுகிறதோ, அந்தத் தேவதையின் அந்தராத்மா நீதான்;
நீயே, அந்த யாகத்தை அங்கீகரிக்கிறாய்; நீயே, அதற்கு உரிய பலனைக்
கொடுக்கிறாய்; நீயே ருத்விக்குகள்; நீயே, யாக தீக்ஷத யஜமானன்;
நீயே தர்மம்; நீயே யக்ஜமயம் ; நீயே பரப்ரஹ்மம்; நீயே, பூமியில் ஸ்ரீ கிருஷ்ணனாக
அவதரித்து இருக்கிறாய்; இவையெல்லாம் தெரியாமல், உன்னை,
மனுஷ்ய சிசுவாக நினைத்து, தேக, ஆத்ம, விவேகமில்லாத அந்தப் பண்டிதர்கள்,
உன்னை உபேக்ஷித்தனர். அன்னம் தருகிறேன் என்றோ,
தரமுடியாது என்றோ எந்தப் பதிலையும் கூறாமல் உதாசீனப் படுத்தினர்.
கோபர்கள், நிராசையுடன், ஏமாற்றமடைந்து,
உங்களிடம் வந்து நடந்ததைச் சொன்னார்கள்.

நீ சிரித்துக்கொண்டாய். கோபர்களைப் பார்த்து, மறுபடியும் கூறினாய்.
கோபர்களே…..என்னிடம் அன்பைச் செலுத்தி, மனஸ்ஸை அர்பணித்துள்ள
யக்ஜபத்னி களிடம் போய், நானும், சங்கர்ஷணனும் வந்திருக்கிறோம் என்று
சொல்லி, அவர்களிடம் கேளுங்கள்……
கோபர்கள், திரும்பவும் யக்ஜசாலைக்கு வந்தார்கள்;
யக்ஜபத்நிகளைப் பார்த்தார்கள்
“யக்ஜம்செய்யும் ரிஷிகளின் பத்நிகளே…..உங்களுக்கு எங்கள் நமஸ்காரங்கள்….
.நாங்கள் பசுக்களை மேய்ப்பவர்கள்; பசுக்களை மேய்த்துக்கொண்டு,
நாங்களும், பலராமனும், ஸ்ரீ கிருஷ்ணனும் இவ்வளவு தூரம் வந்து விட்டோம்;
எங்களுக்குப் பசிக்கிறது; ஸ்ரீ கிருஷ்ணனாலும், பலராமனாலும் அனுப்பப்பட்டு,
உங்களிடம் அன்னத்தை யாசித்து வந்திருக்கிறோம் ……என்றார்கள்

இந்த வார்த்தைகளைக் கேட்டார்களோ இல்லையோ, அடுத்த க்ஷணம்,
ரிஷிபத்னிகள், உன்னுடைய கதாம்ருதத்தால் மோஹிக்கப்பட்ட
அந்த உத்தம ஸ்திரீகள்,
ருசியானவை,
சூடானவையான நான்கு விதமான அன்னங்கள்,
பக்ஷணங்கள், ஆகியவைகளை எடுத்துக் கொண்டு புறப்பட்டார்கள்.
யாகம் செய்யும் ரிஷிகள் அவர்களைத் தடுத்தார்கள். பந்துக்கள் தடுத்தார்கள்;
சஹோதரர்கள் தடுத்தார்கள் . இப்படிப் பலரும் தடுத்தும்,
ரிஷிபத்னிகள் அவர்களை லக்ஷ்யம் செய்யவில்லை.
உன் கதாம்ருதத்தைப் பருகி, மனசைப் பறி கொடுத்து இருந்த அவர்கள்,
கோபர்கள் பின்னாலேயே அன்னம், பக்ஷணங்களைச் சுமந்துகொண்டு,
ஓடோடி நீ இருக்குமிடம் வந்து சேர்ந்தார்கள். உன்னைப் பார்த்தார்கள்;
அப்போது, நீ, எப்படி இருந்தாய் தெரியுமா !

ச்யாமள நிறம்; தங்கத்தால் ஆன பீதாம்பரத்தை
உடுத்திக் கொண்டிருந்தாய்; மார்பில் வனமாலை; தலையில் மயில் தோகை;
மற்றும் பலப்பல புஷ்பங்கள்; இலைகள்; காது ஓரங்களில் உத்பல புஷ்பங்கள்;
தாமரை வதனம்; அதில் புன்சிரிப்பு; புன்சிரிப்புடன் அவர்களைக் கடாக்ஷித்தாய்.
ஹே….கிருஷ்ணா…
அந்தக் கடாக்ஷ வீக்ஷிண்யத்தாலே ,ரிஷிபத்நிகளின் நெஞ்சம் நிரம்பியது.

ஹே….கிருஷ்ணா… நீ சர்வக்ஜன்….கணவன்மார்கள் தடுத்தபோதும்,
உன்னிடம் உள்ள பக்தியால் உன்னைப் பார்க்கும் ஆசையில்
ஓடோடி வந்து இருக்கிறார்கள். அவர்களிடம் நீ சொன்னாய்.

உங்களுக்கு நல்வரவு; நீங்கள் என் ஆத்மப் பிரியர்கள்;
உங்களது பிராணன், மனஸ், புத்தி, பதி, தனம் எல்லாவற்றையும்
என்னிடம் அர்ப்பணித்தீர்கள்;
நான் மிகவும் திருப்தி அடைந்தேன்; யக்ஜசாலைக்குத்திரும்புங்கள்;
உங்கள் பதிகள் யக்ஜத்தை நிறைவேற்றட்டும் .

அதற்கு , ரிஷிபத்னிகள், ஹே….பரமாத்மா…..நாங்கள்,
வெகு ஸ்ரமத்துடன் துளசி தாசர்களாக ஆகி இருக்கிறோம்;
உமது பாத பத்மங்களை அடைந்து, அங்குள்ள துளசியை ,
எங்கள் சிரஸ்ஸில் சூட்டிக்கொண்டிருக்கிறோம்;
அதை, உமது கால்களால் உதைத்ததுபோல் இருக்கிறது, உமது பேச்சு;
பந்துக்கள், மித்ரர்கள், பதிகள் இவர்கள் எல்லாரையும் விட்டு விட்டு,
நீயே கதி என்று வந்து விட்டோம்; இப்போது திரும்பிப்போனால்,
பிதாக்களோ, மாதாக்களோ, பந்துக்களோ ஒருவரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்;
உமது பாதங்களில் விழுந்து சரண் அடைந்த எங்களைக் காப்பாற்று;
உம்மைத்தவிர வேறு கதி இல்லை……..என்றார்கள்.

ஹே….ரிஷிபத்நிகளே…….உங்களுடைய கணவன்மார்களோ,
பந்துக்களோ, மேலே ஆகாசத்திலிருந்து பார்த்துக்கொண்டிருக்கும் தேவர்களோ,
எந்தக் குறையும் சொல்லமாட்டார்கள்;
என்னுடன் உங்கள் ஆத்மாவை ஐக்கியப் படுத்தினீர்கள்;
என் பாதஸ்பர்சம் பெற்றதால், உங்களுக்கு எந்தக் குறையும் இல்லை
என்று சொல்லி ஆசீர்வதித்தாய்.

ரிஷிபத்னிகள் ,திருப்தி அடைந்து, யாகசாலைக்குத் திரும்பினார்கள்.
ரிஷிகள் தங்கள் யாகத்தை நிறைவு செய்தார்கள். நீயும், பலராமனும், கோபர்களும் ,
ரிஷிபத்னிகள் கொண்டுவந்து கொடுத்த வைகளைச் சாப்பிட்டீர்கள்.
இப்போது, ரிஷிகளுக்கு, மனவருத்தம் ஏற்பட்டது.
பகவான் கட்டளையால், நம்மிடம் வந்த கோபர்களை உல்லங்கனம் செய்துவிட்டோமே….
ஆனால், இந்த ஸ்திரீகள் பக்தியினால், பகவானைத் தரிசித்து விட்டார்களே……
.நமது ஆத்மா நாசமடைந்து விட்டதே…..வேதங்களை ஓதி என்ன பயன்…
பிராம்மணப்பிறவி, யாகம் எல்லாம் வீணாகி விட்டதே…..
இது பகவான் செய்யும் மாயை என்று அறியாமல் இருந்து விட்டோமே…
.இந்த ஸ்த்ரீகளுக்கு,நம்மைப் போல எந்த சம்ஸ்காரமும் இல்லை;
வித்யை இல்லை; ஆனால், விலை மதிக்க முடியாத கிருஷ்ண பக்தி இருக்கிறது;
அது, நம்மிடம் இல்லாமல் போய் விட்டது…நாம், படித்தும் மூடர்கள்….
நல்லது,கெட்டது தெரியவில்லை…படிப்பு இருந்து என்ன பயன்..
நமது பக்தியினால், பகவானுக்கு என்ன லாபம் ? நமக்கல்லவா லாபம் !
அதை விட்டு விட்டோமே…பசிப்பதற்கு அன்னம் வேண்டுமென்று
பசிப்பவனைப்போல நடித்த , பகவானை
ஏமாற்றிவிட்டோமே….நமக்கு மோக்ஷம் கொடுக்கும் பிரபுவுக்கு,
அன்னம் கொடுக்காமல் இருந்து விட்டோமே…..
நமக்கு, ஹரி இல்லால், வேறு பகவான்இல்லை…
.குற்றங்களை மன்னிக்கும்படி பிரார்த்திப்போம்…..
ஸ்ரீ மஹா லக்ஷ்மி, பகவத் பக்தியைக் கொடுப்பவள்….புருஷகார பூதை….
அவளையும் பூஜிப்போம்…ஸ்ரீ கிருஷ்ணனே விஷ்ணு…..
அவரே, யோகிகளுக்கெல்லாம் மேலானவர்…
அவரே, ஸ்ரீ கிருஷ்ணனாக ,யது குலத்தில் அவதரித்து
இருக்கிறார் என்பதை அறியவில்லையே……
இந்தப் பேரறிவு, பத்நிகளால் அல்லவா வந்தது !
அவர்களைப் பத்நிகளாக அடைய நாம் பாக்யம் பெற்றவர்கள்…
அவர்களுடைய புத்தி, ஸ்ரீ கிருஷ்ணனிடம் பூரணமாக
அர்ப்பணிக்கப் பட்டதைப்போல நாமும் அர்ப்பணிப்போம்…..
எங்கள் குற்றங்களை மன்னியுங்கள் என்று பிரார்த்திப்போம்…
.ஸ்ரீ மஹா லக்ஷ்மியுடன் கூடிய ஸ்ரீ மஹா விஷ்ணுவை—–
ஸ்ரீ கிருஷ்ணனாக அவதரித்து இருப்பவனை நமஸ்கரிக்கிறோம்…
என்றார்கள்.

( ஹே….கிருஷ்ணா……அடியேனுக்குப் பண்டிதர்களான
பிராம்மணர்கள் வேண்டாம்…..வேதாந்திகள் வேண்டாம்…..யக்ஜ பத்நிகளை
குருவாக வரித்து, உன்னைச் சரண் அடைகிறேன்….
.இதற்கு, ஸ்ரீ சுகரும் பரீக்ஷித் ராஜனும் சாக்ஷி )

இப்படி, ஸ்ரீ கிருஷ்ணனை நமஸ்கரித்த பிராம்மணர்கள்,
உனக்குச் செய்த அவமானத்தாலும், கம்சனிடம் உள்ள பயத்தாலும்
, யாகசாலையை விட்டு வெளியே வரவில்லை.
அது அவர்கள் துர்பாக்கியம்

23 வது அத்யாயம் நிறை வடைந்தது. ஸு ப ம்
—————————————————————————————

தசமஸ்கந்தம் நவீன பாணியில்——அத்யாயம் 24
——————-
கோவர்த்தன கிரிக்கு பூஜை
—————————–
இப்படியாக, கோபாலகர்கள், கோபிகைகள், பசுக்கள் யாவரும்
நீயும், பலராமனும் செய்யும் லீலைகளை அனுபவித்துக்கொண்டு,சந்தோஷமாக
இருந்தார்கள். அப்போது ஒரு நாள்…….

இந்திரனைக் குறித்து யாகம் செய்வதற்காக, ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன.
இதை, நீ பார்த்தாய். இந்த யாகம் , யாருக்காக, எதற்காக என்று தெரிந்திருந்தும்,
(நீ பரமாத்மா அல்லவா ) நீ, நந்தகோபனைக் கேட்டாய்; பெரியவர்களைக் கேட்டாய்.
“கோலாகலமாக ஏற்பாடுகள் செய்கிறீர்களே,
யாருக்காக, எந்த பலனை உத்தேசித்து இப்படி ஏற்பாடுகள் செய்கிறீர்கள்?
பண்டிதர்கள், தீர்க்கமாக ஆலோசனை செய்து, கர்மாவைத் தொடங்கி
அதைச் செய்து, ஸித்தியை அடைகிறார்கள்;
அவிவேகிகள், ஆலோசனை செய்யாமல் கர்மாக்களைச் செய்தால்,
அந்தப் பலனை அடைவதில்லை;
ஆதலால், இந்தக் கோலாகலம் எதற்காக ….? ” என்று கேட்டாய்.

இதற்கு, நந்தகோபன் பதில் சொன்னார். “குமாரா…..நானும் மற்றவர்களும்,
இந்திரனை…..மேகங்களுக்கு அதிபதியாக இருப்பவனை….
.பூஜை செய்யப் போகிறோம்; இந்திரன், மழைக்குத் தேவதை;
மேகங்கள் அவனிடமிருந்து உண்டாகின்றன;
அவன் அருளால், மழை வர்ஷிக்கிறது; அதனால், கோக்கள், என்று
எல்லாருக்கும் சுபிக்ஷம் ஏற்படுகிறது;
தொன்றுதொட்டு, இதை நடத்தி வருகிறோம் ” என்றார்.

அதற்கு, நீ, இந்திரனுடைய கர்வத்தை அடக்குவதற்காக
மனத்துக்குள் தீர்மானித்து, பதில் சொன்னாய்.
” பிதாவே….ஒரு ஜீவன் கர்மாவினால் பிறக்கிறான்;
சுகம், துக்கம், பயம் எல்லாம் கர்மாவினால் ஏற்படுகிறது;
கர்மாவினாலேயே முடிவை அடைகிறான்;
பகவான், அந்தந்தக் கர்மாக்களுக்கு , அதற்கு உரிய பலனை அளிக்கிறார்;
அதனால், அவர்தான் பூஜிக்கப்படவேண்டும்;
இந்திரன், பகவான் அல்ல; கர்மாதான் எல்லாவற்றுக்கும் காரணம்;
கர்மாவுக்குக் குரு பகவான்; இந்திரன் அல்ல;
பகவானை விட்டு விட்டு, அந்நிய தேவதையைப் பூஜிபபது சரி அல்ல;
சத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய மூன்று குணங்களே
ஸ்திதி, உற்பத்தி, நாசம் ஆகிய மூன்றுக்கும் காரணம்;
ரஜோ குணத்தால், உலகம் பலவிதமாக விரிவடைகிறது;
உற்பத்திக்குக் காரணம், ரஜஸ்;
இதனால், மேகங்கள் வர்ஷிக்கின்றன; வர்ஷிக்கும் ஜலத்தால்
எல்லாப் பிராணிகளும் சந்தோஷம் அடைகின்றன;
இதில், இந்திரன் செய்வது என்ன இருக்கிறது ?
நாம், நித்யம் வனத்தில் சஞ்சரித்து, காடுகளிலும், மலையிலும்
பசுக்களை ஓட்டிக்கொண்டு திரிகிறோம்;
ஆகவே, ஆராதிக்கப்பட வேண்டியவை பசுக்கள், பிராம்மணர்கள்,
இதோ இந்தக் கோவர்த்தன மலை;
இப்போது சேகரித்து வைத்துள்ள த்ரவ்யங்களால், இந்த மூன்றையும் பூஜிப்போம்;
இந்திரனுக்கு வேண்டாம்; பிதாவே, நீங்கள் யாவரும் சம்மதித்தால்,
இப்படியே செய்வோம்; இதனால், பசுக்கள், பிராம்மணர்கள், கிரி மூவரும்
சந்தோஷித்து, நமது இஷ்டங்களைப் பூர்த்தி செய்வார்கள்;
இது என் அபிப்ராயம் ” என்று சொன்னாய்.

உன்னுடைய, இந்த யோசனையை, நந்தகோபரும், மற்ற கோபர்களும் கேட்டு,
“நல்லது, நல்லது….” என்று சொல்லி, பசுக்கள், பிராம்மணர்கள், கோவர்த்தனகிரி ……..
பூஜையை ஆரம்பித்தார்கள்.
இந்திரனுக்குச் செய்யவேண்டிய யாகத்துக்காக சேமிக்கப்பட்ட த்ரவ்யங்கள்
இவைகளுக்கு உபயோகப்பட்டன. பிராம்மணர்கள், சந்தோஷித்து, ஆசீர்வாதம் செய்தார்கள்.
நீ, பெரிய ரூபமாக எடுத்து, நானே கோவர்த்தன கிரி என்று சொல்லி,
எல்லாவற்றையும் சாப்பிட்டாய். கோபர்கள் நமஸ்கரித்தனர்.
அவர்களுடன் சேர்ந்து, நீயும் பூஜித்து, “பெரிய ரூபத்தைப் பாருங்கள்….நாம் கொடுக்கும்
பூஜை த்ரவ்யங்களை ஏற்று, நம்மை, இந்தக் கோவர்த்தன கிரி அனுக்ரஹிக்கிறது ;
எவர்கள் தன்னை மரியாதை செய்யவில்லையோ அவர்களைக் கொல்கிறது;
நம்முடைய நலன், பசுக்களுடைய நலம் இவற்றுக்காக கோவர்த்தன கிரியைப்
பூஜித்து வணங்குவோம் …..” என்றாய். எல்லோரும், அப்படியே கிரியைப் பூஜித்தனர்
. பிறகு, அவரவர் வீடு திரும்பினர்.

24 வது அத்யாயம் நிறைவடைந்தது. ஸு ப ம்

கோவர்த்தனகிரிதாரி
——————————
இந்திரனுக்குப் பிரமாதமான கோபம்; தனக்குச் செய்ய வேண்டிய பூஜையை வழக்கம்போலச் ெய்யாமல்,மலைக்குச் செய்ததால் இந்தக் கோபம்.
ஸம்வர்த்தகம் என்கிற மேகக் கூட்டங்களைக் கூப்பிட்டான்;
“”கோபர்களுக்கு மிகவும் மதம் பிடித்து விட்டது;கர்வம் அவர்களுக்கு; கிருஷ்ணன் என்கிற ஒரு சாதாரண மனிதக் குழந்தையின் சொல்லைக் கேட்டு
என்னை அலட்சியம் செய்துவிட்டனர்;
கர்மவசப்பட்ட சாமான்ய மனுஷ்யர்கள்,தங்களைப் பண்டிதர்களாக நினைத்து, சம்சாரத்தைத் தாண்டும் செயல் போல இது இருக்கிறது;
செல்வச் செருக்காலே என்னை அவமதித்து,
அற்ப மானிடப் பையன் —-மூடன்——தன்னைப் பண்டிதன் என்று நினைத்து இறுமாப்புடன் உள்ள இந்தக் கிருஷ்ணனின் பேச்சை நம்பிஎனக்கு அநீதி செய்கிறார்கள்; நீங்கள் கூட்டமாகச் சென்று,பிரளய காலத்தில் எப்படி மழையாகப் பொழிவீர்களோ அப்படி மழையைப் பொழிந்து சர்வ நாசத்தை உண்டாக்குங்கள் “” என்று கட்டளை இட்டான்.

ஹே……கிருஷ்ணா….உன்னை , இன்னாரென்று இந்திரன் அறியவில்லை
. ஸம்வர்த்தகம் என்கிற அந்த மேகக் கூட்டங்கள், இந்திரனின் ஆணைப்படி, அசுர வேகத்துடன் இடியும் மின்னலுமாக தாரை தாரையாக பலத்த காற்றுடன்
ஆலங்கட்டியாக ,கற்களை வர்ஷிப்பதுபோல இடைவிடாமல் மழையைப் பொழிந்தன
. வ்ரஜபூமி முழுவதும் வெள்ளக்காடு ஆகக் காக்ஷி அளித்தது.
கோபர்களும்,கோபியர்களும் , பசுக்களும் நடுநடுங்கினர்;
ஹே கிருஷ்ணா—–ஹே கிருஷ்ணா —உன் பாதங்களைச் சரண் அடைந்தோம்; பக்தவத்சலா —-நீதான் துணை—நீதான் எங்களைக் காக்க வேண்டும் என்று உன்னை அடைக்கலமாக வந்து சரண் அடைந்தனர்;பலத்த காற்று, கல்மழை , வெள்ளப் பெருக்குஇவைகளை நீ பார்த்தாய்.
சரி, இது இந்திரனின் கோபத்தால் விளைந்த செயல் என்று அறிந்தாய். இதற்கு ஒரு மாற்று உபாயம் தேடி ,தங்களை சர்வ லோகங்களுக்கும் அதிபதி
என்று நினைத்து, மூடத்தனத்தினால் எதிர்ப்பவர்களை சிக்ஷிக்கிறேன் என்று சங்கல்பித்தாய்

. யோக சக்தியால் இவர்களை காப்பாற்ற வேண்டும் என்று தீர்மானித்தாய்.
சரணம் என்று சொன்னவர்களை—–சரணம் என்று வந்தவர்களை——
காப்பாற்றுவது உன் வ்ரதம் அல்லவா !
இப்படி உனக்குள் சங்கல்பித்து, மழையில் தோன்றி இருக்கும் காளானை எடுப்பது போல ஒரு கையால் கோவர்த்தன கிரியை ,அடித் தளத்தோடு பெயர்த்து எடுத்து,உன்னுடைய இடது கையின் சுண்டு விரலால் தாங்கி , உயரத் தூக்கி, உரக்கச் சொன்னாய்
ஹே–கோபர்களே,கோபியர்களே—-வயதானவர்கள், இளம் சிறார்கள் , பசுக்கள், கன்றுகள் எல்லாரும் உங்கள் உடைமைகளுடன் ,இந்தக் குடையின் கீழே வாருங்கள், உங்களுக்கு எந்தப் பயமும் வேண்டாம்,
மலை நழுவி விழுந்து விடுமோ பலத்த காற்று அடித்துக்கொண்டு போய்விடுமோ ,மழைவெள்ளம் உயிரைப் பறித்து விடுமோ என்கிற எந்தப் பயமும் வேண்டாம், சரணம் என்றவர்களைக் காப்பாற்றுவது
என் வ்ரதம், உங்கள் எல்லாருக்கும் அபயம் அளிக்கிறேன் —-“என்றாய்

உடனே, கோபர்கள், கோபியர்கள் வயதான ஸ்திரீ புருஷர்கள் , நந்தகோபன் யசோதை ரோஹிணீ பசுக்கூட்டங்கள் வண்டிகள் இவர்களின் உடைமைகள் என்று எல்லாமே கோவர்த்தன கிரியின்அடியிலே புகுந்தனர். உன்னுடைய தர்சனம், கடாக்ஷ வீக்ஷிண்யம்
இவற்றாலே அவர்களுக்கு இயற்கையாக ஏற்படும் பசி இல்லை;தாகம் இல்லை;. மிகவும் சௌகர்யமாக , ஒருநாள், அல்ல,
இருநாட்கள் அல்ல—–ஏழு நாட்கள், கோவர்த்தன மலையின் அடியில் –உன் திருவடி நிழலில் , எவ்வித பாதிப்பும் இன்றி இருந்தனர்.
( ஹே—கிருஷ்ணா—உன் கருணை வெள்ளத்தின் முன்னே ,இந்திரனின் மழை வெள்ளம் என்ன தீங்கு செய்ய இயலும் !
ஹே—கிரிதாரி—-கிரிதரகோபாலா—-உன்னை ஆயிரமாயிரம் தடவை நமஸ்கரிக்கிறேன்—இவை போன்ற ஆபத்துக்களில் இருந்து , நீதான் காப்பாற்ற வேண்டும் )

இந்திரன் கலங்கி விட்டான்; பயத்தால் நடுங்கி விட்டான்;
தன்னுடைய தவறுக்கு வருந்தினான்;
மேகங்களைத் திருப்பிப் போகும்படி உத்தரவிட்டான்.
மழை நின்றது ; காற்று அடங்கியது; சூர்யன் தோன்றினான்
நீ, கோபர்கள் எல்லாரிடமும் , இனிமேல் நீங்கள் வ்ரஜ பூமிக்கு—விருந்தாவனத்துக்குச் செல்லலாம் என்று சொன்னாய்.

யசோதையும் நந்தகோபனும் ரோஹிணியும் வ்ருத்தர்களானகோபர்களும் கோபிகைகளும் உனக்குத் திருஷ்டி கழித்து,அக்ஷதை புஷ்பங்கள் தூவி ஆசீர்வதித்தனர்.
பலராமனும் ஆலிங்கனம் செய்து ஆசீர்வதித்தான்.
இவற்றைக் கண்ட தேவ கணங்கள் ஆகாயத்திலே
வாத்தியங்களை வாசித்தார்கள். உன்மீது புஷ்பமாரி பொழிந்தார்கள். கோபர்கள் அவர்களும் வண்டிகள், உடைமைகள் பசுக்கள் இவைகளுடன் தத்தம் இருப்பிடத்துக்குத் திரும்பினார்கள்.
நீ, அந்த மலையை , பழைய இடத்திலேயே வைத்தாய்;
இந்த அதி மானுஷச் செயலை எல்லாரும் பார்த்தார்கள்;
அடியேனும் இப்போது மனக் கண்ணால் பார்த்தேன்
( குன்றம் ஏந்திக் குளிர் மழையிலிருந்து கோக்களையும்
கோபர்களையும் காத்த கிரிதாரி—–ஆண்டாள் பாசுரம் இயற்றி ஆநிரை காத்தவனே என்று புகழந்த உன்னை—-
மீரா பூஜித்த உன்னை —எத்தனை தடவை நமஸ்கரித்தாலும் —
அடியேனின் ஆத்மா திருப்தி அடையவில்லை )

நீயும் விருந்தாவனத்தை அடைந்தாய் ஆனந்த பரவசர்களான கோபிகைகள்,
உன்னுடைய பெருமைகளைப் பாடி, உன்னை எப்போதும் போல ஹ்ருதயத்தில் தரித்தார்கள்
25 வது அத்யாயம் நிறைவடைந்தது —–சுபம்

—————————————————————————

தசமஸ்கந்தம்——நவீன பாணியில்—-அத்யாயம்—-26
—————-

ஸ்ரீ கிருஷ்ணனின் பெருமைகள்—-நந்தகோபன் கொண்டாடுதல்
—————————————————————————————-
(முக்ய விஷயம் :—- சென்ற அத்யாயத்தில், ஸ்ரீ கிருஷ்ணனைச் சரணம் என்று அடையாத
பசுக்களும் கன்றுகளும் ,அசேதனப் பொருட்களும் ,ஸ்ரீ கிருஷ்ணனால் காப்பா ற்றப்பட்டன
என்று பார்த்தோம். இது எப்படி என்று கேட்கிறார்கள்.
காலக்ஷேபம் கேட்டவர்களுக்கு, இதற்கு பதில் தெரியும். )
—————————————————————————————————————————————-
கோபர்கள் ஆச்சர்யப்பட்டார்கள்; கோப ஸ்திரீகள் வியந்து போனார்கள்;
உன்னுடைய அமானுஷ்ய செயல்கள் அவர்களைப் பிரமிக்க வைத்தது
.நம்முடைய கண்ணனா இப்படி வியப்பான செயல்களைச் செய்வது ?
இவன் எல்லாக் குழந்தைகளைப்போல சாதாரண பாலகன் இல்லை ;
ஆனால், நினைப்பதற்கே வெட்கப்படும் ஏழைகளான நம்மிடையே இவன் இங்கு வந்து பிறந்து , வளர்வதற்குக் காரணம் என்ன ?
ஏழு வயதுகூட நிரம்பாத சின்னஞ்சிறு பாலகன், ஒரு பெரிய மலையைப் பெயர்த்து எடுத்து,
இடதுகை சுண்டுவிரலால் அனாயாசமாக ஏழுநாட்கள் தாங்கிக்கொண்டு ,நம்மையெல்லாம் பாதுகாத்தான்; ஆச்சர்யம்

சின்னஞ்சிறு சிசுவாக இருந்தபோது, மகாபலம் கொண்ட பூதனையை ஸ்தன்யபானம் செய்யும் பாவனையில், பாதிக் கண்களை மூடிக்கொண்டு ,
அவள் உயிரையே உறிஞ்சி அவளை முடித்தான்; ஆச்சர்யம்

மூன்றுமாதக் குழந்தையாக இருந்தபோது, தொட்டிலில் படுத்துக்கொண்டே ,தொட்டிலுக்கு அடியில் வண்டி—-சகடம் உருவில் ,தன்னைக் கொல்ல வந்திருந்த அசுரனை ,திருவடியால் உதைத்து ,
அவனை அழித்தான்;ஆச்சர்யம்

ஒருவயதுகூட நிரம்பாத சமயத்தில், தரையில் உட்கார்ந்து விளையாடிக்கொண்டிருந்த கிருஷ்ணனை, சுழற்காற்று ரூபத்தில் வந்து தூக்கிக் கொண்டுபோய்க் கொல்ல முயற்சித்த திருணாவர்த்தன் என்கிற அசுரனை ,
அவனது கழுத்தைக் கட்டிக்கொண்டே ,கழுத்தை நெறித்துக்கொன்றான்; ஆச்சர்யம்

யசோதை தாம்புக் கயிற்றால் கிருஷ்ணனை, உரலோடு கட்டியிருந்த சமயத்தில் ,உரலையும் சேர்த்து இழுத்துக் கொண்டுபோய் இரண்டு மரங்களுக்கு நடுவில் புகுந்து
உரலை அவற்றின் நடுவே இழுத்து, இரண்டு மரங்களையும் வேரோடு சாய்த்தான்;ஆச்சர்யம்

கோபாலகர்களும் ,பலராமனும் சூழ்ந்து இருக்க, ஒரு அசுரன் கொக்கு வடிவத்தில் வந்து இவனைமட்டில் கொத்தி எடுத்துச் செல்ல, கிருஷ்ணன் அந்தக் கொக்கின்
இரு அலகுகளையும் பிளந்து அந்த அசுரனை முடித்தான்; ஆச்சர்யம்

இன்னொரு சமயம் இதேபோல பசுக்களை மேய்க்கும்போது,கன்றுக்குட்டி உருவில் வந்து இவனைக் கொல்ல நெருங்கிய அசுரனின் இருகால்களைப் பிடித்து விளாமரத்தின்மீது வீசி அந்த அசுரனைக் கொன்றான்; ஆச்சர்யம்

பலராமனும் கிருஷ்ணனும் பனங்காட்டில் ஒருசமயம் விளையாடிக்கொண்டிருந்தபோது,கழுதை உருவில் வந்து கிருஷ்ணனைக் கொல்ல நெருங்கிய
தேனுகாசுரனைக் கொன்றான்; ஆச்சர்யம்

ஒரு சமயம்,பிரலம்பன் என்கிற அசுரன் பலராமனால் கொல்லப்பட்டான்;கோபாலகர்கள் காட்டுத் தீயால் சூழப்பட்டு நடுங்கிய வேளையில்
கிருஷ்ணன் இவர்களையும் பசுக்களையும் காட்டுத்தீயிலிருந்து காப்பாற்றினான்; ஆச்சர்யம்

பிறிதொரு சமயம், சர்ப்பராஜனான காளியனை அடக்கி ,
யமுனையிலிருந்து அவனையும் மற்ற சர்ப்பங்களையும் அகற்றி,யமுாதீர்த்தம் பசு பக்ஷி மரம் மனிதர்கள் யாவருக்கும்
உபயோகப்படும்படி செய்தான் ; ஆச்சர்யம்

இப்போது, ஒரு சுண்டு விரலால் மிகப் பெரிய மலையான கோவர்த்தன கிரியை எடுத்துத் தூக்கிப் பிடித்து ஏழுநாட்கள் அதை—அந்த மலையைக்
குடைபோலத் தாங்கி எங்கள் எல்லாரையும் காப்பாற்றினான்; அதி ஆச்சர்யம்

ஹே நந்தகோபா, ஹே யசோதா—–இந்தக் கிருஷ்ணன் ,உங்களுக்குமட்டில் புத்ரன் அல்ல
, எங்கள் புத்ரனைப்போல அன்புடன் அவனை நாங்கள் நேசிக்கிறோம்;
இவன் சாதாரண பாலகன் இல்லை; அதிமானுஷச் செயல்களைச் செய்கிறான்;
இவன் அந்த பகவான்தான் என்று கோபர்கள் கூறினார்கள்.

அதற்கு , நந்தகோபன்
கோபர்களே,கிருஷ்ணனின் சின்னஞ்சிறு வயதிலேயே , கர்க்கரிஷி இங்கு வந்திருந்து,இந்தக் குழந்தை, ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு வர்ணத்துடன்
பல ரூபங்களில் பிறந்து இருக்கிறான்; கருப்பு வர்ணத்துடன், இவன் வசுதேவருடைய க்ருஹத்தில் பிறந்தான்;இவனுக்குப் பல ரூபங்கள், பல நாமங்கள் உண்டு ;அவைகளை நான் அறிவேன்; மற்றவர்கள் அறியமாட்டார்கள்; இந்தக் குழந்தை உங்களுக்கு, கோகுல வாசிகளுக்கு நன்மை யை அளிப்பான்;
ஆனந்தத்தை அளிப்பான்; இவனால் உங்கள் அனைவர்க்கும் வரும் கஷ்டங்கள் விலகும்;
ஆபத்துக்கள் அகலும்; இவனிடம் அன்பு செலுத்துபவர்கள் பாக்யசாலிகள்;
அவர்களை எந்த எதிரியாலும் வெல்ல முடியாது;
எவனைக் கீர்த்தனம் செய்வதாலும், கதாம்ருதத்தைக் கேட்பதாலும் எல்லாப் பாபங்களும் தொலைந்து நற்கதி ஏற்படுமோ அவனே உனக்குக் குழந்தையாக வந்து இருக்கிறான்
இப்படியாக,ஸ்ரீ கர்க்காசார்யர் என்னிடம் சொன்ன நாளிலிருந்து,கிருஷ்ணனை என் பிள்ளையாகப் பார்ப்பதில்லை;
சாக்ஷாத் ஸ்ரீ நாராயணனின் அம்சமாகவே பார்க்கிறேன் ;
நம் துன்பங்களைப் போக்க வந்த பிரபுவாகக் கருதுகிறேன்என்று நாத்தழுதழுக்க, மெய்சிலிர்க்க விரித்து ரைத்தான் .

ஹே—-கிருஷ்ணா—-கோபர்கள்
மிக மிக ஆ ச்சர்யப்பட்டார்கள்.
நந்தகோப னையும் யசோதையையும் உன்னையும் மிகவும் கொண்டாடினார்கள்.
உன்னை வேண்டிக்கொண்டார்கள்
ஹே,பிரபோ,எப்போதும் எங்களுக்கு அநுக்ரஹ ம் செய்யவேண்டும்;
இந்திரன் கோபித்து ,இடி மின்னலுடன் பெரிய மழையை உண்டாக்கிஎங்களை அழிக்க முற்பட்டபோது, கோவர்த்தனகிரியை அனாயாசமாகப்
பெயர்த்து எடுத்து ,இடது சுண்டு விரலால் தூக்கி நிறுத்தி ஏழுநாட்கள் எங்களுக்கு எவ்வித ஸ்ரமமும் இன்றி எங்களையும் பசுக்களையும்கன்றுகளையும் ரக்ஷித்தீரே
உமக்கு ஆயிரமாயிரம் நமஸ்காரங்கள் என்று கண்ணீர் மல்கஉனக்கு நமஸ்காரங்களைச் செய்தார்கள்

( அந்தக் கோபர்களை அடியேன் நமஸ்கரிக்கிறேன்—–நந்தகோபரையும் யசோதையையும் நமஸ்கரிக்கிறேன்—-அவர்களை முன்னிட்டுஉன்னை ஆயிரமாயிர முறை நமஸ்கரிக்கிறேன் )

26 வது அத்யாயம் நிறைவடைந்தது. சுபம்

—————————————————————————-

தசமஸ்கந்தம்——-நவீன பாணியில்—-அத்யாயம் 27
——————

இந்திரனின் ஸ்துதி—–காமதேனுவின் ஸ்துதி–கோவிந்த பட்டாபிஷேகம்
————————————————————————
வ்ரஜபூமி வாசிகளையும்,பசுக்களையும் , கோவர்த்தன மலையை குடையாகப் பிடித்து
நீ காப்பாற்றியதைப் பார்த்த காமதேனு என்கிற பசு தேவலோகத்தில் இருந்துஇங்கு உன்னிடம் வந்தது.இந்திரன் யோசித்தான்; தன் செயலுக்கு
மிகவும் வெட்கப்பட்டான்; அவனும் ,நீ தனியாக இருக்கும் சமயத்தை எதிர்பார்த்துக் காத்து இருந்து ,தேவ லோகத்தில் இருந்து கீழிறங்கிஉன் இருப்பிடம் வந்தான்.

அவனுடைய தலைக் கிரீடம் பூமியில் படியும்படிகீழே விழுந்துஉன்னை நமஸ்கரித்தான். உன்னை அஞ்சலி செய்தான். ஸ்தோத்ரம் செய்யத் தொடங்கினான்

ஹே—பிரபோ—–உமது ஸ்வரூபம், விசுத்தஸத்வம்—-
-இந்த உலகம் உம்மிடமிருந்து தோன்றினாலும், அதன் தோஷங்கள் உம்மை அண்டாது;
மனுஷ்யர்களுக்கு ஏற்படும் மறுபிறப்பு, லோபம், தேகத்தையே ஆத்மாவாகக்கண்டு பிரமித்தல் இவை யாவும் சம்சாரிகளுக்கு அடையாளங்கள்;
நீர் பகவான்; உம்மிடம் இந்த தோஷங்கள் கிடையாது;
நீர் சர்வ நியந்தா; தவறு செய்பவர்களைத் தண்டிக்கும் சக்தி பெற்றவர்;
நீரே எங்களுக்குப் பிதா;
நீரே எங்களுக்குக் குரு;
நீர்,யாராலாலும் ஜெயிக்கப்பட முடியாதவர்;
உலக க்ஷேமத்துக்காக ,மனுஷ்ய தேகத்தை எடுத்துக் கொண்டு இருக்கிறீர்;
நிஜ ஸ்வரூபத்தை மறைத்துக் கொண்டு இருக்கிறீர்;
மதம்—கர்வம் கொண்ட என்னைப் போன்றவர்களின் கர்வத்தை அழிக்கிறீர்;
நாங்கள்,அற்ப புத்திசாலிகள்; உம்மை அலட்சியப்படுத்தி இருக்கிறோம்;
அதைப் பொருட்படுத்தாமல் ,பிரார்த்திக்கும்போது அபாயத்தை அளிக்கிறீர்;
அதனால்,உம்மிடம் பக்தி மேலோங்குகிறது;
நாங்கள் ஜகத்துக்கு ஈசர்கள் என்கிற அபிமானம் அழிகிறது;
உமது கட்டளையை சிரமேற் கொள்கிறோம்;
கர்வத்தில் மிதந்த எனக்கு, உமது பிரபாவம் எளிதில் புலப்படவில்லை;
அபராதம் செய்துவிட்டேன்;
ஹே—பிரபோ—எங்களை மன்னிப்பீர்களாக ;

மீண்டும் அதே குற்றத்தைச் செய்யாதபடி நல்ல புத்தியை அளிப்பீராக;
உம்மைப் பலதடவை நமஸ்கரிக்கிறேன்;
வாசுதேவருக்கு நமஸ்காரம்—கிருஷ்ணருக்கு நமஸ்காரம்;
உமது ரூபம் உமது சங்கல்பத்தால், பக்தர்களை அனுக்ரஹிக்க ஏற்பட்டது;
விசுத்த ஞான மூர்த்தியான உமக்குப் பல நமஸ்காரங்கள்
; உமது சர்வஸ்மைக்கு நமஸ்காரம்;
சர்வத்துக்கும் ஆதிபீஜமாக ,உபாதான காரணமாக உள்ள உமக்கு நமஸ்காரம்;
அனைத்து ஆத்மாக்களையும் சரீரமாகக் கொண்டு அவற்றுக்கு ஆத்மாவாக
விளங்கும் உமக்கு நமஸ்காரம்; என் அஹங்காரச் செயலாகிற
வ்ரஜா பூமியை நாசம் செய்கிறேன் என்கிறகெட்ட புத்தியைப் பொறுத்துக் கொண்டு,
எனக்கு அருள் புரிவீராக;

என் அஹங்காரம் அழிந்தது; கர்வம் தொலைந்தது; நீரே எனக்கு ஈஸ்வரர்;
நீரே எனக்குக் குரு; நீரே பரமாத்மா; உம்மை நான் சரணமடைகிறேன்;
ரக்ஷியுங்கள்; ரக்ஷியுங்கள்.
என்று பலவாறு துதித்து ,இந்திரன் பிரார்த்தித்தான்.

ஹே—கிருஷ்ணா—நீ,அதற்கு என்ன சொன்னாய் என்பதை ஸ்ரீ சுகர் அருளியதை
உனக்கு இப்போது நினைவுபடுத்துகிறேன்

ஹே,இந்திரா—உனக்கு நல்ல புத்தி ஏற்பட்டு, எப்போதும் என் சிந்தனையோடு நீ இருக்கவேண்டும் என்பதற்காக இந்த லீலை செய்யப்பட்டது;
எவர்கள் ஐஸ்வர்யத்தால் மதம் பிடித்து அலைகிறார்களோ,என்னைப் பக்தி செய்யாமல் இருக்கிறார்களோ
அவர்களின் பதவியைப் பறித்துக் கீழே தள்ளுகிறேன்;
ஐஸ்வர்யத்தை அழிக்கிறேன்;
இதுவும் என்னால் அவர்களுக்குக் காட்டப்படும் அநுக்ரஹம்;உனக்குக் க்ஷேமம் உண்டாகட்டும்; நீ போகலாம்என்று சொன்னாய்.

( ஹே—-கிருஷ்ணா —-அடியேனும் இந்திரனைப்போல கர்வம்கொண்டுஅலைபவன்தான்; அடியேனையும் சதா உன் சிந்தனையிலேயேஇருக்கும்படி அடியேனை ஆக்கி அருள் புரிய வேண்டுகிறேன் )

காமதேனு என்கிற தேவலோகத்துப் பசு இதைப் பார்த்துக்கொண்டே இருந்தாள்.
அவள், உன் அருகில் வந்து உன்னை நமஸ்கரித்தாள்.
தன் மனத்தால் எதையும் செய்யும் வல்லவளான கோமாதா, தன் சந்தானங்களுடன் வந்து உன்னை நமஸ்கரித்து, ஸ்துதி செய்தாள்.

காமதேனு ஸ்துதி
——————————–
கிருஷ்ண—-கிருஷ்ண—-மஹா யோகின்—-
விஸ்வாத்ம ன்—- விஸ்வ சம்பவ—
அனாதர்களாகிய நாங்கள் உம்மால் காப்பாற்றப்பட்டோம் ;
நீர் எங்களுக்கு நாதர்— சகல லோக நாதர்;
அச்யுதா —உம்மை அடிக்கடி நமஸ்கரிக்கிறோம்—-
சதா எங்களைக் காக்கும்படி வேண்டுகிறோம்;
உம்முடைய க்ருபை, தேவர்கள், சாதுக்கள் கோக்கள் எல்லோருக்கும் கிடைக்கிறது;
அவர்களுடைய க்ஷேமத்துக்காக எங்களுக்கும் க்ருபை செய்வீராக;
நீர்,எங்களுக்கு எப்போதும் பதி;
ப்ரும்மாவினால் கட்டளை இடப்பட்ட நாங்கள், உம்மை,
பசுக்களின் நாயகனாக—-இந்திரனாக வரிக்கிறோம் .
இந்தப்பூவுலகில், நீர் ,எங்களை அனுக்ரஹித்து கோவிந்தனாக இருக்கிறீர்,
பூபாரம் ஒழியப்போகிறது, இதனால், நாங்கள், உம்மை கோவிந்தராக
அபிஷேகம் செய்து வணங்குகிறோம்

இவ்வாறு காமதேனு சொல்லி, தன் பால் அம்ருதவர்ஷத்தால்
உன்னை நன்கு நனைத்தாள். இந்திரன்,ஆகாச கங்கையிலிருந்து,
ஐராவதத்தால் ,புண்ய ஜலத்தை எடுத்து வரச் செய்து,
உன்னை அபிஷேகம் செய்தான்.
தேவமாதாக்களானஅதிதி போன்றவர் உடன் இருக்க,
தேவர்கள் ரிஷிகள் அருகில் இருக்க,
இந்திரன் உனக்கு கோவிந்த பட்டாபிஷேகம் செய்தான்
.
தும்புரு, நாரதர், வித்யாதரர்கள், கந்தர்வர்கள், சித்தர்கள் ஆடிப் பாடினார்கள்.
கோவிந்தநாமாவைச்சொல்லி ,அடிக்கடிப் பலதடவை சங்கீர்த்தனம் செய்துபுஷ்பங்களால் அர்ச்சித்து அதி சந்தோஷத்துடன் உன் பாதங்களை நமஸ்கரித்தார்கள்.
இந்திரனும், காமதேனுவும் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக உன்னை அர்ச்சித்து நமஸ்கரித்தார்கள்.

இச்சமயத்தில், மரங்கள் தேனைச் சொரிந்தன; புஷ்பங்களை வர்ஷித்தன;
இவ்விதம் உனக்கு, கிருஷ்ணனாகிய உனக்கு கோவிந்த பட்டாபிஷேகம் நடந்தது.
உன்னால் அனுமதி கொடுக்கப்பட்டஇந்திரன் மிகுந்த சந்தோஷத்துடன் தேவர்கள் சூழ ,தேவலோகம் சென்றான்.

(ஹே, கிருஷ்ணா —கோவிந்தா—-உனக்கு ஆயிரம் கோடி நமஸ்காரங்கள்—-
கோவிந்தா என்று அழைத்த காமதேனுவுக்கு அநேக நமஸ்காரங்கள்—-
பட்டாபிஷேகம் செய்த இந்திரனுக்கு அநேக நமஸ்காரங்கள் )

27 வது அத்யாயம் நிறைவடைந்தது. சுபம்

————————————————————————————————-

தசமஸ்கந்தம் நவீன பாணியில்—-அத்யாயம் 28
—————————-
ஸ்ரீ கிருஷ்ணன், நந்தகோபரை வருண லோகத்திலிருந்து மீட்டது
—————————————————————————————————-
ஒரு சமயம், நந்தகோபர், வழக்கமான ஏகாதசி வ்ரதமிருந்து, பகவானைப் பூஜித்தார்.
த்வாதசி பாரணைக்காக யமுனா நதியில் தீர்த்தமாடச் சென்றார்.
அவர் ஜலத்தில் இறங்கியதும், வருணனுடைய ஏவலாள் ,நந்தகோபரைஅசுரன் என்று தவறாக நினைத்து, அவரை வருண லோகத்துக்குஇழுத்துச் சென்று விட்டான்,. அசுரர்களின் காலம் இரவு;
இவர் தீர்த்தமாடச் சென்றது பின்னிரவு நேரம்;
இதனை நந்தகோபரும் அறியவில்லை;
நந்தகோபரைக் காணாமல், வ்ரஜ பூமியில் எல்லாரும் கதறினார்கள்.
நீ அந்தக் கதறலைக் கேட்டாய். உடனே உனக்கு, உன் பிதாவருணலோகத்துக்குக்கொண்டுபோகப்பட்டது ,தெரிந்தது.
உடனே, நீ வருண லோகத்துக்குச் சென்றாய்.
உன் விஜயத்தை எதிர்பார்க்காத வருணன்,
உன்னை, மரியாதையுடன் மகத்தான பூஜை செய்து வரவேற்றான்.

“ஹே, பிரபோ—-இன்றுதான் அடியேனின் வாழ்வு சபலம் அடைந்தது; பெரிய பொக்கிஷம் கிடைத்து இருக்கிறது; உம்முடைய திருவடிகளைப் பூஜித்து,
சம்சாரக்கடலைத்தாண்டும் பாக்யம் பெற்றேன்;
ஓம் நமோ பகவதே , ப்ருஹ்ம ணே, பரமாத்மனே —–பரமாத்மாவாகிய
உமக்குப் பல நமஸ்காரங்கள்;
என்னுடைய சேவகன் ஒரு மூடன்; அகார்யத்தைச் செய்து இருக்கிறான்;
என்னை மன்னியுங்கள், ஹே, பிரபுவே என்னை
அனுக் ரஹியுங்கள் ;
எல்லாவற்றையும் அறிந்த பிரபுவே, கோவிந்த, பித்ரு வத்சல,
உமது பிதாவை அழைத்துச் செல்லலாம் “என்றான்,

ஹே, கிருஷ்ணா—-ஸ்ரீ சுகர் கூறுகிறார்.
நீ நந்தகோபருடன் திரும்பவும் நந்த க்ருஹம் வந்தாயாம்.
நந்தகோபன் மிக ஆச்சர்யப்பட்டானாம்.
உன்னை, வருண லோகத்தில் வரவேற்ற விவரம் எல்லாவற்றையும்
பந்துக்களிடம் சொல்லி நீ ஈஸ்வரன்தான் என்றானாம்.
அவர்கள் நந்தகோபனிடம் கேட்டார்களாம் இந்தப் பரமாத்மாவாகிய கிருஷ்ணன்,
நம் எல்லாருக்கும் தம்முடைய அழியாத வைகுண்ட ப்ராப்தியை அளிப்பானா ?
தன்னுடைய சங்கல்பத்தாலே நமக்கு நல்ல கதி கிடைக்க அருள்வானா
என்றெல்லாம் கேட்டார்களாம்.

நீ ,உனக்குள் எண்ணமிட்டாயாம்
அவித்யா,காமம், கர்மா இவைகளாலே மனிதன் பலப் பிறவிகள் எடுத்து சம்ஸாரத்தில் மூழ்கி கரையேற வழி இல்லாமல் திண்டாடுகிறான்;
தன்னுடைய சொந்த ஸ்வரூபத்தை உணர்வதில்லை;
இவர்கள் என்னையே நம்பி இருப்பவர்கள் என்று எண்ணி
மஹா கருணையுடன் தமஸ்ஸுக்கு அப்பாற்பட்ட,
உன்னுடைய வைகுண்ட லோகத்தைக் காண்பித்தாயாம்.
எந்த ப்ரஹ்மம் சத்தியமோ க்ஜானமோ, ஆனந்தமோ, அமலமோ,அந்த சனாதனமான பர ப்ரஹ்ம ஜ்யோதிஸ் ஆன நீ,எதனை மஹாயோகிகள் முக்குணங்களைத் தாண்டி —-ஸதா பஸ்யந்தி —-
-ஸதா -பார்த்துக் கொண்டு இருக்கிறார்களோ —-
அந்த மஹோன்னத ஸ்தானத்தை அவர்களுக்குக் காண்பித்தாய்.
இதனால், அவர்கள் உன்னுடைய பர ப்ருஹ்ம நினைவில் மூழ்கி விட்டார்கள்
.உன்னை நான்கு வேதங்களும் புகழ்ந்து பாடுவதையும்,
தேவர் தானவர்கள் அர்ச்சித்து நமஸ்கரிப்பதையும் பார்த்தார்கள்.
அவர்களை மீண்டும் ஸ்வய நிலையை அடையச் செய்தாய்.

28 வது அத்யாயம் நிறைவடைந்தது. சுபம்

சரத்காலம்—ஸ்ரீ கிருஷ்ணனின் வேணுகானம்—
கோபிகைகள் தங்களை மறந்து ,ஸ்ரீ க்ருஷ்ணனிடம் ஓடுதல்
——————————————————————————————————

இந்த அத்யாயத்தில் இருந்து 33 வது அத்யாயம் முடிய
மிக ஆச்சர்யமான”” ராஸ க்ரீடை”” என்கிற
ராதா பஞ்சாத்யாய விபவங்களைப்
பார்க்கப் போகிறோம்

கோபிகைகள் காத்யாயினி வ்ரதத்தை அனுஷ்டித்ததையும் ,
அப்போது நீ அவர்களுக்கு வாக்குக் கொடுத்ததையும்
இப்போது நீ நினைத்துப் பார்த்தாய். (22வது அத்யாயத்தைப் பார்க்க )
அந்த வாக்குறுதியை நிறைவேற்ற சரியான காலத்தை எதிர் பார்த்துக்
காத்து இருந்தாய். அப்படிப்பட்ட காலமான சரத் காலமும் இப்போது வந்தது.

ராத்திரி நேரம்; மல்லிகைப் புஷ்பங்கள் ,மணம் பரப்பிக் கொண்டு இருந்தன;
குமுதமலர்கள் பூத்துக் குலுங்கின; விருந்தாவனம் சந்திர கிரணங்களால் பிரகாசித்தது;
காடு முழுவதும் கோலாஹலம்; எங்கும் பார்க்கப் பார்க்க மனோஹரம்; அதிரஞ்சிதம்;

ஜகன் மோகனனான நீ, உன் புல்லாங்குழலை எடுத்தாய்;
வேணுகானம் செய்யத் தொடங்கினாய்;
வ்ரஜ சுந்தரிகளான கோபிகைகள், வேணுகானத்தைக் கேட்டார்கள்;
வேணுகானம் அவர்களை இழுத்தது;
உன்னால் ஆகர்ஷிக்கப்பட்டனர்;
மனத்தை உன்னிடம்அர்ப்பணித்தனர்;
நீ இருக்குமிடத்துக்கு ஓடி வந்தனர்;
எப்படி ஸதி ஸ்திரீகள் , தங்கள் காந்தர்களிடம் ஓடி வருவார்களோ ,
அப்படி ஓடி வந்தனர்; காதுகளில் அணிந்து இருந்த குண்டலங்கள் ,மகிழ்ச்சியால் ஆடின;
பிரகாசித்தன; அவர்களது ஆசையின் தீவிரம்அன்யோன்ய திருஷ்டிக்கு —–
பார்வைக்கு அப்பால் இருந்தது;

உலகத்தையே மயக்கும் உன் வேணு கானத்தைக் கேட்ட,கோபிகைகள்
நிலைமையை ,ஸ்ரீ சுகர் சொல்கிறார்; அதை இப்போது உனக்குச் சொல்கிறேன்

சிலர் பசுக்களைக் கறந்து கொண்டு இருந்தனர்;
பால் பாத்திரத்தை அப்படியே போட்டுவிட்டு ஓடி வந்தனர்;
சிலர் , பாலை அடுப்பில் காய்ச்சிக் கொண்டு இருந்தனர்;
அதை அப்படியே விட்டு விட்டு ஓடி வந்தனர்;
சிலர் பாயசத்தை அடுப்பில் வைத்து, இருந்தனர்
.இந்த வேணுகானம் கேட்டதும் ,பாயசத்தை மறந்து ஓடி வந்தனர்;
சிலர், குழந்தைகளுக்கு வேலை செய்துகொண்டு இருந்தனர் ;
அவற்றை அப்ப டியே விட்டு விட்டு ஓடி வந்தனர்;
கணவர்களுக்கு, உணவு இவற்றைக் கொடுத்துக் கொண்டு இருந்தவர்கள்
அந்த சுஸ்ருக்ஷையை அப்படியே நிறுத்தி ,உன்னிடம் ஓடி வந்தனர்;
சிலர் வஸ்த்ரங்களைத்தவறுதலாக அணிந்துகொண்டு ஓடி வந்தனர்;
சிலர் ஆபரணங்களைத் தாறுமாறாக அணிந்துகொண்டு ஓடி வந்தனர்;
கண்களுக்கு அஞ்சனம் இட்டுக் கொண்டு இருந்தவர்கள்
அதை அப்படியே நிறுத்தி விட்டு ஓடி வந்தனர்;
இன்னும் சிலர், பந்துக்கள் தடுத்ததையும் மீறி ஓடி வந்தனர்;
கணவர் தடுத்தபோதும் ,உன்னிடம் மனத்தைப் பறி கொடுத்தவர்களாய்,
தடுத்ததையும் திரஸ்கரித்து விட்டு, உன்னிடம் ஓடி வந்தனர்;

வீட்டை விட்டு, வெளியே வருவதற்கு ,சந்தர்ப்பம் கிடைக்காத சிலர்,
கண்களை மூடிக் கொண்டு அங்கேயே உன் த்யானத்தில் ஈடுபட்டனர்;
இன்னும் சிலர், உன்னுடைய விரஹ தாபத்தால் கொளுத்தப்பட்டு,
அதனால் அவர்கள் பாபங்களும் கொளுத்தப்பட்டு,
த்யானத்தில் உன்னை அணுகி ஆனந்தம் அனுபவித்து,
கர்மபந்தங்களை அறுத்து எறிந்தார்கள்;
இன்னும் சிலர், தங்கள் புத்தியால் உன்னை ஜார புருஷனாகவே
வரித்து, குணமயமான தேகத்தை விட்டவர்களாக ஆகி,
கர்மபந்தங்கள் விலக, சிந்தனையால் உன்னுடன் ஒன்றினார்கள்;

இவைகளையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த ராஜா பரீக்ஷித்,
ஸ்ரீ சுகரைக் கேட்டான்

கோபிகைகள், ஸ்ரீ கிருஷ்ணனைப் பரமாத்மா என்று தெரிந்துகொள்ளவில்லை,
அவர்கள் எப்படி சம்சாரகதியை ஒழித்தார்கள் ?
அவர்களுக்கு இத்தகைய கிருஷ்ண பக்தி எப்படி வந்தது ?

ஸ்ரீ சுகர் பதில் சொன்னார்.
எதற்கும் தீர்க்க சிந்தனை வேண்டும்; அளவிடமுடியாத மகிமைகளைப் பெற்ற
ஸ்ரீ கிருஷ்ணனை சதா சர்வகாலமும் சிந்தனை செய்தார்கள்;
பிரேமபாவம் ,இவர்களுக்குத் தலை தூக்கி இருந்தது;
எந்த பாவத்துடன் யார் அவரை பூஜிக்கிறார்களோ ,
அவர்கள் சம்சாரத்திலிருந்து விடுபடுகிறார்கள்;
ஸ்ரீ க்ருஷ்ணனை சினேகிதனாக சதா சர்வகாலமும் சிந்தனை செய்பவருக்கு
அவன் சிநேகிதன்;
தந்தையாகச் சிந்தித்தால் தந்தை;
இங்கு இவர்கள் ஆயர்குலப் பெண்கள்; பிரேமை முழுவதையும் பொழிந்து
புருஷனாக சிந்தித்தார்கள்;

சேதிநாட்டு அரசன் சிசுபாலன் ஸ்ரீ கிருஷ்ணனை எப்போதும் வெறுத்து,
த்வேஷ புத்தியுடன் வைதுகொண்டே இருந்தான் ;அப்படி வைதபோதிலும்,
அவருடன் மனத்தால் ஒன்றிப்போனான் இதிலிருந்தே உனக்கு உன் கேள்விக்கு
விடை கிடைக்கும் என்றார்

உன் முன்பாக வந்து நின்ற கோபிகைகளைப் பார்த்து ,
அவர்கள் இன்னும் மோஹித்துப் போகும்படி நீ அவர்களுடன் பேசினாய்.

ஹே பெண்களே, உங்களுக்கு ஸ்வாகதம்
இப்படி இரவு நேரத்தில் பயமின்றி இங்கு என் வந்தீர்கள் ?
வ்ருந்தாவனத்தில் ஏதாவது சங்கடமா ?
பயங்கரமான மிருகங்கள் உலாவும் இரவு வேளையில்
இப்படி இந்த இடத்துக்கு வரலாமா ? உங்கள் பெற்றோர், உறவினர்,
கணவர் ,பிள்ளைகள் உங்களைக்காணாமல் பரிதவிப்பார்கள்;
உங்களைத் தேடுவார்கள்; உடனே அவரவர் வீடுகளுக்குத் திரும்புங்கள்;
குழந்தைகளைப் போஷியுங்கள் ; மாதா பிதா பர்த்தா இவர்களுக்கு
சிசுருக்ஷை செய்யுங்கள்;
ஒரு வேளை என்மீதுள்ள ப்ரேமையால் இங்கு வந்து இருந்தால்,
அது சரி என்றாலும், பர்த்தாவுக்கு சிசுருக்ஷை செய்வது பரம தர்மம்;
ஸ்திரீகளுக்குப் பிற புருஷர்களுடன் சேர்வது மஹா பாவம்;
என்னிடம் பிரேமை செலுத்துவது என்பது, என் அருகில் இருந்துகொண்டு,
என் இஷ்டப்படி நடந்து கொள்வது என்பதல்ல ;
என் கதைகளைக் கேட்பது, என்னைத் தியானிப்பது,
என்னைக் கீர்த்தனம் செய்வது இவையே போதுமானவை;
உடல் சேர்க்கை தேவையே இல்லை;
அதனால், உடனே உங்கள் வீடுகளுக்குத் திரும்புங்கள்
என்று சொன்னாய்.

ஸ்ரீ சுகர் ,கோபிகைகளின் நிலைமையை கூறுகிறார்.

அப்ரியமான வார்த்தைகளை, கோபிகைகள் கேட்டார்கள்;
மனவியாஹூலம் அடைந்தார்கள்; முகம் தரையை நோக்க,
வாய் உலர, கால் நகங்களால் தரையைக் கீறினார்கள்;
மௌனமாக நின்றார்கள்; கண்களிலிருந்து ,கண்ணீர் தாரை தாரையாகப்
பெருக்கெடுத்து மார்பகங்களை நனைத்தது;
கண்மைகள் அழிந்தன;
மானம், ஐஸ்வர்யம், யௌவனம் ,அழகு, பதி, புத்திர ,பந்துக்கள் எல்லாரையும்
க்ருஷ்ணனுக்காகவே பறிகொடுத்தவர்கள் ,தீனமாக அழுதார்கள்;
உன்னை நிமிர்ந்து பார்த்தார்கள்; தொண்டை அடைக்க, தடுமாறும் பேச்சுக்களால்
,உன்னிடம் உள்ள அன்பு குறையாமல் சிறிது கோபத்துடன் உனக்குப் பதில் சொன்னார்கள்

ஹே—பிரபோ—-நாங்கள், சர்வ விஷய சுகங்களையும், மானம், ஐஸ்வர்யம்,
பதி புத்ரன்பந்துக்கள் , வீடு எல்லாவற்றையும் விட்டு விட்டு
உனது திருவடியையே நம்பி வந்திருக்கிறோம்;
நாங்கள் உனது பக்தர்கள்; உன்னால், கைவிடத்தக்கவரல்ல;
நீ, எங்களுக்கு பதி தர்மத்தைப்பர்றிச் சொன்னாய்;
புத்திர புத்ரிகளை போஷிப்பது என்று ஸ்திரீகளின் தர்மத்தைச் சொன்னாய்;
ரொம்ப சரி; இந்த சுஸ்ருக்ஷை யாவும் உமக்கே செய்ய வந்திருக்கிறோம்;
ஏன் என்றால், நீர் சர்வ ரக்ஷகர்; நீரே சர்வ பந்து; நீரே எங்களுக்கு எல்லாம் ஆத்மா—பரமாத்மா;
உம்மிடம் ப்ரியம் கொள்வது, உம்மைப் பூஜிப்பது,
இவைதான் எங்களுக்கு முக்கியம்;
ஹே, ஆத்மந்
உம்மிடம் நித்யமும் ப்ரியம் செலுத்துவது—–,
ஹே, அரவிந்த நேத்ர , —–மரத்தின் வேருக்குத் தண்ணீர் வார்ப்பது போல
பதி,பிள்ளைகள், பந்துக்கள் –இவர்களிடம் ப்ரியம் செலுத்துவதால் என்ன பலன் ?
உம்மிடமே, எங்களின் பக்தி வெகு காலமாக வேரூன்றி இருக்கிறது;
உம்மால், எங்களது ஹ்ருதயம் அபஹரிக்கப் பட்டு இருக்கிறது;
இவற்றைஎல்லாம் இல்லாதபடி செய்து விடாதீர்;
வீட்டு வேலைகளில் ஈடுபட்டிருந்த எங்களை,
உம்மிடமுள்ள அன்பே ,அவைகளைச் செய்ய விடாமல் தடுத்து விட்டது;
அப்படி இருக்க, எங்களை வீட்டுக்குத் திரும்பிப் போகுங்கள் என்று சொல்வதில்
நியாயமில்லை; உம்முடைய திருவடிகளையே அடைய வேண்டும் என்று
இருப்பவர்களைத் திரும்பவும் வீடுகளுக்குச் செல் என்று நீர் சொல்வது சரியல்ல;
உமது கடாக்ஷ அம்ருதப் பார்வையால் உமது அதரங்களாகிய பூரண குடங்களிளிருந்து,
ஆசையாகிற அம்ருதத்தை எங்கள்மீது தெளிப்பீராக;
உமது சிநேகப் பார்வைகள், உமது வேணுகான கீதங்கள் ,
எங்கள் ஹ்ருதய ஆசைகளைத் தூண்டிவிட்டு,அவை அக்னியைப்போல
உக்ரமாக எரிந்து கொண்டு இருக்கின்றன; உம்மை விட்டுப் பிரிந்தால்,
அந்தத் துக்கமாகிய அக்னியால் கொளுத்தப்பட்டு,
உமது பாதங்களையே நினைத்து, நினைத்து, த்யானயோகத்தால்,
ப்ரியசகிகளைப்போலவும், ப்ரிய தோழர்களைப் போலவும்
உம்மையே திரும்பவும் வந்து அடைவோம்.

ஹே—அம்புஜாக்ஷ—காத்யாயினி வ்ரத நாளிலிருந்து,
எந்த உமது பாத ஸ்பர்சம் ஏற்பட்டதோ, எந்தப் பாதங்களை
ரமாதேவி மிக்க ச்ரத்தையுடன் ஆச்ரயித்துப் பூஜை செய்கிறாளோ
அந்தப் பாத மூலங்களை —-நாங்கள் சதா பூஜிக்கிறோம்.
நாங்கள், உம்மையே நம்பி வாழ்ந்து கொண்டிருக்கிறோம்;
உமது ஹ்ருதயத்திலும் இடம் பெற்று வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்;
எந்த உமது பாத ரேணுக்களை—-ஸ்ரீ தேவியாகிய மஹாலக்ஷ்மி —-
துளசி தேவியுடன் போட்டி போட்டுக்கொண்டு –அடைந்து இருக்கிறாளோ,
அந்த ஸ்ரீ மஹாலக்ஷ்மி உம்முடைய வக்ஷஸ் தலத்தில் அரைவினாடி கூட
விடாமல் வசித்துக் கொண்டு இருக்கிறாள்.
நாங்கள் உமது திருவடிகளையே பஜிக்கிறோம்; நாங்கள் ப்ரபன்னர்கள்,
உமது திருவடிகளையே ஆச்ரயிப்பவர்கள்.
எங்கள் துக்கங்களை அறவே அழிக்கும்
ஹே–பிரபோ—எங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்;
எங்கள் உபாசனையை ஏற்றுக் கொள்ள வேண்டும்;
உமது ஸுந்தர ரூபம்—-உமது ஸ்மிதம்—-கள்ளப்பார்வையின் கடாக்ஷம்—
-எங்களைப் பித்தாக்கி இருக்கின்றன;
ஹே,புருஷபூஷண ——உமக்குச் ஸேவை செய்யும் பாக்யத்தை அளிப்பீராக;
உமது திருமுக அழகு—-கம்பீரம்—-மகரகுண்டலங்கள்—-வனமாலை—-
-புஜதண்டயுகம்—–உமது வேணுகானம்—மதுரமான குரல்—-இவைகளால்
மோஹிக்கப்பட்டு விட்டோம் , நாங்கள் மாத்ரமல்ல,
மூன்று லோகங்களும் பசுக்களும்,பட்சிகளும்,மிருகங்களும்,தேவர்களும்,
தேவ ஸ்திரீகளும், யக்ஷ கந்தர்வ ஸ்திரீகளும், ஏன்—ஜடங்களான மரங்களும்
உம்மிடம் மோஹிக்கப்பட்டு இருக்கின்றனர்;
எங்கள் பயங்களைப் போக்கும் பிரபோ—-
ஆதி புருஷா—அமரர்தலைவா—உம்மைவிட்டு நாங்கள் எங்கே போவோம் ?
ஆர்த்தபந்தோ—உமது வேலைகளைச் செய்ய இஷ்டமுள்ள
தாஸ்யர்களான எங்களைஅநுக்ரஹிப்பீ ராகஹே,கிருஷ்ணா

இவ்வாறுப் பலவிதமாக கோபிகைகள் கண்ணீர்மல்கப் பேசியதும்,
நீ ,உன் ப்ரியமான பார்வையால், பற்கள் மல்லிகைப்பூக்களைப் போல மின்ன,
கலவெனச் சிரித்துக்கொண்டு, வைஜயந்தி மாலையை அணிந்தவனாக எல்லா
கோபஸ்த்ரீகளும் உன்னை சூழ்ந்து இருக்க ,காளிந்தி நதியின் கரையில் உள்ள
பச்சைப் பசேலேன்ற மரங்கள் படர்ந்து உள்ள சமவெளிப் பிரதேசத்தில் பிரவேசித்தாய்
. உன் கைகளை நீட்டிக்கொண்டு, அவர்களைப் பற்றி அணைத்துக்கொண்டு,
கேலிப் பேச்சுக்களைப் பேசிக்கொண்டு, உனது மோகனப் பார்வையை
அவர்கள் மீது வீசி ,அவர்களைப் பலவிதமாக ஆனந்தப்படுத்தினாய்.

அதனால், அவர்கள், நீ அவர்கள் வசம் ஆகிவிட்டாய் என்று கர்வம் கொண்டனர்;
பூமியில் வாழும் எல்லா ஸ்திரீகளையும் விட தாங்களே உயர்ந்தவர்கள்
என்று இறுமாப்பு கொண்டனர்; இதை அறிந்த நீ, அவர்கள் கர்வத்தை
அடக்கத் திருவுள்ளம் பற்றினாய்அந்த க்ஷணத்திலேயே,
அவ்விடத்தை விட்டு மறைந்தாய்; அந்தர்த்யானம் ஆனாய்.

29 வது அத்யாயம் நிறைவடைந்தது. சுபம்

—————————————————————————————————

தசமஸ்கந்தம்—நவீன பாணியில் —-அத்யாயம் 30
———————–
கோபிகைகளின் விரஹ தாபங்கள்—-பக்தியின் உச்சம்
—————————————————————————————-

மிகவும் சஹ ஜமாக கோபிகைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த நீ,
அவர்கள் கர்வத்தை அடக்க எண்ணித் திடீரென்று மறைந்து போனதும்,
அவர்கள் தவித்த தவிப்பு இருக்கிறதே, அப்பப்பா, அதை என்னவென்று சொல்ல !
ஆனால், ஸ்ரீ சுகர் இவற்றைக் கண்முன்னால் கொண்டுவந்து நிறுத்துகிறார் .
ஸ்ரீ சுகர், பரீக்ஷித் ராஜனுக்குச் சொன்னதை இப்போது சுருக்கமாகச் சொல்கிறேன்.

ஆண் யானையைக் காணாமல், எப்படிப் பெண் யானைகள் விரஹத்தால் தவிக்குமோ,
அப்படி , கோப ஸ்திரீகள் தவித்தார்கள்;
உன்னுடைய ஸ்மித முகம் —மந்தஹாச வதனம்—கண்களின் இனியகடாக்ஷம்,
மனத்தை அள்ளும் பேச்சுக்கள், நடை அழகு, இவைகளை நினைத்து, நினைத்துக்
கதறினார்கள்; காட்டில் அங்குமிங்கும் அலைந்தார்கள்;
உன்மத்த நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.

ஹே,அஸ்வத்த மரமே , நந்தகோபனின்செல்வனைக் கண்டீர்களா ?
எங்களைப் பிரேமைக் கடலில் மூழ்கடித்து, சிரித்துப் பேசி விளையாடிய
அந்தப் பிரபுவைப் பார்த்தீர்களா ?
ஹே,அசோக,புன்னாக, நாக , சண்பக மரங்களே, பலராமனுடைய தம்பியாகிய
கிருஷ்ணனைக் கண்டீர்களா ?
துளசி,கல்யாணி, கோவிந்த சரணப்ரியே—-உன்னை எப்போதும்
தன்னுடைய வக்ஷஸ் தலத்தில் தரித்துக் கொண்டு, வண்டுகள் மகரந்தத்துக்காக
அலைந்து உன்னைத் தேடி வருவதைப் போல,
ஸ்ரீ கிருஷ்ணனும் உன்னைத் தேடி வந்தாரா , அவரைப் பார்த்தீர்களா ?
ஜாதி யூதிகே (வாஸனை உள்ள ஒருவகைப் பூ ), மல்லிகைக் கொடியே
மாதவியாகிய மஹா லக்ஷ்மியின் மணாளனான மாதவனைப் பார்த்தீர்களா ?
ஹே, மரங்களே, கொடிகளே ! கிருஷ்ணன் இந்தப் பக்கம் வந்திருக்கும்போது
அவரின் கர ஸ்பர்சம் உங்கள்மீது பட்டிருக்குமே ,
அவர் இந்த வழியாகப் போனாரா ? அவரைக் கண்டீர்களா ?
ஹே, மாமரமே, ஹே பலா மரமே, ஹே ஜம்பூ மரமே, ஹே வில்வ மரமே,
ஹே கடம்பமரமே ஹே இங்கு இருக்கும் மரங்களே , கிருஷ்ணனைக் கண்டீர்களா ?
சீக்ரம் சொல்லுங்கள் .
எங்கள் மனம்,எங்களிடம் இல்லை, அவரிடம் பறி போய் விட்டது;
அவர் பாதங்களை அடையும் வழியைச் சொல்வீர்களா ?
ஹே, பூமியே, நீ செய்துள்ள தவத்தை என்னவென்று சொல்வது
!உன் தேகம் எப்படி உண்டாயிற்று ?
உன் உடலில் உள்ள புல், கொடிகள், முளைகள், எல்லாம்
ஸ்ரீ கேசவனுடைய அங்கங்களின் ஸ்பர்சம் பட்டு, அதனால் உன் தேகம் வந்ததா ?
அவர் வாமனாவதாரம் எடுத்து, திருவிக்ரமனாக வளர்ந்து
உன்னை ஆலிங்கனம் செய்ததால் ஏற்பட்டதா ? வராஹஅவதாரம் எடுத்த சமயத்தில்
உன்னைக் கட்டி ஆலிங்கனம் செய்துகொண்டாரே, அதனால் ஏற்பட்டதா ?
ஹே, பெண்மானே, உன் கண்களின் அழகைப் போல —மிருக நயனீயான
பெண் ஒருத்தியுடன் உங்களுக்கு ஆனந்தம் அளிப்பதற்காக இந்த வழியே சென்றாரா ?
ஹே,மல்லிகைக் கொடியே, அந்தப் பெண்ணை அவர் ஆலிங்கனம் செய்தபோது,
அவளுடைய ஸ்தனங்களில் தடவியுள்ள குங்குமப் பூச்சுக்கள் ,
அவருடைய வக்ஷஸ் தலத்தில் காணப்பட்டு இருக்குமே,
அந்த எங்கள் பிரபுவைப் பார்த்தீர்களா ?

ஒருகையில் தாமரைப் புஷ்பத்துடனும்,
மற்றொரு கையால் பிரியையான ராதையை அணைத்துக் கொண்டும் ,
அவர் அணிந்து இருக்கும் துளசி மாலையில் உள்ள மகரந்தத்தைப் பருக
தேனீக்கள் அவர் பின்னே ஓடிவர அவர் இங்கு சஞ்சரிக்கும் போது அவரைப் பார்த்தீர்களா ?
ஹே மரங்களைச் சுற்றி ஆலிங்கனம் செய்வது போல வளர்ந்து இருக்கும் கொடிகளே,
கிருஷ்ணனின் விரல்களின் ஸ்பர்சம் உங்கள் மீது பட்டிருக்க வேண்டும்
உங்கள் உடலிலே புளகானந்தம் ஓடி வழிகிறதே ,
அந்த சுக ஸ்பர்சம் கிடைத்ததா ? கிருஷ்ணனைப் பார்த்தீர்களா ?

ஸ்ரீ சுக பிரம்மம் , மேலும் பரீக்ஷித்துக்குச் சொல்கிறார்

இப்படி உன்மத்தம் பிடித்த ,விரஹ தாபத்தால் பைத்தியம் பிடித்தவர்களைப் போல,
உன்னையே நினைத்து உன் லீலைகளை அவர்கள் செய்தார்களாம்
ஒருத்தி தான் பூதனை என்று சொல்ல, இன்னொருத்தி தான் கிருஷ்ணன் என்று சொல்லி ,
பூதனை என்று சொன்னவளை ஸ்தன்ய பானம் செய்து அழிப்பதுபோல் பிதற்றினாளாம்

ஒருத்தி தான் ,குழந்தையாகிய கிருஷ்ணன் என்று சொல்லி, இன்னொருத்தியை சகடாசுரன்
என்று சொல்லி உதைத்தாளாம்
ஒரு கோபிகை , இன்னொருத்தியைத் திருணாவர்த்தன் என்கிற அசுரன் என்று சொல்லி
அவனைக் கொல்ல, ஸ்ரீ கிருஷ்ணன் அசுரன் கழுத்தை கட்டிக் கொண்டதுபோலக்
கட்டிக் கொண்டாளாம்
ஒருத்தி நான் பலராமன் என்று சொல்ல, இன்னொருத்தி நான் கிருஷ்ணன்
என்று சொல்லி அவர்கள் இருவரும் பேசிக் கொள்வது போலப் பேசினார்களாம்.
ஒருத்தி தான் கிருஷ்ணன் என்று சொல்லி, இன்னொருத்தியை வத்சாசுரன்
என்று சொல்லி அடித்தாளாம்
இன்னொருத்தி , தான் .பகாசுரன் என்று சொல்ல, இன்னொருத்தி
அவளை நான்தான் கிருஷ்ணன் என்று சொல்லி அடித்தாளாம்.
ஒருத்தி, வெகு தூரத்தில் பசுக்கூட்டம் போவதைப் பார்த்து,
அவற்றை கிருஷ்ணன் எப்படிக் கூப்பிடுவாரோ அப்படிக் அழைத்தாளாம்.
இன்னொருத்தி கிருஷ்ணனைப் போல வேணுகானம் செய்வதாக ,
புல்லாங்குழலை எடுத்து ஊதினாளாம்
ஒருத்தி தன் கையை இன்னொருத்தியின் தோள் மீது போட்டு ,
நடந்துகொண்டே , என் நடை அழகு கிருஷ்ணன் நடப்பதைப் போல
இருக்கிறதா என்று கேட்டாளாம்.
ஒரு கோபிகை, இன்னொருத்தியைப் பார்த்து,
பெண்ணே , இந்தப் பேய் மழைக்கும் பேய்க் காற்றுக்கும் பயப்படாதே
உன்னை ரக்ஷிக்கிறேன் என்று சொல்லி,அவளுக்கு மேலாக
தன்னுடைய மேல் வஸ்த்ரத்தைக் குடைபோலப் பிடித்து,
கோவர்த்தனகிரியைத்தூக்கிக் கொண்டு இருப்பதாக சொன்னாளாம்.

ஒருத்தி, இன்னொருத்தியின் சிரசின் மீது ஏறி, நான் பூலோகத்தில்
துஷ்டர்களை அடக்க வந்திருக்கிறேன்; துஷ்ட காளிங்கனே ,
இங்கிருந்து போய்விடு என்றாளாம்.
ஒரு கோபிகை ,மற்றவளிடம் ,
இதோபார் அக்நி, ஜ்வாலையுடன் தாவி வந்துகொண்டிருக்கிறது
கண்களை மூடிக்கொள் காப்பாற்றுகிறேன் என்றாளாம். .
ஒருத்தி ,மலர்மாலையை இடுப்பில் கட்டிக் கொண்டு,
,நான் தாமோதரன்; யசோதையாகிய என் அம்மா இடுப்பில் கட்டி இருக்கிறாள்;
இதோபார் ;இந்த இரண்டு மரங்களை வேரோடு சாய்க்கிறேன்
என்று இரண்டு மரங்களுக்கு நடுவில் சென்றாளாம்.
இன்னொருத்தி, தாயாகிய அம்மா அடிக்கிறாள் என்று சொல்லி ,
தான் பயப்படுவதைப் போல , இன்னொருத்தியிடம் புலம்பினாளாம்.

இப்படியாக,கோப ஸ்திரீகள் உன்மத்தம் பிடித்து அந்தக் காட்டில்
சஞ்சரிக்கும்போது, அத்ருஷ்டவசமாக , பூமியில்
இரண்டு பாதச் சுவடுகளைக் கண்டார்கள்.
ஆஹா என்று சொல்லி, ஒருத்தி பாதச் சுவடுகளில்
வஜ்ர ரேகை, த்வஜ ரேகை, அங்குச ரேகை இவைகளை அடையாளம் பார்த்து
இந்தப் பாதச் சுவடுகள் க்ருஷ்ணனுடையதுதான் ,
அவர் இந்த வழியேதான் போயிருக்கிறார் என்று சொல்லி,
பாதச் சுவடுகளைத் தொடர்ந்து சென்றார்களாம்.
ஹே—கிருஷ்ணா ! உடனே வருத்தப்பட்டார்களாம்
அந்தப் பாதச் சுவடுகளின் மத்தியிலே, இன்னொரு பெண்ணின் பாதச் சுவடுகளைக்
கண்டார்களாம். ஒரு கையை அவளுடைய தோளின் மீது வைத்துக்கொண்டு,
நீ அவளுடன் நடந்து சென்று இருக்கிறாய் என்று கண்டார்களாம்.

(ஹே–கிருஷ்ணா இந்தக் கோப ஸ்திரீகள் எவ்வளவு பாக்யசாலிகள் !
உன் திருவடிகள் பதிந்த பாதச் சுவடுகளை
அடியேன் கண்களில் ஒற்றிக்கொண்டு,
கோபிகை களுக்கு அனவரதம் நமஸ்காரம் செய்கிறேன் )

ஒரு கோபிகை, ஸ்ரீ கிருஷ்ணனுடன் சென்ற பெண் யாராக இருக்கும்;
அவள் மிகவும் புண்யம் செய்தவள் , அதனால்தான்
ஸ்ரீ கிருஷ்ணன் அவளால் நன்கு பூஜிக்கப்பட்டு, திருப்தி அடைந்து,
நம் எல்லோரையும் தவிக்க விட்டு, அவளுடன் சென்று இருக்கிறார்;
அந்த அடையாளங்கள்தான் இந்தப் பாதச் சுவடுகள் என்று தீர்மானித்து,
அந்தப் பாதரஜஸ்களை ,இக்கோபிகைத்தன் சிரஸ் ஸில் அணிந்துகொண்டாள்.

இந்தப் பாத ரஜஸ் ஸின் மகிமை அளவிட முடியாதது;
சொல்லில் அடங்காதது ; ப்ரும்மா, சிவன் இவர்களுக்குக்கூடக் கிடைக்காதது
ஸ்ரீ மஹாலக்ஷ்மி எந்தத் திருவடிகளை நித்யம் பூஜிக்கிறாளோ ,
அவைகளைத் தரித்துக் கொள்கிறாளோ, அந்தப் பாதச் சுவடுகள் ஆயிற்றே !
அவற்றுடன் கூடவே மஹா புண்யவதியின் பாதச் சுவடுகளும் தெரிகிறதே;
அவள் ஸ்ரீ கிருஷ்ணனை நன்கு பூஜித்து ஏகாந்தமாக பஜித்து இருக்க வேண்டும்;
அதனால்தான் ,அவர் ,நம்மையெல்லாம் தவிக்கவிட்டு அப்புண்யவதியுடன்
சென்று இருக்கிறார்;
அவள் ராதை;
அவள் அச்யுதரின் அதர பானம் செய்து இருக்க வேண்டும்;
அவரை ஏகாந்தமாக அனுபவித்து இருக்க வேண்டும்
இப்படியெல்லாம் புலம்பிக்கொண்டே ,பாதச் சுவடுகளைப் பார்த்துக் கொண்டே
செல்லும்போது, திடீரென்று அந்தப் பெண்ணின் பாத அடையாளங்களைக் காணவில்லை;
ஸ்ரீ கிருஷ்ணனின் பாதச் சுவடுகள் மட்டில் தொடர்ந்து பூமியில் அழுத்தமாகக் காணப்பட்டன;
சரி தான்; ராதையின் கோமள பாத சரணங்களில் முள்ளைப் போல
இந்தப் புல் பூண்டுகள் ஹிம்சித்து இருக்க வேண்டும்; அதனை சஹியாமல்,
ஸ்ரீ கிருஷ்ணன், அவளைத் தோளில் தூக்கிக் கொண்டு ,
தான்மட்டும் நடந்து சென்று இருக்க வேண்டும்;

ஹே–சஹிகளே இதோ பாருங்கள் பூமியை—-நன்கு கவனியுங்கள்—-
ஸ்ரீ கிருஷ்ணரின் பாதச் சுவடுகள் மட்டும்தான் தெரிகின்றன;

இப்போது பாருங்கள், பூமியில் புஷ்பங்கள் சிதறிக் கிடக்கின்றன;
பிரபு , அவள்—ராதையின் தலையை நன்கு வாரி புஷ்பத்தால்
அலங்கரித்து இருக்க வேண்டும் ;
இதோ பாருங்கள் இப்போது பிரபுவின் ஏக பாதம்தான் தெரிகிறது;
இப்போது பாதச் சுவடுகளே தெரியவில்லை
என்று, இப்படியெல்லாம்,
ஹே—கிருஷ்ணா!
கோப ஸ்திரீகள்–ஒருவருக்கு ஒருவர் தாங்கள் கண்டதை,
நினைத்ததைப் பரிமாறிக் கொண்டே காட்டில் சென்றனர்.
அங்கே ஒரு இடத்தில் ராதை மட்டும் அழுதுகொண்டே
இருப்பதைக் கண்டனர். கோப ஸ்திரீகள் அவளை நெருங்கி யதும்,
அவள் ஒ வென்று கதறி, உங்கள் எல்லாரையும் விட நான் மேலானவள்;
என்னிடம் அதிகப் பிரேமை செலுத்துகிறார் என்று கர்வமடைந்து
அவரிடம் என்னால் துளிக்கூட இனிமேல் நடக்க முடியாது;
உம்முடைய தோள்களில் தூக்கிக் கொண்டு செல்வீராக;
நீர் விரும்பிய இடத்துக்கு வருகிறேன் என்று நான் சொன்னதும்
அவர்—ஸ்ரீ கிருஷ்ணர்—சரி, தோளின் மீது ஏறிக்கொள் என்று சொல்ல,
நான் தோளில் ஏற முயற்சிக்கும்போது அந்தர் த்யானம் ஆகிவிட்டார்
என்று சொல்லி அழுதாள்.

அவரிடம் எப்படிப் பிரியத்தைச் சம்பாதித்தாள் என்பதையும்,
தன் அகம்பாவ நடத்தையால் அவரால் விடப்பட்டதையும் ராதை
சொல்லிக் கேட்ட கோபிகைகள், அவரை—-அதாவது உன்னை
அங்குத் தேடும் முயற்சியைக் கைவிட்டு
யமுனா நதி தீரத்துக்கே வந்து சேர்ந்தனர்.
உன்னுடைய நினைவால் உன்னைப் பற்றியே விரஹதாபத்தால்
பிதற்றிக் கொண்டு, பசி—தாகம்—-வீடு—பதி—க்ருஹம் —–புத்ரன்—
இத்யாதிகளை மறந்து, உன் மீது அளவில்லாப் பிரேமையுடன் ,
கோபிகைகள் எல்லாரும் சேர்ந்து கீதம் இசைத்தார்கள்—-
அதுவே கோபிகா கீதம் —அடுத்த அத்யாயத்தில் அனுபவிப்போம்

30 வது அத்யாயம் நிறைவடைந்தது. சுபம்
ஸ்ரீ கோபிகா கீதம்
——————————–
ஹே—-பிரபோ—–வ்ருந்தாவநம் உமது அவதார மகிமையால் செழிப்பை அடைகிறது;
நீர் எங்களுடன் கூடவே வாழ்வதால்
ஸ்ரீ லக்ஷ்மி இங்கு நித்ய வாஸம் செய்கிறாள்;
ஹேதயித—-உமது கருணா ஸ்வரூபத்தை எங்களுக்குக் காண்பியுங்கள்;
நாங்கள், உம்மையே நம்பி ,உமது நாமஸ்மரணம் செய்துகொண்டு,
உமது புண்யகதைகளைக்கீர்த்தனம் செய்துகொண்டு
உம்மையே ஒவ்வொரு திக்கிலும் தேடுகிறோம்.

சரத் காலத்தில், உமது பிரிவால் துக்கப்படுகிறோம்;
தடாகத்தில் உதித்த தாமரைப் புஷ்பத்தின் ஸ்ரீ முஷா— அழகு—–பொலிவைக் கவர்ந்து,
உமது பார்வையால் சந்தோஷமும், வருத்தமும் அடைகிறது;
அந்தத் தாமரைப் புஷ்பத்தைப் போல நாங்களும், உம்முடன் கூடுவதால்
சம்ஸ் லேஷமும் —–பிரிவினால் துக்கமும் அடைகிறோம்;

ஹே,சுரத நாத, ஹே,வரத —நாங்கள் உம்முடைய தாசிகள் —-
உம்முடைய இச்சையாலே தாசிகள்
. உமது பிரிவினாலே எங்களைத் துன்புறுத்தலாமா ?
உமது பிரிவு எங்களை வதம் செய்வது போல இருக்கிறது.
விஷ ஜலத்திலிருந்தும் காளியன் என்கிற கொடிய சர்ப்பத்தினின்றும் எங்களைக் காத்தீர்’;
அகாசுரன் போன்ற மழைப் பாம்பின் பிடியில் இருந்து காத்தீர்
பேய்க்காற்று, மேக கர்ஜனை, இடி மின்னல் பிரம்மாண்ட மழை இவைகளிருந்து ,
கோவர்த்தன கிரியைக் குடைபோலப் பிடித்து எங்களைக் காத்தீர்
கன்றைப் போன்று பொய்வேஷம் தரித்த அசுரனிடமிருந்து எங்களைக் காப்பாற்றினீர்
நீர் , யசோதை தேவகி இவர்களின் புத்ரன் மட்டுமல்ல;
சர்வத்துக்கும் ஆத்மா—-அந்தராத்மா
எல்லாவற்றையும் பார்க்கும் சாக்ஷி
எல்லா வஸ்துக்களையும் அனுபவிப்பவர்;
எல்லாவற்றையும் நியமித்து தரிப்பவர்;
ஹே,விஸ்வகுப்தா—ஸ்நேக உள்ளம் உள்ள பிரபோ—
பூமிப் பிராட்டி, பிரம்மா, தேவர்கள் பிரார்த்தனைக்கு இரங்கி உலகைக் காக்க
யது குலத்தில் அவதரித்து இருக்கிறீர் ;
வ்ருஷ்ணீ துர்ய—-எங்களுக்கு அபயம் அளித்த பிரபுவே–
உமது சரணங்களைப் பற்றினோம் ;
உமது கிருபையால் மறுபிறவி பயம் எங்களுக்கு இல்லை;
காந்த—-காமத்தின் பீடையை அடைந்துள்ளோம்;

எங்கள் சிரஸ் ஸில் உமது தாமரைக் கைகளை வைத்து,
நாங்கள் ஸ்ரீ யின்அனுக்ர ஹத்தை அடையும்படி செய்வீராக ;
வீர–வ்ரஜ ஜனார்த்திஹந்—-உமது ஸ்மிதம்—புன்சிரிப்பு—
எங்களுக்கு இயற்கையாக உள்ள அஹம்பாவத்தை அழிக்கிறது;
ஹே–ஸகே —-உம்மைப் பூஜிக்கும் எங்கள் அன்பை ஏற்றுக் கொள்வீராக ;

ஜலத்தில் அமிழ்ந்து பூர்ண பொலிவுடன் விகசித்து இருக்கும்
அழகான தாமரை போன்ற உமது திருமுக தர்சநம் தருவீராக
ப்ரணத தேஹினாம்—-உம்மை வணங்கிய எங்கள் பாபங்களைப் போக்குவீராக;
புல்லைத்தின்னும் பசுக்களை வளர்க்கும் எங்கள் இடங்களில்
ஸ்ரீ லக்ஷ்மீ வாஸம் செய்யும்படி அருளுவீராக;
பல தலைகளுடன் படம் விரித்து ஆடிய காளிங்க னுடைய தலைகளில்,
உமது பாத பத்மங்களை வைத்த மாதிரி ,எங்கள் ஹ்ருதயத்திலும்
உமது பாத பங்கஜங்களை வைத்து ,எங்கள் தாபத்தைப் போக்குவீராக;
புஷ்கரேக்ஷண—–தாமரை கண்ணா—உமது திருஷ்டி கடாக்ஷம்
எங்கள் மீது படும்படி செய்வீராக;
உமது மதுரமான பேச்சுக்களால் ,எங்களுக்கு சந்தோஷத்தை உண்டாக்குவீராக;
உமது பேச்சு, மேதாவிகளின் மனங்களையும் சந்தோஷப் படுத்தக்கூடியது;
வீர—-உமது ஆக்ஜையை சிரமேற் கொண்டிருக்கும் ,
அதைச் செய்யத் தயாராக இருக்கும் எங்களுக்கு
உமது அதர பானத்தைக் கொடுத்து நாங்கள் உயிர் பிழைக்கும்படி செய்வீராக;
உமது கதாம்ருதம், மங்களங்களை அளிப்பவை;
உமது கீர்த்தனம் ஐஸ்வர்யங்களை வ்ருத்தி செய்பவை;
இதனால், எல்லாம் நிரம்பிய குண பூர்த்தி உள்ள மகாத்மாக்கள்,
உமதுகீர்த்திகளை அடிக்கடி சொல்கிறார்கள்;
அடிக்கடி பாடிக் கேட்கிறார்கள்;
உமது இத்தகைய நாமஸ்மரணம், கீர்த்தனம் இவை,
எங்கள் பாபங்களை—கல்மிஷங்களை—அடியோடு அழிக்கின்றன;
ஹே—ப்ரிய—-புன்சிரிப்புள்ள, பிரேமை ததும்பும் உமது பார்வை —
-பால லீலைகள்—–கோபர்களுக்குச் செய்த அதிசயச் செயல்கள்—
லீலாவிநோதங்கள்—-எல்லாமே, எல்லோருடைய த்யானத்துக்கு உரியது;
மங்களங்களைக்கொடுப்பது;
உமது ரஹஸ்யமான பேச்சுக்கள், கண்ஜாடைகள், சிரிப்பு, பார்வை,
செய்கைகள் எல்லாமே எங்கள் ஹ்ருதயத்தைத் தொட்டு,
எங்களை உமக்கு ஆட்படுத்தி அடிமையாக்கி,
எங்களுடைய ஹ்ருதயத்தைப் பிளக்கின்றன
ஹே, நாத—- நீர் வ்ருந்தாவனத்தில் பசுக்களை மேய்த்து சஞ்சரிக்கும்போது
உமது பாதங்களை, சிலா,(கல்) , புல் ,முளை இவைகள் குத்தி புண்படுத்தியது,
எங்கள் மனத்தில் காயம் ஏற்பட்டது போல இருக்கிறது;
மனஸ் புண்பட்டு இருக்கிறது;
ஹே,வீர —ஒவ்வொரு நாள் சாயங்காலமும், நீர் பசுக்களுடன்
க்ருஹத்துக்குத் திரும்பும்போது, நீல மலர்களால் நிரம்பிய வனத்தைப் போல
உமது கேசபாசங்கள், உமது கரிய அழகிய திருமேனி,
பசுக்களின் சுவடுகளிலிருந்து கிளம்பிய புழுதி படிந்து வாடிய திருமுகம் ,
இவைகளைப் பார்க்கும்போது ,எங்களுக்கு என்ன தோன்றும் தெரியுமா !

தாமரைப் பூவில் தேனீக்களும் மகரந்தங்களும் உள்ளவை போலத் தோன்றும்;
கருத்தகேசங்கள் தேனீக்களைப் போலவும்
திருமுகம் மகரந்தம் போலவும் தோன்றும் ;
எங்கள் மனத்தில் மன்மத ரூபம் தோன்றும்;
நாங்கள், மன்மதனை மனஸ் ஸால் உபாசிப்பது போலத் தோன்றும்;

ஜனங்களின் இஷ்டத்தைப் பூர்த்தி செய்பவரே —-
ஸ்ரீ மகாலக்ஷ்மியாலும் ,ப்ரம்மாவாலும் அர்ச்சனை செய்யப்படும் உமது பாதங்கள்,
பூமி தேவிக்கு ஆபரணங்களைப் போல இருக்கின்றன;
சதா நாங்கள் த்யானம் செய்வதற்கு உரியதாக இருக்கின்றன;
வணங்குபவர்களுக்கு, காமதேனுவைப்போல ,
எதைக் கேட்டாலும் கொடுக்கச் சக்தி உள்ளவையாக இருக்கின்றன;

நித்தியமான சுகத்தை அளிப்பதாக இருக்கின்றன;
அப்பேற்பட்ட மகிமை உள்ள உமது சரண பத்மங்களை —
சுந்தரமான திருவடிகளை– எங்கள் ஹ்ருதயத்தில் இருத்தி
அநுக்ரஹம் செய்வீராக ‘
ஹே, வேணு கோபாலா—–உமது திவ்ய உதடுகளில் பெருகும் அதர அம்ருதம்
எங்கள் சோகங்களை நாசம் செய்பவை;
வேணுவின் நாதம் எழும்போது, அந்த அம்ருத தாரைகள் பொங்குகின்றன;
அதர முத்தத்தினால் எழும் நாதம் ,எங்கள் துக்கங்களை அழிக்கிறது;
ஆசாபாசங்களை நாசம் செய்கிறது;
உம்மிடத்தில் பக்தியை வளரச் செய்கிறது;
உமது அதர அம்ருதத்தை புல்லாங்குழலுக்குக் கொடுத்ததைப் போல ,
எங்களுக்கும் பகிர்ந்து அளிப்பீராக,
பகிர்ந்து எங்களுக்கும் அதரபானம் கொடுப்பீராக
ஹே–பிரபோ—நீர் காட்டில் பசுக்களுடன் சஞ்சரிக்கும் அந்த அரைநாள் பொழுது,
—அந்தப் பிரிவு—எங்களுக்கு –பல யுகங்களில் பிரிந்து இருப்பதைப் போல
துக்கத்தை ஏற்படுத்துகிறது;
உமது குடில குந்தலம் — மற்றும் நாங்கள் கண் இமைத்தல் இவை
உமது பூரண சௌந்தர்யமான திருமுகத்தைத் தர்சிக்கவிடாமல் தடுக்கிறதே ?
இவை எல்லாம் ஸ்ருஷ்டி கர்த்தாவான ப்ரம்மாவுக்குத் தெரியாமல்
அவர் ஜடமாக இருப்பாரோ !
எங்களுடைய மனஸ் ஸின் அனுபவங்களைப்பார்க்க முடியாதபடி
அவரின் ஸ்ருஷ்டி இருக்கிறதே, ஆச்சர்யம் !
ஹே,அச்யுதா—உமது புல்லாங்குழல் இசையைக் கேட்டதும்
எல்லாவற்றையும் விட்டு விட்டு உம்மிடம் ஓடோடி வந்து இருக்கிறோம்.
நீயே எங்களுக்குக் கதி—-அடைக்கலம் என்று வந்திருக்கிறோம்;
பதி ,பிள்ளைகள், பந்துக்கள், சஹோதரர்கள் எல்லாரையும் த்யாகம் செய்து
நீயே எல்லாம் என்று வந்து இருக்கிறோம்
ஹே,பிரபோ—-ரகஸ்யமாக எங்களிடம் விளையாடி, பேசி,
எங்களிடம் உமக்குள்ள அன்பை வெளிப்படுத்தி இருக்கிறீர்;
எங்கள் ஹ்ருதயங்களைப் பிளந்து அதில் ஆசையை உண்டாக்கி,
அவைகளை, நீர் பகிரங்கமாகச் சொல்லும்போது ,உமது முக விகாஸம்
பொலிவு அடையும்;
உமது அகன்ற மார்பு;
இதுவே ஸ்ரீ மஹாலக்ஷ்மி நித்ய வாஸம் செய்யும் வாசஸ் தலம் ;
உம்மைப் பிரியத்தால் அடைந்து உம்மையே காதலித்து அடி பணிந்து ,
நாமும் இப்படியே வாஸம் செய்யலாமே ,என்று மனம் மோஹம் அடைகிறது.
ஹே,விஸ்வ மங்களப்ரபு —–இந்த ஸ்தலத்தில் ஏற்பட்டுள்ள உமது அவதாரம்,
எங்களுக்கும் , எல்லாப் பிராணிகளுக்கும் துக்கங்களைப் போக்குகிறது;
சுந்தரவடிவம் மங்களத்தை ஏற்படுத்துகிறது;

நீரும், எங்களை, உம்முடைய பந்துக்கள் என்று ஸ்வீகரித்து,
கபட வேஷத்தை விடுவீராக;
உம்மிடம் அசாத்திய பக்தி செலுத்தும் எங்களிடம்
கபட வேஷத்தை விடுவீராக.
ஹே—-ப்ரிய— காட்டில் அலைந்து கல்லும் முள்ளும் குத்தும்போது ,
உமக்கு ஏற்படும் அந்த வலி ,எங்கள் ஹ்ருதய வலி ;
காரணம், உமது பாதாம்புஜங்கள்,எங்களது ஹ்ருதயத்தில் படிந்து இருக்கிறது;
உமக்கு வன சஞ்சார வலி
எங்களுக்கு ஹ்ருதய வலி;
இது பக்தியின் விஸ்லேஷ துக்கத்தின் உச்ச நிலை

( நாரதாதி மகரிஷிகள், விஸ்லேஷ துக்கத்தையே
பக்தியின் உச்ச நிலையாகக் கொண்டாடி இருக்கிறார்கள் )

கோபிகைகள், இவ்வாறு விரஹ தாபத்தைப் பொறுக்க இயலாத துக்கத்துடன்
கீதமாகப் பாடினார்கள்

( ஹே—-கிருஷ்ணா— உன்னிடம் அளவில்லாத பக்தி செலுத்திய கோபஸ்த்ரீகளை—
-கோபிகா கீதம் என்று எங்களுக்குக் கொடுத்த அந்த கோபிகைகளை
ஆயிரமாயிரம் தடவை அவர்கள் பாதங்களைத் தொட்டு நமஸ்கரிக்கிறேன் .
ஹே,முகுந்தா— அந்தக் கோபிகைகளில் ஒருத்தியாகப் பிறந்து இருந்தால்,
இவ்வளவு பிறவிகள் எனக்கு வந்திருக்காதே?
அளவிட இயலாத பாபம் செய்து அல்லாடுகிறேனே ?
இந்தப் பிறவியிலாவது ,அபயம் என்று சொல்லி,
அச்யுதா, அடியேனை உன் திருவடிகளில் சேர்த்துக் கொள் )

ஸ்ரீ கோபிகா கீதம் என்கிற 31 வது அத்யாயம் நிறைவடைந்தது.சுபம்

—————————————————————————————————————

தசமஸ்கந்தம்—நவீன பாணியில்—-அத்யாயம்–32
———————
ஸ்ரீ கிருஷ்ணனின் அநுக்ரஹம்——ராஸ லீலை—- தொடர்கிறது
——————————————————
கோபிகைகள் ,ஸ்ரீ கோபிகா கீதம் என்றே இசைத்து உன் புகழ் பாடி
உன் தர்சனத்துக்காகக் கதறினார்கள்.
விரஹ தாபத்தைப் பொறுக்க முடியாமல் துக்கத்துடன் கதறினார்கள்.
ஹே, கிருஷ்ணா , கருணையுடன் நீ அப்போது அவர்கள் மத்தியில் தோன்றினாய்

பட்டு பீதாம்பரத்துடன் மந்தஹாசத்துடன் மன்மதனுக்கும் மன்மதனாக ,
கோபியர்கள் மத்தியில் வந்தாய்.
கோபிகைகள் , இழந்த பிராணனை மீண்டும் பெற்றதைப் போல சந்தோஷப்பட்டனர்.

உன்னை வரவேற்றார்கள்;
எழுந்து வந்து உன் கரங்களைப் பிடித்துக் கொண்டாகள்;
சிலர் உனக்கு அஞ்சலி செய்தார்கள்;
சிலர் உன் கரங்களைப் பிடித்து அவர்கள் தோள்மீது வைத்துக் கொண்டார்கள்;
ஒருத்தி ,கண்களை இமைக்காமல் உன் முகத்தையே பார்த்தாள்;
ஒருத்தி இதிலும் திருப்தி அடையாமல், உன் திருவடிகளை நோக்கினாள்
; இன்னொருத்தி கைவிரல்களால் திறந்த கண்களைப் பொத்தி
விரல் இடுக்குகள் வழியாக உன்னைத் தர்சநம் செய்து ஆனந்தம் அடைந்தாள் ;

சாதாரண ஜனங்கள், எப்படி ஆத்ம யோகியைப் பார்த்ததும் துக்கம் விலகி
சந்தோஷம் அடைவார்களோ, அப்படி ஆனந்தம் அடைந்தார்கள்
நீ, பராசக்தி ரூபமான அவர்களுடன் காளிந்தீ நதியின் கரையில்
உள்ள மைதானத்தில் பிரவேசித்தாய். அந்த மைதானம் அல்லது வனம்—–
மல்லிகையும் மந்தாரமும் நிரம்பி தென்றலில் அவைகள் அசைந்து ஆட,
மதுரமாகக் காக்ஷி அளித்தது;

சரத் சந்திரனின் வெளிச்சம் மனத்துக்கு குதூகலத்தை ஏற்படுத்தியது;
உன்னுடைய தர்சநம் உன்னுடைய ஸ்பர்சம் இவற்றால்
தங்கள் மனோரதம் நிரம்பியவர்களாக கோபிகைகள் முகங்கள் விளங்கின;
வேதங்களை அத்யயனம் செய்து, அதன் நோக்கமாகிற
ஆத்ம தர்சநம்/ஆத்ம விசாரம் இவைகளை அடையும்
வேதாத்யாயியைப் போல விளங்கினார்கள்
;
அவர்கள், தங்கள் மேலாடையை /உத்தரீயத்தை உனக்கு ஆசனமாகத்
தயார் செய்தார்கள்; அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க
நீ அதன் மீது அமர்ந்தாய்;
எப்படி ஆத்ம தர்சன யோகிக்கு உனது ஸ்வரூபத்தைக் காண்பிப்பாயோ,
அப்படி அவர்களுக்குக் காக்ஷி அளித்தாய்;
உன்னுடைய பார்வை, கண்களின் சேஷ்டிதங்கள், பேச்சுக்கள்
இவைகளால் மயங்கிய கோபிகைகள், உன் கைகளைப் பிடித்துக் கொண்டனர்;
சிலர், உன் திருவடிகளை எடுத்து,அவர்கள் மடிகளில் வைத்துக்கொண்டனர்;
உன்னைச் சிலர் புகழ்ந்தனர்; சிலர் பொய்க்கோபத்துடன் உன்னிடம் பேசினர்
ஹே, ஸ்வாமி—-சிலர் அன்பு காட்டுவதால், அன்பை அளிக்கிறார்கள்;
இன்னும் சிலர், அன்பைக் காட்டியபோதிலும் , அந்த அன்பை மதிக்காமல்
வேறு விதமாக நடந்து கொள்கிறார்கள்; நீர் அன்பு செய்பவரா ?
அன்பு செய்தபோதும் வேறாக நடந்து கொள்பவரா ?
இல்லாவிடில் இந்த இரண்டு வழியும் இல்லாமல்,
உமது வழியே போகும் சர்வ ஸ்வதந்த்ரரா ?
நீர் எந்த ரகத்தைச் சேர்ந்தவர் ? என்று உன்னைக் கேட்டார்கள்.
அதற்கு நீ பதில் கூறினாய்;–
சகிகளே ………ஒரு நன்மையை விரும்பியோ,
பரஸ்பர நன்மையை விரும்பியோ என்னிடம் அன்பு செலுத்தினால்
அந்த அன்பு “ஸ்வார்த்தம் “ஒரு பலனுக்காகச் செய்யப்பட்டதாகும்
அதில் சந்தோஷமோ,ஸ்நேகத்தன்மையான தர்மமோ இருக்காது
(கலவிக்குக்கூலி கேட்பார்களா ! )
எவர்கள் அன்பைப் பெறாவிட்டாலும், பிறரை அன்புடன் நேசிக்கிறார்களோ,
அவர்கள் கருணை உள்ளம் கொண்டவர்கள்;
தங்கள் பெற்றோரைப் போலக் களங்கமில்லா அன்பு;
சௌஹ்ருதம் —-அதாவது நேசிக்கும் தன்மை இருக்கிறது;
இதில் தோஷத்துக்கோ அபவாதத்துக்கோ இடமில்லை;
இன்னும் சிலர், பிறர் இவர்களை நேசித்தாலும், இவர்கள்,
அப்படி நேசிப்பவர்களிடம் அன்பு செலுத்துவதில்லை.
அன்புக்குப் பதில் அன்பு செய்வதில்லை.

தங்களையே தங்கள் சொந்த ஆத்மாவையே ரமித்து,
ஆப்தகாமர்களாக, பிறர் நன்மை செய்தாலும் அதை நினையாமல்
நன்றி கெட்டு, அக்ருதக்ஜனாக ,பிறருக்கு— சொந்த தகப்பன், குரு —-
இ வர்களுக்குத் தீமை செய்யும் ஸ்வபாவம்உள்ளவர்களாக இருக்கிறார்கள்.
சகிகளே…….நான் இந்த ரகங்கள் ஒன்றிலும் சேரவில்லை;
சேரமாட்டேன். யார் என்னைப் பஜித்தாலும் அவர்கள் கண்களுக்கு நான்
பொதுவாகத் தோன்றுவதில்லை; புலப்படுவதில்லை.
அது அவரவர்களின் பக்தியின் ஆழத்தைப் பொறுத்தது;
பற்றுக்களை அறுத்த பக்தி;
ஏனென்றால், நான் மறைந்து போனால், அவர்கள் என்னையே
நினைத்துக் கொண்டிருப்பார்கள்—-சதா என் த்யானத்திலேயே
மூழ்கி இருப்பார்கள் அன்றோ!

ஒரு தரித்ரனுக்கு, பொக்கிஷம் கிடைத்து, அது நஷ்டப்பட்டுப் போனால்,
எப்படி அதே சிந்தையில் இருப்பானோ, வேறு ஒன்றிலும்
பற்று இல்லாமல் இருப்பானோ —-அதைப் போல எப்போதும் என்னையே
சிந்தித்து இருப்பான்.

ஹே…அபலைகளே…..என்னைப்பற்றிய த்யானம்,
என்னைப் பற்றிய அனுவ்ருத்தி உங்களுக்கு ஏற்படுவதற்காக —-
-நான் உங்களிடமிருந்து பிரிந்து போகிறேன்.
உங்கள் கண்களுக்குப் புலப்படாமல் இருக்கிறேன்.
நீங்கள் என்னைப் பஜித்தபோதிலும் ,
உங்களிடமிருந்து என்னை மறைத்துக் கொள்கிறேன்.
உங்களை நான் நேசித்தாலும், மறைமுகமாக என் சேஷ்டிதங்களாலே
அவற்றின் ஸ்மரணம் இவற்றாலே என் அன்பைக் காட்டுகிறேன்.
நீங்கள் எனக்காக மிகவும் த்யாகம் செய்து இருக்கிறீர்கள்.

உங்கள் நடத்தை தோஷமில்லாதது. உங்கள் அன்பு புனிதமானது.
அது மற்றவர்களுக்குத் தோஷமாகத்தோன்றினாலும்,
குறையாகத் தெரிந்தாலும் , உங்கள் நடத்தை
என் விஷயத்தில் குற்றம் குறை இல்லாதது.
எத்தனை பிறவி எடுத்தாலும், எத்தனை தேவ வர்ஷங்கள் ஆனாலும்
உங்கள் கடனை என்னால் தீர்க்க முடியாது.
என் த்யானம்—-என்னைப் பற்றிய நினைவு, —-
வீடு, கணவன், புத்ரன், குழந்தைகள் இவற்றைப் பற்றிய
உங்கள் எண்ணங்களை அழித்துள்ளது;
சம்ஸார பந்தங்களை அறுத்துள்ளது .
வீட்டுப் பற்றை அழித்து, பகவத் த்யானத்தில் மூழ்கச் செய்வதே
இதற்கு உரிய மஹா பலன்; அதனை இப்போது
என்னிடமிருந்து அடையப் போகிறீர்கள்
((ஹே—-கிருஷ்ணா—-கோபிகைகள் பக்தியில் ,அவர்களுக்குக்
கடமைப் பட்டு உள்ளதாக —அவர்களின் கடனை
எத்தனை பிறவி எடுத்தாலும் எத்தனை தேவ வர்ஷம் ஆனாலும்
தீர்க்க முடியாது என்று உறுதியாகச் சொன்ன கிருஷ்ணா !
உன்னைப் பூஜிக்க நாங்கள் எவ்வளவு தேவ வர்ஷம்
தவம் செய்து இருக்கவேண்டும் ! ஸ்ரீ ஆண்டாள் அருளியதைப் போல
“பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்த நீ ,
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது !
எற்றைப் பறை கொள்வானன்றுகாண் கோவிந்தா !
எற்றைக்கும் ஏழேழு பிறவிக்கும்
உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட் செய்வோம்
உன்னை எத்தனை ஆயிரம் தடவை நமஸ்கரித்தாலும் போதாது—
போதாது—போதாது;

ஹே….ராதே ….உன்னையும் எவ்வளவு தடவை நமஸ்கரித்தாலும் போதாது;
இருந்தாலும் கோபஸ்த்ரீகளை—-உன் பக்தியில் முழுவதும் ஆழ்ந்த —
உன்னால் கொண்டாடப்படுகின்ற —அந்த மாதாக்களை
ஆயிரம் தடவை நமஸ்கரிக்கிறேன். —ராதை என்கிற
பக்தி மார்க்கத்துக் குருவாகிய மாதாவை ஆயிரம் தடவை நமஸ்கரிக்கிறேன் ,
இவர்களை முன்னிட்டு,
ஹே—கிருஷ்ணா–உன்னைப் பல்லாயிரம் தடவை நமஸ்கரிக்கிறேன் )
32 வது அத்யாயம் நிறைவடைந்தது. சுபம்
அடுத்த அத்யாயம் , பலஸ்ருதியுடன் கூடிய “ராஸக்ரீடை “”

——————————————————————————————————————————————

தசமஸ்கந்தம்–நவீன பாணியில்—-அத்யாயம் 33
————————————–
ராஸக்ரீடை
——————-
யமுனா நதிக்கரை—–மல்லிகைப்புஷ்பங்களின் வாஸனை —-
இதமான தென்றல் –இரவு நேரம் —சந்திரனின் கிரணங்கள்
அமுதைப் பொழிந்துகொண்டு இருக்கின்றன .
நீ, உனது அங்க, பிரதி அங்க ஸ்பர்சத்தால், கோபிகைகளின்
மனக் கலக்கத்தைப் போக்கி, தாபங்களைப் போக்கி
அவர்களுக்கு அநுக்ரஹம் செய்ய நினைத்தாய்.
ஸ்திரீ ரத்னங்களான அவர்களுடன்,
ப்ரீதி, அன்யோன்யம் இவைகளால் உண்டான ஸ்நேகஉள்ளத்துடன்,
ராஸக்ரீடை செய்யத் திருவுள்ளம் கொண்டாய்.
நீ, கோபிகைகளால் சூழப்பட்டு இருந்தாய்;
ஒரு சக்ர வளையத்தைப்போல மண்டலம் அமைத்தாய்;

நீ, அவர்கள் மத்தியில்;
அது மட்டுமா !
இரண்டு கோபிகைகளுக்கு நடுவே ஒரு கிருஷ்ணனாக —-
அவர்களது கைகளை உனது தோள்மீதும்—-
உனது தீர்க்கமான திருக்கரங்கள் அவர்களது கழுத்திலும் —
-இருக்க, யாவருக்கும் வித்தியாசமின்றி, எல்லா கோபிகைகளுக்கும் நீ,
அவர்கள் பக்கத்தில் இருக்கிறாய் என்கிற நினைவை—
உணர்ச்சியை—உண்டாக்கி, ராஸ லீலையைச் செய்ய ஆரம்பித்தாய்.
இதனைக் காண ஆகாயத்திலே எல்லா கந்தர்வ, தேவ அப்சரஸ்கள்
கூட்டம் கூட்டமாக வந்து விட்டார்கள்;
துந்துபி வாத்தியம் முழங்கியது;
ஆகாயத்திலிருந்து புஷ்பங்கள் உங்கள் யாவரின் மீதும் வர்ஷிக்கப்பட்டன;
கந்தர்வர்கள், தேவர்கள் உன் புகழைப் பாடினார்கள்;
ஒவ்வொரு கோப ஸ்திரீயும், கைகளில் வளைகள் குலுங்க,
கால்களில் சலங்கைகள் ஒலிக்க,
ராஸ மண்டலாகார வட்டமாக நின்றுகொண்டு,
நடனம் செய்யத் தொடங்கினார்கள்;

நீ, இரண்டு தங்க நிறமுள்ள கோபிகைகளின் நடுவே
ஒரு பெரிய மரகத மணியைப் போலப் பிரகாசித்தாய்;
அவர்கள் உன்னுடன் சேர்ந்து நடனமாடினார்கள்
பாதங்கள் , நியாஸங்கள் அசைந்தன
புஜங்கள் தாளத்துக்கு ஏற்ப ஆடின
முகங்கள் புன்சிரிப்பைச் சிந்தின
புருவங்கள் நெளிந்து அசைந்தன
ஸ்தனங்கள் குலுங்கின ;இருபுறமும், மேலும் கீழும் குலுங்கின
காதுக் குண்டலங்கள் நடனமாடின
கோபிகைகளின் கன்னங்கள் பளபளத்தன
மார்பின் ரத்ன ஹாரங்கள் ஒளி வீசின
ஒட்டியான சலங்கைகள் சப்தித்தன
கோபிகைகள் உன் ஸ்பர்சத்தால் மிக்க ஆனந்தம் அடைந்தார்கள்
உச்சஸ்தாயியில் பாடினார்கள்
பிருந்தாவனம் ,கோபிகைகளின் கீதத்தால் நிரம்பியது
(நாட்ய சாஸ்த்ரம் சொல்வதாவது ;—-பல ஸ்திரீகள் வட்டமாக இருப்பர்;
ஒவ்வொரு ஸ்திரீயின் அணைப்பிலும் ஒரு புருஷன்–
இரு ஸ்திரீகளின் நடுவே ஒரு புருஷன்—-
இரண்டு புருஷர்களுக்கு நடுவே ஒரு ஸ்திரீ—
இப்படி நின்றுகொண்டு, கைகளைத் தோளின்மீது கழுத்தைச் சுற்றிப்
போட்டுக்கொண்டு, சக்ர வளைவில் —-நர்த்தனம் செய்தல்—-
பாடுதல்—-தாளத்துக்கு ஏற்ப கரங்களைத் தட்டுதல்—-
சலங்கை ஒலிக்க பாதங்களை நெளிவு சுளுவுடன்
தரையில் வைத்து எடுத்தல்—-இப்படியாக மிக விரிவாகச் சொல்கிறது )
கோபிகைகள் ஆடிய விதத்தை ஸ்ரீ சுகர் சொல்வதை—
ஹே, கிருஷ்ணா, உனக்கு நினைவு படுத்துகிறேன்.
உன் கையால் கழுத்தை அணைக்கப்பட்டிருந்த ஒரு கோபிகை
உனக்குச் சமமாக உச்சஸ்வரத்தில் பாடினாள்;
இவள் ராதையின் தோழியான விசாகா ;
உன் பக்கலில் இருந்த மற்றொரு கோபிகை
பேஷ் பேஷ் என்று ஆனந்த மிகுதியால் கூவினாள்
அதே பாடலை 2 வது காலமாக, 3 வது காலமாக வேகமாக—துருவகாலத்தில் —
ராதையின் இன்னொரு தோழியான லலிதை பாடினாள்
அதனால் சந்தோஷம் அடைந்த நீ, அவளை மெச்சி அந்தப் பாடலுக்கு ஏற்ப
ஆடிக்காண்பித்தாய் ;
உன்னுடைய அந்தரங்கப் பிரியையான ராதா,
ராஸவிளையாட்டில் பரிசிரமம் அடைந்தாள்;
உன்னுடைய தோள்களின் மீது தாமரைத் தண்டுகளைப் போன்ற
தன்னுடைய கரங்களைப் போட்டு, உன்னுடன் சேர்ந்து நின்று இருந்தாள்;
அப்போது அவளுடைய கை வளைகள் நழுவின;
தலையில் அணிந்து இருந்த மல்லிகை ,கசங்கிக் கீழே உதிர்ந்தன;
உன்மீது அப்படியே சாய்ந்து கொண்டாள்;
( பக்திக்கு இலக்கணமாகிய ,உனக்குப் ப்ரியமான ,ஸ்திரீ ரத்னமான
,ஸ்ரீ ராதை மாதாவுக்கு ஆயிரம் தடவை நமஸ்காரங்கள் )
இவளைப் பார்த்த, இன்னொரு கோபிகை, சந்தனம் பூசப்பட்ட
உன் திருக்கரங்களைப் பிடித்து, தன் தோளின் மீது இருத்திக் கொண்டு,
மெய்மறந்தாள்;
சியாமளா என்கிற, ராதையின் தோழியான இன்னொருத்தி,
தன்னுடை கையை உன் அருகில் கொண்டு வர,
அந்தக் கையை நீ முத்தமிட, அவளும் மெய் மறந்தாள்;
ராதையின் இன்னொரு தோழியான சைப்யை ,
தன்னுடைய உதட்டின் ஸ்பர்சத்தினால், உன்னுடைய தாம்பூலத்தை
வாயினால் க்ரஹித்து, சுவைத்தாள்.
அதைப் பார்த்து நீ, ஆனந்தம் அடைந்தாய்;
இன்னொரு கோபிகை, ராஸ விளையாட்டால் களைத்துப் போனாள் ;
அவள் இடுப்பில் அணிந்து இருந்த ஒட்டியாணம் நழுவியது;
கால் சலங்கைகள் அவிழ்ந்தன;
இதைப் பார்த்த பத்ரை எனப்படும் ராதையின் இன்னொரு தோழி,
உன் அம்புஜ ஹஸ்தத்தை இழுத்துத் தன் ஹ்ருதயத்தில் வைத்துக் கொண்டாள்;

( அவள் பத்ரை, பெயருக்கு ஏற்ப மங்களமானவள்; தானும் மங்களமாகி
அவள் தோழியான ராதைக்கும் , ஸ்திரீ ரத்னம் ராதையின்
அடிமையான அடியேனுக்கும் மங்களத்தை ஏற்படுத்தினாள் )
ஒவ்வொரு கோபிகையின் காதின் ஓரத்தில் அல்லி புஷ்பம் அமர்ந்து இருக்க,
கேசபாசங்கள் கன்னத்தில் அவிழ்ந்து விழ,
முகத்தில் அரும்பிய வ்யர்வைத் துளிகள்
உன்னுடன் போட்டி போட்டுக் கொண்டு ஆட,
கால் சலங்கைகள், ஒட்டியாண சலங்கைகள்
கைவளைகள் எல்லாம் தளத்துக்கு ஏற்ப ஒலித்திட,
தாள வாத்தியங்கள் முழங்க,
ஸ்ரீ மகாலக்ஷ்மிக்கே ஏகபோகமாக இருக்கும் உன்னை அடைந்து,
உன் கைகளை அவர்கள் கழுத்தில் அணிந்துகொண்டு ,
ராஸ நடனம் செய்து, உன்னைப்பற்றிப் பாடி, உன்னை ரமித்தனர்;

அப்போது அவர்கள் மாலைகள் நழுவி விழுந்தன;
தேனீக்கள் ரீங்காரம் செய்ததால், காயகர்களாக (பாடுபவர்களாக ) இருந்தனர் ;
மயில்களும், குயில்களும், கிளிகளும், அன்னங்களும்,
மைனா சக்ரவாகப் பறவைகளும், வாய்ப்பாட்டு,
தாளவாத்தியங்கள் வாசிப்பவர்களாக இருந்தனர்;
எல்லோரும் களைத்துப் போனார்கள்;
நர்த்தனம் செய்த கோபிகைகளும் களைத்துப் போனார்கள்;

இப்படி, நீ, வ்ரஜ சுந்தரிகளுடன் ராஸ லீலை செய்தாய்;
ஹே,கிருஷ்ணா—-நீ செய்த ராஸ க்ரீடையை,
வானத்தில் கூடி இருந்த ஸ்திரீகளும் பார்த்து,
தங்கள் நிலையை மறந்து சந்தோஷம் அடைந்தனர்
; சந்திரனும், தன் நக்ஷத்திர பரிவாரங்களுடன் இதைப் பார்த்து ஸ்தம்பித்தான்;
இரவு அதனால் நீண்டது.
நீ, கோபிகைகள் பலருடன், அவர்களுக்குச் சமமாக பல கிருஷ்ண ரூபங்களை எடுத்து,
விளையாடி அவர்கள் களைப்புறும் போதெல்லாம் அவர்கள் முகத்தைத் தடவி
அவர்களுடைய களைப்பைப் போக்கி, அவர்களை ஆனந்தம் அடையச்செய்தாய்
பிறகு, அவர்களுடன் யமுனை நதியில் ஜல க்ரீடைக்கு இறங்கினாய்.

உனக்கு உள்ள உலக மரியாதைகள், வேத பூர்வ மரியாதைகள் எல்லாம் விலகி
வெகு தூரம் சென்றன;
ஜலத்தில் இறங்கிய நீ, அவர்கள் மீது ஜலத்தை வாரி இறைத்தாய்;
இதனால் சந்தோஷமடைந்த கோப ஸ்திரீகள் அவர்களும் உன் மீது
யமுனா ஜலத்தை வாரி வீசினார்கள்;
ஆகாயத்தில் குழுமி இருந்த கந்தர்வ ஸ்திரீகள், அப்சரஸ்கள் ,
மேலே இருந்து உங்கள் மீது புஷ்பமாரி பொழிந்தார்கள்;
ஒரு இரவு பல இரவுகளாக நீடித்தது;
ஆனால், கோபிகைகளுக்கு, இப்படி இரவு நீண்டதே தெரியவில்லை;
ஹே, கிருஷ்ணா—-பரீக்ஷித் ராஜன் ஸ்ரீ சுகரைக் கேட்ட கேள்விகளையும் ,
அதற்கு அவர் சொன்ன பதில்களையும் இப்போது சொல்கிறேன்
பரீக்ஷித்தின் கேள்வி ;—-பகவான் ஸ்ரீ கிருஷ்ணனின் அவதாரம்,
தர்மத்தைத் திரும்பவும் நிலை நிறுத்த ஏற்பட்டது; அவர்
-பரர்களின் தாரங்களை எப்படி தன்னுடைய சொத்தாக ஆக்கிக் கொண்டார் ?
ஸ்ரீ ஆத்ம காமர்—சமஸ்த காமங்களையும் அடைந்தவர்;
அவர் எப்படி இப்படி நடந்து கொண்டார் ?
உமது அபிப்ராயத்தில் ,இந்த நடத்தை சரியா ?
ஸ்ரீ சுகரின் பதில்;—–நம் பார்வையில் படுகின்ற —தர்மத்துக்கு எதிர் என்று
நினைக்கிற செயல்கள்— பகனுக்குத் தோஷமாக ஆகாது;
அக்னியில் போடப்பட்டவை எப்படி பஸ்மாமாக ஆகுமோ,
அப்படி பகவானின் தேஜஸ்சில் இவை ஆகிவிடும்;
பகவான் ,பரப்ரம்மம், பரமாத்மா;
எல்லா ஆத்மாக்களும் அந்த பரமாத்மாவில் லயிப்பவை;
பாற்கடலில் தோன்றிய ஆலஹால விஷம், ருத்ரனால் விழுங்கப்பட்டது;
இதை—இது போன்ற சா ஹசச் செயல்களை ,இப்படிப் பேசும் மூடர்களால்
செய்ய முடியுமா ?

பகவான் சர்வ சக்தி உள்ளவர்; அவரை எந்த தோஷமும் நெருங்க முடியாது;
அவர் செய்தது தோஷம் என்பதோ, அதைப்போலச் செய்ய நினைப்பதோ—-
நினைப்பதே கூட, மற்றவர்கட்கு மஹா தோஷம்;
இந்த உலகு மட்டுமல்ல—எல்லா உலகங்களிலும் உள்ள ஜந்துக்கள்
பசு பக்ஷி மிருகம் மனுஷ்யன் தேவன் உட்பட—-அவனுக்கு அடங்கியவர்கள்;
இவை யாவும்–ஆமாம்—எல்லாமும் அவனுக்கு சரீரம் அதாவது–உடல்;
இவை எல்லாவற்றுக்கும் அவர் ஆத்மா. அவருக்கு எப்படி தோஷம் ஏற்படும் ?
அவரது திருவடிகளை அனவரதமும் தொழும் யோகிகள்,
தங்களுடைய யோக மகிமையால் கர்ம பந்தங்களை விலக்கியவர்கள்—
பகவத் சாம்யம் பெற்றவர்களுக்கு, எப்படி தோஷங்கள் ஒட்டாதோ
யாரால் இந்த நிலையை அடைந்தார்களோ,
அந்தப் பகவானுக்கு, அதைவிட பன்மடங்கு அதிகமாக,
எந்தத் தோஷமும் ஒட்டாது.
கோபிகைகளாக இருந்தாலும், அவர்கள் பதிகளாக இருந்தாலும்,
எல்லோரும் கர்ம சம்பந்தமான தேகத்தை உடையவர்கள்.
பஞ்ச இந்த்ரியங்களால் ஆக்கப்பட்ட தேகத்தை உடையவர்கள்
இவர்கள் யாவரும் பகவானுக்கு, சரீரம்,
இவர்களுக்குள்ளும் அந்தர்யாமியாக இருப்பவர் பகவானே—ஸ்ரீ கிருஷ்ணனே !
ஸ்வரூப —–ஸ்திதி—–ப்ரவ்ருத்தி—-யாவற்றிலும் அவரே செயல் படுகிறார்.
அவரே ஸ்ரீ கிருஷ்ணனாக —தேகத்தை—நம்மைப் போல எடுத்துக் கொண்டு
இப்படி லீலைகள் செய்கிறார்.

அவருடைய மாயையினால் மோஹிக்கப்பட்ட வ்ரஜையில் உள்ள யாரும் —
ஜனங்களோ–கோபர்களோ–கோபிகைகளோ–அவர்களுடைய பதிகளோ—
அவரின் பெற்றோர்களோ அவரிடம் எந்தத் தோஷத்தையும் காணவில்லை.
ஏனென்றால், ஒவ்வொருவரும் அவருக்குப் பத்னி—அவர் ஒருவரே புருஷர்.
புருஷர்களுக்கு எல்லாம் புருஷோத்தமர்.
ஸ்ரீ சுகர் இவ்வாறு பதிலளித்து விட்டு, மேலும் சொன்னார்.
ஹே—ராஜன்—-ராத்ரி வேளை முடியும் நேரம் நெருங்கியது;
ஸ்ரீ கிருஷ்ணரை விட்டுப் பிரிய மனமில்லாமல்,
பாக்யசாலிகளான அந்தக் கோபிகைகள்—அவருடைய அனுமதி பெற்றுத்
தங்கள், தங்கள் க்ருஹத்துக்குத் திரும்பினார்கள்.
(ஹே—-ராதாமாதவ—–கோபிகைகளைப்போல , எங்களைத் திருப்பி அனுப்பிவிடாதே.
உன்னைச் சரண் அடைந்து விட்டோம் எங்கும் போகமாட்டோம் )
பலஸ்ருதி ;—-
யார், யார், இந்த ராஸ க்ரீடைகளை ,ஸ்ரத்தையுடனும்,பக்தியுடனும் கேட்கிறார்களோ,
அவர்களுடைய காமங்கள், இச்சைகள் , மிருகத் தன்மைகள் என்று யாவும்—-
விரைவில் அழிகின்றன; அவர்கள், காமத்தை வென்று கிருஷ்ண பக்தனாகிறார்கள்

( ஹே, கிருஷ்ணா—-ஸ்ரீ சுகரை நமஸ்கரிக்கிறேன்; அர்ஜுனனுடைய பேரனான
பரீக்ஷித்தை நமஸ்கரிக்கிறேன்; நாரதரையும் ஸ்ரீ வியாசரையும் பல தடவை நமஸ்கரிக்கிறேன்;
கோபிகைகளின் தலைவி —-உனக்கு இனியவள் —அந்த ஸ்ரீ ரத்னமாகிற ராதை மாதாவை
அவருடைய தோழிகளுடன் சேர்த்துப் பலப் பல தடவை நமஸ்கரித்து,
அவர்களுடைய ஸ்ரீ கிருஷ்ண பக்தியில் கொஞ்சமாவது எங்களுக்கு அருளி,
உன்னிடம் நீங்காத பக்தியும், உன் திருவடிகளில் இடையறாத நினைவும் ,
இந்த பக்தியும் நினைவும் சேர்ந்து ,பிறவி என்பதை அறுத்து, பரமபதத்தில்
நித்ய கைங்கர்யம் செய்யும் பாக்யத்தை வேண்டி
உன்னைப் பல்லாயிரம் தடவை நமஸ்கரிக்கிறேன் )

இத்துடன், ராதா பஞ்சாத்யாயம்—–ராஸ க்ரீடை நிறைவு பெற்றது.
இதைப் படித்தவர்களுக்கு, பகவான் எல்லா ஆசிகளையும் வழங்குவாராக.
( தொடர்ந்து வரப் போகின்ற, உத்தவர் விஜயம், ப்ரமர கீதம், உத்தவரின் அதிசயமான
அனுபவங்கள்—இவற்றையும் சேர்த்து அனுபவிக்கத் தயாராகுங்கள் )
ராஸ க்ரீடை என்கிற 33 வது அத்யாயம் நிறைவடைந்தது. சுபம்.

இனி 34 வது அத்யாயம்…….சங்க சூடனின் வதம்
ஸ்ரீ சுக பிரம்ம ரிஷி, பரீக்ஷித் மகாராஜனுக்கு உன்னுடைய லீலைகளை,சுதர்சனன் என்கிற வித்யாதரனுக்கு சாப விமோசனம் அளித்ததையும்,
சங்கசூடன் என்கிற பேர் உள்ள , குபேரனின் தாசன் , கோபிகைகளிடம் அபசாரப்பட்டதால்,
அவனை அழித்ததையும் இப்போது சொல்கிறார்.

ஒரு சமயம், கோபர்கள், எல்லாத் தேவர்களையும் சந்தோஷமடையச் செய்ய, ஒரு நாள் பூராவும் தண்ணீர் மாத்ரம் அருந்தி, வேறு ஆகாரமின்றி உபவாசம் இருந்தனர். நந்தகோபனும் இதில் கலந்து கொண்டு, சரஸ்வதி நதி தீரத்தில், உபவாசம் இருந்தார்.
ராத்திரி நேரம்; ஒரு பெரிய சர்ப்பம், நந்தகோபன் படுத்துக்க் கொண்டு இருந்த பக்கமாக,
யதேச்சையாக வந்தது; சர்ப்பத்துக்கு சரியான பசி; நந்தகோபனை விழுங்க ,அவரைப் பிடித்துக் கொண்டது; திடீரன்று கண் விழித்துப் பார்த்தபோது பெரிய சர்ப்பம்;
நந்தகோபன் கதறினார்; உன்னைக் குறித்துக் கதறினார்;

கிருஷ்ணா, பெரிய சர்ப்பம் என்னை விழுங்கப் பார்க்கிறது,ஓடி வா என்னைக் காப்பாற்று என்று கதறினார்.கோபர்கள், சூலம் ஈட்டி, தீப்பந்தம் முதலியவைகளால் குத்தியும் பயமுறுத்தியும்
சர்ப்பம் அவரை விடவில்லை.
அந்தச் சமயத்தில் நீ அங்கு ஓடோடி வந்தாய்.
சர்ப்பத்தை உன் திருவடியால் எட்டி உதைத்தாய்.
உன் திருவடி ஸ்பர்சத்தால் , சர்ப்பம் , வித்யாதரனாக எழுந்தது.அந்த வித்யாதரன் உன்னை வணங்கினான். நீ, அவனை “வித்யாதரனாக விளங்கும் நீ,
சர்ப்ப உருவத்தில் இருந்ததற்குக் காரணம் என்ன” என்று கேட்டாய்
அதற்கு , வித்யாதரன் “நான், சுதர்சனன் என்ற பெயர் உள்ள வித்யாதரன்; சகல ஐஸ்வர்யமும், அழகும் பெற்று இருந்தேன்; ஒரு சமயம், அங்க ஹீனமான ரிஷியை—-அங்கிரஸ் கோத்ர ரிஷியை—–பரிஹாசம் செய்தேன்; அவர் கோபமடைந்து ,என்னை சர்ப்பமாகப் போகக்கடவது என்று சபித்தார். அதுமுதல், சர்ப்பமாக
அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தேன்; உங்களது திருவடி ஸ்பர்சத்தால்,சாப விமோசனம் கிடைத்தது; உங்களது தர்சனமும் கிடைத்தது;
உங்களது திருவடி சம்பந்தம் பாபத்தைப் போக்குகிறது;
அடியேனை ரக்ஷித்து பழைய உருவை அடையச் செய்தது, அடியேனின் பாக்கியம் ”
என்று சொல்லி, உன்னைப் பிரதக்ஷிணம் செய்து, தேவ லோகத்துக்குச் சென்றான்.
நந்தகோபன் ஆச்சர்யத்துடன் இவைகளைப் பார்த்துக்கொண்டு இருந்தான்;
கோபர்களும் அப்படியே; எல்லோரும் உன்னை ஸ்துதி செய்துகொண்டே,கிராமத்துக்குச் சென்றனர்.

பின்னொரு சமயம்; ராத்ரி வேளை; வ்ரஜவனம்;அல்லிமலர்கள் மலர்ந்து இருக்கின்றன; இளங்காற்று வீசுகிறது; எங்கும் மல்லிகைப் புஷ்ப மணம்; வ்ரஜ சுந்தரிகள்—கோபிகைகள் –உடல்பூராவும் சந்தனம் பூசி, வாசனைத் த்ரவ்யங்களையும் பூசி, மாலைகளாலும் புஷ்பங்களாலும் அலங்கரித்துக்கொண்டு,
நீயும் பலராமனும் அங்கு இருக்கும்போது, மிகவும் அன்புடன் மதுரமாகப் பாடுகிறார்கள்
. நீங்களும், ஸ்வர மூர்ச்சனைகளுடன், மேலும் கீழும் சஞ்சாரம் செய்யும் குரலில் சர்வ பூதங்களும் மயங்கும்படி பாடுகிறீர்கள்;கோபஸ்த்ரீகள் ஆனந்தித்து, மதி மயங்கி, கேசபாசங்கள் கலைய, மாலைகள் நழுவ,
உடைகள் நழுவுவதுகூடத் தெரியாத மயக்கத்தில் இருக்கிறார்கள்;
அப்போது, குபேரனின் தாசன்—சங்கசூடன் —என்பவன் அங்கு வந்து, மதி மயக்கத்தில் இருக்கும் வ்ரஜ சுந்தரிகளை, பசுக்களைத் திருடன் ஓட்டிச் செல்வதுபோல
, அவர்களை விரட்டி, அபஹரித்துச் செல்கிறான்;
அவர்கள், ஹே….ராமா….ஹே….கிருஷ்ணா எங்களைக் காப்பாற்று என்று கதறுகிறார்கள்;
பயப்படாதீர்கள் என்று சொல்லி, நீயும் பலராமனும் சங்க சூடனை விரட்டுகிறீர்கள்; அவன் தப்பித்தால் போதுமென்று ஓடுகிறான்; நீ, பலராமனை , கோபிகைகளுக்குத்துணையாக நிறுத்தி, சங்கசூடனை விரட்டி , அவன் அருகில் சென்று உன் முஷ்டியாலேயே
அவன் சிரஸ்ஸை அடித்துக் கீழே தள்ளி, அவன் தலையில் அணிந்து இருந்த ரத்ன ஆபரணத்தை
எடுத்துக் கொண்டு வந்து , பலராமனிடம் கொடுக்கிறாய். அவரைக் கௌரவித்தாய்.

34 வது அத்யாயம் நிறைவு அடைந்தது . ஸுபம்

வ்ரஜஸுந்தரிகளின் ,க்ருஷ்ணலீலா கீதம்–கோபிகா கீதம்

ஹே —கிருஷ்ணா—-நீ, பசுக்களை ஓட்டிக்கொண்டு வனத்துக்குச் செல்லும்போது,,
உன் பிரிவாற்றாமையால் ,கோபிகைகள் ,மனஸ்ஸை உன்னிடம் பறிகொடுத்து
உன் புகழை மெய்மறந்து பாடினார்கள்.
சுக மஹரிஷி ,பரீக்ஷித் ராஜனிடம் சொன்னதை, இப்போது உன்னிடம் சொல்கிறேன்

நீ, புல்லாங்குழலை இடது கையில் பிடித்துக்கொண்டு இடது பக்கமாகக் கொஞ்சம்
வளைந்து,நின்றுகொண்டு உன்னுடைய புருவங்கள் அசைய ,உன் கோமள விரல்கள்
புல்லாங்குழலின் நாதத் த்வாரங்களை மூடித் திறக்க , வேணுகானம் செய்யும்போது,
ஹே–கோபிகைகளே —-எங்கே—எந்த இடத்திலிருந்து கண்ணன் கானம் இசைக்கிறானோ,
அந்த இடத்துக்குஉங்கள் மனஸ் சென்று, லயித்துவிடுகிறது.

அப்போது ஆகாய மார்க்கமாக சென்றுகொண்டிருக்கும் சித்தர்களின் பத்னிகள் ,
கண்ணனுடைய நாதத்தைக் கேட்டு,ஆச்சர்யப்பட்டு, உங்களைப்போலவே மனசைப்
பறிகொடுத்து லஜ்ஜையும் பக்தியும் கலந்த மனத்தை உடையவர்களாய், தங்கள்
ஆபரணங்கள் மாலைகள், வஸ்த்ரங்கள் நழுவுவது கூடத் தெரியாமல், கணத்தில்
லயிக்கிறார்கள்.

ஹே—-சித்த பத்னிகளே—-நந்தகுமாரன் ,வேணுகானம் செய்யும்போது, அவருடைய
வக்ஷஸ்தலத்தில் நித்யவாஸம் செய்யும் ஸ்ரீ மஹாலக்ஷ்மி, மின்னலைப்போல ,
தேஜோமயமாக ஜ்வலிக்கிறாள்.அப்போது பெருமைக்குரிய கண்ணனின் கானம்
ஹே—-அபலா —உங்கள் மனஸ் துக்கத்தைப் போக்கி ,சந்தோஷமடையச் செய்கிறது.

அந்த கானம் ப்ருந்தாவனம் முழுவதும் பரவி நிரம்புகிறது.அங்கு சஞ்சரிக்கும் வ்ருஷபங்கள்
மான்கள், மயில்கள், குயில்கள், பக்ஷிகள், வேணுகானத்தில் மயங்கி , சாப்பிடுதல்,
நடத்தல், படுத்தல், தூங்குதல் போன்ற தத்தம் கார்யங்களை மறந்து, புற்களை மேய்பவை
கானம் வரும் திசையை நோக்கி ,அண்ணாந்து பார்த்து, இருகாதுகளும் விரைத்து மேல் எழும்ப ,
வாயில் புற்கள் அப்படியே இருக்க, கண்ணனின் வேணுகானத்தில் மோஹித்து ,நான்கு கால்களும்
தடுமாற,அசையாச் /அழியாச் சித்திரங்களைப் போல ,காட்சி அளிக்கின்றன.

பகவான் க்ருஷ்ணன் ,பலராமனுடன்கூட நன்கு அலங்கரித்துக்கொண்டு, காட்டுப்
புஷ்பங்களைச் சூட்டிக்கொண்டு, மயில் இறக்கையைத் தன்முடிமீது அலங்காரமாக
வைத்துக்கொண்டு,வாயால் பாடும்போதோ, வேணுகானம் இசைக்கும்போதோ,
பசுக்களை அழைக்கும்போதோ , நதிகள் தங்கள் ஓட்டத்தையும் வேகத்தையும் மறந்து,
க்ருஷ்ணனின் பாதாம்புஜங்களை நினைக்கும் கோபிகைகளைப் போல, பிரேமைகளைக்
காட்டும் அலைகளும் மயங்கி, படத்தில் வரையப்பட்ட சித்ரத்தைப்போலக் காட்சி தருகின்றன.

கண்ணன் தன சகாக்களுடன்கூடி,ஒவ்வொரு பசுவையும் பெயர்சொல்லி அழைக்கும்போது,
மலையின், உச்சிமலையின், அடிவாரம், புல்தரை என்று எங்கெல்லாமோ மேய்ந்து கொண்டிருக்கும்
பசுக்கள், நாலுகால் பாய்ச்சலில் க்ருஷ்ணனை வந்து அடைகின்றன.கானத்தைக் கேட்டும்,
க்ருஷ்ணனின் அருகில் ஓடோடி வருகின்றன.

வனத்தில் உள்ள செடிகளும், மரங்களும், கொடிகளும் தத்தம் இயல்புநிலை மறந்து,
கிளைகளையும், நுனி இலைகளையும், பழங்களுடனும்,புஷ்பங்களுடனும்,வளைந்து,
குனிந்து, கீழே தாழ்த்தி, தேனை வர்ஷித்து,புஷ்பங்களைத் தூவுமாப்போலே,தூவி,
நமஸ்கரிப்பதுபோல ஹ்ருதய சுத்தமாக ,அதிதியை வரவேற்பதுபோல,—-ஆஹா—ஆஹா—
கண்கொள்ளாக் காக்ஷி —-பார்ப்பதற்கு எவ்வளவு அழகு !

கண்ணன், சந்தன திலகத்தை நெற்றியில் இட்டுக்கொண்டு இருக்கிறான்.வனமாலை போன்ற திவ்யமான
மணம் வீசும் துளசி மாலையை அணிந்துகொண்டு இருக்கிறான்.அந்த வாசனையால்
தூண்டப்பட்ட வண்டுகள், தேனீக்கள், கண்ணனைச் சுற்றி ரீங்காரம் இடுகின்றன. வேணுகானத்தில்,
தேனீக்களும், வண்டுகளும் மயங்குகின்றன. ரீங்காரமிடுவதை மறக்கின்றன.வானத்தில் உள்ள
மேகக்கூட்டங்கள், தங்கள் கர்ஜனையை நிறுத்தி, மந்தமாக சப்திக்கின்றன.இது, வேணுகானத்துக்கு,
”ஸ்ருதி” சேர்ப்பதைப்போல் உள்ளது.

மேகங்கள், நீர்த்திவலைகளை வர்ஷிப்பதற்குப் பதிலாக,புஷ்பங்களை, க்ருஷ்ணனின்மேல்
வர்ஷிக்கின்றன.இந்தப் புஷ்ப வ்ருஷ்டிகள் ,பனையோலை குடையைப்போல க்ருஷ்ணனின்
சிரஸ்ஸுக்கு மேலே கவிந்து,கைங்கர்யம் செய்கின்றன.
( ஹே—ப்ரபோ—–பாக்யசாலிகளான
அந்த மேகக்கூட்டங்களை அடிக்கடி நமஸ்கரிக்கிறேன் )

ஹே—-யசோதா—உன் குமாரன் வேணுகானத்தைக் கேட்டாயா—–கோவைப்பழம்போலச்
சிவந்திருக்கும் உதடுகள்—-அவற்றில், புல்லாங்குழல் கானமிசைக்கும்போது, ஸ்வரங்கள்
ஜிவ்வென்று கிளம்பி மெய்மறக்கச் செய்கிறது.கூடவே, கோபர்களும் பாடுகிறார்கள்.
இந்த்ரன் , சிவன்,ப்ரும்மா , தேவர்கள் யாவரும் ”இது என்ன அற்புதம்” என்று, கானம்வரும்
திசையை நோக்கி, தங்கள் தத்வ அர்த்தங்களில் இழியாமல், புத்தியை இழந்து, தலையைச்
சாய்த்து, கண்ணனின் வேணுகானத்தைக் கேட்கிறார்கள்.

ஹே—யசோதா—-உன் புத்ரன் க்ருஷ்ணன் நடந்துகொண்டே, வேணுகானம் செய்கிறார்.
கம்பீரமான நடை.அந்தத் திவ்யமான திருவடிகளில், தாமரைப் புஷ்பம், கொடி,அங்குசம் ,
சக்ரம் ,போன்ற அடையாளங்கள் . அவை, வ்ரஜபூமியில் படியுமாப்போலே , எங்கள்
ஹ்ருதயத்திலும் படிந்து, எங்கள் சுய நினைவை இழக்கச் செய்து, எங்கள் உடைகள்,
மேலாடைகள் நழுவுவதுகூடாது தெரியாமல்,உன்மத்தமாக்குகின்றன.

க்ருஷ்ணன் , சிலசமயங்களில், மணிமாலைகளின் உதவியால், கோக்களை எண்ணுவார்.
உச்சஸ்தாயியில் பாடுவார்.வேணுகானம் இசைப்பார்.அப்போதெல்லாம் பெண்மான்கள்,
வேணுகானத்தில் மூழ்கி, க்ருஷ்ணன் அருகில் நெருங்கி வந்து, ஆசையுடன் க்ருஷ்ணனைப்
பார்ப்பார்கள். தங்கள் பதிகளை விட்டுவிட்டு, வேணுகானலோல க்ருஷ்ணனைத் தஞ்சம்
அடைவதைப்போல, நாங்களும், க்ருஹத்து ஆசையை ஒதுக்கி ,க்ருஷ்ணனால்
ஆகர்ஷிக்கப்பட்டவர்களாய், க்ருஷ்ணனுடனேயே இருக்கவேண்டும் என்கிற புத்தியுடன்
இருக்கிறோம்.

சிலசமயம், க்ருஷ்ணன் , யமுனைக் கரையில், விளையாடும்போது, மந்தமாருதம் வீசி,
சந்தனத்தைப்போலக் குளிர்ச்சியைத் தரும்.அப்போது, ஆகாயத்தில், உபதேவகணங்கள் ,
வாத்யங்களை இசைத்து, ,க்ருஷ்ணனைக் கொண்டாடுவார்கள்.

யசோதா—-தேவகியின் கர்ப்பத்திலிருந்து, அவதரித்த க்ருஷ்ணன் இன்னும் ஏதாவது
மலையைத் தூக்கவேண்டுமா ; மலையைத் தாங்கவேண்டுமா என்கிற எண்ணத்துடன்
வருகிறார். பசுக்களை ஓட்டிச் சென்று, மேய்த்து, வாத்யங்களை இசைத்துக்கொண்டு,
களைத்துப்போய், வீடு திரும்புகிறார்.
அப்போது, அவரது திருவடிகளை —-கோக்களின் குளம்புத் தூசி படிந்த திருமேனியை,
ப்ரம்மா முதலிய தேவர்கள் புகழ்கிறார்கள்., க்ருஷ்ணன் அந்த சாயரக்ஷ வேளையில்,
சந்த்ரனைப் போலப் ப்ரகாசிக்கிறார் .

அவருடைய கன்னங்கள் ம்ருதுவாகி, காதில் உள்ள கனக குண்டலங்களின் ஜாஜ்வல்யம்
அதில் ப்ரதிபலிக்க,எங்கள் யதுபதி யாமினி ( இரவு)பதியின் வேஷத்தைச் சந்த்ரன்
தரிப்பதைப்போல , க்ருஷ்ண சந்த்ரனாக ,ப்ருந்தாவனத்தில் ப்ரவேசிக்கிறார் .

அவரின் புன்னகை முகத்தைப் பார்க்க , அவரை சந்திக்க, அவருடன் பேச,
விரஹதாபத்துடன், வ்ரஜசுந்தரிகள் வெட்கத்தைவிட்டு, ஓடி வருகிறார்கள்.
க்ருஷ்ணன் ,மந்தஹாஸத்துடன் அவர்களின் தாபத்தைப் போக்குகிறார்.எப்போதும்
க்ருஷ்ணனையே நினைத்துக் காலங்கழிக்கும் கோபிகைகள் , இவ்விதமாக ,
க்ருஷ்ணனைப் பற்றிய கீதங்களை——புகழ்க்கீர்த்திகளைப் பாடி,பரமசுகத்தை
அடைந்தார்கள் என்று
சுகப்ரம்மம் ,பரீக்ஷித்துக்குச் சொன்னார்.

( ஹே—-க்ருஷ்ணா —-அந்தக் கோபிகைகளுக்கு அனந்தகோடி நமஸ்காரத்தைச்
செய்கிறேன்.பரம ப்ரேமை , பரம பக்தி, உன்னிடம் எப்படிச் செலுத்துவது என்பதைக்
காட்டிக்கொடுத்தவர்கள் அல்லவா ! )

35வது அத்யாயம் நிறைவடைந்தது. ஸுபம்

தசமஸ்கந்தம் —அத்யாயம் –36ம் 37ம்

அரிஷ்டன் என்கிற அசுர வதம்; கேசி என்கிற குதிரை வடிவ அசுரன் வதம்;
கம்ஸனால் , அக்ரூரர் வேண்டப்படுதல்

ஹே—–க்ருஷ்ணா —-உன் லீலா விநோதங்களை ,மேலும் மேலும்
ஸ்ரீ சுகர் ,பரீக்ஷித் மஹாராஜனுக்குச் சொல்கிறார்.

கிருஷ்ணன் தனது கிருஹத்தில் இருக்கும்போது, வ்ருஷப வேடம் அணிந்து,
அரிஷ்டன் என்கிற அசுரன் கோகுலத்துக்கு வந்தான்.திமிலும் சதையுமாக
மிகவும் கொழுத்து, பெரிய உருவத்துடன் ,பூமி நடுங்கும்படியாக நடந்து,
கொம்புகளால் மண்ணைக் கீறிக்கொண்டு பெருத்த தொனியுடன்,
ஹூங்காரமிட்டுக்கொண்டு ,பசுக்களும் கோபர்களும், கோபிகைகளும்
நடுங்க ,வாலை உயரத்தூக்கிக்கொண்டு, கண்களை உருட்டி விழித்துக்
கொண்டு, திமிருடன் வந்தான்.

கோபர்கள், மிகவும் பயந்து, ”க்ருஷ்ணா —-இந்த ஆபத்திலிருந்து எங்களைக்
காப்பாற்று—-” என்று கதறினார்கள்.
நீ, வீட்டிலிருந்து வெளியே வந்து ,கோபர்களை”பயப்படாமல் இருங்கள் ” என்று
சொல்லி அவர்களை ஆசுவாசப்படுத்தி,காளையாக வந்துள்ள அசுரனைப் பார்த்து,
”முட்டாளே—இவர்களைப் பயமுறுத்தாதே —என்னிடம் வந்து உன் பலத்தைக்காட்டு—”
என்று சொல்லி, பக்கத்தில் இருந்த கோபாலகனின் தோள்மீது கையை
வைத்துக்கொண்டு நின்றாய்.
அரிஷ்டன் என்கிற அந்த அசுரவ்ருஷபம் குளம்புகளால் பூமியைக்கீறிக்கொண்டே
ஆக்ரோஷத்துடன் உன்மீது பாய்ந்தது. தலையை வளைத்து ,கொம்புகளை
மிகவும் சாய்த்து வால் உயரக்கிளம்ப, கண்கள் ரத்தத்தைக் கக்க ,கோபத்துடன்,
உன்னைத் தாக்கியது.
நீ, அதன் கொம்புகளைப் பிடித்து, அதைத் தூரத் தள்ளினாய். அதைப்பொறுக்காத
அந்த அசுரக்காளை ,தரையில் இருந்து எழுந்திருந்து, மீண்டும் உன்மீது பாய்ந்தது.
நீ, அதன் ஒரு கொம்பைப் பிடித்து, உடைத்து,காலால் அதை உதைத்துக்
கீழே தள்ளி ,கொம்பால் அதன் உடலைக் குத்தினாய். அசுரன், ரத்தத்தைக் கக்கிக்கொண்டு
பூமியில் விழுந்தான். ஆனால், மறுபடியும் ,கால்களை உயரத் தூக்கிக்கொண்டு,
உன்மீது பாய்ந்தான். நீ, அவனைப்பிடித்து ,ஒரு சுழற்று சுற்றித் தூர எறிந்தாய்.
அசுரன், தரையில் மோதி செத்து விழுந்தான்.
இதனைப் பார்த்துக்கொண்டிருந்த தேவர்கள், ஆகாயத்திலிருந்து , உன்மீது ,
புஷ்பமாரி பொழிந்தார்கள். கம்ஸன் ,இதைக்கேட்டு, ஆத்திரம் அடைந்தான்.

அச்சமயம், நாரதர் அங்கு வந்தார்.
கம்ஸனைப்பார்த்து , ஹே—ராஜன்—-க்ருஷ்ணனும் ,பலராமனுமே உன் ம்ருத்யு
தேவகியின் எட்டாவது குழந்தையே க்ருஷ்ணன் —-தேவகியின் இன்னொரு
குழந்தைதான் ரோகிணியால் வளர்க்கப்படும் பலராமன்—என்றார்.

மிகவும் கோபம்கொண்ட கம்ஸன் , வஸுதேவரையும் தேவகியையும் கொல்ல
வாளை உருவினான்.ஆனால், நாரதர், இரண்டு குழந்தைகள்தான் உனக்குச் சத்ரு–
இவர்களைக் கொல்லாதே என்று சொல்லித் தடுத்தார். ஆனால், கம்ஸன் ,அவர்களை
மறுபடியும் சிறையில் தள்ளினான்.
நாரதர் சென்றுவிட்டார்.

கம்ஸன் , தன்னுடைய சஹாவான கேசியைக் கூப்பிட்டான். என்ன செய்யலாம் என்று
அவனுடன் ஆலோசனை நடத்தினான்.அவன் கூறியபடி, உன்னைக் கொல்வதற்காக,
அவனை அனுப்பினான்.
கேசி, குதிரை வடிவம் எடுத்து ,கோகுலத்தில் உன்னைத் தாக்கினான். நீ, அதன்
கால்களைப் பிடித்து, சுழற்றி வீசினாய். அரிஷ்டனைப்போல, அவனும் அழிந்தான்.
(கேசியின் ஸம்ஹாரம் ,அடுத்த அத்யாயத்தில் விவரிக்கப்படுகிறது )
கேசியும் அழிந்ததைக் கேட்ட கம்ஸன் ,மிகுந்த ஆத்திரம் அடைந்தான்.தன் தோழர்களான
முஷ்டிகன்,சாணூரன் சாலன்,தோசலகன் மற்றும் பல மல்யுத்த வீரர்களை அழைத்தான்.
மந்த்ரிகளை அழைத்தான்.பரமசிவனின் திருப்திக்காக, பெரிய யாகம் செய்யப்போகிறேன்
தனுர் யாகம் செய்யப்போகிறேன்.அதற்கு, எல்லாரையும் அழைக்கப்போகிறேன்.
க்ருஷ்ணனையும் ,பலராமனையும் அழைக்கப்போகிறேன்.
யானைப்பாகனிடம், ”குவலயாபீடம் என்கிற யானையை ஏவி, க்ருஷ்ண பலராமர்கள் மதுரா
நகரில் நுழைந்ததும், அவர்களைக் கொன்றுவிடவேண்டும்” என்று கட்டளை இட்டான்.
அதில் அவர்கள் தப்பித்தால், ”சாணூரன் முஷ்டிகன் வீரர்களே—-நீங்கள், அவர்கள் இருவரையும்
மல்யுத்தத்துக்கு அழைத்து, அவர்களை அழித்துவிட வேண்டும்” என்று கட்டளை இட்டான்.
இப்படியாகத் தன பரிவாரங்களுக்கு ஆணையிட்ட கம்ஸன் , அவர்களையெல்லாம்
திருப்பி அனுப்பினான்.

பிறகு, வஸுதேவரின் பந்துவான, அக்ரூரரை அழைத்தான்.
அவர் கையைப் பிடித்துக்கொண்டான்.
”என் சிநேகிதரே —-உம்மைவிட எனக்கு நன்மை செய்பவர் யாருமில்லை—உம்மிடம்
வேண்டிக்கொள்கிறேன்—எனக்கு , ஒரு உதவி செய்ய வேண்டும். இன்றே, நீர்,
கோகுலத்துக்குச் செல்லவேண்டும். நான், தனுர் யாகம் செய்யப்போவதாயும்,
அந்த உத்ஸவத்தைப் பார்க்கவும், மதுராபுரியின் அழகைக் கண்டு க்ளிக்கவும், நானே
அழைத்ததாக அவர்களை அழைத்து வரவேண்டும். நந்தகோபரை, கப்பம் முதலிய இதர
சம்மானங்களுடன் வரச் சொன்னதாக அழைக்கவேண்டும். உடனே, ரதத்தை
எடுத்துச் செல்லும்.எனக்கு, ம்ருத்யு க்ருஷ்ணன் ; அவனைக் குவலயாபீடம் என்கிற
யானையாலோ, அதில் பிழைத்தால் மல்யுத்த வீரர்களாலோ அழிப்பேன்.
பலராம, க்ருஷ்ணர்கள் அழிந்தவுடன், அதற்காகத் துக்கப்படும் வஸுதேவர்
முதலானவர்களைக் கொல்வேன் . என் பிதா உக்ரசேனர், திரும்பவும் ராஜ்யத்தை
ஆளும் ஆசையில் இருக்கிறார். அவரையும், மற்றும் என் எதிரிகளையும் அழிப்பேன்.
எனக்கு குருவும், என் மாமனாருமான ஜராஸந்தன் என் சிநேகிதன் சம்பராசுரன் ,
நரகன் (நரகாசுரன் ), பாணன் (க்ருஷ்ணனின் குமாரன் ப்ரத்யும்னனை மணக்கப்போகும்
உஷையின் தந்தை ) போன்ற என் ஆப்தர்கள் துணையுடன், உலகம் முழுவதையும்
ஜயித்து , எதிரிகளே இல்லாமல் அரசு செய்வேன். —–நீர், உடனே கோகுலம் சென்று,
க்ருஷ்ணன் ,பலராமன் இருவரையும் அழைத்து வருவீராக —–” என்று சொன்னான்.

ஹே—-க்ருஷ்ணா —-சுகப்பிரம்ம ரிஷி, மேலும் சொன்னார்—-
அக்ரூரர்,
”ஹே—-ராஜன்—-ஸித்தியிலோ , அஸித்தியிலோ , —-அதாவது, காரியத்தின்
வெற்றியிலோ, தோல்வியிலோ, , தெய்வமே பல சாதனைகளைச் செய்கிறது—
தெய்வம் தடை செய்தாலும், மனிதன், தன மனோரதங்களை அடைய முயற்சிக்காமல்
விடுவதில்லை” என்றார்.
கம்ஸன் ,அக்ரூரரை அனுப்பிவிட்டு,அந்தப்புரம் சென்றான் .

36 வைத்து அத்யாயம் நிறைவடைந்தது. ஸுபம் .

——————————————————————————————————————————-

தசமஸ்கந்தம்—–அத்யாயம்–37

ஸ்ரீ நாரதரின் ஸ்துதி

ஹே க்ருஷ்ணா —-நீ, கேசி என்னும் அசுரனை அழித்ததை விவரமாகவே
,ஸ்ரீ சுகர், பரீக்ஷித்துக்குச் சொன்னார்.
கம்ஸனின் கட்டளையை நிறைவேற்ற, கம்ஸனைத் த்ருப்திப்படுத்த ,
பெரிய உடலுடனும், குகையைப் போலுள்ள ஆழமான வாயுடனும்
கால் குளம்புகளால் பூமியை உதைத்து, இடி இடிப்பதைப்போலக்
கர்ஜித்துக்கொண்டு, கேசி என்கிற அசுரன் குதிரை வடிவத்துடன்
கிராமத்துக்குள் நுழைந்தான்.
பக்ஷிகள் பயந்து ஓடின .கோகுலவாசிகள் கூக்குரலிட்டு, உன்னை
அழைத்தனர்.
உன்னைக்கண்ட அந்த அசுரக் குதிரை, வெகு கோபத்துடன் வாலை
சுழற்றிக்கொண்டு, உன்மீது பாய்ந்தது.உன்னை விழுங்கிவிட நினைத்தது.
உன்னைப் பின்னங்கால்களால் உதைத்தது.நீ, சாதுர்யமாக ,அதன்
பின்னங்கால்களைப் பிடித்து, சுழற்றி, சர்ப்பத்தை, கருடன் தூர எறியுமாப்போலே
எறிந்தாய்.
கீழே விழுந்த குதிரை, மயக்கம் தெளிந்து எழுந்து, வாயைப் பிளந்துகொண்டு,
ஓடி வந்தது.நீ, உன் கையை நீட்டினாய்.
உன் கை , அதன் வாயினுள் புகுந்து, பற்களைச் சிதறடித்தது.அதன் கண்கள்
சுழன்றன. பிதுங்கின.செத்து, பூமியில் விழுந்தது.நீ, கைகளை எடுத்துக்கொண்டாய் .

இந்த ஆச்சர்யத்தைக் கண்டா தேவர்கள், உன்னைப் புகழ்ந்து, புஷ்பமாரி பொழிந்தனர்.
ஸ்ரீ நாரதரும் இதைப் பார்த்தார்.
உன்னிடம் வந்து, உன்னை ஸ்தோத்ரம் செய்தார்.இதை, உனக்கு இப்போது சொல்லி,
நினைவுபடுத்துகிறேன்

க்ருஷ்ண —க்ருஷ்ண—-அப்ரமேய ஆத்மன் —-ஸர்வாந்தர்யாமி –யோகேஸ்வரா —
ஜெகதீஸ்வரா —-வாஸுதேவா —ப்ரபோ—-
நீர், எல்லோருக்கும் ஆத்மா
ஸர்வ பூதங்களையும் வகிக்கும் ஏகாத்மா ஜ்யோதிஷாம் ஜ்யோதிஷ்
ஹ்ருதய குகைக்குள் வசிக்கும் மஹா புருஷ
நீர், உம்மை மறைத்துக்கொண்டு மாயையை உண்டுபண்ணி ,முக்குணங்களை
ஸ்ருஷ்டித்து, அவற்றின் உதவியால், லோகங்களை ஸ்ருஷ்டித்து,ஜகத் ரக்ஷணம் ,
சம்ஹாரம் இவைகளைச் செய்கிறீர்.
உம்முடைய அவதாரம், சாதுக்களை ரக்ஷித்து,தர்மத்தை நிலைநிறுத்தி, ராக்ஷஸக்
கூட்டங்களை அழிப்பது—
குதிரை ரூபத்தில் வந்த அசுரனை விளையாட்டாகக் கொன்று முடித்தீர்.

ஹே —-ப்ரபோ——உமது மஹிமைகளை என்னவென்று சொல்ல !
சாணூரன், முஷ்டிகன் என்கிற இரண்டு மல்லர்கள் உம்மால் மரணம் எய்தக்
காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
குவலயாபீடம் என்கிற யானையும், கொல்லப்படப் போகிறது.
பல அசுரர்கள், மாளப்போகிறார்கள்.
தேவேந்த்ரனின் மதத்தை அழிக்கப்போகிறீர் .நரகன் என்கிற அசுரனின் அந்தப்புரத்தில்,
அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பல ராஜகுமாரிகளை விடுவிக்கப்போகிறீர்
ச்யமந்தக மணியை அடையப் போகிறீர்.
ருக்மிணி, சத்யபாமா, ஜாம்பவதி இவர்கள் ,உம்முடைய கைத்தலம் பற்றப்
போகிறார்கள்.
ப்ராம்மணக் குழந்தையைக் காலனிடமிருந்து ,மீட்கப்போகிறீர்.
பௌண்டரீக அரசனின் வதம், ராஜஸூய யாகத்திலே , சிசுபாலனின் வதம்,
காசிப்பட்டினம் எரிவது,தந்த்ரவக்ரன் வதம் , இவையும், இன்னும் பல வீரச் செயல்களும்
செய்யப்போகிறீர்.
இன்னும், த்வாரகாபுரி வாஸம் ,ராஜ்ய பாரம் உம்மால் நடக்கப்போகிறது.
பல லக்ஷம் அக்ஷ்வுஹிணி சேனைகள், யுத்தத்தில் அழியப்போகின்றன.
பார்த்தசாரதியாகப் புகழப்படப் போகிறீர்கள்.
ஹே—-விசுத்தவிஜ்ஞானகனஸ்வரூபியே —-
எல்லாம் உமது அவதார மஹிமை
அத்தகைய ஸ்ரீ க்ருஷ்ணராகிய உம்மை ஆயிரம் தடவை நமஸ்கரிக்கிறேன்

( ஹே—க்ருஷ்ண—ஸ்ரீ நாரதர் ஸ்தோத்தரித்ததை ,சுருக்கமாகச் சொல்லி, அடியேனும்
உன்னை, ஆயிரக்கணக்கான தடவை நமஸ்கரிக்கிறேன் )

ஹே—க்ருஷ்ணா –ஸ்ரீ சுகர் மேலும் சொல்கிறார்

ஹே—பரீக்ஷித்—- நாரதர், இவ்வாறு ஸ்தோத்தரித்து, க்ருஷ்ணனிடமிருந்து ,
விடைபெற்றுச் சென்றார்.
ஒரு சமயம், நீ, கோபர்களுடன் பசுக்களை மேய்த்துக்கொண்டு இருந்தபோது ,
மயனுடைய புத்ரன் வ்யோமன் என்கிற அசுரன், கோபாலகன் வேஷத்தில் வந்து,
ஓநாய் ,ஆடுகளைத் திருடுவதுபோல ,பல கோபாலகர்களைத் திருடி, அங்குள்ள
பெரிய மலையின் குகைக்குள் அடைத்து, குகையின் த்வாரத்தையும் ,பெரிய
கல்லை வைத்து மூடிவிட்டான் .
இதை அறிந்த நீ, அவனை பூமியில் தள்ளி, கழுத்தை நெரித்து, வதம் செய்து,
கோபாலகர்களை விடுவித்தாய் .

( ஹே—ப்ரபோ—–அடியேனையும், இந்த ஸம்ஸார பந்தம் என்கிற குகைக்குள்
இருந்து, விரைவில் விடுவிக்கவேண்டும்

37வது அத்யாயம் நிறைவடைந்தது–ஸுபம்

தசமஸ்கந்தம்———–அத்யாயம் ………38
——————————————————-

அக்ரூரர் கோகுலத்துக்கு வருதல்
———————————————————-
ஹே…..கிருஷ்ணா…. ஸ்ரீ சுகர் , பரீக்ஷித் ராஜனுக்கு
அக்ரூரரின் பக்தியைப் பற்றிச் சொல்கிறார்.
அக்ரூரர் அன்று ராத்திரி மதுராவில் இருந்துவிட்டு, மறுநாள்,
கம்ஸனின் கட்டளையை நிறைவேற்ற—-அதாவது உன்னையும் , பலராமனையும்
மதுராவுக்கு அழைத்துவர—கோகுலத்துக்குப் புறப்பட்டார்
ரதத்தில் ஏறி அமர்ந்தார் உன்நினைவுதான் அவருக்கு!
அவர் மனம் சொல்கிறது;–
யோகிகளும், ரிஷிகளும், தேவர்களும், இந்திரனும், பிரும்மனும், ருத்ரனும்
உன்னுடைய தர்சனத்துக்காக ஏங்கிக் காத்துக் கிடக்கிறார்கள்;
அந்த ஸ்ரீ கிருஷ்ண தர்சநம் இப்போது எனக்குக் கிடைக்கப் போகிறது
; ஸுகபோல நாசிகம்—-அழகான மூக்கு, புருவம்
கன்னம்—-மந்தஸ்மிதம்,
பீதாம்பரம்,
தலையில் மயில் பீலி,
கையில் புல்லாங்குழல் இப்படியாக அவரை தரிசிக்கப் போகிறேன்.
எவரைப் பார்த்தால் அக்ஜானம் அகலுமோ, அகன்று, பாபம் முழுவதும் அழியுமோ
,அழிந்து பக்திப் பரவசம் ஏற்படுமோ அவரை தரிசிக்கப் போகிறேன்.
அவரைத் தரிசிப்பதால், என் கண்கள் , பாக்யம் அடையப் போகின்றன.
ஹே…கிருஷ்ணா…உன்னைத் தோத்தரிக்க வார்த்தைகள் போதவில்லையே ,
உன்னை ஸ்மரிப்பதால் பாவங்கள் அகன்று பாவனமாக்கப்படுகிறேன்.
நீ, மஹதாம் கதிம்—– எல்லாராலும் அடையப்படவேண்டிய
உத்தமமாம் உத்தம கதி.நீயே
அனைவர்க்கும் ஆசார்யன்.
த்ரைலோக்ய காந்தன். ஸ்ரீ வத்ஸ சின்ன ஸ்ரீ.
கோகுலத்தை அடைந்ததும், தேரை நிறுத்தச் சொல்லி, கால்நடையாகச் செல்வேன்.
பலராமனையும், கிருஷ்ணனையும் பார்த்ததும் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்வேன்.
என் பிரபு என்னைத் தொட்டு, உயரத்தூக்கி, கைகளை என் தலையில் வைத்து
ஆசீர்வாதம் செய்வார். நிஜஹஸ்த பங்கஜம் . —அநுக்ரஹம் செய்வார்.
கால புஜங்களாகிற தீவினைகளிளிருந்து விடுவிப்பார்.
ஆனால், கம்ஸனின் தூதன் என்று உபேக்ஷை செய்வாரோ ?இருக்காது
என்னிடம் அனுதாபம் காட்டுவார். அக்ரூரரே, எப்படி இருக்கிறீர் என்று கேட்பார்
. ஒருவேளை, என்னைத் தொட்டு ஆசீர்வதிக்காவிட்டாலும், மந்த
ஸ்மித பார்வையால் என்னைப் பார்த்தாலே போதும்.
குளிர்ந்த பார்வை ,அதுவே போதும்.
என் பாபங்கள் உடனே நாசமாகி, பிறவிகள் ஒழிந்து,
புருஷார்த்தத்தை அடைந்து விடுவேன்.
பலராமன் யதுக்களுள் உத்தமர். என் கைகளைப் பிடித்துத்
தன் கிருஹத்துக்கு அழைத்துச் செல்வார். என்னைக் குசலப்ரச்னம் செய்வார்.
நானும் எல்லாவற்றையும் சொல்வேன். கம்ஸனின் செய்கைகளைச் சொல்வேன்

ஹே….கிருஷ்ணா…இப்படித் தன் அந்தரங்க எண்ண அலைகளில் ,
உன்னையும், பலராமனையும் வழி நெடுக ஸ்மரித்துக் கொண்டு ,
சாயந்தர வேளையில் கோகுலம் வந்து சேர்ந்தார். ரதத்திலிருந்து இறங்கினார்.
குனிந்தார். ஆச்சர்யப்பட்டார். உன்னுடைய தூய்மையான பாதரேணுக்களைத் தரிசித்தார்.
உன்னுடைய ஒவ்வொரு திருவடியும் பூமியில் பதிந்து,
சங்கு சக்ர ரேகைகள் பொதிந்து விளங்குவதைப் பார்த்தார்.
அகிலலோகத்திலும் உள்ள பக்தர்கள், பாகவதர்கள் எந்தப் பாத தூளியை
சிரஸ்ஸில் வஹிக்கவேண்டும் என்று ஏங்குகிறார்களோ
அந்தப் பாத துளிகளைப் பார்த்துப் பரவசப்பட்டார்.
என் உடல் அடையவேண்டிய பரம புருஷார்த்தம் இதுதான் என்று,
அந்தப்பாததூளிகளில் விழுந்து புரண்டார்.
மீண்டும், மீண்டும் புரண்டார்.

அப்போது, உன் அம்புஜ நேத்ரங்களைக் கண்டார்; உன் நீல நிற பீதாம்பரத்தைக் கண்டார்;
மஞ்சள், நீலப் பீதாம்பரம் அணிந்து இருந்த பலராமனைக் கண்டார்;
ச்யாமள நிறமுள்ள உன்னையும், ஸ்வேத நிறமுள்ள பலராமனையும் பார்த்தார்;
பார்க்கப் பார்க்கப் பரவசமூட்டும் உங்கள் ஸுந்தர வதனங்களைக்கண்டார்;
உடனே உங்களை நமஸ்கரித்தார்.
கண்களிளிருருந்து நீர் தாரை தாரையாகப் பெருக,
அதனால் கண்கள் மங்க, புளகாங்கிதம் அடைந்த சித்தத்தால், குரல் தடுமாற,
நான்தான் அக்ரூரர் என்று சொல்லக்கூட முடியாதபடி, தடுமாறினார்.

உடனே, நீ, சக்ர வளையம் பதிந்த திருக் கைகளால்,
அவரை உன்பக்கம் இழுத்து, தழுவிக் கொண்டாய்.
அப்படியே, பலராமனும் தழுவிக் கொண்டார்.
பலராமர், அக்ரூரரைத் தன்னுடைய கிருஹத்துக்கு அழைத்துச் சென்று,
அதிதியை எப்படி விதிப்படி கௌரவிப்பார்களோ , அப்படி அக்ரூரரை உபசரித்தார்.
அக்ரூரர் கவலைகள் எல்லாவற்றையும் மறந்து சந்துஷ்டராக விளங்கினார்

அப்போது, நந்தகோபரும் அங்கு வந்து சேர்ந்தார்.
ஹே…கிருஷ்ணா…
நந்தகோபர், அக்ரூரரைப் பார்த்து, ” உம்மைப் பார்த்து ஆச்சர்யப்படுகிறேன்.
கம்ஸன் ரொம்பவும் பொல்லாதவன்; க்ரூர மனம் உள்ளவன்; துஷ்டன்;
தேவகியின் குழந்தைகளைக் கொன்ற பாதகன்;
அவனிடம் எப்படி வாழ்கிறீர் ? ” என்று கேட்டார்

38 வது அத்யாயம் நிறைவடைந்தது. ஸுப ம்
———————————————————————————————————————————

தசமஸ் கந்தம் —- — அத்யாயம் ——-39
——————————————————————-
ஸ்ரீ கிருஷ்ண பலராமர்கள், அக்ரூரருடன் , மதுரா நகருக்குச் செல்லல் —–.
—————————————————————————————————————————–

ஹே…..கிருஷ்ணா….. ஸ்ரீ சுகப்ப்ரும்மம் , பரீக்ஷித் ராஜனுக்குச் சொன்னதை,
உனக்குச் சொல்லி நினைவுபடுத்துகிறேன்
அக்ரூரர் உன்னைத் தரிசித்ததால் எல்லா மனோரதங்களும் அடைந்தவராக,
மிகவும் ஆனந்தமாக உங்களிடம் சம்பாஷித்துக் கொண்டிருந்தார்.
இரவு வந்தது; போஜனம் முடிந்தது; நீ, அக்ரூரரைப் பார்த்து, கம்ஸனின் நடத்தைகள்,
உறவினர்களிடமும் ஸ்நேகிதர்களிடமும் எப்படி நடந்து கொள்கிறான், அவனது
எண்ணங்கள் எல்லாவற்றையும் சொல்லுமாறு, கேட்டாய்.

ஹே….தாத…..கம்ஸன் ,க்ஜாதிகளிடத்தில், சிநேகமாக இருக்கிறானா
அல்லது கொடுமை செய்கிறானா ? சொந்த மாமாவாக இருந்தாலும்,
பொல்லாதவன் என்பதைச் சொல்லியாக வேண்டும்.
என் தாயையும் , தந்தையையும் மிகவும் கொடுமைப் படுத்தியவன்
. அவர்களின் புத்ரர்களைக் கொன்றவன்.
என் பெற்றோர்களைக் காராக்ருஹத்தில் அடைத்தவன்.
எங்களால், இங்குள்ளவர்களுக்குத் தீமையைச் செய்பவன்.
அவைகள் இருக்கட்டும், இங்கு தாங்கள் வந்த காரணம் என்னவோ என்று கேட்டாய்.

அதற்கு அக்ரூரர், உன்னிடம் எல்லா விவரத்தையும் சொன்னார்.
தவிரவும், நாரதர், கம்ஸனை சந்தித்தது, அவனின்
பூர்வ ஜன்ம ரஹஸ்யங்களைச் சொன்னது,
இப்போது உன்னையும், பலராமனையும் , ஒரு சாக்கை வைத்து
மதுரைக்கு அழைத்து வரச் சொன்னது என்ற விஷயங்களையும்
உன்னிடமும் பலராமனிடமும், நந்தகோபனிடமும் சொன்னார்.

இவைகளைக் கேட்டு, நீயும் பலராமனும் உரக்கச் சிரித்தீர்கள்;
ராஜாவின் கட்டளை என்று நந்தகோபரிடம் சொன்னீர்கள்.
நாளை காலையே புறப்படுவோம் என்று சொன்னாய்.
நந்தகோபரும், பால், தயிர் வெண்ணெய் இவை வண்டி, வண்டியாக சித்தமாகட்டும்
யாதவர்களுடன் நானும் வருகிறேன் என்றார்.
இப்படி நடந்த சம்பாஷணைகள், கோபிகைகளுக்குத் தெரிந்தது.
கிருஷ்ணன் நம்மை விட்டு, மதுரைக்குப் போகிறான் என்று கேள்விப்பட்டதும்
பிராணனை இழந்தவர்களைப் போலத் தவித்தார்கள்.
சில கோபிகைகளுக்கு, கைவளைகள் நழுவி விழுந்தன;
சிலருக்கு மேகலைகள் கலைந்தன;
சிலருக்கு அழகு குன்றி உடல் வெளுத்துப் போயிற்று;
பேச வார்த்தைகள் வெளிவரவில்லை; கண்கள் செருகிக் கொண்டன;
உன்னுடைய பிரிவான விரஹதாபம், பிரிவதற்கு முன்பே,
அந்த எண்ணத்திலேயே அவர்களை வாட்டியது;
உன்னை நினைக்க, நினைக்க, அவர்களது கண்களிலிருந்து ஜலதாரை பொழிந்தது;
ஹே…கிருஷ்ணா ஹே கிருஷ்ணா என்று கதறினார்கள்

(கிருஷ்ணா , அடியேன் இந்தக் கோபிகைகளைப்பலதடவை சேவிக்கிறேன்;
பக்தியின் உச்சத்தை அடியேனுக்கு உணர்த்திய பரம ஆசார்யர்கள் அல்லவா,அவர்கள் ! )

ஹே… ப்ரும்மனே…எங்களுடன் பிரேமையையும் ஏன் சேர்த்துப் படைத்தாய் ?
நாங்கள் உன்னுடைய பொம்மைகளா ?
மல்லிகை மொக்கு குவிந்து மலராதபடி இருக்கும் —அதைப் போல,
அந்த முகுந்த வக்த்ரம்—அழகான கன்னங்கள்—-தீர்க்கமான நாசி—
சோகங்களைப் போக்கும் ஸ்மிதிலேத சுந்தரன்—
அந்த ஸுந்தர கிருஷ்ணனை எங்களிடம் காட்டி விட்டு
, இப்போது மறைக்கிறீரே, இது அநியாயம் அல்லவா ?
இது நீர் செய்யும் நல்ல செய்கையா ?

அவர், அந்தக் க்ரூரர், அக்ரூரர் என்கிற பெயருடன், அவரை இந்தக் குரூரமான
செயலைச் செய்ய அனுப்பி இருக்கிறீரே , இது உமக்கு நல்லதல்ல.
கண்களைக் கொடுத்து க்ருஷ்ணானுபவம் செய்யச் சொல்லி,
நாங்களும் கிருஷ்ணனை , கண்கள் பெற்ற பாக்யம் என்று கண்டு கண்டு
அனுபவித்துக் கொண்டு இருக்கும்போது இப்படிக் கண்களைப் பறிப்பது போல
நடந்து கொள்கிறீரே இது நியாயமா ?

நாங்கள், கிருஷ்ணனுக்காக, ஸ்வஜனங்களை விட்டோம்;
புத்ரர்களை விட்டோம்; வீடுகளை விட்டோம்
வேறு பலனில் ஆசையே இல்லாதபடி,
” அனந்யகதி, ஆனந்யார்ஹ சேஷத்வம் அனன்ய போக்யத்வம் —
இவைகளைச் செலுத்தியதற்குப் பலன் இது தானா ?

மதுராபுரி ஸ்திரீகள் கொடுத்து வைத்தவர்கள்;
கிருஷ்ணனின் அபாங்க, உத்கலித, ( கடாக்ஷ வீக்ஷண்யங்கள் ) பார்வைகள்,
அவர்கள்மீது படும்; மனோவச்யமான பேச்சுக்களைக் காது குளிரக் கேட்பார்கள் ;
மதுபஞ்சு பாஷிதம் —அவர்கள் மனோரதங்களை நிறைவேற்றும்;
கிருஷ்ணன், ஒரே வ்ரதமுள்ளவராகத் தன் மனத்தைக் கட்டுப்படுத்தி இருந்தாலும்,
மதுராபுரி ஸ்திரீகள் அவரை விடமாட்டார்கள்;
அவர்கள் கெட்டிக்காரர்கள்; அவரை வசப்படுத்தி விடுவார்கள்;
அந்த நிலையில், அவர் எங்கே திரும்பவும் இங்கு வரப் போகிறார்;
நாங்கள் அபலைகள்; க்ராம்யர்கள்; லஜ்ஜை, வெட்கம் உள்ளவர்கள்
ஆனால் அவைகளை இப்போது இழந்து, பிரமை பிடித்தவர்கள் போல ஆனோம்;
அவர் மதுராபுரி ஸ்திரீகளுக்கு வசியம் ஆவார்;
எங்கள் சொத்து, அவர்களிடம் பறிபோகிறது;
என்று பலபடியாகப் புலம்பி அழுதார்கள்

(ஹே….கிருஷ்ணா…..இந்தப் பக்திபெருக்கு அடியேனுக்கும் வரவேண்டுமென்று ,
ராதையை முன்னிட்டுக் கோபிகைகளைப்பலதடவை நமஸ்கரிக்கிறேன் )

இந்த அக்ரூரர் , துக்க சாகரத்தில் உள்ள எங்களிடம் ஒரு வார்த்தைகூடச் சொல்லாமல்,
எந்த ஆறுதலும் சொல்லாமல் எப்படி கிருஷ்ணனை அழைத்துக் கொண்டு போகலாம்?
நெஞ்சில் துளிக்கூட ஈரமில்லாத , அன்பில்லாத பிரபு கிருஷ்ணன் ,
நம்மைக் கொஞ்சம் கூட லக்ஷ்யம் செய்யாமல்
ரதத்தில் நன்கு உட்கார்ந்து கொண்டு இருக்கிறார். பலராமனும் இருக்கிறார்.
பல கோபர்கள் வண்டிகளைப் பூட்டிக் கூடவே பயணம் செய்யச் சித்தமாக இருக்கிறார்கள்.
நமது குல பந்துக்கள், வயோவ்ருத்தர்கள், கிருஷ்ணனிடம் ” நீ போகக்கூடாது ” என்று
ஏன் தடுக்காமல் இருக்கிறார்கள் ? நம்முடைய மனம் அவரிடம் பதிந்துபோய் விட்டதே !
அந்த அழகான முகம், புன்சிரிப்பு, பிறர் கேளாதபடி பேசுதல், கண்ஜாடைகள்,
எங்களைத் தழுவிக் கொண்டு ராச லீலை செய்தது,
எல்லாமே பேதைமை கொள்ளச் செய்கிறதே .
பெரிய நிதியை அல்லவா இழக்கப் போகிறோம். இந்தப் பிரிவை எப்படி சகிப்போம்
இந்த முகத்தையும் புன்சிரிப்பையும் எப்போது மீண்டும் காண்போம் என்று ப்ரலாபித்தார்கள்.

ஹே…கிருஷ்ணா… ஸ்ரீ சுகர் மேலும் கூறுகிறார்

கோபிகைகள், இப்படி விரஹதாபத்தில் மூழ்கி, லஜ்ஜையை விட்டு
அழுது புலம்பிக்கொண்டு இருக்கும்போது,
அக்ரூரர், காலை சந்த்யாவந்தனாதிகளை முடித்து ,
ரதத்தின் மீது ஏறி, ரதத்தை ஓட்டத் தொடங்கினார்.
நந்தகோபன் முன்னே செல்ல, கோபர்கள் தயிர் பால் வெண்ணெய் இவைகளைக்
குடம் குடமாக வண்டிகளில் ஏற்றிக்கொண்டு நந்தகோபனைத் தொடர்ந்தார்கள்.

அபலைகளான கோபிகைகள், கிருஷ்ணன் ஏதாவது சொல்லமாட்டான
என்று ஏக்கத்துடன் ரதத்தைப் பின் தொடர்ந்தார்கள்.
அப்போது, நீ, பிரேமையுடன் ” வருந்த வேண்டாம்,
நான் உங்களிடம் கூடிய சீக்ரம் வருவேன் ” என்று கைகளைக் காட்டிக் கூறினாய்.

கோபிகைகள், நின்றார்கள் ;
பேச்சு மூச்சின்றி நின்றார்கள்;
சித்திரப் படங்களைப் போல நின்றாகள்;
ரதம் வெகுதூரம் போய், கொடி அசைவது மறையும் வரை நின்றார்கள்;
சென்ற பாதையில் தூசிகள் அடங்கும் வரை நின்றார்கள்;
இனிமேல் நீ திரும்பவும் வரமாட்டாய் என்ற எண்ணம் கொண்டவர்களாக,
உன்னுடையநினைவையே எப்போதும் மனத்தில் இருத்தினார்கள்

(ஹே கிருஷ்ணா… உன்னை மனத்தில் இருத்திய அந்தக் கோபிகைகளை
அடியேன் எப்போதும் அடியேன் மனத்தில் இருத்திக் கொள்கிறேன் )

நீயும் , பலராமனும் , வாயு வேகமாய் அக்ரூரர் ரதத்தைச்செலுத்த,
மத்யான வேளையில், யமுனைக்கரைக்கு வந்து சேர்ந்தீர்கள்.
மரங்களின் நிழலில் , அக்ரூரர் ரதத்தை நிறுத்தினார்.
நீங்கள் இருவரும் காளிந்தீ நதியில் இறங்கி, முகம் கைகால் அலம்பித்
திரும்பவும் வந்து ரதத்தில் அமர்ந்தீர்கள்.

அக்ரூரர் மாத்யான்னிக ஸ்நானம் செய்ய , யமுனையில் விதிப்படி இறங்கி ,
ஸ்நானம் செய்தார்;
ஜலத்தில் மூழ்கி காயத்ரியாகிய பிரம்மத்தை ஜெபிக்கும்போது,
நதிக்குள், தீர்த்தத்தில் உன்னையும் பலராமனையும் தரிசித்தார்.
மூழ்கிய நிலையில் உங்களைக் கண்டவர், என்ன ஆச்சர்யம் என்று நினைத்து,
தலையை ஜலத்துக்கு வெளியே தூக்கிப் பார்த்தபோது
நீங்கள் இருவரும் ரதத்தில் இருக்கக் கண்டார்.
ரதத்தில் இருப்பவர் எப்படி ஜலத்துக்குள் இருக்கிறார்கள் என்று ஆச்சர்யப்பட்டு
மறுபடியும் ஜலத்துக்குள் மூழ்கினார். ஜலத்துக்குள் மறுபடியும் இருவரையும் தர்சித்தார்.
இன்னொரு தடவை, ஜலத்துக்கு வெளியே எட்டிப் பார்த்தார்;
ரதத்தில் இருவரும் இருக்கக் கண்டார். மறுபடியும் ஜலத்தில் மூழ்கினார்.
அவர் கண்ட காக்ஷி மிக அற்புதம்….
.தேவர்கள், ரிஷிகள், கந்தர்வர்கள், சித்தர்கள், சாரணர்கள், அசுரர்கள், இப்படி எல்லோரும்
உன்னை வணங்கி, அஞ்சலி செய்து ஸ்தோத்ரங்கள் சொல்வதைக் கண்டார்.
எப்படிப்பட்டவனாக உன்னைப் பார்த்தார், தெரியுமா !

ஒவ்வொரு நாக படத்திலும், முத்து வைரக் கற்கள் பளீரென பிரகாசிக்க,
ஆயிரம் தலைகள் உள்ள ஆதிசேஷன் வெள்ளை நிறத்துடன்
நீலப் பட்டாடை அணிந்தவராக,
அந்த ஆதி சேஷனின் சயனத்தில்,
பீத கௌசேய வாசத்துடன்,
நான்கு கைகளுடன்
அழகான திருமுகத்துடன்
அதில் புன் சிரிப்புடன்
தாமரை இதழ் போன்ற கொஞ்சம் சிவந்த கண் பார்வையுடன்
தீர்க்கமான நாசியுடன்
அழகான இரு காதுகளுடன்
சிவந்த உதடுகளுடன்
நீண்ட தடித்த புஜங்களுடன்,
சங்கு போன்ற க்ழுத்துடன்
அகன்ற மார்புடன்
அந்த வக்ஷஸ்தலத்தில் உறையும் ஸ்ரீதேவியுடன்
அத்திமர இலையைப்போன்ற மடிப்புடன் உள்ள திருவயிறுடன்,
பத்ம இதழ்களைப்போன்ற திருவடிகளுடன்
திருமுடியில் இலங்கும் வைரக் கிரீடத்துடன்,
ஜ்வலிக்கின்ற பற்பல திவ்ய ஆபரணங்களுடன்
இடுப்பில் கடிசூத்ரத்துடன்
திருமார்பில் பூணூலுடன் கௌஸ்துப மணியுடன்,
வனமாலையுடன்,
ஒரு பத்ம கரத்தில் உலகமாகிற காரணத் தாமரையுடன்,
மற்ற இரு கைகளில் சங்கு சக்ரத்துடன்
இன்னொரு கையில் கதாயுதத்துடன்
———அக்ரூரர் தரிசித்தார்

உன்னுடைய அனந்தமான பக்தகோடிகள், பிரகலாத, நாரத ,வசு, ப்ரும்ம, ருத்ர ,
மாக்கண்டேய, ரிஷிகணங்கள் உன்னை உத்தமமான கானத்தால் துதிக்க,
ஸ்ரீ மஹாலக்ஷ்மி உன் திருமார்பில் வாஸம் செய்ய,
புஷ்டி தேவதை, கீர்த்தி தேவதை, துஷ்டி தேவதை, இளாதேவதை ,
ஊர்ஜா, வித்யா, அவித்யா, யோகமாயா சக்தி, இவர்களும் உன்னைத் துதிக்க,
இத்தனைப் பேரழகு, பெரும் சம்பத்துக்கள் அடங்கிய மஹா உன்னத தர்சனத்தை ,
அக்ரூரர் அடைந்தார்.
( முன் ஜன்மத்தில் சுமந்திரராக இருந்து பகவானாகிய —
ஸ்ரீ ராமனாகிய பட்டாபிஷேக தர்சனத்தைப் பெற்றவர் அல்லவா ! )

பக்தியுடன், பரம ப்ரீதியுடன், உடல் புளகாங்கிதம் அடைய,
பாவனா பிரகர்ஷித்தினால் ஏற்பட்ட மனத்தையே கண்களாகக் கொண்டு,
உன்னுடைய அதி ஆச்சர்யமான வார்த்தைகளில்
அடங்காத மகோன்னத திவ்ய ரூபத்தைத் தரிசித்து,
சேவித்து சேவித்துப் பலமுறை சேவித்து,
நாத் தழு தழுக்க ஸ்தோத்ரம் செய்தார்.

ஹே கிருஷ்ணா… உன்னதமான பாக்யம்செய்த அக்ரூரரை,
கோபிகைகள், ஸ்ரீ பாஷ்யகாரர், ஆசார்யன் ஸ்வாமி தேசிகன் இவர்களை முன்னிட்டு
ஆயிரமாயிரம் தடவை நமஸ்கரிக்கிறேன் )

39 வது அத்யாயம் நிறைவடைந்தது. ஸுபம்

அடுத்த அத்யாயம்—ஸ்ரீ அக்ரூரரின் ஸ்துதி

அக்ரூரரின் ஸ்துதி
————————————
ஸ்ரீ சுகப்ரம்மம், பரீக்ஷித் ராஜனுக்கு, ஸ்ரீ அக்ரூரர் உன்னை ஸ்தோத்ரம்
செய்ததைச் சொல்கிறார்.

( ஹே கிருஷ்ணா , அதை உனக்கு க்ஜாபகப்படுத்த ,
அடியேன் என்ன பாக்யம் செய்தேனோ !)

ஹே….பிரபோ….எல்லாவற்றுக்கும் நீரே காரணம்;
உம்மை, அடிக்கடி, அடிக்கடி, த்யானித்து, நமஸ்கரிக்கிறேன்;
நீரே சாஸ்வதம்;
நீரே நாராயணன்
;நீரே ஸ்ரீ புருஷசூக்த பிரதிபாத்ய தேவதை ;
நீர் புருஷோத்தமர்;
நீரே அநாதி;
உம்முடைய தொப்புள் கொடி மூலமாக பிரம்மனைப் படைத்தீர்;
அவர் மூலம் எல்லா உலகங்களையும், உயிர்களையும் படைத்தீர்;
நீரே ஜகத் காரணர்;
உம்மிடமிருந்து பஞ்சீகரணத்தால்,
இந்தப் பூமி, ஜலம், அக்நி, காற்று, ஆகாசம் உண்டாகி,
பஞ்ச மஹாபூதங்களை, நீரே சிருஷ்டித்தீர்.
நீரே, ப்ரக்ருதியின் உதவியுடன்,
மஹத், அஹங்காரம், புத்தி, மனஸ், பத்து இந்த்ரியங்கள்
இவைகளை ஸ்ருஷ்டி செய்தீர்.
ஆனாலும் ஒருவருக்கும் புலப்படாமல், அகோசரமாக இருக்கிறீர்.
ஆத்மாவால்தான் உம்மை அறியமுடியுமென்றாலும் ,
உம்மைப் பூரணமாக அறிய இயலாது.
உம்முடைய சங்கல்பத்தால் அவதரிக்கிறீர்.
கர்மவசமான பிறப்பு உமக்கு இல்லை.
உம்மால் சிருஷ்டிக்கப்பட்ட, பிரக்ருதியின் முக்குணங்கள்
உம்மை அண்டாது.
நீரே, ஆதிபூதமாகவும்,
ஆதிதைவிகமாகவும்,
ஆதி பௌதிகமாகவும் இருக்கிறீர்.
உம்மை, வைதீக கர்மாக்களால் பல பக்தர்களும்,
யாக யக்ஜங்களால் பல தேவதைகளின் ஸ்வரூபமாகப்
பலபக்தர்களும், அந்தர்யாமி த்யானத்தால்
பல பக்தர்களும் உம்மையே ஆராதிக்கிறார்கள்.
ஆராதனத்தின் பலனை , அந்தந்த தேவதைகளின் மூலமாக
நீரே அருளுகிறீர்.
பல பக்தர்கள், நித்ய நைமித்திக —-ஆஸ்ரம கர்மாக்களை அனுசரித்து,
உம்மையே ஆராதிக்கிறார்கள்.
பலர், மனதை ஒருமுகப்படுத்தி, கர்மயோகத்தால் உம்மை பூஜிக்கிறார்கள்.
க்ஜாநிகளோ, க்ஜான யோகத்தால், உம்மையே பூஜிக்கிறார்கள்
. ஆஸ்திகர்கள், பலமூர்த்தி ஸ்வரூபமாக—–பாஞ்சராத்ர ஆகமப்படி
சதுர் வ்யூஹங்களாகவும், —-த்வாதச நாமங்கள்—–தசாவதாரங்கள்—-
அர்ச்சா விக்ரஹமாகவும் உம்மை ஆராதிக்கிறார்கள்.
நீரே ஆதி மூர்த்தி.
நீரே ஏக மூர்த்தி.
ஆசார்ய உபதேசங்களால் உம்மை நன்கு அறிந்தவர்கள்,
இதர தேவதைகளைப் பூஜிககாமல், அல்ப பலன்களை வேண்டாமல்,
நீரே எல்லாத் தேவதைகளிலும் அந்தர்யாமியாக இருப்பதை உணர்ந்து,
உம்மையே பரமாத்மாவகப் பூஜிக்கிறார்கள்.
உமக்கு அநேக நமஸ்காரம்

ஹே….பிரபோ…..நீரே முக்குணப் பிரகிருதியை ஆள்பவர்.
எல்லா சேதன, அசேதன வஸ்துக்களும் உம்மிடமே லயிக்கின்றன.
அவைகள் எல்லாமே உமக்கு சரீரம்
ஆனால் அவற்றின் எந்தத் தோஷமும் உம்மிடம் ஒட்டுவதில்லை.
நீரே நியந்தா;
நீரே சாக்ஷி;
நீரே எல்லாருக்கும், உபாதான, நிமித்த , சஹகாரி காரணமாகிறீர்
உமக்கு அநேக நமஸ்காரம்.

முக்குணங்கள் அடங்கிய குண பிரவாஹம் அவித்யையால் ஏற்படுகிறது.
அதனால், பலப்பல தேகங்கள்;
இந்தத் தேகங்களை விட , ஆத்மா வேறு என்கிற க்ஜானம் ஏற்படாதவரை,
உம்மை அறிய இயலாது. புருஷ சூக்தத்திலே சொல்லியபடி,
உமது முகத்திலிருந்து அக்நி உண்டாயிற்று
உமது திருவடிகளே பூமி
உமது கண்ணே சூர்யன்
உமது நாபியே ஆகாசம்
உமது காதுகளே திக்குகள்
உமது தலைப்பாகம் சத்யலோகம்
உமது திருக்கரங்களே இந்த்ராதி தேவர்கள்
உமது திருவயிறே சமுத்ரம்
உமது மூச்சுக் காற்றே பிராணன்
உமது மயிர்க்கால்களே வ்ருக்ஷங்கள் –செடி கொடிகள்
உமது கேசபாசங்களே மேகக்கூட்டங்கள்
உமது எலும்புகளே–நகங்களின் பாகங்களே — மலைகள்
உமது கண் இமைகள் மூடித் திறத்தலே— இரவு, பகல்
உமது வீர்யமே மழை
இவைகளே உமது புருஷ ஸ்வரூபம்.

எப்படி ஜலத்தில், பற்பல ஜந்துக்கள் நீந்தி வாழ்கின்றனவோ,
எப்படி, அத்திப் பழத்தில் சிறுசிறு பூச்சிகள் வாழ்கின்றனவோ,
அதைப்போல, எல்லா ஜீவக் கூட்டங்களும் ,உம்மையே அண்டி, நம்பி வாழ்கின்றன.
நீர், உமது இச்சையால், சங்கல்ப மாத்ரத்தில் பற்பல அவதாரங்களை எடுக்கிறீர்.
அந்த அவதாரங்களின் சேஷ்டிதங்களில் ஈடுபட்டு,
சந்தோஷப்பட்டு,ஜனங்கள் , உம்மைப் புகழ்கிறார்கள்.

நீர் பிரளய காலத்தில் மத்ஸ்ய ரூபியாக அவதாரம் செய்து சஞ்சரித்தீர்;
அந்த ரூபத்துக்குப் பல நமஸ்காரங்கள்.
அப்போது, நீரே சர்வகாரணப் பொருளாக இருந்தீர்.
நீர், ஹயக்ரீவ அவதாரம் செய்து, மது கைடப அரக்கர்களை அழித்து,
வேதங்களை ரக்ஷித்தீர்; உமக்குப் பல நமஸ்காரங்கள்.
நீர், ஆமை வடிவாக அவதரித்து, —-மந்த்ர மலையைச் சுமந்து ,
சமுத்ரமதனத்தில் ,அம்ருதத்தை உண்டாக்கினீர் .
உமக்குப் பல நமஸ்காரங்கள்.
நீர் வராஹ அவதாரம் செய்து, சமுத்ரத்தில் ஒளித்துவைத்து இருந்த
பூமியை ( பூமா தேவியை ) , வெளியே கொணர்ந்து ரக்ஷித்தீர்
உமக்குப் பல நமஸ்காரங்கள்
நீர், அத்புத ந்ருசிம்ஹனாக அவதரித்து, பிரஹ்லாதன் போன்ற
சாதுக்களை ரக்ஷித்தீர் .
உமக்குப் பல நமஸ்காரங்கள்.
நீர், வாமனரூபியாக அவதரித்து, மூன்று உலகங்களையும் அளந்து ,
உமக்கே மறுபடியும் சொந்தமாக்கி இந்த்ரனுக்கு அளித்தீர்.
உமக்குப் பல நமஸ்காரங்கள்.
நீர், பரசுராமராக அவதரித்து, க்ஷத்ரிய அரசர்களின் கர்வத்தை
கோடரியால் சிதைத்தீர்.
உமக்குப் பல நமஸ்காரங்கள்
நீர், ரகு குலத்தில் அவதரித்து, சாதுக்களை ரக்ஷிக்க,
ராவணாதியரை அழித்து, தர்ம சம்ரக்ஷணம் செய்தீர்.
உமக்குப் பல நமஸ்காரங்கள்.
நீர், இப்போது, வாசுதேவ புத்ரராக, சங்கர்ஷண—வாசுதேவராக அவதரித்து,
ஸ்ரீ கிருஷ்ணராக விளங்குகிறீர் ;
உமக்குப் பல நமஸ்காரங்கள்.

நீர், ப்ரத்யும்னராகவும், அநிருத்தராகவும் —சாதுக்களின் பதியாக விளங்குகிறீர்
உம்முடைய வ்யூஹ அவதாரங்களுக்குப் பல நமஸ்காரங்கள்.
நீரே, இனி கல்கி அவதாரம் எடுத்து, ம்லேச்சர்களான க்ஷத்ரியர்களை
அழிக்கப் போகிறீர்
உமக்குப் பல நமஸ்காரங்கள்.

நீரே தசவித அவதார ஸ்வரூபி ;
நீரே ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா ;
உமக்குப் பற்பல நமஸ்காரங்கள்.
ஹே பகவன்….லோகத்தில் ஜீவர்களை பிறப்பித்து,
உமது மாயையால், அவர்கள் மோஹத்தில் மூழ்கி
.உலக வ்யவஹாரங்களில் உழல,
அவர்களை, கைப்பொம்மைகளாக ஆட்டிவைக்கிறீர்
அடியேனும், அவ்விதமே, உழன்று கொண்டு இருக்கிறேன்.
பத்னி, பந்துக்கள், குழந்தைகள், செல்வம், வீடு, இந்தத் திரேகம் —
இத்யாதி பந்தத்தில் அகப்பட்டு, உழன்று கொண்டு இருக்கிறேன்.
இவை ஸ்வப்னக் காக்ஷி—பொய் என்று தெரிந்தும் .அவற்றிலேயே
ஆத்ம புத்தியைச் செலுத்தி, பலவிதத் துன்பங்களைப்
பட்டுக்கொண்டு இருக்கிறேன்

விபோ—-அடியேன் மூடன்,
சத்யமான உம்மை அறியவில்லை
அநித்தியமான உடலில் பாசம்–பற்று வைத்து,
இதன் உள்ளே இருக்கும் ஆத்மாவைத் தெரிந்து கொள்ளாமல்,
புத்தி கலங்கி இருக்கிறேன்.
கானல் நீரைப்போல, ஏமாற்றக்கூடிய வஸ்துக்களில்,
மோஹம் வைத்து, உம்மிடம் அலக்ஷ்ய புத்தியாக
பரம சம்சாரியாக இருக்கிறேன்
அடியேன், புத்தி ஹீனன்.
சுத்தமான ஜலத்தை ஒதுக்கி, கானல் நீரைத் தேடி அலைந்து,
உம்மிடம் பராமுகமாக இருக்கிறேன்.
அடியேன், என் மனத்தை அல்ப விஷயங்களிலிருந்து
திருப்ப முடியவில்லை.
உமது கருணைக்கு உரியவன்
எப்போதும் இந்த்ரிய வசப்பட்டு, அதன் இஷ்டங்களை நிறைவேற்ற,
பலவித ஹிம்சைகளை அடைந்து, இங்குமங்கும் உழல்கிறேன்.
அடியேனைப் போன்ற பாபாத்மாக்களுக்கு நின் திருவடிகளே புகல் என்று ,
உம்முடைய அநுக்ரஹத்தை வேண்டி, தஞ்சமென்று வந்திருக்கிறேன்.
சம்சாரத்தைத் துறந்து ,மோக்ஷத்தை
நாடி இருக்கிறேன்.

ஹே….அப்ஜநாப ….இது உமது கிருபையாலும், உமது அடியார்களைப்
பூஜிப்பதாலும் கிடைக்கும் என்று நம்புகிறேன்.
இதற்கும் உமது கிருபை வேண்டும்.
உம்மைப் பல தடவை நமஸ்கரிக்கிறேன்
. வாசுதேவராகிய உமக்குப் பல நமஸ்காரங்கள்.
ஹ்ருஷீகேசராகிய உமக்குப் பல நமஸ்காரங்கள்.
அடியேன், உம்மைச் சரணம் என்று அடைந்த ப்ரபன்னன்.
அடியேனை நீர்தான் காக்க வேண்டும்

(ஹே….கிருஷ்ணா….இது அக்ரூரர் ஸ்துதி என்று , ஆரம்பத்தில்
அடியேன் சொன்னாலும், இப்போது இது அடியேனின் ஸ்துதியே.
அடியேனை உன் திருவடிகளில் சேர்த்துக்கொள்ள வேண்டி,
உன்னைப் பல்லாயிரம் கோடி முறை தெண்டனிட்டுக் கதறுகிறேன்
ஆய்ச்சியர்களானகோபிகைகளையும், ஸ்ரீ பாஷ்யகாரரையும் ,
ஆசார்யன் ஸ்வாமி தேசிகனையும் முன்னிட்டு,
ஸ்ரீ அக்ரூரை ஆயிரமாயிரம் தடவை நமஸ்கரிக்கிறேன்.
அவரன்றோ, எப்படி உன்னைத் துதிக்கவேண்டும் என்று
மூடனான அடியேனுக்குச் சொல்லிக் கொடுத்தவர் )

– – 40 வது அத்யாயம் நிறைவடைந்தது. ஸுபம்

—————————————————————————————————————–

தசமஸ்கந்தம்—- அத்யாயம் ….41
—————————————————————————

ஸ்ரீ கிருஷ்ணனும் , பலராமனும் மதுரா நகருக்குள் பிரவேசித்தல்
——————————————————-

ஸ்ரீ சுகர் மேலும் கூறுகிறார்;
ஹே, ராஜன்…..ஸ்ரீ கிருஷ்ணன் , இவ்விதமாக, அக்ரூரர்
ஸ்துதி செய்ததைக் கேட்டார்
உடனே தன்னுடைய ஆச்சர்யமான உருவங்களை மறைத்துக் கொண்டார்.
அந்தப் பெரிய உருவம் ஜலத்திலிருந்து மறைந்தது.
அக்ரூரர் ஜலத்திலிருந்து வெளியே வந்து, ரதத்தை அடைந்தார்.
ஸ்தம்பித்துப் போய் இருந்த அவரை,
“என்ன அத்புதமான , ஆச்சர்யமான விஷயத்தைக்கண்டீர் ? ”
என்று ஸ்ரீ கிருஷ்ணன் கேட்டார்.

அதற்கு, அக்ரூரர் சொன்ன பதிலை
ஹே கிருஷ்ணா, ஸ்ரீ சுகர், பரீக்ஷித் ராஜனுக்குச் சொன்னதைச்
சுருக்கமாகக் கூறுகிறேன்.

” ஆஹா….என்ன அத்புதங்கள்….உம்மிடமே எல்லா அற்புதக் காக்ஷிகளும்
அடங்கி இருக்கின்றன. நீரே விச்வாத்மா… உம்மை அடிக்கடி நமஸ்கரிக்கிறேன் ”
என்று சொல்லி, ரதத்தில் ஏறி, அதை ஓட்ட , சாயங்கால வேளையில் ,
மதுராபுரி எல்லைக்கு நீங்கள் மூவரும் வந்து சேர்ந்தீர்கள் .
வழியில் இருந்த கிராமங்களிலுள்ள ஜனங்கள் எல்லாம்,
உங்கள் இருவரையும் பார்த்து, உங்கள் அழகில் மனம் பறிகொடுத்து,
உங்களுக்கு ஆகாரம் முதலியன கொடுத்து உபசரித்து,
உங்கள் பேரழகில் மயங்கி இருந்தார்கள்.

மதுராபுரிக்கு, வெண்ணெய் , தயிர் இவைகளை
வண்டி வண்டியாக எடுத்துக் கொண்டு கோகுலத்திலிருந்து புறப்பட்ட யாதவர்கள்,
முன்னதாகவே மதுராபுரியை அடைந்து , ஒரு நந்தவனத்தில் தங்கி
உங்கள் வருகையை எதிர் பார்த்துக் காத்திருந்தார்கள்.
நீங்களும், அந்த நந்தவனத்தை அடைந்தவுடன்,
உன்னை வணங்கி நிற்கும் அக்ரூரரின் கையைப் பிடித்துக் கொண்டு,
” நீர் இப்போதே முன்பாக மதுராபுரி நகருக்குள் ரத்தத்துடன் செல்லுங்கள்;
நாங்கள் இந்த நந்தவனத்தில் சிறிது நேரம் இவர்களுடன் தங்கிவிட்டு
அப்புறமாக நகருக்குள் பிரவேசிக்கிறோம்”: என்று சொன்னாய்.

அதற்கு அக்ரூரர் ” பிரபோ….உம்மை விட்டு விட்டு,
நான்மட்டும் தனியாக நகருக்குள் போகமாட்டேன்;
நீரும் என்னுடன் , எல்லாருமாக நகருக்குள் என் வீட்டுக்கு வந்து,
நான் உம்மை என்வீட்டுக்குள் வரவேற்று, உமது திருவடிகளை
கங்கை ஜலத்தால் அலம்பி, அதை அருந்தி
தலையில் சேர்த்துக் கொள்ள வேணும்
ஹே, தேவதேவ…….ஜகன்னாத …..புண்ய ஸ்ரவண கீர்த்தன ….
.யதுவம்ச உத்தம ..நாராயண …உமக்கு அனந்தகோடி நமஸ்காரங்கள் ….”
என்று பிரார்த்தித்தார்.

அதற்கு, நீ, சரி பலராமனுடன் வருகிறேன்..
.ஆனால், கம்சனைக் கொன்று என் பந்துக்களுக்கு ஆனந்தத்தைச் செய்து ,
அதன் பிறகு, வருகிறேன்….
இப்போது நீர், நகருக்குள் ரதத்துடன் செல்வீராக….. என்றாய்.
அக்ரூரர் ,மனம் கலங்கியவராக, தான் தனியாக மதுராபுரி நகருக்குள் சென்று,
கம்சனிடம் ,ஸ்ரீ கிருஷ்ணரும், பலராமனும் மதுரை நகருக்கு வெளியே
நந்தவனத்திற்கு வந்து விட்டார்கள் என்கிற விஷயத்தைச் சொல்லிவிட்டுத்
தன்னுடைய க்ருஹத்துக்குப் போய்ச் சேர்ந்தார்.

நீயும் பலராமனும் மறுநாள் மத்யானவேளையில்,
உனது பரிவாரங்களுடன் மதுராபுரி நகருக்குள் நுழைந்தாய்
. நகரில் உள்ள மாட மாளிகைகள், கூட கோபுரங்கள், உத்தியான வனங்கள் ,
சபாமண்டபங்கள், இன்னும் பற்பல அற்புத பவனங்களைப் பார்த்துக்கொண்டே
வீதிகளில் சென்றாய். உன்னைப்பார்க்க மதுராபுரி ஸ்திரீகள்,
முண்டி அடித்துக் கொண்டு வந்தார்கள்;
ஆபரணங்களைத் தாறுமாறா அணிந்து கொண்டு தெருவுக்கு வந்தார்கள்;
சிலர் சாப்பாடு சாப்பிட்டுக்கொண்டு இருக்கும்போதே பாதியில் ஓடிவந்தார்கள்;
உன்னுடைய மந்தஹாசச்சிரிப்பிலும், பார்வையிலும், ஜாடைகளிலும்
மனதைப் பறி கொடுத்தார்கள்.
உனக்கு பழங்கள், பக்ஷணங்கள் முதலியன கொடுத்துப் பூஜித்தார்கள்.
புருஷர்களும் இப்படியே உன்னைக் கண்டு மெய்மறந்தார்கள்.

நீயும், பலராமனும் இப்படித் தெருவிலே போய்க்கொண்டு
இருக்கும்போது, கம்சனுக்காகத் துணிகளைத் தயார் செய்து வைத்திருந்த
வண்ணானைப் பார்த்தீர்கள்.அந்தத் துணிகளைப் பார்த்த நீ,
வண்ணானிடம் உனக்கு அணிந்துகொள்ள சில துணிகளைக் கேட்டாய்.
வண்ணான், கோபத்துடன், அரசன் அணிந்துகொள்ளும் துணிகளை,
காடுமலைகளில் சஞ்சரிப்பவர்களுக்குக் கொடுப்பதற்கு இல்லை என்றான்.
உங்களை அதட்டினான்; விரட்டினான்; ராஜ த்ரவ்யங்களில்
ஆசை வைக்காதே என்று பயமுறுத்தினான்.
இதனைப் பொறுக்காத நீ, அவன் தலையைக் கொய்து எறிந்தாய்.
அருகில் இருந்த அவனது ஆட்கள், பயந்து ஓட, நீயும் பலராமனும்
அந்த வஸ்த்ரங்களில் சிறந்தவற்றை எடுத்து அணிந்து கொண்டீர்கள்.
இதனைப் பார்த்துக்கொண்டிருந்த துணி நெய்யும் நெசவாளி,
உங்களுக்கு, நேர்த்தியான உடைகளால் அலங்காரம் செய்தான்.
இதனால் மகிழ்ச்சி அடைந்த நீ , அவனுக்கு சாரூப்ய ஆனந்தம்,
நிறைந்த சுக வாழ்க்கை, இவைகளை அளித்தாய்.

பிறகு, நீங்கள் இருவரும், சீதாமா என்கிற
மாலாகாரருடைய வீட்டுக்குச் சென்றீர்கள்.
உங்களைக் கண்டதும் அவன் எழுந்து வணங்கி, வர வேற்று ,
உபசரித்து, சந்தனம் புஷ்பம் முதலியவைகளைக் கொடுத்து,
” நீரே சர்வ ஜகத்துக்கும் ஆதி காரணர்;
உங்களால் நான் மிகவும் அனுக்ரஹம் செய்யப் பட்டேன் என்று
சொல்லி மாலைகளைச் சூட்டி மகிழ்ந்தான் .
பரம ப்ரீதியுடன் நீ, அவன் வேண்டிய வரத்தைக் கொடுத்து,
மேலும் ஐஸ்வர்யம் , பலம் ஆயுஸ், இவற்றைக் கொடுத்து
அவனை அனுக்ரஹித்தாய்.

41 வது அத்யாயம் நிறைவடைந்தது., ஸுபம்
த்ரிவக்ரைக்கு அநுக்ரஹம்— தனுர் யக்ஜ சாலையில்
வில்லை முறித்தல்—– கம்ஸனின் கலக்கம் —
—————————————————————————————–

ஹே…கிருஷ்ணா….உன் சரிதத்தை ஸ்ரீ சுகர்,
பரீக்ஷித் மகாராஜனுக்குச் சொல்கிறார் …
இது அடியேன் செவிகளுக்கு அமுதமாக இருக்கிறது.
நீயும், பலராமனும் மதுராபுரி நகருக்குள் ராஜ பாட்டையில்
நடந்து சென்றீர்கள். பார்ப்பவர்கள் வைத்த கண் வாங்காமல்
உங்களைப் பார்த்துக் கொண்டே இருந்தார்கள்.
உங்களைப் பார்த்த பெண்கள் குதூகலம் அடைந்தார்கள்.

அப்போது , உங்கள் எதிரே த்ரிவக்ரை என்கிற கூனி வந்தாள்
வாசமிகு சந்தனமும்,சுத்தமான திலகமும் எடுத்து வந்தாள்.
அவள் கூனி ஆனாலும் யுவதி….அவளைப் பார்த்து
“பெண்ணே …நீ யார்….இந்த சந்தனம் முதலியவற்றை
யாருக்காக எடுத்துப் போகிறாய்…. .
எங்களுக்கு இவைகளைக் கொடுப்பாயா…உனக்கு நல்லவை நடக்கும்..
.இதுபோன்ற சோகம் இனி இல்லை…..” என்றாய்

அதற்கு , கூனியாகிய அந்த சைரந்தரி பதில் சொன்னாள்.
” நான் கம்ஸனின் சேவகி;
சந்தனம் மற்றும் வாசனைத் த்ரவ்யங்களைத் தயாரிக்கும்
கைலாவண்யத்தை மெச்சி கம்ஸன்
என்னை இந்த சேவகத்துக்கு நியமித்துள்ளார்.
ஆஹா அழகானவர்களே……உங்களைத் தவிர
இந்தச் சந்தனாதி த்ரவயங்களைப் பெறுவதற்கு
ஒருவருக்கும் அருகதை இல்லை; ….”.என்று சொல்லி

ஹே கிருஷ்ணா …
.உன்னுடைய மாதுர்யம், புன்சிரிப்பு, சௌஹார்த்தம்,
கடாக்ஷ வீக்ஷிண்யம் இவைகளில் மனதைப் பறிகொடுத்து,
எல்லா சந்தன வாசன தாம்பூலங்களையும் கொடுத்தாள்.
இவள் த்ரிபங்கீ —உடலானது மூன்று இடங்களில் வளைந்து இருக்கிறது
கழுத்து, மார்பு, மற்றும் இடுப்பு ஆகிய மூன்று இடங்களில் வளைவு .
நீயும், பலராமனும் சந்தனத்தைக் கழுத்து, மார்பு உடம்பு
என்று பூசிக் கொண்டீர்கள்.
தாம்பூலத்தையும் வாயில் போட்டு சுவைத்தீர்கள்.
இவையெல்லாம் பார்த்த த்ரிவக்ரை மிகுந்த சந்தோஷமடைந்தாள்.
அப்போது நீ அவளுக்கு அநுக்ரஹம் செய்ய நினைத்தாய்.
“ஹே…த்ரிவிக்ரை….நீ மிகுந்த அழகானவள்;
ஆனால் இந்த மூன்று வளைவுகளும் உன் அழகை மங்கச் செய்கின்றன ”
என்று சொல்லி, அவளுடைய கரத்தைப் பிடித்து,
அவளுடைய பாதங்களை உன் திருவடிகளால் அமுக்கி,
உன்னுடைய விரல்களால் அவளுடைய முகத்தை உயரத் தூக்கி,
அவளுடைய தாடையை உன் விரல்களால் தாங்கி,
ஒரு சொடுக்கு செய்தாய்.
என்ன ஆச்சர்யம் !
அந்த த்ரிவக்ரை அதிரூப சுந்தரியாக —-
முகம், உடல், கால்பாகம் இவை மூன்றும் ஒத்த அழகுடன்
அதிசோபிதமாகஆனாள்.
அவள், உன்னுடைய உத்தரீயத்தைப் பிடித்துக்கொண்டு,
மந்தஹாச வினயத்துடன்
” ஹே…..ரூபகுண ஔதார்ய சம்பண்ணா….
உம்மிடம் என் மனத்தை இழந்தேன்…..
உம்மை விட இயலாது, என்னுடன் வீட்டுக்கு வாரும் ….” என்று கெஞ்சினாள்
அதற்கு, நீ, நான் இங்கு வந்த வேலை முடிந்ததும் உன் வீட்டுக்கு வருவேன் …
என்று சொல்லி அவளை அனுப்பிவிட்டு ,
நீங்கள் இருவரும் தொடர்ந்து நடந்து சென்றீர்கள்.
கொஞ்ச தூரத்தில் , பூமாலை, தாம்பூலம் இவைகளை எடுத்துக்கொண்டு
ஒரு வியாபாரி எதிரே வந்தான். உங்களைப் பார்த்தவுடன்
உங்களுக்கு மாலைகளை அணிவித்து, சந்தனம் பூசி, தாம்பூலம் கொடுத்தான்.
இவைகளை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்த மதுராபுரி ஸ்திரீகள்,
சந்தோஷம் நிரம்பிய மனத்துடன் அடுத்து என்ன செய்வது என்று
ஒன்றும் புரியாதவர்களாக சித்திரப் பாவைகளைப் போல நின்றார்கள்.

(ஹே கிருஷ்ணா…..உன்னுடைய அப்ராக்ருத அழகு……உன்னுடைய தர்சநம்
அப்போது அடியேனுக்குக் காணக்கிடைக்க வில்லையே ..
.இப்போதாவது அந்தத் தர்சனத்தைத் தரலாகாதா )

பிறகு சிறிது தூரம் சென்றவுடன் ,எதிரே வருபவர்களைப் பார்த்து
” இங்கே ஏதோ ஒரு இடத்தில் தனுஸ் இருக்கிறதாமே …..எங்கே இருக்கிறது …..”
என்று கேட்டு ,அவர்களிடம் தெரிந்துகொண்டு, இந்திர சபையைப் போல இருக்கும்,
அற்புதமான அந்த சபைக்குள் சென்றீர்கள்.
அங்கு நடுநாயகமாக பற்பல வர்ணத்துடன் மின்னும்
பச்சை, வைடூர்ய மாணிக்கக் கற்களால் பதிக்கப்பட்டு
பார்ப்பதற்கு வெகு நேர்த்தியாக உள்ள அந்தவில்லைப் பார்த்தீர்கள்.
வில்லுக்கு முன்பாக , ஒரு பெரிய பையில் பணமுடிப்பு வைக்கப்பட்டிருந்தது
. பலவீரர்கள், மிக ரகசியமாகப் பாதுகாத்துக் கொண்டிருந்தார்கள்.
நீ, சிரித்துக் கொண்டே வில்லின் அருகில் சென்றாய்.
ஏராளமான வீரர்கள் ஓடிவந்து உன்னைத் தடுத்தனர்.
அவர்களையெல்லாம் ஒரு க்ஷணத்தில் ஒதுக்கித் தள்ளி,
வில்லைக் கையில் எடுத்து, விளையாட்டாக அதன் நாணைப் பூட்டி இழுத்தாய்.
வில், சடாரென்று இரண்டாகப் பெரும் ஓசையுடன் ஒடிந்து விழுந்தது.

இந்தத் த்வனியைக்கேட்ட கம்ஸன் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்தான்.
வில்லுக்குக் காவலாக இருந்த வீரர்கள், உங்களை அழிக்க ,
ஆயுதங்களுடன் ஓடிவந்தார்கள்.
உடைந்த வில்லையே ஆளுக்கு ஒன்றாக எடுத்துக்கொண்டு நீங்கள் இருவரும்
அவர்களுடன் சண்டை செய்து விரட்டி அடித்தீர்கள்.

இதை அறிந்த கம்ஸன் இன்னும் பல வீரர்களை அனுப்ப அவர்களையும் வென்று,
நீங்கள் இருவரும் , அந்த சபையில் இருந்து வெளியே வந்து,
மறுபடியும் மதுராபுரி நகர வீதிகளில் சுற்றி னீர்கள்
மதுராபுரவாசிகள், உங்களை மிகவும் கொண்டாடி,
இவர்கள் உத்தமச் சிறுவர்கள், தேவர்கள் என்று புகழ்ந்தனர்.
இப்போது அஸ்தமன சமயம் ஆகிவிட்டது.
நீங்கள் இருவரும் உங்களுடன் வந்த கோபாலகர்கள் புடைசூழ
ரதத்தை நிறுத்திய இடத்துக்கு வந்து, ரதத்தில் ஏறி,
தங்கியிருந்த இடத்தை அடைந்தீர்கள்.
அங்கு, கைகால்களை அலம்பி உணவு அருந்தி ,
இரவை சுகமாகக் கழித்தீர்கள்.

ஆனால், கம்ஸனுக்குத் தூக்கம் வரவில்லை.
பற்பல துர்நிமித்தங்கள் ஏற்பட்டதைப் பார்த்தான்.
மிகுந்த பயத்துடன் இரவைக் கழித்தான். மறுநாள் காலை….
மல்யுத்தம் செய்வதற்கான ஏற்பாடுகளுக்குக் கட்டளை இட்டான்.
பிரும்மாண்டமான அரங்கம். மந்திரிகள், சேனாதிபதிகள், பிரமுகர்கள்,
நந்தகோபன் மற்றும் எல்லா கோபாலகர்கள்வந்து அமர்ந்தார்கள்.
கம்ஸன் தன் பரிவாரங்களால் சூழப்பட்டு அங்கு வந்து ,
தனது சிம்மாசனத்தில் அமர்ந்தான்
மனத்தில் ஏதோ ஒரு பீதி அவனுக்கு.
மல்யுத்த அரங்கில், கூடன்,சலன், தோசலன் மற்றும்
பல மல்யுத்த வீரர்கள் இருந்தனர்.
சாணூரன் , முஷ்டிகன் என்கிற மிகச் சிறந்த மல்யுத்த வீரர்களும் இருந்தனர்.

42 வது அத்யாயம் நிறைவடைந்தது . ஸுபம்

———————————————————————————————————-

— தசமஸ்கந்தம்—– அத்யாயம் ……….43
———————————————————————————

கம்ஸனின் பட்டத்து யானை—-குவலையா பீடம் —– சம்ஹாரம்
—————————————————–

ஸ்ரீ சுகர் , பரீக்ஷித் மகாராஜனுக்கு மேலும் உன் கதையைக் கூறுகிறார்
மறுநாள் காலை வேளை. நீயும், பலராமனும் நன்கு அலங்கரித்துக் கொண்டு,
துந்துபி வாத்தியம் முதலிய சப்தங்கள் வரும் திசையைநோக்கி
கோபாலகர்கள் கூடவே வர, நடந்து சென்றீர்கள்.
மிகப் பெரிய அரங்கம்; மந்திரிகளும், சேனாதிபதிகளும் முக்யஸ் தர்களும்
கூடியிருந்த அரங்கம்; கம்ஸன் தன்னுடைய சிம்ஹாசனத்தில்
நாடு நாயகமாக வீற்றிருந்தான்.

நீங்கள், அந்தப் பெரிய அரங்கத்தின் நுழைவு வாயிலில் தடுத்து நிறுத்தப்பட்டீர்கள்.
அங்கு, கம்ஸனின் பட்டத்து யானை —குவலையாபீடம் —என்கிற யானை இருந்தது.
மாவுத்தன் சொன்னபடியெல்லாம் செயல்பட்டது.
நீ, உன் கேசபாசங்களை நன்கு முடிந்துகொண்டு, வேஷ்டியை இறுகக்கட்டிக்கொண்டு,
மிகக் கம்பீரமாக, மாவுத்தனுக்குக் கட்டளை இட்டாய்.

” நாங்கள் உள்ளே போக வேண்டும்; இந்த யானையை விலக்கு; தாமதிக்காதே;
தவறினால், யானையையும் உன்னையும் சேர்த்துக் கொன்று விட்டு உள்ளே பிரவேசிப்போம் ”

மாவுத்தன், மிகக் கோபமாக, யானையை உங்கள் மேல் ஏவினான்.
அது பாய்ந்து வந்தது. உன்னைத் துதிக் கையால் வளைத்தது.
நீ, அதை மிக வேகமாகத் தடுத்து, உன் முஷ்டியால் குத்தி, அதன் துதிக்கையை,
அதன் பின்புறமாக இழுத்தாய். யானை உன் பிடியிலிருந்து தப்பித்து,
மிகவும் கோபத்துடன்,உன்னுடன் மோதியது.
இடப் புறமாகவும், வலப்புறமாகவும் சுழன்று உன்னைத் தாக்கியது.
நீயும், அதற்கு ஏற்றாற் போலச் சுழன்று, சற்று நேரம் அதனுடன் விளையாடினாய்.
அதற்கு இன்னும் கோபம் ஏற்படுமாறு செய்தாய்.
உன்னை முட்டுவதற்கு ஓடி வந்தது. நீ, லாவகமாக நகர்ந்து கொண்டாய்.
நீ தரையில் படுத்து இருப்பதாக நினைத்து, தரையில் மோதியது.
ஆனால் , நீ அங்கு இல்லை என்பதை உணர்ந்தது.

இப்போது மாவுத்தன், மறுபடியும் அதனைத் தூண்டி , உன்மீது ஏவினான்
. நீ, அந்த யானையை உன் பலத்தால் அடித்துத் கீழே தள்ளினாய்.
சமாளித்துக் கொண்டு அது எழுந்திருக்க முயல, நீ ,அதை மறுபடியும் கீழே தள்ளி,
அடித்து, அதன் தந்தங்களைப் பிடுங்கினாய்
. ஆயிரம் யானைகளின் பலம் கொண்ட அந்த குவலையாபீடம் என்கிற யானை ,
இப்படியாக அந்த “ரங்க” பூமியில் உன்னால் கொல்லப்பட்டது.
உன் திருமேனியில் ரத்தமும், வியர்வையும் நிறைந்து இருக்க,
நீயும் பலராமனும், ஆளுக்கு ஒரு தந்தத்தைப் பிடித்துக் கொண்டு
அந்த” ரங்க” மேடைக்கு வந்தீர்கள்.

(ஹே …க்ருஷ்ணா…..அன்று உன்னையே தஞ்சம் என்று “ஆதிமூலமே ” என்று கதறிய
யானையைக் காத்தாய். இப்போது, மாவுத்தனால் தூண்டிவிடப்பட்ட,
கம்ஸனால் ஏவப்பட்ட குவலையாபீடம் என்கிற யானையைக் கொன்றாய்.
பிற்பாடு, மகாபாரத யுத்தத்தில் , தர்மரை முன்னிட்டு “அஸ்வத்தாமன் ” என்கிற
யானை அழியப் போகிறது. மூன்று யானைகள் ,
உன் திருவிளையாடலில் முக்யத்வம் பெறுகின்றன. )

அப்போது, நீ, கோபர்களுக்கு சகாவாகவும், பிதாவான நந்தகோபருக்குக் குழந்தையாகவும்,
ஸ்திரீகளுக்கு மன்மதமூர்த்தியாகவும், கம்ஸனுக்கும் அவன் சகாக்களுக்கும்
அவர்களுடைய பலத்தை அடக்குபவனாகவும் காக்ஷி தந்தாய்
. கூடியிருந்த ஜனங்கள், எவராலும் அடக்கமுடியாத, குவலையாபீடம் என்கிற யானையையே
அழித்த உன் பராக்கிரம, வீரச் செயலைக் கொண்டாடினார்கள்.

இவை எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த கம்ஸன்
மனத்துக்குள் மிகவும் பயந்து போனான்
உன்னையும் பலராமனையும் பயத்துடன் பார்த்தான்.
ஆனால், கூடியிருந்த ஜனங்கள் , உங்களை .ஆச்சர்யத்துடன் பார்த்துக்கொண்டே இருந்தார்கள்.
அவர்களுக்குள் பேசிக்கொண்டார்கள்.

இவர்தான் கிருஷ்ணன்;கோகுலத்திலிருந்து வந்திருக்கும் நந்தகோபரின் பிள்ளை.
இவர்தான், தேவகியின் பிள்ளையாகப் பிறந்து, கோகுலத்தில் கொண்டுபோய் விடப்பட்டு,
நந்தகோபர் வீட்டில் இதுவரை ரஹஸ்யமாக வளர்ந்து,
கம்ஸனால் இவரைக் கொல்வதற்கு என்றே அனுப்பப்பட்ட பூதனை,
திருணாவர்த்தன், நளகூபரன், கேசி தேனுகன், என்று பல அசுரர்களை மாய்த்தவர்.
காளியன் என்கிற கொடிய சர்ப்பம் இவரால் அடக்கப்பட்டது.
இந்திரனின் கோபத்தால் இடைவிடாது பெய்த மழையின் போது,
கோவர்த்தன கிரியைத் தூக்கிப் பிடித்து கோகுல வாசிகளைக் காத்தவர்.
முகத்தில் அந்த மந்தஹாசத்தைப் பாருங்கள்.
சொக்க வைக்கும் அழகைப் பாருங்கள் .
இவருடைய மூத்தவர் பலராமனைப் பாருங்கள்.
இவர் கமலலோசனன். ப்ரலம்பன், வத்சன்,பகன் என்கிற
பலம்வாய்ந்த அசுரர்களைக் கொன்றவர்.
கிருஷ்ணனையும் பலராமனையும் பார்க்கும் பாக்யம் பெற்றோம்.
இப்படி அடிக்கடி பேசி உங்களைப் பார்த்துப் பரவசம் அடைந்த ஜனங்கள் ,
திடீரென்று தூர்ய வாத்தியங்கள் முழங்குவதைக் கேட்டார்கள்.
நீங்கள் இருவரும் ரங்க மண்டபத்துக்குள் வந்ததும் , சாணூரன் என்கிற மல்லன்
சபையின் நடுவே உன்னைப் பார்த்துப் பேசினான்.
ஹே…வீர…நீங்கள் இருவரும் மிகுந்த வீரம் மிகுந்தவர்கள் என்று
ஜனங்களால் சொல்லப்படுகிறீர்கள்.
மல் யுத்தம் செய்வதில் வல்லவர்கள் என்று, கேள்விப்பட்டு
அரசர் உங்களை இங்கு அழைத்து இருக்கிறார்.
உங்கள் மல் யுத்தத்தைப் பார்க்க விரும்புகிறார்.
அரசனின் ஆசையை நிறைவேற்றுவது பிரஜைகளின் கடமை.
எங்களுடன் மல்யுத்தம் செய்யவேண்டும் என்றான்.
அதற்கு, நீ, ” நாங்கள் பாலர்கள், எங்களுக்குச் சரிசமமான வயது,
பலமுள்ள வீரர்களுடன் மல்யுத்தம் செய்கிறோம்
இப்படி இல்லாதவர்களுடன் செய்யும் யுத்தம் பாபத்தை ஏற்படுத்தும் ” என்றாய். .
அதற்கு , சாணூரன், ” நீங்கள் பாலர்கள் இல்லை; ஆயிரம் யானை பலம் கொண்ட
குவலையா பீடம் என்கிற யானையையே விளையாட்டாகக் கொன்று இருக்கிறீர்கள்;
நீங்கள் பலம் உள்ளவர்களுடந்தான் மல்யுத்தம் செய்யவேண்டும்;
ஆதலால், ஹே கிருஷ்ண…நீ என்னுடனும், பலராமன் முஷ்டிகனுடனும்
மல்யுத்தம் செய்யலாம் ” என்றான்.

43 வது அத்யாயம் நிறைவடைந்தது. ஸுப ம்.

கம்ஸ வதம்

ஹே கிருஷ்ணா…..ஸ்ரீ சுகப்ப்ரம்மம் , பரீக்ஷித் ராஜனுக்கு ,
உன்னால் கம்ஸன் வதம் செய்யப்பட்டதை யும், அதற்கு முன்பு, சாணூரன் முஷ்டிகன்
வதம் செய்யப்பட்டதையும் கூறியதை, இப்போது உனக்குச் சொல்கிறேன்.
நீ, சாணூரன் என்கிற மல்யுத்த வீரனுடனும், பலராமன், முஷ்டிகன் என்கிற
மல்யுத்த வீரனுடனும் மல்யுத்தம் செய்தீர்கள். ஒருவருக்கு ஒருவர்
மோதிக்கொண்டீர்கள்; கையும் கையும் மோதின; காலும் காலும் மோதின;
ஒருவர் பிடியில் இருந்து மற்ற ஒருவர் தப்பிப்பது, பிடிபடாமல் காத்துக் கொள்வது,
ஒருவரைப் பிடித்து இன்னொருவர் மேலே தூக்குவது, இப்படியாக மல்யுத்த விதிகளின்படி
யுத்தம் செய்தீர்கள்; இதைப் பார்த்துக்கொண்டிருந்த பெண்கள் , “இது என்ன
அநியாயம் ? சரிசமம்மான பலமுள்ளவர்கள் மல்யுத்தம் செய்வதைப் பார்த்திருக்கிறோம்;
இங்கு, இளம் பாலகர்களுடன் வஜ்ராத்தைப்போலத் தேக பலம் கொண்ட மலைகளைப்போல
இருக்கிற பெரிய பலவான்கள் மோதுகிறார்களே ?
இது அதர்மம்; இதை நாம் பார்க்கக் கூடாது;எழுந்து செல்வோம் என்று பேசிக்கொண்டார்கள்.
உன்னுடைய முகத்தில் வியர்வை அரும்பி இருப்பதைப் பார்த்து துக்கித்தார்கள்.
சாணூரன் பிடிக்கு அகப்படாமல் , சமாளித்து நீ, அவனைத்தாக்கும்போது
சந்தோஷித்தார்கள். ஆஹா….வ்ரஜாபூமிவாசிகள் புண்ய சாலிகள் …….
.கிருஷ்ணனின் அழகையும் லீலைகளையும் அனுபவித்தவர்கள் அல்லவா என்று
உன்னை ஸ்லாகித்தார்கள். ,
மதுராபுரி ஸ்திரீகள், உன்னையே பார்த்து, உன்னையே நினைத்து,
உனக்கு வெற்றி கிடைக்கட்டும் என்று பிரார்த் தித்தாகள் ஆனால், அவர்கள் மனசு
அடுத்து என்னநடக்குமோ என்று பயந்தது.
உன்னுடைய தாயாரான தேவகியும் ,தந்தையான வசுதேவரும் இந்த மல்யுத்தத்தைப் பார்த்து,
உன்னை சாதாரண பாலகனாக எண்ணி மிகவும் பயந்தனர்.
இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக நினைத்துக் கொண்டிருக்கும்போது,
நீ மிக வேகமாக, சாணூரனுடைய , கை கால்களைப் பிடித்து அவனை மேலேதூக்கி,
பலதடவைகள் சுழற்றி , ஓங்கி பூமியில் அடித்தாய். அந்தக்ஷணமே அவன் செத்து மடிந்து
,அவன் உயிர் பிரிந்தது. அதே சமயம், பலராமனின் தாக்குதலைத் தாங்கமுடியாமல்,
பலராம னின் முஷ்டியால் அடிபட்டு, முஷ்டிகனும் மடிந்தான்.
இவைகளைப் பொறுக்க முடியாமல் ,சாணூரன் முஷ்டிகனின் சகாக்கள்,
உங்களைத் தாக்க ஓடிவர, அவர்களும் உங்களால் மடிந்தார்கள்.
இவைகளைப் பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்த பிற மல்லர்கள் அந்த இடத்தைவிட்டு ஓடினர்.
ஜனங்கள் ஜெயகோஷம் செய்ய, நீங்கள் இருவரும் விஜய சீலர்களாக விளங்கினீர்கள்.

கம்ஸனுக்குக் கோபமான கோபம்;
“வாத்தியங்களை நிறுத்துங்கள்; இறந்துபோன மல்லர்களின் தேகங்களை அகற்றுங்கள்;
இந்த இரண்டு பாலகர்களையும் ஊரை விட்டு விரட்டுங்கள்;
நந்தகோபரைக் கைது செய்யுங்கள்; வசுதேவரைப் பிடித்துக் கொல்லுங்கள்
; உக்ரசேனரையும் கொல்லுங்கள்; கோபாலகர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்யுங்கள் ……”
என்று அடுக்கடுக்காகக் கட்டளையிடத் தொடங்கினான்.

இந்தச் சமயம், நீ கொஞ்சமும் தாமதம் செய்யாமல், கம்ஸன் அமர்ந்து இருக்கும்
ஆசனத்தின் மீது பாய்ந்தாய். அவன் உடனே வாளை உருவிக்கொண்டு,
கேடயத்துடன் ஆசனத்தை விட்டு எழுந்திருந்து, கீழே இறங்கினான்.
நீ, அவனை, எப்படி கருடன் பெரிய சர்ப்பத்தைப் பிடித்துக் கொல்வாரோ
,அப்படி, அவனைப்பற்றி,அவன் அலற அலற அவனைக் கீழே தள்ளினாய்.
கேசங்கள் அவிழ்ந்தன;
ராஜ கிரீடம் கீழே விழுந்து உருண்டு ஓடியது
அவன்மீது ஏறி உட்கார்ந்தாய்
ஹே…விஸ்வாஸ்ரய
ஹே… ஆத்ம தந்தர
அவனைச் சரசர வென்று இழுத்தாய்
பூமியில் தேய்த்தாய்
ஹே…ஹரி…
எல்லாரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவனைக் கொன்றாய்.
ஒரு யானையை சிம்ஹம் எவ்விதம் கொல்லுமோ அப்படி அவனைக் கொன்றாய்.
கம்ஸனின் சாகும் தருணம் , அந்த க்ஷணத்தில் உன்னைப் பார்த்தான்.
எப்போதும் பயத்தினால் நடுங்கி, பகலிலும், இரவிலும் , உட்காரும்போதும்
சாப்பிடும்போதும் உன்னை எதிரியாக நினைத்து உன் நினைவாகவே இருந்தானோ
அந்தக் கம்ஸன்
உன்னை இப்போது சங்கு சக்ர கதா தாரியாக ,
யாருக்கும் கிடைக்க அரியதான நான்கு திருக் கரங்களுடன் கூடிய
விஷ்ணு ரூபியாகப் பார்த்தான்.
என்ன ஆச்சர்யம்…..உன்னால் இப்போது அநுக்ரஹிக்கப்பட்டான்.

(ஹே கிருஷ்ணா….அந்த மஹா ஸ்வரூபத்தை இப்போது
அடியேனுக்குக் காட்டி , அடியேனை அநுக்ரஹம் செய்வீராக )

கம்ஸனுக்கு எட்டு சஹோதரர்கள்;
அவனைப் போலவே பலம் உள்ளவர்கள்; கம்ஸன் இறந்தவுடன் மிகவும் கோபத்துடன்
உன்னைக்கொல்ல ஓடி வந்தார்கள். அதைக் கண்ட பலராமன், சம்மட்டியை எடுத்து,
சிம்ஹம் , மாடுகளைக் கொல்வதைப்போல அவர்களை கொன்றான்.
ஆகாயத்திலிருந்து துந்துபி முதலிய வாத்தியங்கள் முழங்கின;
பிரம்மாவும் தேவர்களும் உங்கள்மீது புஷ்பமாரி பொழிந்தனர்.

கம்ஸன் மற்றும் அவனுடைய பந்துக்கள்
கதறி அழுதனர். கம்ஸ பத்னிகள், ஹே…நாத… பிராணிகளுக்கு எல்லாம்
ஹிம்சை செய்தீர்; பரமாத்மாவை விரோதித்தீர்; அதனால் இந்தத் துர்க் கதியை
அடைந்தீர் …என்று புலம்பினார்கள்.
சர்வலோக ரக்ஷ்கனான நீ,
அவர்களை ஆசவாசப் படுத்தினாய். மாதாவும் பிதாவுமான தேவகியையும் வசுதேவரையும்
பந்தனத்திலிருந்து விடுவித்து, அவர்கள் கால்களில் விழுந்து வணங்கினாய். , .
( ஹே…..கிருஷ்ணா… மாதா பிதாக்களைப் பயத்திலிருந்தும், பந்தனத்திலிருந்தும் விடுவித்த
நீ, அடியேனையும் அப்படியே ரக்ஷிப்பாயாக…
உன்னைப் பல்லாயிரம் தடவை நமஸ்கரிக்கிறேன் )

44 வது அத்யாயம் நிறைவடைந்தது. ஸுபம்

—————————————————————————————————————————————

தசமஸ்கந்தம் —- அத்யாயம் 45
————————————————

ஆசார்ய புத்ரனை உயிருடன் மீண்டும் கொணர்தல்
————————————-

ஹே….கிருஷ்ணா…..உன்னுடைய பெற்றோர்களை , நீயும் பலராமனும் அணுகி, அவர்களிடம் பேசினாய். “பிள்ளையாகப் பெற்றதன் பலனை நீங்கள் அனுபவிக்க முடியாமல், நாங்களும் உங்களுக்குச் ஸேவை முடியாமல், நாங்கள் வேறு இடத்தில் வாழும்படி ஆகிவிட்டது. கம்ஸனால் துன்புறுத்தப்பட்டு காரக்ருஹத்தில் இருந்தீர்கள்.
உக்ரசேனரான எங்கள் பாட்டனாரே… நீர் இந்த க்ஷணம் முதல் இந்த மதுரா ராஜ்யத்துக்கு அரசர்; எங்களுக்கும்அரசர் ; …” என்று சொல்லி, அவர்களை சந்தோஷம் அடையச் செய்து, மதுரா ராஜ்ஜியம் எவ்வித சுபிக்ஷத்துக்கும் குறைவு இன்றி ,மேலும் வளர ஆவன செய்து ,அங்கேயே கொஞ்ச காலம் இருந்தீர்கள்.
பிறகு, யசோதை மற்றும் நந்தகோபரிடம் சென்று, ” நீங்கள் பரிவுடனும், வாத்சல்யத்துட னும் , உங்கள் சுகங்களை எல்லாம் துறந்து, எங்களை வளர்த்தீர்கள்; நீங்கள்தான் பிதாவும், அன்னையும்; நாங்கள் இங்கு கொஞ்ச நாட்கள் இவர்களுடன் வசித்து விட்டுத் திரும்பவும் கோகுலம் வருகிறோம்; இந்த ஆபரணங்கள், வஸ்த்ரங்கள் யாவும் உங்களுக்கே ;வ்ரஜை கிராம வாசிகளுக்கே; இவைகளுடன் கோகுலம் செல்லுங்கள் …” என்று சொன்னாய். அவர்கள் யாவரும் உன் பிரிவைத் தாங்க முடியாமல், கண்ணீர் விட்டார்கள்; பிறகு ஒருவாறு மனம் தேறி, கோகுலத்துக்குப் புறப்பட்டுச் சென்றார்கள்.
வசுதேவர் , உனக்கும், பலராமனுக்கும் உபநயன ஸம்ஸ்காரங்களைச் செய்து வைத்தார். பிறகு யதுகுல குருவாகிய கர்க்கரிடம் காயத்ரி வ்ரதம் இருக்க வும்,
பிறகு ஸாந்தீபினி என்கிற ஆசார்யரிடம் எல்லா சாஸ்திரங்களையும், வேதங்களையும் கற்றுக்கொள்ள அனுப்பி வைத்தார்.
ஹே கிருஷ்ணா….யாரிடமிருந்து எல்லா வேதங்களும், சாஸ்திரங்களும் பிரக டனம் ஆயிற்றோ, எவரை நினைத்தால் எல்லா வித்யைகளும் கைகூடுமோ
அந்தப் பரப் ப்ரும்மமான நீ, பலராமனுடன் சேர்ந்து, கர்க்கரை அணுகி ப்ராஜாபத்ய வ்ரதம் அனுஷ்டித்து, பிறகு அவர் அனுமதியுடன், உஜ்ஜயினி சென்று காஸ்யப கோத்ர ஆசார்யரான ஸாந்தீபினியிடம் , ஆன்விக்ஷிகி என்கிற சப்தம், சந்தஸ், வ்யாகர்ணம், ஜ்யோதிஷம், கல்பம், நிருக்தம் ஆகிய ஆறு அங்கங்களைக் கொண்ட வேதங்கள், தனுர் வேத ரகசியங்கள், தர்ம சாஸ்த்ரம், பூர்வ மீமாம்சம், உத்திர மீமாம்சம் , ராஜ நீதி, 64 கலைகளான
பாட்டு
வாத்திய சங்கீதம்,
நடனம்
நாடகக் கலை ,
சித்ரம் துணியில் வரைதல்
பலவித வண்ணப்படங்களை கஸ்துரி போன்ற வாசனைப் பொருள்களால் வரைதல்,
தெய்வ ஆராதனத்துக்குக் கோலம் இடுதல்,
பூக்களால் அலங்கரித்தல்,
புஷ்பப் படுக்கை
பற்கள், உடல் அங்கங்களுக்குப் பூச்சாயம் இடுதல்,
துணிகளுக்கும் அம்மாதிரியே செய்தல்,
தரையை ரத்னங்களால் அலங்கரித்தல்,
படுக்கை தயாரித்தல்
ஜலதரங்கம் போன்ற நீர் வாத்தியம் பயிலல்,
நீர்மேல் நடத்தல்,
படுத்தல்
மாயாஜால வித்யைகள்
புஷ்பங்கள் தொடுத்தல் ,
கொண்டைகள் செய்தல்
உடலைப் பூக்களால் அலங்கரித்தல்,
காதுகளின் ஓரத்தில் சித்திரம் வரைதல்,
வாசனைப் பொருட்கள் தயாரித்தல் ,
பலவித ஆபரணங்கள் தயாரித்தல்,
இந்திர ஜாலம்
பலவித வேஷமிடுதல்,
உள்ளங்கை கோலம்
சமையல் கலை
பானங்கள் தயாரித்தல்
நெசவு,
ஊசி வேலை,
பலவித சங்கீத வாத்யங்களைத்தயாரித்தல்,
புதிர் போடுதல்,
விடுகதை சொல்லல்,
கவிதை புனைதல்,
நாவினால் பலவித ஒலிகள்
மிக வேகமாகப் படித்தல்,
கவிதை நாடகம் எழுதுவது ,
கவிதைகளைப் பூர்த்தி செய்தல்,
நூல் நூற்றல்,
தச்சு வேலை,
கட்டிட வேலை,
இவைகட்கு வரைபடம் தயாரிப்பது
ரத்னப் பரீக்ஷை
உலோகத்தைத் தங்கமாக மாற்றல்,
பூமியில் உலோகங்களின் இருப்பிடத்தை அறிதல் ,
தாவரவியல்,
விலங்குகளின் இயல்
விரோதியை மந்த்ரத்தால் கட்டல்
பார்வையில் இல்லாக் கடிதங்களைப் படித்தல்,
உள்ளங்கை பொருளை அறிந்து சொல்லல்
மிலேச்ச பாஷை
சகுனம்
மந்த்ர,
தந்த்ரங்கள்
யந்த்ரம் செய்தல்,
வஜ்ரம் போன்ற பொருட்களைப் பிளத்தல்,
எண்ண ஓட்டங்களை அறிந்து சொல்லல்,
ஒரு பொருளைப் பலபொருட்களாகக் காட்டுதல்
ஆகர்ஷணம்
வசியம்
மிருக பாஷை,
பக்ஷி பாஷை கள்
பேய் பிசாசுகளை அடக்குதல்
இப்படியாக 64 கலைகளையும் 64நாட்களில் கற்றுத் தேர்ச்சி அடைந்தீர்கள்
எல்லா வித்யைகளையும் கற்றுத் தேர்ச்சி அடைந்தவுடன் , ஆசார்யரையும் அவர் பத்நியையும் நமஸ்கரித்து, குரு தக்ஷிணை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று வேண்டினீர்கள்
அப்போது, உங்கள் மஹிமையை நன்கு அறிந்த சாந்தீபினி, “ப்ரபாஸ தீர்த்தத்திலே என்னுடைய குமாரன் ஒருநாள் மூழ்கி இறந்து போனான்; அவனை மீட்டுக் கொடுத்து குரு தக்ஷிணை கொடுத்த பலனை அடையுங்கள் ” என்றார்
“அப்படியே ” என்று சொல்லி, நீங்கள் இருவரும் ரதத்தில் ஏறி, பிரபாஸ தீர்த்த்தத்தை அடைந்தீர்கள். அப்போது, சமுத்ர ராஜன் அங்கு வந்து வெகுமதிகளைக் கொடுத்து, பணிந்து நின்றான். நீ, அவனிடம்,”தொலைந்துபோன குரு புத்ரனை உடனே கொணர்க “என்றாய்.
சமுத்ர ராஜன் ” ஹே…கிருஷ்ண…..பஞ்சஜனன் என்கிற தைத்யன் ஜலத்தின் அடியில் சங்கு ரூபமாக வசிப்பவன், ,குருபுத்ரனைக் கொண்டு போய் இருக்கிறான் “என்று சொல்ல, நீங்கள் ஜலத்திற்குள் புகுந்து , பஞ்சஜனனைப்பார்த்து அங்கு குரு குமாரன் இல்லாமையால் அவனைக் கொன்று, அவனுடைய உடலில் இருந்து பாஞ்ச ஜன்யம் என்கிற சங்கினை எடுத்துக் கொண்டு, “ஸம்யமனீ ” என்கிற யம பட்டணத்தை அடைந்து, சங்கை ஊதினீர்கள்
யமதர்மன், நீ வந்திருக்கிறாய் என்பதை அறிந்து, ஓடோடி வந்து, அதிதி உபசாரம் செய்தான்.
அவனிடம், “என்னுடைய கட்டளையை சிரசா வஹித்து, சாந்தீபினியின் குமாரனை என்னிடம் உயிருடன் ஒப்புவிப்பாய் …”.என்றாய்.” அப்படியே செய்கிறேன் ”
என்று சொல்லி, யமதர்மன், குரு புத்ரனை உங்களிடம் உயிருடன் கொண்டுவந்து கொடுத்தான். நீங்கள், யமதர்மனை ஆசீர்வதித்து விட்டு,திரும்பவும்
ஆசார்யரிடம் வந்து அவருடைய குமாரனை அவரிடம் ஒப்புவித்தீர்கள்.
வேறு ஏதாவது வேண்டுமானாலும் கட்டளை இடுங்கள் என்று வேண்டிக் கொண்டீர்கள்.
அதற்கு, ஆசார்யர், உங்களால் என் மனோர தம் நிறைவேறியது; மிகவும் சந்தோஷம் ;உங்கள் கீர்த்தி உலகெங்கும் பரவும்; நீங்கள் கற்றவை உங்களுக்கு மறவாமல் இருக்கும்; நீங்கள் குருகுல வாசத்தை முடித்தீர்கள் …என்று சொன்னார்.
குருவால் ஆசீர்வதிக்கப்பட்ட நீங்கள் இருவரும் அவரிடம் அனுமதி பெற்று, மதுராபுரிக்கு ரதத்தில் வேகமாக வந்து சேர்ந்தீர்கள். உங்கள் இருவரையும் பார்த்த
மதுராபுரி வாசிகள் பேரானந்தம் அடைந்தார்கள்.

45 வது அத்யாயம் நிறைவடைந்தது. ஸுப ம்

உத்தவர் , ஸ்ரீ க்ருஷ்ணன் கட்டளைப்படி கோகுலம்செல்லல்
—————————— ——————

ஸ்ரீ சுகப்ரம்மம், தொடர்ந்து பரீக்ஷித் மகராஜனிடம் சொல்கிறார்

ஹே….ராஜன்….ப்ருஹஸ்பதியின் சிஷ்யரும், சிறந்த கீர்த்தி உள்ளவரும், ஸ்ரீ கிருஷ்ணனுக்கு ஆலோசனை சொல்பவருமான உத்தவர் அறிவாளிகளில் மிகச் சிறந்தவர். அவரை நீ ஏகாந்தமாக அழைத்து, அவர் கைகளைப் பிடித்துக் கொண்டு,
உத்தவ்ரே ….. நீர் இப்போது கோகுலம் செல்லவேண்டும். என் பிதா, என் மாதா இருவரிடமும், என்னைப் பிரிந்து தவிக்கும் கோபிகைகளிடமும், நான் சொல்லும் வார்த்தைளை சொல்வதற்காகச் செல்ல வேண்டும்.
என் மாதா பிதா இருவரும், என் சுகத்துக்காகவே வாழ்கிறார்கள்; தங்கள் சுகங்களைத் த்யாகம் செய்தவர்கள்; கோபிகைகள் , மனத்தளவில் என்னிடம் பூர்ண சரணாகதி செய்தவர்கள்; என்னையே பிரேமை மார்க்கத்தில் கதியாக அடைந்தவர்கள்; எனக்காக லோக தர்மங்களை விட்டவர்கள்;இந்த கோபஸ்த்ரீகள், என்னையே நினைத்துக் கொண்டு, கண்ணீர் பெருக, என் நினைவால் உயிர் தரித்து, என் வரவை அங்கு ஆவலுடன் எதிர் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்; ஆதலால் உடனே கோகுலம் செல்லுங்கள் என்றார்
உடனே ,”அப்படியே ஆகட்டும் “என்று சொல்லி உத்தவர் ரதத்தில் ஏறி கோகுலத்துக்குப் புறப்பட்டார் . சாயந்திர வேளையில் கோகுலத்தை அடைந்தார். அப்போது, “”கோதூளிகா”” வேளையாக இருந்தது. மாடுகளின் இரைச்சல்; பசுக்கள் ,கன்றுகளைத் தேடி ஓடும் குளம்பு ஒலிகள்; சாயந்திர வேளையில் சில வீடுகளில் பால் கறக்கும் சப்தம்; அத்துடன் வேணுகான கீதங்கள் ; கோபிகா ஸ்திரீகள், தங்களை நன்கு அலங்கரித்துக்கொண்டு, உன்னுடைய புண்ய கீர்த்திகளைப் பாடிக் கொண்டிருந்தார்கள். கோபர்களும் நல்ல வஸ்த்ரங்களை உடுத்திக் கொண்டு இருந்தார்கள். விளக்குகள் ஏற்றப்பட்டு இருந்தன. தேவதா உபாசனம், பிராம்மணர்கள், பித்ருக்கள் உபாசனம் நடைபெற்றுக்கொண்டு இருந்தன. வண்டுகளின் ரீங்காரம், பக்ஷிகளின் சப்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. இப்படியான உசந்த வேளையில், உத்தவர் வந்ததைப் பார்த்து, நந்த்கோபரும் யசோதையும் வசுதேவரே வந்ததைப் போன்று சந்தோஷித்து, அவரை வரவேற்று, உபசரித்து, ஆகாரம் கொடுத்து, பிரயாணக் களைப்பைப் போக்கி, பரம சுகத்தை அளித்தார்கள். பிறகு, நந்தகோபர், உத்தவரின் கால்களைப் பிடித்து விட்டுக்கொண்டே ,

” மஹா பாக…..என்சகா ,வசுதேவர் சௌக்யமாக இருக்கிறாரா ? தேவகி சௌக்யமா ?சிறையில் இருந்து விடுபட்டு பந்துக்களுடன் கூடி சந்தோஷமாக இருக்கிறார்களா?
கம்ஸனும் அவனுடைய சஹோதரர்களும் கொல்லப்பட்டனர். அவர்கள் செய்த மஹா பாவங்களுக்கு இதுவே தண்டனை. எங்கள் குழந்தை ஸ்ரீ கிருஷ்ணன், எங்களையும், சகாக்களையும், இங்கு உள்ள பசுக்கள், பக்ஷிகள், பிருந்தாவனம், கோவர்த்தனகிரி, எல்லாவற்றையும் நினைக்கிறானா? அவனுடைய சுந்தரமான முகம், தீர்க்கமான மூக்கு, புன்னகை பூக்கும் பார்வை, எங்களை இன்னும் மயக்குகிறது. எங்களைப் பல ஆபத்துகளில் இருந்து காப்பாற்றினான். காட்டுத்தீ;பலமான காற்று; அஹோராத்ரி ஏழு நாட்கள் மேக வர்ஷம்; அசுரர்கள் பற்பல வேஷங்களுடன் வந்து கொல்லுவதற்கு முயற்சி ; இவை எல்லாவற்றிலிருந்தும் கிருஷ்ணன் எங்களைக் காப்பாற்றினான்;அவனது ஒவ்வொரு லீலையும், வீரச் செயலும், கடைக்கண் பார்வையும், கள்ளச் சிரிப்பும் இப்போதும் எங்கள் நினைவில் இருந்து எங்களை மெய்சிலிர்க்க வைக்கின்றன. எங்களையே மறந்துபோகிறோம் . என்னை விட யசோதைக்கு இவை இன்னும் அதிகம்; அவளை விட , கோபர்களுக்கும், அவர்களைவிட கோபிகைகளுக்கும் ,கிருஷ்ணனின் நினைவு மிக மிக அதிகம். எங்களுடைய பாக்யத்தால் அவனைப் புத்ரனாகப் பெற்றோம். அஹோ பாக்யம்……நந்தகோபர், தேவகி, கோகுலவாசிகள், முக்யமாக கோபிகைகள் மிகவும் பாக்யம் செய்தவர்கள். கிருஷ்ணனைப் பற்றி, கர்க்கர் முன்னமேயே எங்களிடம் சொல்லி இருக்கிறார். கம்ஸனைக் கொன்றும், சாணூர முஷ்டிகனைக் கொன்றும் , குவலயாபீடம் என்கிற யானையைக் கொன்றும், பெரிய தனுஸ்ஸை வளைத்து ஒடித்தும், துஷ்டர்களை ஒழித்தும்
மஹா பாவனமான செயல்களைச் செய்து இருக்கிறான். அவனை நாங்கள் என்றும் மனத்தில் நினைத்து இருக்கிறோம். ……..”

இவ்விதமாகப் புலம்பி, உன்னிடம் பறிகொடுத்த மனம் புத்தி உடையவர்களாய், கண்ணீர் விட்டு இருவரும் அழுதார்கள். யசோதாவும் இதைப்போலவே பேசி, ப்ரேம சமுத்ரத்தில் மூழ்கிப் போனாள் .

இந்த அத்யற்புத பிரேமையில் , உத்தவர் , அவரும் மூழ்கிப் போனார். பிறகு , சுதாரித்துக் கொண்டு பேசினார்.

ஹே…நந்தகோப….ஹே யசோதா …..நீங்கள் மிகவும் பாக்யசாலிகள்…..கிருஷ்ணனும் பலராமனும் புராண புருஷர்கள்; எவரிடம் ஜீவன்கள் தங்கள் ப்ராண வியோக காலத்திலே ஒரு க்ஷணம் தங்கி, அவரால் அணைக்கப்பட்டு, விசுத்தமான க்ஜானத்தால் அவரையே நினைத்து, வழிபட்டு, மனம் அடக்கப்பட்டு, அவரால் ,எல்லா கர்ம பந்தங்களும் அழிக்கப்பட்டு, அவருடைய திருவடிகளை அடைகிறார்களோ, அப்பேர்ப்பட்ட ஸ்ரீ நாராயணனாகிய ஸ்ரீ கிருஷ்ணன் உங்கள் புத்ரராக அவதரித்து இருக்கிறார். நீங்கள் மகாத்மாக்கள்;புண்யசாலிகள். கூடிய சீக்ரத்தில் அவர் உங்களைக் காண இங்கு வருவார். ,அதை என்னிடம் சொல்லி அனுப்பி இருக்கிறார். அவரை உங்கள் புத்ரன் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்; ஆனால் அவர் பகவான்; எல்லாருக்கும் அவர் ஆத்மா; எது உங்களால் பார்க்கப் படுகிறதோ, எது கேட்கப்படுகிறதோ, எது முந்தி இருந்ததோ, எது பிற்பாடு உண்டாகிறதோ, எது சஞ்சரித்துக் கொண்டு இருக்கிறதோ, எது மஹத்தாக இருக்கிறதோ, எல்லாம் அந்த ஸ்ரீ கிருஷ்ணனின் ஸ்வரூபம் ஆகும். அவர் பரமாத்மா; அவரை விட்டு யாரும் வாழமுடியாது. அவரை நீங்கள் பரப் ப்ரமமமாக அறிய வேண்டும் ….. இப்படிப்பேசிக்கொண்டே இரவைக் கழித்தனர்.

மறுநாள் விடியல் வேளைக்கு முன்பே கோபிகைகள் எழுந்து விளக்கேற்றி, தேவதைகளைப் பூஜித்துத் தயிர் கடைந்தனர். தீபத்தைப் போலப் பிரகாசிக்கும் முகத்தை உடையவர்கள்; காது, கை, கால், இடுப்பு, புஜம், இவைகளில் ஆபரணங்களைப் பூட்டி அதி ஸுந்தர தேவதைகளாய், தயிர்ப் பானையின் முன்பு உட்கார்ந்து , காது குண்டலங்கள் அசைய, இடுப்பு அசைந்து ஆட, ஹாரங்கள் அங்குமிங்கும் போய்வர, ஸ்ரீ கிருஷ்ணனைப் பற்றிய அற்புதமான பாடல் களைப் பாடிக்கொண்டு, தயிர் கடையும் சப்தமும் , இவர்களுடைய பாட்டின் சப்தமும் ஒன்று சேர்ந்து நான்கு திக்குகளிலும் பரவ , இவற்றை அந்த விடியற்கால வேளையில் உத்தவர் கேட்டார்.

பொழுது நன்கு விடிந்து,சூர்யன் உதயமானான். அப்போது நந்தகோபன் வீட்டு வாசலில் அற்புதமான ரதம் ஒன்று நிற்கக் கண்ட கோபிகைகள், …..” இந்த ரதம் யாருடையது…..அக்ரூரர் வந்திருக்கிறாரோ….கம்ஸனின் வேலைக்காரன் யாராவது வந்து இருக்கிறார்களா ….இந்த அக்ரூரர் இன்னும் என்ன செய்யப்போகிறாரோ?….நம்முடைய ஆவிகளை, அந்தக் கம்ஸனின் உயிர் இழந்த தேகத்துக்கு, பிரேதபலி கொடுக்க இங்கு வந்திருக்கிறாரா …?… என்று பலவாறு பேசிக்கொண்டு இருக்கும்போது, காலைக்கடன்களை யமுனை நதியில் முடித்துவிட்டு ,உத்தவர் , வசுதேவர் வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தார். உத்தவர் கோபிகைகளைப் பார்த்தார். அவர்களும் இவரைப் பார்த்தனர்.

46 வது அத்யாயம் நிறைவடைந்தது. ஸுபம்
.
தசமஸ்கந்தம் …. அத்யாயம் 47
—————————— ————

கோபிகைகள், உத்தவர் ஸம்வாதம்…….ப்ரமர கீதம்
—————————-
ஹே…கிருஷ்ணா ….உன் சரிதத்தைச் சொல்லச் சொல்ல அடியேன் கோகுலத்தில் இருப்பதாகவே நினைக்கிறேன்

ஸ்ரீ சுகர் , மேலும், பரீக்ஷித் ராஜனுக்குக் கூறுவதை இப்போது சொல்கிறேன்
கோபிகைகள், உத்தவரைப் பார்த்தார்கள்……பார்த்தவு டனே , இவர்உன்னுடைய வாத்சல்யத்தைப் பெற்றவர் என்று புரிந்துகொண்டார்கள். இவரைப் பார்த்துக் கொண்டே உன்னைத் (கிருஷ்ண) த்யானம் செய்தார்கள். பழைய சம்பவங்களும் , உன்னுடன் பேச்சுக்களும் நினைவில் அலை அலையாக அவர்கள் மனத்தில் எழுந்தன. அப்போதுதான் மலர்ந்ததைப் போன்ற முகவிலாசம்; பளபளப்பான கன்னங்கள்; காதுகளில் ஒளிவிடும் ஸ்வர்ண குண்டலங்கள் ; புன்னகை தவழும் அரவிந்த முகம்; இடையில் பட்டுப்பீதாம்பரம்;

“” இவர் யார் ? இவரைப் பார்த்தால், இவருடன் பேசவேண்டுமென்று தோன்றுகிறதே ! இதற்கு முன்பு இவரைப் பார்த்த்ததில்லையே யாருடைய குமாரர் இவர், எதற்காக இங்கு வந்திருக்கிறார் ? …….”” என்று மனத்தில் நினைத்துக் கொண்டே , அவரைச் சுற்றி நின்றுகொண்டனர். இவர் உனக்குப் பிரியமானவராக இருக்கக்கூடும்.
உன்னால் எங்களிடம் அனுப்பப்பட்டவராக இருக்கவேண்டும் என்று உத்சாகத்துடன் , வெட்கம் மரியாதை இரண்டும் கலந்து, புன்சிரிப்புடன்,ரஹஸ்யமாக உன்னுடைய வ்ருத்தாந்தங்களை அறிய விருப்பம் கொண்டவர்களாக, ” ரமாபதியிடமிருந்து என்ன செய்தி கொண்டு வந்திருக்கிறீர்கள்….” என்று கேட்டார்கள்.

கோபிகைகள் கூறுகிறார்கள்;–நீர், ஸ்ரீ கிருஷ்ணனுடைய பார்ஷதன் என்று நினைக்கிறோம்; அவர் இங்கு உம்மை அனுப்பி இருப்பதாக நினைக்கிறோம். மாதா பிதாக்களின் க்ஷேமத்தை அறிந்துகொள்ள அனுப்பி இருக்கிறாரா ?இந்த வ்ரஜ பூமியில் அவருக்கு ஆக வேண்டிய கார்யம் என்ன இருக்கிறது ?ஸ்நேஹம், பந்தம், பாசம், இவை
அபலைகளிடம் போலி அன்பு செலுத்தி, கார்யம் முடிந்ததும் நட்டாற்றில் விடுவார்களே இது எதைப்போல என்றால்——-தேனீக்கள் மலர்களைச் சுற்றி சுற்றி வந்து தேனைக் க்ரஹித்து விட்டு மலர்களைத் த்வம்சம் செய்வதைப்போல, கணிகா ( தாஸீ ) பணத்தைப் பிடுங்கி விட்டுக் கள்ள புருஷனை விடுவதைப் போல, படிக்கும் சிஷ்யர்கள், வித்யயைக் கற்ற பின்பு , ஆசார்யனைக் கைவிடுவதைப் போல, யாகம் முடிந்ததும், ருத் விக்குகளுக்கு தக்ஷிணை கொடுத்து அனுப்பிவிடுவதைப்போல,
நிறைய, பழங்கள் இவற்றை உண்டுவிட்டு, அவை இல்லாதபோது மரங்களைவிட்டு ஓடும் பக்ஷிகளைப் போல, வேற்று மனுஷன் தன் கார்யம் முடிந்ததும் க்ருஹத்தைக் காலி செய்யும்படி சொல்வதைப்போல, காட்டில் வசதியாக வசிக்கும் மிருகங்கள், காடு எரிந்து போனால், இனி இந்தக்காடு உதவாது என்று வேறு இடம் செல்வதைப்போல, கள்ள புருஷன் ஸ்திரீயிடம் சம்போகம் செய்துவிட்டு ஓடுகிறானே ,…இவற்றைப்போல எங்களிடம் ஸ்நேகமாக இருந்தவர்கள் போய்விட்டார்களா ?

இப்படியெல்லாம், கோபிகைகள் உன்னை மனத்தில் வைத்துக்கொண்டு, உத்தவரை, லஜ்ஜையை விட்டு, மனம்விட்டுக் கேட்டார்கள். இவர்கள் புண்யவதிகள்;
உன்னுடைய கிஷோர பால்ய அவஸ்தைகளில் நீ செய்த ஒவ்வொரு கார்யத்தையும், ஒவ்வொரு பேச்சையும், ,பிடித்த சம்பவங்களைச்சொல்லி மிக ஆனந்தத்தையும், பிடிக்காதவற்றைச் சொல்லி, மிகவும் அழுதும் உன்னுடைய ஒவ்வொரு செய்கையையும் அவேயடம் சொன்னார்கள்.

அந்த சமயத்தில், ஒரு தேன்வண்டு அவர்களிடையே பறந்து வந்தது. அந்த வண்டை, உன்னுடைய சங்கமமானதாக நினைத்து, அந்த வண்டுடன் பேசத் தொடங்கினார்கள்
( ஹே……கிருஷ்ணா…..கோபிகைகளி ன் ,அந்தப் பரிபூரண வேளையில் , அடியேன் அந்த வண்டாகவாவது இருந்திருக்கக் கூடாதா அது அசேதனம்தான் ; ஆனால், அந்த அசேதனம் அன்று செய்திருந்த பாக்யம், அடியேனுக்குக் கிடைக்க வில்லையே . உத்தவர் அளவுக்கு உயர முடியாதுதான் உன்னதமான வண்டாகவாவது இருந்திருக்கக்கூடாதா )-

கோபிகைகளின் ப்ரமர கீதம்
———————–

ஹே…தேன் வண்டே….உன் கார்யம் முடிந்துவிட்டதல்லவா….என்னி டம் வராதே…..என்னைத் தொடாதே….ஓடிப்போ….நீ ஸ்ரீ கிருஷ்ணனுக்கு மிக வேண்டியவன்…..எனக்குத் துரோகம் செய்பவன்… மீசை போன்ற உன் அவயவத்தாலே —-ஸ்ரீ கிருஷ்ண ஸ்நேஹம் என்கிறதேனைப் பருகி அதில் நனைந்து, சொட்டிக் கொண்டு இருக்கிற மீசை என்கிற அவயவம்—– எங்கள் பாதத்தையோ, குசகவசங்களையோ, அந்தரங்க அங்கங்களையோ தொடாதே…..ஓடிப்போ ….விரஹ தாபத்தால், கொதித்துப் போய், அதனாலுண்டான கண்ணீரே , எங்கள் ஸ்தனத்தின் மேலுள்ள குங்குமப் பூச்சுக்களை அழித்துள்ளது…..நீயும் சேர்ந்து அதனை மேலும் அழிக்காதே….இந்தப் பூச்சுக்கள் எதற்குத் தெரியுமா….ஸ்ரீ க்ருஷ்ணனுக்காகவே உள்ளவை…நாங்கள் மானஸ்தர்கள்….எங்களுக்கு அது ஸ்ரீ கிருஷ்ண பிரசாதம்….நீ, அவருடைய தூதனாக இருக்கலாம்….அதனால், அவரைப்போல, கார்யம் முடிகிறவரை அன்பு——-பிறகு உதாசீனம்—–என்று இருக்கக்கூடாது ……..எங்கள் காதுகளின் அருகில் பறந்து வந்து கிருஷ்ண கீதம் பாடுகிறாய்…..இதனால் என்ன நன்மை….நாங்கள் பேதைகள்…எங்களைவிட்டுப் போனவர், போனவர்தானே…. .ஸ்ரீ கிருஷ்ணன், எங்களை நன்கு அனுபவித்தார்;ஸுதா—-மதுர அதர பானம்—–எங்களிடமுள்ள அதி மோஹத்தால், அவருடைய அதர பானத்தை எங்களுக்கு அளித்தார்……நீ, எப்படி, புஷ்பங்களிளிருந்து தேனை உறிஞ்சி, நன்கு சாப்பிட்டு, பின்பு அவற்றை உதறித் தள்ளுவாயோ, —–அதைப்போல கிருஷ்ணன்—-எங்களை அனுபவித்து விட்டு , எங்களைத் திரஸ்கரித்து விட்டு, ஓடிவிட்டார்…..அப்படிப்பட்ட, பொய்யான புருஷனை —அவருடைய பாதபத்மங்களை—–பூஜை செய்கிறாளே –அவள் எந்தவிதமாக பூஜை செய்கிறாள் —சுஸ்ருக்ஷை செய்கிறாள்….நீயே சொல் ( இங்கு …இந்தச் சொல் ஸ்ரீ மஹாலக்ஷ்மி அல்லது ராதையைக் குறிக்கும் என்பர் வியாக்யானகர்த்தாக்கள் )
எதனால் அவரைவிட்டு, அரைக்ஷணமும் பிரியாமல், அவரைப்போல இல்லாமல், அவரையே எப்போதும் பஜித்துக்கொண்டு இருக்கிறாளே….என்ன காரணம்…..ஹே…வண்டே அந்த ஸ்திரீ ரத்னம் அவரால் மோஹிக்கப்பட்டு, அவருடைய தேன் பேச்சுக்களால் ஏமாந்துபோய், தன்னுடைய மனத்தை அவரிடம் சமர்ப்பித்து இருக்கிறாள்.
ஹே…வண்டே….. யதிக்களுக்கு அதிபதியாயும், புராண புருஷராகவும் உள்ள மகாப்ரபுவை, வனத்தில் வீடு இல்லாத இந்த அபலைகளிடம் என் புகழ்கிறாய்…..எங்களை விட்டு, எங்களைவிட சாமர்த்தியமுள்ள அதிர்ஷ்டமுள்ள, காமக்கலையில் தேர்ந்த , கிருஷ்ணனை விலைக்கு வாங்கி அடிமையைப் போல் வைத்து இருக்கிற பெண்களிடம் சென்று ,அவரைப் பற்றிய புகழைப் பாடு…..அதனால் அவர்கள் உனக்கு வெகுமதிகள் கொடுப்பார்கள்…….அவரை நேரில் அடைந்ததைப் போலச் சந்தோஷம் அடைவார்கள்……..

சரி…..இந்தப் பூமி இருக்கட்டும்……ரசதலாதி லோகங்கள் என்று சொல்லப்படுகிற , ஸ்வர்க்கம் பாதாளம் என்று லோகங்கள் சொல்லப்படுகிற இடங்களில் வசிக்கும் பெண்கள், திட சித்தமுள்ள பெண்கள், கபடதாரியான…..மதுரமாகப் பேசிப் புன்முறுவலுடன் ஏமாற்றுகிற அவரிடம் அடிமை ஆனார்கள்…..எங்களை, ஜடபொம்மைகளைப் போல் நினைத்து, அலக்ஷ்யம் செய்து எங்களிடம் வருவதில்லை……ஆனாலும், நாங்கள் உன் மூலமாகத் தூது அனுப்பியதாகச் சொல்வாய்…..உனது பாததூளிகளை எந்த ஸ்ரீ மஹாலக்ஷ்மி சதா வகிக்கிறாளோ, அந்த ரஜஸ் சை எங்கள் தலைமேல் வைத்து, அவரையே எப்போதும் நினைத்து இருக்கிறோம் என்று சொல்வாய்…..

ஹே….வண்டே…. எங்கள் பாதங்களை விட்டு அப்பால் செல்…..எங்கள் தலைமீது உட்காருகிறாயே….. அகன்று செல்…..இனிய மொழிகளாலும், அதற்கு ஏற்ற ஜாடைகளாலும் ஸ்திரீகளை வசீகரிப்பதில் வல்லவரான அவரிடமிருந்து, இவற்றைக் கற்றுக் கொண்டாயா…. அந்தப் பிரபு எங்களை இந்த இடத்தில் நட்டாற்றில் விட்டுவிட்டார்……அவருக்காக, எங்கள் குழந்தைகள், பதி, சுகம், நல்ல வாழ்க்கை, பரலோகம் எல்லாவற்றையும் தாகம் செய்தோம்……அவர், சபல சித்தம் உள்ளவர்……எங்களைச் சிறிதும் நினைப்பதில்லை…..இப்படி எங்களை மாத்திரம் ஏமாற்றினாரா…..இல்லை…. முந்தின அவதாரத்தில், மறைந்து நின்று, யுத்த தர்மங்களை மீறி பாணத்தால் வாலியை அடித்துக் கொன்றார்…..அவர் வறண்டு போன நெஞ்சம் உள்ளவர்……..இன்னும் சொல்கிறோம், கேள், ஒரு ஸ்திரீ அவரை விரும்பி அவரிடம் வந்தபோது , மூக்கு அறுபட்டுப் போனாள்….. இன்னும் கேள்….இன்னொரு அவதாரத்தில், குள்ளனாக வந்து, என் கால் அடியால் மூன்று அடி மண் தா என்று மகாபலிச் சக்ரவர்த்தியைக் கேட்டு, வரம் பெற்றுக் கொண்டதும், பெரிதாக வளர்ந்து, இரண்டு அடிகளால் மூன்று உலகங்களையும் அளந்து, மூன்றாவது அடிக்குப் பதிலாக,
ஒரு காக்கை, தனக்கு உதவிய பக்ஷியைக் கட்டி இழுப்பதைப் போல, ( இது ஒரு கதை——-ஒரு காக்கை, ஆந்தைகளைக் கொல்வதற்காக, அடிபட்டதுபோலக் கபடமாக நடித்து, ஆந்தைகளிடம் நம்பிக்கையை ஏற்படுத்தி, பகல் நேரத்தில் கண்தெரியாத ஆந்தைகளை, மற்ற காகங்களுடன் ஏமாற்றிக் கொன்றது ——அதைப் போல இல்லாவிடில் இன்னொரு கதை— கூட்டில் உள்ள ,தன் குஞ்சுகளைக் காப்பாற்ற, தனக்கு ஆகாரம் கொடுத்த மனுஷ்யனையே தன் இனத்தோடு சேர்ந்து தாக்கியது—-)
மகாபலிச் சக்ரவர்த்தியையே கட்டி இழுத்தார்

மனஸ் சிலும் வெளியேயும் கருப்பாக உள்ள மனிதர்களுடன் ஸ்நேஹம் வைத்துக் கொள்வது ஆபத்து…… இருந்தாலும், அவரையே நினைத்து, அவருடைய லீலைகளைக் கேட்டு, அம்ருதம் என்று அதைப் பருகினோம்…..அதனால் என்ன பலன்…..அவருக்கு ஒரு தர்மம், எங்களுக்கு ஒரு தர்மம்…..இதனால் நாங்கள் கெட்டோம்……அவருடைய கதைகளை எங்களிடம் சொல்லாதே….வண்டே …போய்விடு……

அப்படி என்ன த்யாகம் செய்துவிட்டோம் அவருக்காக என்கிறாயா…..அவரையே நம்பி, சஹ பரிவாரம், குடும்பம் குழந்தை வீடு எல்லாவற்றையும் விட்டோம்…..
சுகத்தை இழந்தோம்…..தீனர்கள் ஆகிவிட்டோம்….பிக்ஷுக்களைப் போலத் திரிகிறோம்…..அவருடைய கதாம்ருதத்தைக்கேட்டு, அவரிடம் பரம விசுவாசம் வைத்து,
ஏமாந்து போகிறோம்…..ஒரு பெண்மான், கருமை நிறமான தன் பதி ஆண் மானிடம் சேர விரும்பி ஓடிவரும்போது, ஒரு வேடன் சங்கீதத்தை இசைக்கிறான்; பெண்மான் அந்த கீதத்தைக் கேட்டு நிற்கிறது; ஆண்மானும் நிற்கிறது; அந்தச் சமயத்தில் அந்த வேடன், எப்படி மான்களைச் சிறைப்படுத்திவிடுவானோ —-அதைப் போல , அபலைகளான நாங்கள், அவருடைய ஸ்பர்ச சுகத்தால், கண்ஜாடைகள் மயக்குப் பேச்சுக்களால், அவை உண்மை—சாஸ்வதம் என்று நம்பி ஏமாந்து விட்டோம்…..
ஆகவே….ஹே….வண்டே….ஸ்ரீ கிருஷ்ண கதாம்ருதங்களைத் தவிர வேறு விஷயங்களைச் சொல்……
ஹே…. சஹா….. எங்கள் பிரியா சஹாவாகிய கிருஷ்ணன் , குருகுல வாஸம் முடிந்து வீட்டுக்கு வந்து விட்டாரா…..அவர், உன்னை, எங்களிடம் தூது செல்லும்படி
அனுப்பினாரா ……அப்படியானால், எங்களிடமிருந்து எந்த வரம் வேண்டினாலும் தருகிறோம் …பெற்றுக் கொள்…அவருடைய தூதுவராக வந்த படியால், உனக்கு மரியாதை செலுத்தப்பட வேண்டும்…..ஸ்ரீ மகாலக்ஷ்மியின் பதியான அவரிடம், அவளைப்போல ஆசை உள்ள எங்களை, அவரிடம் அழைத்துச் செல்வாயா…..

இப்போது , நீ, சொல்வாய்…..நாங்கள் அவருடைய அந்தரங்கப் பிரியர்கள்…..உண்மையைச் சொல்வாயாக…..அவர் மதுராபுரியில் தான் இருக்கிறாரா….வெளி ஊருக்குச் சென்று இருக்கிறாரா…சொந்தத் தாயார், தகப்பனார், மற்றும் கோபாலகர்களைப் பார்க்க இங்கு வருவாரா….. எப்போதாவது , வேலைக்காரர்களிடமாவது , எங்களைப் பற்றிப் பேசி இருக்கிறாரா….என்றைக்காவது இங்கே வந்து, அதி சுகந்தமான கரங்களை, எங்கள் தலை மீது வைத்து, ஆசீர்வதிப்பாரா….
என்றெல்லாம், பித்துப் பிடித்தவர்களைப் போலப் பிதற்றினார்கள்.
ஹே…..கிருஷ்ணா…..கோபிகைகள் எவ்வளவு சாமர்த்தியமாக உன்னிடம் உள்ள சர்வ பரித்யாகத்தை மறைத்துப் பேசினாலும், உன்னை வைவதைப்போலப் புகழ்ந்தார்கள். உன் பிரபாவங்களை நாவாரச் சொல்லி, பூரணப் பிர யோஜனத்தை அடைந்தார்கள். உன்னுடைய அந்தரங்கர்கள்—நாரதர், விதுரர் உத்தவர் —-மூவருமே மிகவும் ஆச்சர்யப் படும்படி உன்னிடமுள்ள, தங்கள்காதலை , லஜ்ஜையை விட்டு வெளிப்படுத்தினார்கள். அவர்களை எல்லாம் அடியேனுக்கும் அப்படிப்பட்ட அனுபவத்தை அளிக்கும்படிவேண்டி ஆயிரமாயிரம் அவர்களை நமஸ்கரிக்கிறேன் )

உத்தவர் , கோபிகைகளின் இடையறாத பக்தியை, ஆழமான காதலைப் பார்த்து , ஆச்சர்யத்தில் மெய்மறந்து போனார். அவர்களிடம், தான் எதற்காக உன்னால் இங்கு அனுப்பப்பட்டாரோ அந்த சங்கேத வார்த்தைகளைச் சொல்ல ஆரம்பித்தார்.

அஹோ ஆச்சர்யம்….அன்பு, பக்தி என்பதற்குப் பூர்ண அர்த்தம் உங்களிடமிருந்து இன்று தெரிந்து கொண்டேன்….பகவான் கிருஷ்ணனிடத்தில், இத்தனை ஆழமானதும், இடைவெளி இல்லாததுமான அன்பை —-அவரைவிட்டுப் பிரிந்து இருக்கும்போதும், அவரையே சதா நினைத்து, நினைத்து பக்தி செலுத்துகிறீர்களே, அவரிடம் அவ்வளவு விரைவாகப் பக்தி செலுத்த முடியாது…..அதற்காகத் தானம், வ்ரதம், தபஸ், ஹோமம், ஜபம் ,ஸ்வாத்யாயம் இன்னும் பலவற்றைச் செய்ய வேண்டும்.

( இச்சமயத்தில் ஸ்ரீ சுகப்ரம்மம் , மனத்தை அடக்கி, உன்னையே நினைத்து, நினைத்து, புளகாங்கிதம் அடைந்ததாக , உத்தவர் சொல்கிறார் )

நந்தன் யசோதை போன்றவர்கள், தங்களையே த்யாகம் செய்து , கிருஷ்ணனின் பரம சுகத்துக்காகவே பாடுபட்டிருக்கிறார்கள். எந்த பக்தியைப் போதிக்கிறார்களோ, அனுஷ்டிக்கிறார்களோ, அந்த முநிஸ்ரேஷ்டர்களுக்கும் கிருஷ்ண தர்சனம் துர்லபமாக ஆகி விடுகிறது. அவர்களாலும் சாதிக்க முடிகிறதில்லை. ஆனால், இந்த கிருஷ்ண பக்தியை அடைய….கிருஷ்ண தர்சனம் செய்ய, உங்களுடைய அசாதாரண லௌகிக புத்தியால், புத்ரர், பதி, ஸ்வஜனங்கள், பந்து மித்ரர்கள், வீடுகள் எல்லாவற்றையும் விட்டு, எல்லாவற்றையும் த்ருணமாக ஒதுக்கி, காட்டிலும், மலை அடிவாரத்திலும் , மகத்தான தாகத்தால் அடையப் பெற்றது ஆச்சர்யம்—-மஹா ஆச்சர்யம். சர்வாத்ம பாவத்தினால், உங்களால் கிருஷ்ண பக்தி அப்யசிக்கப்பட்டு, நாமம். ஸ்தோத்ரம், பிரிவால் அழுகை, சேர்ந்து இருக்கும் காலத்தில், பிரியப் போகிறாரே என்கிற பயம், நாம் கர்வம் கொண்டோம், அதனால் பிரிந்து விடுவாரோ என்கிற ஐயம் , முழ அளவில் மஹா அந்தரங்கப் ப்ரியம், பிரியும்போது விரஹ தாபம், அஹா….அஹா… கிருஷ்ண சம்பத் உள்ளவர்கள் நீங்களே……மகான்களின் கிருபையாலே கிருஷ்ண அனுக்ரஹத்தாலே , இந்த சந்திப்பு அடியேனுக்குக் கிடைத்து இருக்கிறது. உங்களுக்குக் கொடி நமஸ்காரங்கள். உங்களுக்காகத்தான் பகவானால் அனுப்பப்பட்டுள்ளேன். உங்களுக்கு என்று ,அவர்,என் மூலமாக அனுப்பி உள்ள, சங்கேதமான—ப்ரியமான வசனங்களை , இப்போது உங்களுக்குச் சொல்கிறேன் சர்வ மங்களங்களும், . அனைத்துக் கல்யாண குணங்களும் உள்ளவர்களே…..நான் ரஹஸ்யமாக , இதற்காகவே கிருஷ்ணனால் உங்களிடம் அனுப்பப்பட்டேன். அவரால் சொல்லப்பட்டு எதனைச் சுமந்து கொண்டு இங்கு உங்களைச் சந்திக்க வந்தேனோ, அந்த ஸ்ரீ கிருஷ்ண வசனங்களைக் கேளுங்கள்……கிருஷ்ண பக்தனை சமாதானம் செய்வது, கிருஷ்ணனின் வசனங்களே……மனித யத்னத்தால் முடியாத செயல். அந்த ஸ்ரீ க்ருஷ்ண வசனங்களைக் கேளுங்கள்.

உங்களுக்கும் எனக்கும் ஏற்ப்பட்டு இருக்கிற பந்தம்—-ச்நேஹம்—–எப்போது ம் அறுக்கவோ அழிக்கவோ இயலாதது—–அப்ராக்ருத மானது—-எப்படி ஐந்து பூதங்களும், எல்லாப் பிராணிகளிடமும் எப்போதும் இருக்கின்றனவோ, அப்படி , நானே எல்லாருடைய மனத்திலும், பிராணனிலும் ஊடுருவி இருக்கிறேன். உள் இருந்து நியமிக்கிறேன் என்னைவிட்டு, ச்வதந்த்ரமாக, எக்காலத்திலும், எந்த அவஸ்தையிலும், ஒரு வஸ்துவும் இருக்க முடியாது. அதனால், நீங்கள் எப்போதும் என்னைத் த்யானம் செய்யுங்கள்—-எல்லா சாஸ்திரங்களும், வேதங்களும், கடைசியாக என்னை அடைவதற்கே உபதேசிக்கின்றன….. உங்கள் மனத்தை அடக்கி, மனஸ், புத்தி இரண்டையும் என்னிடம் சமர்ப்பியுங்கள்..நாம் சதா சர்வகாலமும் உங்களையே நினைத்துக் கொண்டு இருக்கிறேன். ( நீ, அர்ஜுனனுக்கு, ரதம் ஓட்டும்போதும் கோபிகைகள் நினைவாகவே இருந்தாயாமே….என்ன ஆச்சர்யம்…..)உங்கள் மனமும் என் மனமும் சேர்ந்து இருப்பதால், ..உங்களை விட்டுப் பிரிந்து இருத்தல்…எங்கோ பிரிதல் என்கிற வ்ய்வச்தையோ, தூரமோ இல்லை….உங்கள் மனதை என்னிடம் அர்ப்பணியுங்கள்….இப்படி, என்னையே எப்போதும் ச்மரிப்பதால், முடிவில் என்னையே வந்து அடைவீர்கள்….ராசக் க்ரீடையில், வனத்துக்கு வரமுடியாமல் தங்கிவிட்ட கோபிகைகளும் என் நினைவாகவே இருந்ததால், என்னையே மானசீகமாக அடைந்தார்கள்….

ஹே…கிருஷ்ணா….இவ்வார்த்தை களைக் கேட்ட கோபிகைகள், மஹா திருப்தியையும் சந்தோஷத்தையும் அடைந்தார்கலாமே….ஸ்ரீ சுகர் பரீக்ஷித் ராஜனுக்கு இதைச் சொன்னார். கோபிகைகள் , சந்தோஷ மனத்துடன் , உத்தவரைப் பார்த்து , உன்னிடம் தெரிவிப்பதற்காக சில சங்கேத வார்த்தைகளைச் சொன்னார்கள்…அவற்றை இப்போது உனக்கு நினைவு படுத்துகிறேன்.

யதுவம்ச விரோதியான கம்சன் அழிந்ததும், யது வம்சம் சௌக்கியம் அடைந்ததும், உம்முடைய தாயாரும் தந்தையும் மீண்டும் ஐஸ்வர்யங்களைப்பெற்று சந்தோஷமாக இருப்பதையும் கேள்வியுற்று, நாங்கள் மகிழ்கிறோம். என்று சில கோபஸ்த்ரீகள் சொன்னார்கள்; சிலர், நாங்கள் பிரபுவிடம் ப்ரீதியும் பக்தியும் கொண்டு இருப்பதைப்போல, மதுராபுரி ஸ்திரீகளும் இருக்கிறார்களா என்று உத்தவரைக்கேட்டார்கள். சிலர், ஹே….உத்தவரே….எங்கள் பிரபு ,ஸ்திரீகள் மத்தியில் இருக்கும்போது எங்கள் நினைவு வந்து எங்களைப் பற்றி ப்ரஸ்தாவம் செய்கிறாரா என்று கேட்டார்கள். சிலர், உத்தவரைப் பார்த்து, எங்கள் பிரபு, ராசலீலையில் ,இரவு நேரத்தில், பிருந்தாவனத்திலே கொலாக்கலாமாகச் செய்த லீலைகளை நினைக்கிறாரா என்று கேட்டார்கள். இன்னும் சிலர், அவர் எங்களுக்கு மறுபடியும் உயிர் ஊட்ட இங்கு வருவாரா என்று கேட்டார்கள். இன்னும் சிலர், அவர் இங்கு எதற்காக வரவேண்டும்……அவருக்கு ராஜ்ஜியம் கிடைத்துவிட்டது; பல ராஜ கன்னிகைகள் அவருக்கு மாலையிடக் காத்து இருக்கிறார்கள்; நாங்கள் வனத்தில் வசிக்கும், அநாகரீகமுள்ளவர்கள்; ஆனால் ஒன்று….எங்களால் அவரை ஒருக்காலும் மறக்க முடியவில்லை;
அந்தக் கிருஷ்ண ஆசை எங்களை வாட்டுகிறது; அவர் ஆசை தேவை இல்லை என்று சொல்லா யாருக்குத்தான் மனம் வரும்…..அதனால்தான், ஸ்ரீ தேவி அவரைவிட்டுப் பிரியமாட்டேன் என்கிறாள்; என்று சொன்னார்கள். இன்னும் சிலர், அவருடைய பேச்சுக்கள், புன்சிரிப்பு வதனம், புல்லாங்குழல் நாதம், எங்களைப் படாதபாடு படுத்துகின்றன…..அவரை எங்களால் மறக்க இயலாது…..ஹே நாத …..ஹே…ரமாநாத……ஹே…வ் ரஜ நாத…..ஹே…ஆர்த்தி நாசன……உம்மைவிட்டுப் பிரிந்த துக்க சாகரத்தில் மூழ்கிப் போன இந்த கோகுலவாசிகளை , எப்படி கோவர்த்தன கிரியைத் தூக்கி பசுக்களையும் எங்களையும் காப்பாற்றினீ ரோ, அதுபோல,இப்போதும் காப்பற்ற வேண்டும் என்று சொன்னார்கள்.
( ஹே….கிருஷ்ணா… உன்னிடம் பிரேமையுடன் இருப்பது எப்படி என்பதை அடியேனுக்கு உணர்த்திய , உனக்கு எப்போதும் ப்ரியமான ,அந்த கோபிகைகளை ஆயிரம் தடவை நமஸ்கரிக்கிறேன் )
கோபிகைகளுக்கு, விரஹ தாபம் அடங்கி, அவர்கள் உத்தவரைக் கொண்டாடி, அவரைப் பூஜித்து, அவரையே ,நீ— என்று பாவித்து, அவரை கோகுலத்திலேயே, இருக்கும்படி வேண்டினார்கள். அவரும், அவர்கள் விருப்பப்படி, உன்னுடைய கதாம்ருதத்தைப் பாடிக்கொண்டு, அங்குள்ள ஓடைகள், வனப் பிரதேசங்கள், மரங்கள் அவற்றில் பூத்துக் குலுங்கும் மலர்கள், அவை ஒவ்வொன்றும் உன்னுடைய சம்பந்தம் உண்டு என்பதை அறிந்து, அவைகளைப் பார்த்துப் பார்த்து கோபிகைகளுடன் பல மாதங்கள் கோகுலத்தில் கழித்தார்.
இப்படி உன்மத்த நிலைக்கு வந்த உத்தவர், கோபிகைகளின் பக்தியைப் புகழ்ந்து பாடினார்.

கோபிகைகளே….நீங்கள் தன்யர்கள்…..ஜன்மம் எடுத்த பலனைப் பூரணமாக அடைந்தீர்கள்….நீங்கள் , கோவிந்தனின் ப்ரிய பந்துக்கள்; ஆத்மா ஸ்ரீ கிருஷ்ணன் என்று இருக்கிறீர்கள்; இந்த அனுபவம், முனி ஸ்ரேஷ்டர்களுக்கு கிடைக்கவில்லை; நாங்களும் அதையே அடைய விரும்புகிறோம்; ப்ராம்மணனாகப் பிறந்து, காயத்ரீ
உபாஸநம் செய்து, தீக்ஷதர் போன்ற யோக்யதையை ஸம்ஸ்காரங்களால பெற்று, எந்தப் பலனும் இல்லை; கிருஷ்ண பக்தியே சிறந்த புருஷார்த்தம்; கோபிகைகள் ஜாதியில் ஸ்திரீகள்; சபல சித்தம் உள்ளவர்கள்; வனத்தில் சாப்பாட்டுக்காகத் திரிபவர்கள்; உங்களுக்கு கிருஷ்ண பக்தி ஏற்பட்டு இருக்கிறது; இது மிக ஆச்சர்யம்……பரமாத்வே மோக்ஷம் தருகிறான் என்று அறியாதவர்கள்; ஆனால், இந்த பகவத் பிரசாதம் இவர்களுக்குக் கிடைத்து இருக்கிறது; ராசோத்சவத்திலே, பகவானுடைய திருக்கரங்கள், இந்த கோபிகைகளின் தோள்களில் ,கட்டி அணைப்பது போல் இருந்தன; இந்த சுகத்தை கோபிகைகள்தான் அடைந்தார்கள்; நான், சதா, பகவானுடன் பழகுகிறேன், எனக்கு அந்த பாக்யம் கிட்டவில்லை; எனக்கு ஒரே ஒரு ஆசைதான்; இந்த பிருந்தாவனத்தில் , ஒரு புல்லாகவோ, செடியாகவோ, ஜன்மம் எடுத்து, எந்த முகுந்தனுடைய திருவடிகளை வணங்கிய கோபிகைகள், கிருஷ்ண பக்தி கொண்டவர்களாக இந்தக் காடுகளில் நடமாடினார்களோ ,அந்த– அவர்களுடைய, பாத தூளிகளை புல்லாகவும் செடியாகவும் கொடியாகவும் நான் ஸ்வீகரிக்க வேண்டும். பரிபூர்ண கிருஷ்ண பக்தியை ,கோபிகைகளின் பாத தூளியால் அடைய வேண்டும்.
உபநிஷத்துக்கள் சொல்லும் அந்த பரிபூர்ண ஆனந்தம், அன்று நடந்த ராசக் க்ரீடையிலே, கோபிகைகளுக்குக் கிடைத்தது; ஸ்ரீ மஹாலக்ஷ்மி பூஜிக்கும் பகவானின் பாதார விந்தங்கள், கோபிகைகளின் ஹ்ருதயத்தில் வைக்கப்பட்டு இருந்தது; இந்தப் பேரின்பம், ஸ்ரீ தேவிக்கு இல்லை; ப்ருஹ்மாவுக்கு இல்லை; மஹா யோஹீச்வரர்களான
சனகாதிகளுக்கும் கிட்டவில்லை; பரமசிவனுக்கும் கிட்டவில்லை; நாரதருக்கும் கிட்டவில்லை; அப்பேற்பட்ட, உத்தம நந்த வ்ரஜகோபஸ்த்ரீகளை அடிக்கடி நமஸ்கரித்து, அவர்கள் பாத தூளி என் தலையில் விழ்வேண்டுமெனப் பிரார்த்திக்கிறேன்.
(ஹே…. கிருஷ்ணா…உத்தவர் செய்த பாக்யம் , பெரிது, பெரிது . அந்த உத்தமரை அடிக்கடி நமஸ்கரிக்கிறேன் )
ஸ்ரீ சுகர் மேலும் சொல்கிறார்

பிறகு, ஒருநாள், உத்தவர், நந்தகோபன் யசோதை, கோபிகைகள் முதலானவர்களிடம் உத்தரவு பெற்றுக்கொண்டு, மதுராபுரிக்கு, ஸ்ரீ கிருஷ்ணனாகிய உன்னிடம் வரத் தயாரானார். அப்போது நந்தகோப தம்பதியர் வெகுமதிகளை உன்னிடமும் பலராமனிடமும் கொடுக்கச் சொல்லி, உத்தவரிடம் கொடுத்து மிகவும் கலங்கின மனத்துடன், கண்களில் நீர் வழிய , சில வார்த்தைகள் சொன்னார்கள்
நாங்கள் ஸ்திர புத்தி இல்லாதவர்கள்; ஜீவ யாத்ரைக்காக பல கர்மாக்களைச் செய்துகொண்டு இருப்பவர்கள்; இப்போது எங்களுக்குப் பற்றுக்கோடு ஸ்ரீ கிருஷ்ணனே; எல்லாம் அவனுடைய ப்ரீதிக்காகவே செய்கிறோம்; மனம் வாக்கு, காயம் இந்த மூன்றாலும் ஸ்ரீ கிருஷ்ணனை ஆச்ரயித்து இருக்கிறோம்;
இப்படியெல்லாம் சொல்லி , உத்தவரை வழி அனுப்பி வைத்தார்கள்.
உத்தவர் , ரதத்தில் ஏறி, மதுராபுரி வந்து சேர்ந்தார். மகாத்மாவான உன்னையும், பலராமனையும் அடிக்கடி நமஸ்கரித்து, பக்தி முழுதும் நிறைந்த வ்ரஜவாசிகளின் கிருஷ்ண பக்தியைக் கூறி, அவர்களால் கொடுக்கப்பட்ட வெகுமதிகளை சமர்ப்பித்தார்

47 வது அத்யாயம் நிறைவடைந்தது. ஸுபம்

ஸ்ரீ கிருஷ்ணன், சைரந்த்ரி வீட்டுக்கும், அக்ரூரர் வீட்டுக்கும் செல்லல். +
—————————— —–

நீ, சைரந்தரிக்குக் கொடுத்த வாக்குறுதியை நினவு கூர்ந்தாய். குவலயாபீடம், மல்லர்கள் வதம், கம்ச வதம் முடிந்த பிறகு அவள் வீட்டுக்கு
வருவதாகச் சொல்லி இருந்தாய். உத்தவருடன் அவள் வீட்டுக்குச் சென்றாய்.அவள் த்ரிவக்க்ரையாக இருந்து உன்னால் அதிரூப சுந்தரியாக அநுக்ரஹிக்கப்பட்டவள்
உன்னையும் உத்தவரையும் பார்த்ததும் அவளுக்கு சொல்லொணாத சந்தோஷம். உனக்கு ஆசனம் சமர்ப்பித்து, பூஜித்தாள், உத்தவரையும் பூஜித்தாள். . .
நீ, அங்கு இருந்த பெரிய கட்டிலில் அமர்ந்தாய். அவளுடைய வீடு அதி ஆச்சர்யமாக இருந்தது. முத்துக்களால் அலங்கரிக்கப்பட்ட கொடிகள், தோரணங்கள் பல விதானங்கள், விதம் விதமான புஷ்பங்கள் இன்னும் பலவற்றால் நன்கு அலங்கரிக்கப்பட்டு இருந்தது.அவள், உன்னை, ஸ்நான அறைக்கு அழைத்துச் சென்று, தானே ஸ்நானம் செய்வித்து, ஆடை ஆபரணங்களால் உன்னை அலங்காரம் செய்து வாசனைப் பூச்சுக்களைப் பூசி, விசேஷ அன்னம் முதலியன சமர்ப்பித்து, உன் சந்தோஷத்தை நன்கு பலமடங்கு பெருக்கித் தானும் மிகவும் சந்தோஷக் கடலில் மிதந்து அவள் வேண்டிய வரத்தை ( உன்னைக் கணவனாக அடைவதை )அன்று இரவு அடைந்தாள் . உன்னை, அங்கேயே அவளுடனேயே இருக்கும்படி வேண்டினாள். அவளுக்கு அவள் வேண்டிய வரத்தை, சில நாட்கள் அங்கு தங்கி அவளை சந்தோஷப்படுத்தி பிறகு தன்னுடைய சொந்த க்ருஹம் திரும்பினாய்

பிறகு, பலராமன், உத்தவர் கூடவே வர , அக்ரூரர் இல்லத்துக்குச் சென்றாய். அக்ரூரர், வெகு சந்தோஷத்துடன், வரவேற்று, உபசரித்து, பலதடவை நமஸ்காரமிட்டு, உன் திருவடிகளை அலம்பி அந்த ஜலத்தைத் தலையில் ப்ரோக்ஷித்துக் கொண்டு, பணிவுடன் பேசினார். நீர் ஜகத் காரண புருஷர்; சர்வத்துக்கும் நீரே காரணம்; எல்லா ப்ரகிருதி வஸ்துக்களும் உமக்குச் சரீரம்; நீர் அவற்றுக்கு எல்லாம் ஆத்மா; பரமாத்மா; உம்முடைய சங்கல்பத்தால் சாது சம்ரக்ஷனத்துக்காக இவ்வுலகில் அவதரிக்கிறீர் ; இப்போது அதைப்போல, வசுதேவர் க்ருஹத்தில் உமது அம்சமான பலராமனுடன் அவதரித்து இருக்கிறீர்; இதனால் பூமியின் பாரம் குறையப் போகிறது; நீங்கள் எங்கள் வீட்டுக்கு வந்ததால் நாங்கள் மிக பாக்யசாலிகள் ஆனோம்; உங்கள் நிஜ ஸ்வரூபம், யோகீச்வரர்கள், சூரேசர்கள், ருத்ரன், ப்ருஹ்மா இவர்களாலும் அறிய முடியாதது;

எங்களுடைய பிரார்த்தனை இதுதான் ;—-உமது பொருளாக ஆகும்படி அநுக்ரஹிப்பீராக;எங்களுக்கு உம்மிடமுள்ள கிருஷ்ண பக்தியை வ்ருத்தி செய்வீராக; மாயையாகிய ஆசைகள்—பிள்ளை, மனைவி, பந்துக்கள், வீடுகள் தேஹத்தில் அபிமானம், இவைகளை எங்களிடமிருந்து அழித்து, உம்மை –உம்முடைய பரம கதியை -அடைய அருள் செய்வீராக.

இப்படியெல்லாம் வேண்டி உத்தவர் முன்னிலையில், உன்னைப் பலமுறை சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தார். நீ, புன்சிரிப்புடன், சில வார்த்தைகளை அவரிடம் சொன்னாய். அக்ரூரரே……நீர் எங்களுக்குக் குரு…. பித்ருவைப் போல பந்து…….உம்முடைய பக்தி, ச்லாகிக்கத்தகுந்தது என்றாலும், நீர் மஹா பாக்யமுள்ள சாது…..
உங்களுக்கு என்று எந்தப் பற்றும் இல்லை……பிறர் கஷ்டங்களைப் போக்குகிறவர்……எங்களுக்குப் பரம சுஹ்ருத் …உம்மைப் போலவே பாண்டவர்கள் எங்களுக்குப் பரம சுஹ்ருத்தாகவும், பரம பந்துக்களாகவும் இருக்கிறார்கள்…..நீர், எங்களுக்காக அவர்களிடம் ஹஸ்தினாபுரம் செல்லவேண்டும்…. .பாண்டவர்களின் பிதாவான பாண்டு இறந்துபோனதாகவும், எங்கள் தகப்பனாரான வசுதேவரின் ஒன்றுவிட்ட சஹோதரியும் ,பாண்டவர்களின் தாயுமான குந்தியும் , இப்போது அரசனாகிவிட்ட
த்ருதராஷ்ட்ரனிடம் கஷ்டப்படுவதாகவும், பிள்ளையான துர்யோதனனின் கெட்ட போதனை அவன் மதியைக் கெடுப்பதாகவும், கேள்விப்படுகிறோம்…..
நீர், அங்கு சென்று த்ருத ராஷ்ட்ரன் குணம் எப்படி, பாண்டவர்கள் அவர்கள் தாயார் குந்தி இவர்களின் நிலை…இவைகளை அறிந்து வருவீராக…..பிறகு அவர்களுக்கு என்ன உசிதமோ அதைச் செய்வோம்…..என்றாய். பிறகு, பலராமன், உத்தவருடன் உன்னுடைய பவனத்துக்கு எழுந்தருளினாய்

48 வது அத்யாயம் நிறைவடைந்தது. ஸுபம்

தசமஸ்கந்தம் .. அத்யாயம் 49
—————————————-

ஸ்ரீ அக்ரூரர் ,ஹஸ்தினாபுரம் சென்று வருதல்
————————————————-

ஹே….கிருஷ்ணா….. அக்ரூரர் உன்னுடைய கட்டளைப்படி, ஹஸ்தினாபுரம் புறப்பட்டார். அங்கு போய்ச் சேர்ந்து, அம்பிகை என்பவளின் புத்ரனான
த்ருதராஷ்ட் ரன் , பிதாமஹர் பீஷ்மர், அவர் தம்பி விதுரர், துரோணர், கிருபாச்சாரியர் , கர்ணன், சுயோதனன் அஸ்வத்தாமா, பாண்டவ புத்ரர்களான யுதிஷ்டிரர், பீமன், அர்ஜுனன், நகுலன், சஹாதேவன் இன்னும் பல சுஹ்ருத்துகள், ச்நேஹிதர்கள், இவர்களையெல்லாம் பார்த்துப் பேசினார். அவர்களும் உன்னுடையவும் பாலராமனுடையவும் க்ஷேம சமாசாரங்களைக் கேட்டு அறிந்து கொண்டனர்.
பிறகு , அக்ரூரர் , குந்தியையும் நேரில் போய்ப் பார்த்து க்ஷேமங்களை விசாரித்தார். பல மாதங்கள் ஹஸ்தினாபுரத்தில் தங்கினார். அப்போது த்ருத ராஷ்ட்ரன் தமக்கு என்று ஸ்வய புத்தி இல்லாதவனாகவும் , கெட்ட வர்களின் பேச்சைக் கேட்பவனாகவும், துர்யோதனன் மீது அதிக ப்ரியம் உள்ளவனாகனவும் ,அவனுடைய கட்டளைகளை நிறைவேற்றுபவனாகவும் ,பாண்டவர்கள் மீது வெறுப்பு உள்ளவனாகவும் இருப்பதை அறிந்து கொண்டார்
.குந்தியும் ,விதுரரும் பாண்டவர்களின் பெருமையையும்,அவர்களுடைய பலம் , தேஜஸ் ,யுத்த சாமர்த்யம் ,தன்னடக்கம் ,ஹஸ்தினாபுரவாசிகள் பாண்டவர் களிடம் காட்டும் அன்பையும் ,த்ருதராஷ்டரனும் அவன் பிள்ளை துர்யோதனன் ,அவன் மாமன் சகுனி பாண்டவர் களிடம் வெளிப்படுத்தும் விரோதத்தையும் துர்யோதனன் விஷம் கொடுத்து பீமனைக் கொல்ல முயற்சித்தது ஆகிய பல விஷயங்களை —-பல விருத்தாந்தங்களை உன்னிடம் சொல்லுமாறு அக்ரூரரைக் கேட்டுக் கொண்டார்கள்.
குந்தி,தன் ப்ராதாவான அக்ரூரரிடம் தான் மதுராபுரியில் வசுதேவர் தேவகியுடன் வசித்தது….போன்ற பழைய விஷயங்களைக் கண்ணீர் மல்கச் சொன்னாள் .
“”என் மருமான்கள் ,என்னுடைய ப்ராதா வசுதேவர் அவர் மனைவி தேவகி என் பால்ய சஹிமார்கள் எல்லாரையும் நான் க்ஷேம லாபங்களை விசாரித்ததாகச் சொல்லுங்கள்;கிருஷ்ணன் எல்லாருக்கும் சரண்யன் ;பக்தவத்சலன்;அவனிடமும்,பலராமனிடமும் , நான் பந்துக்களான ஓநாய் களின் நடுவே பெண்மானாக , வசிக்கும் கஷ்டங்களைச் சொல்லுங்கள் தகப்பனாரை
இழந்த பாண்டவர்களின் துர்க் கதியையும், தீனஸ்திதியையும் எடுத்துச் சொல்லுங்கள்.

ஹே கிருஷ்ண கிருஷ்ணா ம ஹாயோகின் , விஸ்வாத்மன் , நாங்கள் உம்மைச் சரணம் அடைந்து இருக்கிறோம்.ஹே கோவிந்த எங்களுக்கு வேறு புகல் இல்லை.ஹே முராரே ஹே வாசுதேவா ….உன்னை, உன் பல நாமங்களைச் சொல்லி ,உன்னைப் பலதடவை நமஸ்கரிக்கிறேன் ……ஹே யோகஸ் வரூபரே …உம்மைச் சரணமடைகிறேன் நீர்தான் ரக்ஷிக்க வேண்டும்
என்று புலம்பி,குந்தி தேவி உன்னை, மானசீகமாகச் சரணம் அடைந்தாள்

ஹே….கிருஷ்ணா……ஸ்ரீ சுகர் மேலும் பரீக்ஷித்திடம் சொல்கிறார் . ஹே பரீக்ஷித்.. துக்கத்தின் எல்லையை அடைந்த குந்திதேவியின் புலம்பலைக் கேட்ட அக்ரூரரும் விதுரரும் ,
தாங்களும் .துக்கப்பட்டு,ஒருவாறு தேறி குந்திக்கு ஆறுதல் சொல்லி திருத ராஷ்ட்ரன் சபைக்குச் சென்றார்கள் அந்தச் சபையில் ,த்ருத ராஷ்ட்ரன் , தன புத்ரனாகிய துர் யோதனனுக்கு அதிக வாத்சல்யம் காட்டுவதால் அவன் துர்போதனைப்படி நடப்பதால், விளையும் பக்ஷபாதங்களை ….பந்துக்களின் ஸ்நேஹத்தை முன்னிட்டு, ஸ்ரீ கிருஷ்ண பலராம வசனங்களை எடுத்து உரைத்தார். இது சந்தேசம் எனப்படுகிறது.

அக்ரூரரின் ஸ்ரீ கிருஷ்ண சந்தேசம்
——————————————–

“ஹே…..விசித்திர வீர்யரின் புத்ரரே……குரு வம்சத்துக்கு கீர்த்தியை மேலும் சேர்ப்பவரே ……
.உமது தம்பியான பாண்டு ராஜனின் மரணத்துக்குப் பிறகு ,
நீர் இந்த ராஜ்யத்தின் அரசராக ஆகி இருக்கிறீர். நீர் தர்மப்படி பிரஜைகளை நடத்தியும்
உம்மை நம்பி வாழும் பந்துக்களிடம் சரி சமமாக நடந்தும் உம்முடைய புத்ரர்கள்,
தம்பியின் புத்ரர்கள் இவர்களை சமமாக எண்ணி, ராஜ்ய பரிபாலனம் செய்தால்
உமது கீர்த்தி வளரும்……அப்படி இல்லாதுபோனால், உமது காலத்திலேயே
ஜனங்களின் நிந்தனைக்கு ஆளாவீர் . ……..இந்த உலகில் எல்லாப் பொருளுக்கும்
முடிவு உண்டு…….யாரும் எந்த வழியாலும் எல்லோருடனும்
சாஸ்வதமாக வாழமுடியாது……..ஒவ்வொரு ஜீவனும் தன் கர்மாக்களின்
பலன்களைத் தன்னந்தனியாகவே —சுக துக்கங்களை அனுபவிக்கிறது……
என் புத்ரர்கள் ,என் ஆஸ்திகள் , என்கிற அஹங்கார மமகார புத்தி வளர்ந்தால்,
அவை, அவனை மிகவும் நஷ்டப்பட வைத்துவிடும் அவனுக்குப்
பாபமும், கெட்டபெயரும் ஏற்பட்டு, ஐஸ்வர்த்தை எல்லாம் இழந்து,
புத்ரர்கள் இல்லாமல், நரகத்தை அடைவான்

மகாராஜரே …. இவ்வுலகத்தில், மனைவி மக்கள் , வீடு இவைகளை ஸ்வப்னம்…..
.மாயை என்று நினைத்து , புத்தியை அடக்கி, எல்லாரையும் சமமாக நினைத்து,
உத்தம கதியை அடைவீராக ”

இதற்கு திருத ராஷ்ட்ரன் என்ன பதில் சொன்னார் தெரியுமா……
.ஸ்ரீ சுகர் , பரீக்ஷித்துக்குச் சொல்கிறார்

தானம் முதலிய சூக்ஷ்மத்தை அறிந்த மஹானே …..
உங்களால் எல்லாருக்கும் மங்களத்தைத் தரும் சுபமான வார்த்தைகள் சொல்லப்பட்டன…..
.ஆனால், இம்மாதிரி வார்த்தைகளால், எனக்குத் திருப்தி ஏற்படவில்லை…….
அடிக்கடி இப்படி ஹிதோபதேசம் கேட்ட போதிலும் என்மனம் அடங்க மறுக்கிறது……
.காரணம், என்புத்ரர்களிடம் அதிகப் பாசமாக இருப்பதால்…….!!.

மின்னல் மின்னி உடனே மறைவதைப்போல, நல்ல எண்ணங்கள் தோன்றி,
உடனே மறைந்து விடுகின்றன……பகவான் விதித்த விதியை மீறி என்ன செய்யமுடியும்….?.
அந்தப் பிரபு ஸ்ரீ கிருஷ்ணர் யாவராலும் எளிதில் புரிந்துகொள்ள முடியாதபடி,
அனந்தமான பெருமை பெற்றவர்……….அவருடைய சங்கல்பத்தால்,
உலகங்கள் ஸ்ருஷ்டிக்கப்படுகின்றன…..மாயையின் முக்குணங்களால்,
எல்லாவற்றையும் செயற்படுத்துகிறார்……எல்லா வஸ்துக்களிலும்
அந்தராத்மாவாக இருக்கிறார்…….கர்மாவினால் வரும் .புண்ய பாபங்களுக்கு ஏற்றபடி,
பலன்களைக் கொடுக்கிறார்……இவை, அவருக்கு லீலை…….

இவ்வாறு, த்ருத ராஷ்டரனின் அபிப்ராயத்தை அறிந்த , அக்ரூரர் ,
பந்துக்களால் விடை கொடுக்கப்பட்டு, மதுராபுரிக்கு வந்து சேர்ந்தார்.
உன்னையும் பலராமனையும் வந்து சேவித்து,
த்ருத ராஷ்ட்ரனின் நடத்தை, அந்தரங்க எண்ணங்கள்,
அபிப்ராயங்கள், குந்திதேவியின் பிரார்த்தனை எல்லாவற்றையும் சொல்லி,

ஹே…பகவன்…..எந்த கார்யத்துக்காக என்னை அனுப்பினீரோ ,
அதைச் செய்து முடித்துள்ளேன் என்று பவ்ய மாகச் சொல்லி நமஸ்கரித்தார்.

(ஹே கிருஷ்ணா …….அடியேன் ,அக்ரூரரின் பாத ரக்ஷை யாகவாவது
இருந்திருக்கக் கூடாதா…….அந்த மகானின் அந்தரங்க பக்திக்கு ஈடு இணை இல்லை…..
அவருடன்கூட அடியேனும் ஜன்ம சாபல்யம் அடைந்து இருப்பேனே …
அச்சுதா….அக்ரூரரின் திருவடிகளை ஆயிரமாயிரம் தடவை நமஸ் கரிக்கிறேன் )

இத்துடன் ஸ்ரீமத் பாகவதம் …. தசமஸ்கந்தம் ….பூர்வார்த்தமாகிய .முன்பாதி …
49 ……..வது அத்யாயத்துடன் நிறைவடைகிறது. ஸுபம்

ஸ்ரீ க்ருஷ்ணாய, கோவிந்தாய, கோபீ ஜன வல்லபாய,
நந்தகோப சுதாய ,, தேவகீ நந்தனாய நம :

க்ருஷ்ண நாமாம்ருதம் நாம பரமாநந்த காரகம் |
அத்யுபத்ரவ தோஷக்னம் பரமாயுஷ்ய வர்தனம் ||

திருப்பாவையில் ஸ்ரீ க்ருஷ்ண நாமங்கள்
———————————————————————–

.ஸ்ரீ ஆண்டாளின் அற்புதமான பாசுரங்கள் ——-திருப்பாவை.
பூமிப் பிராட்டியின் அவதாரம் ஸ்ரீ ஆண்டாள்.
இவள், அன்னவயல் புதுவை ஆண்டாள்.
அரங்கற்கு பன்னு திருப்பாவை பல்பதியம் பதித்த ஆண்டாள்!
நற்பாமாலையை, இன்னிசையால் பாடிக் கொடுத்தவள்( 72 மேள கர்த்தாக்கள் என்பது சரியா ?)
பூமாலையை சூடிக் கொடுத்தவள் !
சூடிக் கொடுத்த சுடர்க்கொடி !
தொல் பாவை ,பாடி அருளியவள் !
பல்வளை அணிந்த பாவை !
திங்கள் திருமுகத்துச் சேயிழை !
அணிபுதுவைப் பைங்கமலத் தண்தெரியல் !
பட்டர்பிரான் கோதை !
,ஸ்ரீ கோதை நாச்சியார்——பூமிப் பிராட்டியின் அவதாரமான தாயார்——- கண்ணனின் திவ்ய நாமங்களை,
பாதகங்களைத் தீர்க்கும், பகவானின் திருவடிகளைக் காட்டிக் கொடுக்கும்,
வேதம் அனைத்துக்கும் வித்து என்று அறுதி இட்டுச் சொல்லப்படும் –கோதை தமிழ் எனப் புகழப்படும்
திருப்பாவையில் ,
கிருஷ்ணனின் நாமாக்களை , முப்பது பாசுரங்களில் அருளியிருப்பதை , இப்போது பார்க்கலாம்

1. கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
2. ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
3.கார்மேனிச் செங்கண் கதிர்மதியம்போல் முகத்தான்
4.நாராயணன்
5.பாற்கடலுள் பையத் துயின்ற பரமன்
6.ஓங்கி உலகளந்த உத்தமன்
7.ஆழிமழைக்கண்ணன்
8.ஊழி முதல்வன்
9.பாழியந்தோளுடைப் பற்பநாபன்
10.மாயன்
11.வடமதுரை மைந்தன்
12.தூய பெருநீர் யமுனைத் துறைவன்
13.ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கு
14.தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரன்
15.பேய்முலை நஞ்சுண்ட வித்து
16.கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சிய வித்து
17.வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்து
18 ஹரி
19.நாராயணன் மூர்த்தி கேசவன் (நாராயணனின் அவதாரமான கேசவன் )
20.மாவாய் பிளந்தான்
21.மல்லரை மாட்டிய தேவாதி தேவன்
22.மாமாயன்
23.மாதவன்
24.வைகுந்தன்
25.நாற்றத்துழாய் முடி நாராயணன்
26.நம்மால் (நமது திருமால் )
27.போற்றப் பறைதரும் புண்ணியன்
28.முகில்வண்ணன்
29.சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற மனத்துக்கினியான்
30.புள்ளின்வாய் கீண்டியவன்
31.பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தவன்
32.சங்கொடுசக்ரம் ஏந்தும் தடக் கையன்
33.பங்கயக் கண்ணன்
34.வல்லானைக் (வலிமை மிகுந்த யானையை ) கொன்றவன்
35.மாற்றாரை மாற்றழிக்க வல்லான்
36.மாயன்,(வல்லானை மாயனை )
37. மாயன் (மணிவண்ணன் மாயன் )
38.மணிவண்ணன்
39.அம்பரு மூடறுத்தோங்கி உலகளந்த உம்பர்கோமான்
40.பந்தார்விரலியின் மைத்துனன் (நப்பின்னையின் மைத்துனன்—-யசோதையின் உடன்பிறந்த கும்பனின் பெண் நப்பின்னை—நீளாதேவி அம்சம் )
41.மலர்மார்பன்
42.முப்பத்துமூவர் அமரர்க்கு முன்சென்று கப்பம் (நடுக்கம் ) தவிர்க்கும் கலி (மிடுக்கு உடையவன் )
43.செப்பம் உடையவன்
44.திறல் உடையவன்
45.செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலன்
46.ஆற்றப் படைத்தான் மகன்
47.ஊற்றம் உடையவன்
48.பெரியவன்
49.உலகினில் தோற்றமாய் நின்ற சுடர்
50.கிங்கிணி வாய்ச்செய்த தாமரைப் பூப்போலே செங்கண்
51.திங்களும் ஆதித்யனும் எழுந்தாற்போல் அங்கண்
52.பூவைப் பூவண்ணன்
53.அன்று இவ்வுலகம் அளந்தவன்
54.சென்று அங்குத் தென்னிலங்கைச் செற்றவன்
55.பொன்றச் சகடம் உதைத்தவன்
56.கன்று குணிலா எறிந்தவன்
57.குன்று குடையாய் எடுத்தவன்
58.வென்று பகை கெடுக்கும் வேலைப் பற்றியவன்
59.ஒருத்தி மகனாய்ப்பிறந்தவன்
60.ஒருத்தி மகனாய் ஒளித்து வளர்ந்தவன்
61.(தரிக்கிலானாகித் தான் தீங்கு நினைந்த கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்) நெருப்பென்ன நின்ற நெடுமால்
62.மால்
63.மணிவண்ணன்
64.ஆலின் இலையாய்
65.கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தன்
66.குறைவொன்றுமில்லாத கோவிந்தன்
67.இறைவன்
68.பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்தவன்
69.கோவிந்தன்
70.வங்கக் கடல் கடைந்த மாதவன்
71.வங்கக் கடல் கடைந்த கேசவன்
72. ஈரிரண்டு மால் வரைத்தோள் செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமால்
இவை, நமது சங்கீதத்தில் —72———–மேளகர்த்தாக்களை ——மிக நுட்பமாகச் சொல்வதாக, அடியேன் கேள்விப்படுகிறேன்
இது ஆராய்ச்சிக்கு உரியது

Leave a comment